தாணுப் பாட்டியின் பிள்ளை   -சிறுகதை

0

க.பாலசுப்ரமணியன்

முடிச்சூரில் மூன்று வருடங்களுக்கு முன்னால்தான் பாஸ்கரன் அடுக்குமாடிக் கட்டிடத்தில் முதல் மாடியில் ஓர் வீடு வாங்கியிருந்தான். அதை வாங்குவதற்காக ஓர் வங்கியிலிருந்து முப்பது லட்சம் கடன் கூட வாங்கியிருந்தான். இனிமேல் தனக்கு என்று ஒரு வீடு இருக்கும் அதில் மனைவி, குழந்தை மற்றும் வயதான தாயாரோடு வீட்டுக்காரர் தொந்தரவின்றி வாழலாம் என்ற ஒரு ஆசையில்தான். ஆனால் ஏதாவது ஒரு வகையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் இறைவன் இன்னொரு வகையில் அதைப் பிடுங்கிவிடுகிறார் என்ற உண்மை அவனுக்குத் தெரிய வில்லை !

இதுதான் அன்று அவன் வீட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி. அவன் மனைவி ரம்யா தன் மூன்றாவது வகுப்பில் படிக்கின்ற மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க அமர்ந்தாள்  ” ஏண்டா சங்கர் இன்னிக்கி என்ன ஹோம் வொர்க் கொடுத்தாங்க?”

“அம்மா டீச்சர் போர்டில எழுதிப் போட்டாங்க. நான் எழுதிக்க மறந்துட்டேன். சாரி “

” இடியட் . எவ்வளவு செலவழிச்சு உன்னை படிக்க வைக்கறோம். பொறுப்பில்லாம ..”என்று சொல்லிக்கொண்டே அவன் தலையில் ஓர் குட்டு வைத்தாள்

“அம்மா “என்று அலறிக்கொண்டே எழுந்து ஓட அவனை தாய் ரம்யா பின் தொடர… ” ஏண்டி ரம்யா.. சின்னக் கொழந்தையை இப்படி கஷ்டப்படுத்தற.. ஒரு நாள் அவன் அதைப் பண்ணலேன்னா என்ன குடியா முழுகிப் போயிடும்?” என்று பாஸ்கரனின் தாயார் சொல்ல, அதன் பின் ஒரே அமர்க்களம்தான்.

“அம்மா. நீங்க சும்மா இருங்கோ. குழந்தை படிப்பில எல்லாம் மூக்கை நுழைக்காதிங்கோ. எவ்வளவு கஷ்டப்பட்டு அவனுக்குப் பணம் கட்டறோம் தெரியுமா.. உங்க காலம் வேற.. இந்தக் காலம் வேற. சாப்பிட்டோமா.. ராமா கிருஷ்ணான்னு இருந்தோமா என்று இருங்கோ.”

தாணுப் பாட்டியின் முகம் தொங்கியது.. இந்த நேரத்தில் நீங்கள் தாணுப் பாட்டியை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். சின்ன வயதில் தன்யா என்ற அழகான பெயருடனும் அதற்கேற்ற அழகுடனும் ஜொலித்த பெண்தான் இன்று தாணுப் பாட்டி. அந்தக் காலத்து  பொருளாதரப் பட்டதாரி. சரளமாக ஆங்கிலம் வரும். அவருடைய கணவர் மத்திய அரசில்; ஒரு பொறுப்பான வேலையில் இருந்தவர். காலமாகிப் பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன.

தன்னுடைய ஒரே மகனின் திருமணத்திற்குப் பிறகு அவர்களுடன் தங்கியிருக்கிறார். கணவருடைய பென்ஷன் பணம் கொஞ்சம் மாதம்தோறும் கிடைக்கிறது. அதை அப்படியே தன் மகன் பாஸ்கரனிடம் கொடுத்து விடுகிறார். இப்போது சில மாதங்களாக தன் மருமகளின் போக்கு பற்றி அவளுக்கு மனத்தில் கொஞ்சம் வருத்தம்.  ஆனால் வெளியே காட்டிகொள்வதில்லை.

அன்று இரவு பாஸ்கரன் மெதுவாக அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான்

“அம்மா. ரம்யா ஏதோ குழந்தைக்குப் பாடம் சொல்லிக்கொடுத்திட்டுப் போறா. அதிலே நீ ஏம்மா தலையிடறே .. உங்க ரெண்டு பேருக்கு நடுவில நான் மாட்டிக்கொண்டு..  ஒரே தலைவலி..” தன் மூக்குக்கண்ணாடியை சற்றே உயர்த்தி தாணுப் பாட்டி தன் மகனை ஒரு முறை உற்றுப் பார்த்தாள். ஆனால் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்னொரு காட்சி..

பாஸ்கரன் தன்னுடைய ஆபீசிலிருந்து வீட்டில் நுழைந்து சோபாவில் அமர்ந்தான். ரம்யா உள்ளே இன்னொரு அறையில் வந்திருந்த தன் தோழியோடு பேசிக்கொண்டிருந்தாள்

“ரம்யா.. ரம்யா. “தாணுப் பாட்டி குரலிட்டாள் . பதில் கிடைக்கவில்லை. பாஸ்கரன் அமைதியாகக் களைப்புடன் உட்கார்ந்திருந்தான் . மீண்டும் அவள் குரல் எழுப்பினாள் . “ரம்யா…”

“என்னம்மா .. ஏன் அலறறேள் ? ஏதோ இடி விழுந்த மாதிரி.. நான் ரெண்டு நிமிஷம் யாரோடையாவது பேசிக்கொண்டிருந்தா உங்களுக்குப் பொறுக்காதே…”என்று சொல்லிக்கொண்டே ஹாலில் நுழைந்தாள் .

” பாஸ்கரன் வந்து எவ்வளவு நேரமாச்சு தெரியுமா.. ஒரு காப்பி கொடுக்க மாட்டியோ ?”

“நான் மாட்டேன்னா சொன்னேன். ஏன் அவர் உள்ள வந்து காப்பி வேண்டும்னு கேட்கக் கூடாதா என்ன.?”

“இல்லடி. அவன் ரொம்பக் களைப்பா உட்கார்ந்திருந்தானே .. என்று நினைத்துத் தான் நான் சொன்னேன்.”

“நானும் ஆபீசிக்குத் தானே போறேன். எனக்கு மட்டும் களைப்பில்லையா? உங்க பிள்ளைக்கு மட்டும் தானா?”

வாக்குவாதம் முற்றியது. முற்றுப் புள்ளியாக ரம்யா ஒரு பக்கம் அழ, தாணுப் பாட்டி ஒரு பக்கம், அழ…

காட்சிகள் சில நாட்கள் தொடர்கதையாக, ….ஒரு நாள் ………….

பாஸ்கரன் தன் தாயார் அருகில் அன்போடு அமர்ந்தான்,. ” அம்மா.. உன்னைப் பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இவ்வளவு நாள் சந்தோஷமா இருந்துட்டு இப்போ இவள் கிட்ட வேண்டாத வார்த்தையெல்லாம் கேட்டுக் கொண்டு… “

தன் மகனைக் கூர்ந்து பார்த்த தாணுவிற்க்கு  அவன் வார்த்தைகளின் உள்ளர்த்தம் புரிந்தது .. “சொல்லுடா.. மேல..”

தலையைக் குனிந்துகொண்டே ” இல்லே.. நீ வேற எங்கேயாவது சந்தோஷமா இருப்பியான்னு யோசிச்சுப் பார்க்கறேன். “

“ம்…..”  பாஸ்கரன் மேலே பேச முடியாமல் அமர்ந்திருந்தான்.

“சொல்லுடா.. முதியோர் விடுதிக்குப் போகணும்னு சொல்லறே .. அவ்வளவுதானே.. இதை சொல்லுவதற்கு என்னடா தயக்கம்? ” தைரியமாகப் பேசினாள் தாணு.

தன் கண்களை உயர்த்தித் தன் தாயைப் பார்த்த பாஸ்கரனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

இரண்டு வருட காலமாக அதனால்தான் தாணுப் பாட்டி இந்த முதியோர் விடுதியில் “சந்தோஷமாக”இருக்கிறாள். மாதம் ஒரு முறை பாஸ்கரனும் ரம்யாவும் தங்கள் குழந்தையோடு வந்து பார்த்துவிட்டுச் செல்வார்கள். போன மாதம் தீபாவளிக்குக் கூட அம்மாவிற்கு ஒரு புடவை கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான் அன்பு மகன் பாஸ்கரன்.

இன்று மாலையிலே அவள் தொலைக்காட்சிப் பெட்டி முன்னால் உட்கார்ந்து சென்னையை உலுக்கி எடுத்த மழையைப் பற்றிய செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்  முடிச்சூரில் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் அவளுக்கு ஒரே கவலை. தன் மகன் அவன் குடும்பத்தைப் பற்றித்தான்.. தொடர்புகொள்ள அவளுக்கு வழியில்லை. தொலைபேசிகளும் வேலை செய்ய வில்லை..

திடீரென்று அவள் பார்த்த காட்சி அவளை உலுக்கியது..  பாஸ்கரன் அந்த வெள்ளத்தின் நடுவே ஒரு முதியவரை கைகளில் தூக்கிக்கொண்டு வந்த காட்சி.. செய்தியாளர் பாஸ்கரனை அறிமுகம் செய்து வைத்து வர்ணிக்கிறார். “இவர் பெயர் பாஸ்கரன். இது வரை இவர் இந்தப் பகுதியிலிருக்கும் பதினைந்து முதியவர்களையும் எட்டு குழந்தைகளையும் தன் கைகளிலும் தோள்களிலும் தூக்கி வந்து அவர்கள் உயிரைக் காப்பாற்றியிருக்கின்றார். மனித நேயத்திற்கு இவர் ஒரு முன்னுதாரணம். அவருக்கு எங்கள் பாராட்டுக்கள். “

“சார்.. இவ்வளவு முதியவர்களை நீங்கள் தனியாகக் கைகளிலும் தோள்களிலும் தூக்கி வந்து காப்பாற்றியிருக்கின்றீர்கள் . அவர்களைத் தூக்கி வரும் பொழுது உங்களுக்கு மனதில் என்ன தோன்றியது ?”

” ஒவ்வொருவரைத் தூக்கும் பொழுதும் என்னுடைய சொந்தத் தாயையோ அல்லது தந்தையையோ தூக்கி வருவது போன்ற எண்ணமே எனக்கு இருந்தது. “

தாணுப் பாட்டியின் கண்களில் நீர் வழிந்தது. பக்கத்தில் அமர்ந்திருத்த இன்னொரு மூதாட்டி தாணுவிடம் சொன்னார். “யார் பெத்த பிள்ளையோ .. என்ன நல்ல மனசு பாருங்க.. எல்லோரையும் தன் அம்மா அப்பா போல நினைக்குது.. இந்தக் காலத்திலேயும் பிள்ளைங்க இருக்காங்களே… சொந்த அம்மா அப்பாவை நம்மளைப் போல் விடுதியிலே சேர்த்துட்டு… “

தாணு என்ற தன்யாவிற்க்குத் தன் கல்லூரி நாட்களில் தான் பங்கெடுத்த ஒரு விவாத மேடையின் தலைப்பு நினைவில் வந்தது -“சூழ்நிலைகள் ஒரு மனிதனை உருவாக்குகின்றனவா அல்லது ஒரு மனிதன் தன் சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்கிறானா?”  அன்று சரியான வாதங்களை மேடையில் எடுத்து வைக்காததால் அவளுக்குப் பரிசு கிடைக்கவில்லை. இன்றும் அவளுக்கு இதற்கான பதில் சரியாகத் தெரியவில்லை.

தாணுப் பாட்டி தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள் .. அவள் மனது சொன்னது.. “பாஸ்கரனும் நல்ல பிள்ளைதான் “

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *