ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 34

0

சி. ஜெயபாரதன்.

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஏகாந்த வாழ்க்கை
_____________________

“பூமியே நமக்குத் தலையணை ஆகவும், பனிப் பொழிவுகளே நமக்குப் போர்வையாகவும் நாம் பல இரவுகளைத் தூக்கிமின்றிக் கழித்தோம்.”
“இடையன் மேற்பாராத ஆடுகள் போல் நாம் மந்தையில் ஒருங்கே இருந்தோம். நமது எண்ணங்களை மேய்ந்து, உணர்ச்சிகளை அசைபோட்டு இருந்தாலும் நாம் பசியோடும் தாகத்தோடும் தவித்தோம்.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

_____________________

ஏகாந்த வாழ்க்கை இனிது
_____________________

என் சகோதரனே !
உன்னைப் பார்த்தி ருக்கிறேன் :
ஓரழகி உன்னை
ஆரத்தி செய்து வந்தாள்,
உன் இதயம்
விழுந்து கிடந்தது அவள்
நளினப் பீடத்தில் !
அவளின் கனிவுக் கண்ணோக்கு
உன் மீது விழும் போது,
என் இதயம் கூறும் :
“நீடு வாழ்க காதல்
நீங்கி விட்டது தனிமை
இந்த மனித னுக்கு !
சீராய் இணைத்து விட்டது
ஈரித யங்களை !”
_____________________

மீண்டும் நான் காணும் போது
உன் காதல் உள்ளம்
வேறு
ஓர் ஏகாந்தி யுடன்
சேர்ந்தி ருந்தது,
மாதுடன் ரகசியம் பேசி
வீணாய்
முறை யிட்டு
அழுது கொண் டிருந்தது !
மேகத்தில் மிதந்து வரும்
அடுத்தோர்
ஏகாந்த ஆத்மா
வீணாய் வடிக்கும்
கண்ணீர்த் துளிகள்
உன் காதலியின் கண்களில்
வழிந்தன !
_____________________

என் சகோதரா ! உன் வாழ்வு
வேறாகப் பிரிந்த
ஓர் ஏகாந்தச் சிறைக் கொட்டம் !
அன்னியர் கண்ணோக்கு
நுழைய முடியா மதில் உள்ள
ஓர் இல்லம் !
இருள் மூடினால்
அண்டையர்
விளக்கொளி படாத வீடு !
காலி யானல்
அடுத்தவர் சாதனங்கள்
தொடுக்க இயலாத வீடு !
பாலை வனத்தில் இருந்தால்
அன்னியர்
சோலை வனத்துக்கு நகர்த்த
முடியாத வீடு !
குன்றின் மீதிருந்தால்
கீழ்ச் சமவெளிக்குக்
கால்கள் சுமக்க இயலாத
வீடு !
_____________________

என்னரும் சகோதரா !
உன் ஆன்மீக வாழ்வை
முற்றிலும்
சூழ்ந்திருப்பது ஏகாந்தம் !
ஏகாந்தமும் தனிமையும் இங்கே
இல்லை என்றால்,
நீயாக மாட்டாய் நீ !
நானாக மாட்டேன் நான் !
உன் தனித்துவக் குரல்
கேட்க வந்து
எனது குரல் என்பதை
உணர இயலாது என்னால் !
உன் முகத்தைப் பார்த்து நான்
என் முகமென்று
காண முடியாது முகக்
கண்ணாடியில் !
_____________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *