டிசம்பர் 7, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு நிகிதா ஆசாத் அவர்கள்

நிகிதா1

சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை ஃபேஸ்புக்கில் துவக்கியுள்ள திருமிகு நிகிதா ஆசாத் (Nikita Azad) அவர்கள் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார். “மாதவிடாய் மகிழ்ச்சிக்குரியதே” (#Happy to Bleed) என்ற கவன ஈர்ப்பு வாசகத்தின் மூலம் பெண்களுக்குச் சமூகத்தில் நடத்தப்படும் அவமதிப்பை எதிர்க்கும் இவரது நோக்கம் பாராட்டப்படவேண்டிய முயற்சி.

மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது இனப்பெருக்கப் பருவமடைந்த பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஓர் இயற்கை நிகழ்வு. கருத்தரித்த பெண்ணின் கரு வளர்ச்சியடைய உதவுவது கர்ப்பப்பையும் அதன் சுவர்களும். அவள் அந்த மாதம் கருத்தரிக்கத் தவறினால் பயனற்றத் திசுக்கள் கழிவாக உதிரப்போக்குடன் உடலில் இருந்து வெளியேற்றப்படும் இயற்கை நிகழ்வே மாதவிலக்கு. இதனைப் பற்றிய சரியான புரிதல் பெரும்பாலான ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்குமே கிடையாது. மேலும் சரியான கழிவறை வசதியற்ற நாடான இந்தியாவில் வெளியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் துன்பம் அதிகம். இதனை வெளிப்படையாகப் பொதுவில் பேசவும் பெண்களுக்குத் தயக்கமும் கூச்சமும் அதிகமிருக்கும். அதனையும் இடக்கரடக்கல்லாக வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு, வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, தீட்டு என்று குறிப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள், சோர்வு, வலி போன்றவற்றால் அவர்களே தினசரி நடவடிக்கைகளைக் கைவிடும் காலமும் முன்னர் இருந்தது. ஆனால் சுகாதார வளர்ச்சி, அறிவியல் கல்வியால் புரிந்துணர்வு, ஆயத்தப் பஞ்சுறைகள் (சானிட்டரி நாப்கின்) ஆகியவற்றின் பயன்பாடுகளால் தினசரி வாழ்க்கையை எந்தவித மாற்றமுமின்றிப் பெண்கள் எதிர்கொள்ளும் அளவிற்குக் காலம் மாறிவிட்டது. நம்நாட்டில் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிச் செல்பவர்கள் கூடத் தங்களை குடிகாரர் எனப் பிறர் எண்ணிவிடுவார்களே என்று கூச்சநாச்சமில்லாமல் வெளிப்படையாக வாங்கிச் செல்லலாம். ஆனால், ஆயத்தப் பஞ்சுறைகள் வாங்கக் கடைக்குச் சென்றால் அது என்ன என்று அடையாளமே தெரியாதவாறு (?) ஒரு செய்தித்தாளில் பொட்டலம் கட்டித்தரப்படும் நிலைமையும் உண்டு என்பது இன்றைய நாட்டு நடப்பைத் தெளிவாக்கும்.

மாதவிலக்கின் போது பெண்களை அங்கே உட்காரக் கூடாது, இங்கே நிற்கக்கூடாது, அதைச் செய்யக்கூடாது, இதைப் பார்க்கக்கூடாது போன்ற கட்டளைகள் இட்டு, நடவடிக்கைகள் முடக்கப்பட்டு அவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே ஒதுங்கி வாழ வேண்டிய நிலைமை எல்லாம் இருந்தது அக்காலம். இன்னமும் குக்கிராமங்களில் உள்ள பெண்கள் இதுபோன்ற அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். மாதவிலக்கு நாட்களில் பெண்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்படுவது போலவே, இறைவழிபாட்டிலும் பெண்கள் கோவிலுக்குப் போகக் கூடாது, பூசை அறைக்குள் நுழையக்கூடாது, வழிபாட்டிற்குரிய பொருட்களையோ புனித நூல்களையோ தொடக்கூடாது என்பது போன்ற பெண்கள் மீதானக் கட்டுப்பாடுகள் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ’கலம் தொடா மகளிர்’ என்ற பெயரில் சங்க காலம் தொட்டுப் பெண்களுக்கு இக்கொடுமை நிகழ்ந்து வருவதற்கு இலக்கியச்சான்றுகளும் காட்டப்படுகிறது.

இவ்வாறு மதத்தின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் சமீப காலத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய விவாதங்களாக மாறிவருகின்றன. மகாராஷ்ட்ராவில் உள்ள சனி பகவான் கோவில் ஒன்றில், பெண் ஒருவர் சிலை அருகே சென்று வணங்கியதால் சனி பகவான் சிலையைக் கழுவிப் பரிகாரம் செய்துள்ளனர். மாதவிலக்கு, அதனால் தூய்மையில்லை என்பது போன்ற காரணம் கூறப்படவில்லை இந்த சனிபகவான் கோவில் நிகழ்வில். அது பெண்கள் எந்த நாளிலும் அந்தக் கோவிலில் சிலையருகில் சென்று வழிபட உரிமை மறுக்கப்பட்டுள்ள நிகழ்வு. பெண்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற பழமையான எண்ணத்தின் பிரதிபலிப்பாக அமைந்துள்ள மற்றுமொரு நிகழ்வு. பெண்களைமட்டுமல்ல சமூகத்தில் ஒருசில பிரிவினரே இவ்வாறு கோவிலுக்குள் நுழையவிடாமல் ஒதுக்கப்பட்ட காலத்தைக் கடந்து நாம் வெகு தூரம் வந்துவிடவில்லை.

ஃபேஸ்புக்கில் நிகிதா கவனஈர்ப்பு கொண்டு வந்துள்ளது கேரளாவில் நடந்த மற்றொரு நிகழ்வு. கேரளாவின் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்குள் பருவ வயதுப்பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனைக் குறித்து கொல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் செய்தியாளர் ஒருவர், திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் எப்பொழுது பெண்களைச் சபரிமலையில் வழிபட அனுமதிப்பீர்கள் என்றக் கேள்வியை எழுப்பினார். அதற்குத் தேவஸ்தான தலைவர், ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பவர்களை அடையாளம் காணும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது போல, பெண்கள் மாதவிலக்கு நாட்கள் பற்றிக் கண்டறியவும், தூய்மையாகத்தான் இருக்கிறார்களா என உறுதி செய்ய உதவும் கருவி ஒன்றினைக் கண்டுபிடிக்கும் வரை பெண்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க இயலாது. அந்தக் காலம் வந்த பின்னர் அதைப்பற்றிப் பேசலாம் என்று பதிலளித்தார். இக்கூற்றின் அடிப்படைக் கருத்து “மாதவிலக்கான அந்நாட்களில் பெண்கள் தூய்மையற்றவர்கள்” என்ற பண்டைய வழக்குதான். தேவஸ்தான தலைவரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய செய்தியானது. பிறகு எனது விளக்கம் தவறான முறையில் புரிந்து கொள்ளப்படுகிறது என்று பிறையார் கோபாலகிருஷ்ணன் மறுப்பும் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற கருத்துகள் பிறமதங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிகிதா2

இருப்பினும், இயற்கையாகப் பெண்களுக்கு நிகழும், தவிர்க்க இயலாத மாதவிலக்குக்காக அவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது சரியல்ல என்பது நிகிதாவின் வாதம். இதற்காக நவம்பர் 21ஆம் தேதியில் இருந்து “ஹாப்பி டு ப்ளீட்” என்ற ஃபேஸ்புக் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நிகிதாவுடன் அவரது நண்ப திரு. சுக்ஜீத் சிங் என்பவரும், சுருதி உபாத்தியாய், சாம்பவி விக்ரம் என்ற தோழியரும் (Sukhjeet Singh, Suridhi Upadhyay, Shambhawi Vikram) இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் அவருக்குத் துணையாகக் களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பலரும் நிகிதாவை ஆதரித்து, ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளும் படங்களும் பதிவு செய்துள்ளனர். இந்தக் கவனஈர்ப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்த காரணத்தால் தினசரி நாளிதழ்களிலும் செய்தியாகப் பரவி வருகிறது. ஃபேஸ்புக் பிரச்சாரப் பக்கம் தரும் தகவலின்படி ஆண்களில் பலரும் நிகிதாவிற்கு ஆதரவாகப் போராட்டக் களத்தில் இறங்கியிருப்பது பாராட்டப்பட வேண்டிய செயல்.

நிகிதா2a

இந்தப் பிரச்சாரம் பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்காக மட்டும் அல்ல; பெண்களைப் பாலியல் ரீதியில் வேறுபடுத்தி, சிறுமைப்படுத்தும் நோக்கில் இன்றும் நிலவும் இதுபோன்ற சமூக வழக்குகளுக்கு எதிராக எழுப்பிய கண்டனம் என்று நிகிதா ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து, www.change.org லும் இந்தப் போராட்டத்தை எடுத்துச் சென்றுள்ளார். கோயிலுக்குள் நுழைய அனுமதி எதிர்பார்த்து இப்பிரசாரத்தைத் துவக்கவில்லை என்றும், பழமையான நம்பிக்கைகளை எதிர்க்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் என்று கூறும் பஞ்சாபி பல்கலைக்கழக மாணவியான, இருபது வயதாகும் நிகிதா ஆசாத் பாட்டியாலாவில் வசிக்கிறார். இந்தியா ரெசிஸ்ட்ஸ், யூத் கி ஆவாஸ், ஃபெமினிஸம் இன் இந்தியா (India Resists, Youth Ki Awaaz, Feminism in India) போன்ற பத்திரிக்கைகளிலும் எழுதி வருகிறார். காலங்காலமாகப் பெண்கள் எதிர்க்கத் தயங்கிய, மறுகிய, கூசிய, அஞ்சிய மாதவிலக்கைப் பற்றிய கருத்துக்களை; அதனால் பல சமூகக் கட்டுப்பாடுகளுக்குள் பெண்களை முடங்க வைத்த வழக்கத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் நிகிதாவின் துணிச்சலுக்குப் பாராட்டுகள்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

Contact Info:
Nikita Azad
https://www.facebook.com/archangelniks
https://www.facebook.com/events/757746744337128/
https://www.change.org/p/national-commission-for-women-happy-to-bleed-an-initiative-to-break-menstrual-taboos-and-myths

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. There are things / activities in society, which could be kept / carried on inside only.

    Even if a house is constructed by any ideologist, the house has bed-room, bathroom, latrine and so on!

    Why different rooms are required?

    Can women carry on with all activities in one room?

    By the way, why there should be  bathrooms, latrines, lavatories, rest-rooms etc., separately for girls and boys or women and women?

    But, these girls have chosen to show off their bleeding in this medieval, barbaric way of depiction!

    In fact, they can live without sanitary napkins also!

    Why they should wear sanitary napkins, if they have been so liberal and progressive in their views and acts?

    Why they dress at all, they can roam without dress also!

    In this way, the logic (?) can be extended to question them.

    But the more the questions are asked, the more the women would be kept in more awkward position.

Leave a Reply to Pavala Sankari

Your email address will not be published. Required fields are marked *