பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

12270598_916542848399915_15380368_n

127764326@N06_rராகுல் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.11.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “படக்கவிதைப் போட்டி (39)

  1. தாயோ மனைவியோ 
    சமைக்கும்போது
    புகை வந்தால் 
    புகை நல்லது 

    தேவை இல்லாத
    குப்பைகளை ஏறிக்கும்
    வரும் புகை 
    வீடையும் நாட்டை 
    சுத்தமாக்கும் புகை 

    தீபாவளிக்கு  வெடிக்கும்
    பட்டாசின் புகை 
    அனைவருக்கும் தருவது 
    மகிழ்ச்சியின் புன்னகை   

    ஆனால்…
     நீ  உன் வாயில் 
    புகைக்கும் புகை 
    உனக்கும் 
    உன் வீட்டுக்கும் நாட்டுக்கும்
     கேடு  புகை 
    அப்புகை
     உன்  உயிரையும் 
     உன் உடலையும் 
    சுடுகாட்டில் எரிக்கும் புகையாக 
    மாறிடக்கூடாது.

  2. நினைக்காத போதும் 
    மறக்கத்தான் 
    முடியவில்லை
    மனநிலை பிறழ்ந்தவன் 
    சூட்சுமம்…

    தொடர்ந்து 
    பேசிக் கொண்டேயிருக்கும் 
    மொழிக்குள் 
    மௌனமாய் நிர்வாணம் 
    சுமக்கிறது நிழல்…

    சுற்றும் முற்றும் 
    பார்க்க முடியாத தருணத்தை 
    வேலிக்குள் தவழவிடும் 
    குதர்க்கம் தாக்கும்
    தர்க்கம்…

    காற்றேயில்லாத போதும் 
    தூற்றிக் கொள்ளும் 
    ஜடங்களின் இருண்மைக்குள்
    இயலாத சக்கரமாய் 
    புது ஏக்கம்…

    இதோடு முடிகிறதாய்
    நினைக்கும் இரவுக்குள் 
    ஓர் இரவு
    திரை விலக்கி
    காட்டுவதில் தெரிகிறது 
    என் வெளிச்சம்……

    கவிஜி 

  3. யோசிக்கிறேன் நான்..

    எரியும் இந்த மத்தாப்பை யார் செய்திருப்பார்..
    என்னைப் போல் குடும்பத்தை தாங்கிப் பிடிக்கும்
    மற்றுமொரு சிறுவனா…

    எரிவது என்ன.. மத்தாப்பா..
    இல்லை.. என் அம்மாவைப் போன்ற தாய்களின் வயிறா..

    ஓடித் திரிந்து பாடம் கற்கும் வயதில்
    நான் உழைத்து தினம் கொண்டு வரும் சொற்ப கூலி,
    டாஸ்மாக்கில் கரைந்து போகும்
    என் அப்பாவின் கூலிக்கு பதிலாகுமா..

    நாளெல்லாம் உழைத்து
    பணத்துடன் வீட்டுக்கு வரவேண்டிய அப்பா
    போதையுடன் வரும் போது
    நான் என்ன செய்ய வேண்டும்..
    யோசிக்கிறேன்..

    தொலைத்தது என்ன…
    எங்களைப் போன்றோரின் எதிர்காலமா..
    அது இந்த மத்தாப்பு வெளிச்சத்தில் கிடைக்குமா..

    இன்று மட்டும் தான் எனக்கு
    விடுமுறை..
    நாளைக்கு நான் வேலைக்கு
    போயாக வேண்டும் என்பதால்
    எல்லாவற்றையும் மறந்து விட்டு
    இன்று தீபாவளியை மகிழ்ச்சியாய்
    கொண்டாடுவதா..
    யோசிக்கிறேன் நான்..

  4. இரவுப்போத்தல்

    உறங்கிடும்
    இரவுக்கும்
    பகலுக்கும்
    இடையினில்
    நடந்திடும்
    திகம்பரக்
    காட்சிகள்
    எதையுமே
    நம்மால்
    வெளிச்சங்கள்
    இன்றிக் 
    கண்டிடத்
    தெரியாதே!

    தெரியாக்
    குழப்பங்கள்
    மனதினில்
    சூழ்ந்திட
    விளக்கங்கள்
    தேடித்
    திரிபவன்
    போலே
    இருளினில் 
    இருளைத் 
    தேடி நீ
    காற்றாய்
    அலையாதே!

    அலைகிற
    காற்றுடன்
    மரங்களும் 
    பேசிடும்
    இரவினில்
    நெருப்பென
    எரிந்திட
    நீயும்
    விருப்பங்கள்
    இன்றி
    வெறுப்புடன்
    வாழ்ந்திட
    முடியாதே!

    முடிவிலாத்
    துன்பங்கள்
    தாங்கிடும்
    உனக்குள்
    இருக்கும்
    பிரபஞ்ச
    வானில்
    துளிர்விடத்
    தொடங்கிடும்
    நம்பிக்கைக்
    கதிர்கள்
    எழும்வரை
    விடியாதே!

    விடிந்திட
    விழிகளில்
    வீறொன்று
    வேண்டும்
    போரினில்
    நின்றிட
    வாளது
    வேண்டும்,
    உன் னிள
    நெஞ்சினில்
    இதை நீ
    சுமந்திடத்
    தவறாதே!

    தவறிடும்
    காரியம்
    நிகழ்ந்திடும்
    போதிலும்
    சுடரொளி
    போலே
    இயங்கிடு
    வாழ்வின்
    இருளதை
    வென்றிடு
    அதுவரை
    இரவினில்
    உறங்காதே!

    மனிதா 
    அதுவரை
    இரவினில்
    உறங்காதே!

    தோல்விகள்
    உன்னிடம் 
    நெருங்காதே!

  5. உன் மத்தாப்பு சிரிக்கும் ஒவ்வொரு பொழுதும் 
    பட்டாசுத் தொழிற்சாலைகளில் புகைந்து 
    கொண்டுதானிருக்கிறது 
    குழந்தைத் தொழிலாளர்களின் 
    எதிர்காலம் .

    ஒருசிலரின் 
    வண்ணமயமான வேடிக்கைகளுக்கு 
    பல சிறுவர்களின் இருண்ட வாழ்க்கை 
    துணை போகின்றன என்பது கண்கூடு.

    நமது புன்னகைக்கு 
    அவர்களின் கண்ணீரே 
    அடித்தளமிடுகிறது 

    மத்தாப்புக்களின் 
    தலையில் தீ வைக்கும்போது 
    அது பல ஏழை சிறார்களின் 
    எதிர்காலத்தின் மேல் வைக்கப்படும் 
    கொள்ளி என்பதை உணர்ந்தால் போதும் 
    வெளியே புகையும் அதுஇனி
    உன் உள்ளே புகையும்

    மெய்யன் நடராஜ் 

  6.      புகை

    புகை பகையாகி
    புற்று நோயாகும்
    பூரித்து நீ இழுத்தால்!

    புகைப் பசிபோக்கும்
    பூனைத் தூங்கிய
    அடுப்பிலிருந்து 
    வெளிவரும்போது

    புகை அலறவைக்கும்
    கூறையிலிருந்து
    கூப்பிடும்போது

    புகை ஆசானாகி
    நிலையாமை போதிக்கும்
    மயானத்திலிருந்து
    மூண்டெழும்போது

    புகை மகிழ்வாக்கும்
    தன்னுள் புதைந்த
    ஏழைச் சிறாரின்
    உழைப்பைப் பூத்தெறியாய்
    உமிழும்போது!

    நெருப்பின்றி புகையாது
    நேற்றையப் பழமொழி
    பகையாலேயேப் புகையும்
    நெஞ்சங்களின் காலமிது

    புகை
    நல்லதா கெட்டதா 
    புலப்படும்
    இடத்தை வைத்தேத்
    தீர்மானிக்கப்படுகிறது!

  7. கூடுதலாய்…

    விலைகொடுத்து வாங்கி
    வெடிப்பவனுக்கு
    வராத மகிழ்ச்சி
    வந்துவிடுகிறது,
    வழியில் கிடைத்த
    பாதி எரிந்த மத்தாப்பை
    எரியவிடும் ஏழைக்கு…!

    -செண்பக ஜெகதீசன்…

  8. புகையின் மேகங்களுக்கு நடுவே நீ 

    வறுமையின் வாழ்க்கைக்கு நடுவே நீ 

    எண்ணங்களிலும் செயல்களிலும் தீர்க்கம் 

    மாறப்போகும் உன் வாழ்க்கையே சொர்க்கம் 

    உடம்புக் களைத்த போதும் 

    உழைப்புச் சளைத்த போதும் 

    விழாக் கோலத்தில் உருக்கமாய் 

    ஒளிர்வது மத்தாப்பு மட்டுல்ல 

    அசராமல் பார்க்கும் உன் கண்களும்தான்

                                                                          – க.கமலகண்ணன்

  9. எப்போது விடியும் ?

    எங்கள் அவதரிப்பு
    புவியில் போராடத்தான்
    உயிரைப்பணயம் வைத்து
    உழைக்கிறோம்
    கந்தகத்தையும் பாஸ்பரஸையும்
    கையில்பூசிக்கொண்டு
    சிறார்களைவேலைக்குப்
    பயன் படுத்தக்கூடாதென்று
    சட்டம் இருந்தாலும்
    சட்டத்தை சட்டை செய்யாதவர்கள்
    இருக்கும் வரை எங்கள்
    குடும்ப வண்டிக்கு பழுதில்லை
    ஊரெல்லாம் கொண்டாட்டம்
    பாரெல்லாம் நல்லோட்டம்
    பாவிகள் எங்கள் வாழ்க்கை
    போராட்டம்தான் தினம் தினம்
    ஊரெங்கும் கேட்கும் வெடிச் சத்தத்தில்
    எங்கள் வெறும் வயிறு
    போடும் சத்தம் காணாமல் போகும்
    இருள் மண்டி கிடக்கும் எங்கள்
    இல்லத்தில் யாரோ எறித்துப்போட்ட
    மீதமான கம்பி மத்தாப்பின்
    ஒளியில் ஏற்படும்
    தற்காலிக வெளிச்சம் மட்டுமே
    மீதி நேரம் வீடும் வயிறும்
    புகைச்சலில் போராடும்
    என் போன்ற சிறார்கள்
    நன் முறையில் பள்ளிபோக
    நான் மட்டும் வெடிக்கிடங்கில்
    என் பள்ளிக்கனவுகள்
    எப்போது விடியும்?

    சரஸ்வதிராசேந்திரன்

  10. ஒற்றைக் கம்பியில்
    ஒளிரும் சுடரில்
    ஒருநாள் பசியோ
    தீர்ந்திருக்கும்……..

    கலையும் புகையில்
    தெரியும் கனவுகள்
    மெல்ல….மெல்லக்
    கலைந்திருக்கும்……

    கந்தகப் பூக்கள்
    கருகும் வாடையில்
    அகால மரணம் திடீரென
    வாழ்வை ஒழித்திருக்கும்……..

    இருந்தும் என்ன……
    இழக்கா தன்னம்பிக்கை
    இருக்கும் வாழ்வை
    சுடராய் வெளிச்ச ஒளிகொடுக்கும்
             இளவல் ஹரிஹரன், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *