பேச்சும் நடை முறையும்

இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே எழுதி இருந்தேன் எனது நோக்கம் யாரையும் என் வழிக்குத் திருப்புவதோ அல்லது யாருடைய மனதையும் புண் படுத்துவதோ அல்ல என்று. இனி வரும் இரு மடல்களைப் படிக்க உங்கள் மனதினை சற்றே திடப் படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இதைச் சொன்ன உடன் ஏதோ திகில் கதை சொல்லப் போகிறேன் என்று எண்ண வேண்டாம். சராசரி மனிதர்களின் கதை தான் சொல்லப் போகிறேன்.

1992ல் ஒரு முறை டில்லியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன் எனது நாலரை வயது பேரனுடன். தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் எனக்கு நடு இருக்கையும் எனது பேரனுக்கு மேல் இருக்கையும் அளிக்கப் பட்டு இருந்தது.

நாங்கள் பயணித்த பெட்டியில் சென்னையில் இருந்து ஹரித்துவார், டெல்லி என்று ஆன்மீகப் பயிற்சிப் பட்டரைக்காகச் சென்று விட்டுத் திரும்பும் சென்னை சின்மயா மிஷன் அன்பர்கள் சுமார் இருபது பேர் இருந்தார்கள். ஏறியதில் இருந்து பயிற்சிப் பட்டரையில் தாங்கள் அனுபவித்த இன்பம் பற்றிப் பேசி வந்தனர்.

படுக்கும் நேரம் வந்தது. நான் என் அருகில் இருந்தவர்களிடம் கேட்டேன், “இந்தச் சிறுவனுக்கு மேல் இருக்கை கிடைத்திருக்கிறது. தூக்கத்தில் பிரண்டு கீழே விழுந்து அடி பட்டுக் கொண்டு விடுவான். உங்களில் யாராவது ஒருவர் கீழ் இருக்கையை அளிக்க முடியுமா?” என்று.

“ஹூஹூம். முடியாது” என்றனர் அவர்கள். அன்றிரவு நடு இருக்கையில் பேரனை இடுக்கிக் கொண்டு படுத்து வந்தேன். மறு நாள் பொழுது விடிந்தது. நான் அவர்களிடம் கேட்டேன், “நீங்கள் பேசிக் கொண்டு வருவதில் இருந்து சின்மயா மிஷன் அங்கத்தினர்கள் நீங்கள் என்று தெரிகிறது. பகவத் கீதை படிப்ப துண்டல்லவா?”

“கட்டாயம் தினசரி படிப்போம்.”

“பக்தி யோகம் என்னும் பன்னிரெண்டாவது அத்தியாயம்?”

“அது எங்களுக்கு மனப் பாடமாகத்த் தெரியுமே.”

“அப்படியா? அதில் ‘அத்வேஷ்டா சர்வ பூதானாம் மைத்ரக் கருண ஏவச’ என்று ஒரு வரி வருகிறதே அதற்கு என்ன பொருள்?”

“எல்லா உயிகளிடத்தும் நட்பையும் கருணையையும் தவிற வெறுப்பு காட்டக் கூடாது என்பது அதன் பொருள்.”

“நேற்றிரவு இந்தச் சிறுவனுக்காக உங்களில் ஒருவரது கீழ் இருக்கையைக் கேட்டேன. அதைக் கொடுக்க யாருமே முன் வரவில்லை. பகவத் கீதையைப் பள்ளி மாணவன் வாய்ப் பாடுகளை மனனம் செய்வதுபோல் தினமும் படிப்பதினால் என்ன உபயோகம், அதில் உள்ள ஒரு வரியினைக் கூட உங்கள் வாழ்க்கையில் நடை முறையில் கொண்டு வர முடிய வில்லை என்றால்?”

என் கேள்விக்கு பதில் இல்லை.

சின்மயானந்தா உயிருடன் இருக்கும் போதே தயானந்தா பிரிந்து தனியாக ஆசிரமம் ஆரம்பித்தார். ஹரிநாமானந்தா காவி உடையைக் களைந்து விட்டு மணம் செய்து கொண்டு அமெரிக்கா பயணமானார். தஞ்சையில் இருந்த ஒரு பிரும்மச்சாரி தங்கி இருந்த வீட்டு எஜமானரின் இரு பெண் குழந்தைகளுக்குத் தாயான அவர் மனைவியை அழைத்துக் கொண்டு தனி ஆசிரமம் அமைக்கச் சென்று விட்டார். திருச்சியில் இருந்து மேல் பயிற்சிக்காக பம்பாய் சென்ற ஒரு பிரும்மச்சாரி தன் சக மாணவியைக் காதல் புரியத் தூண்ட, அவள் அதை வெறுக்க, அவள் முகத்தில் கத்தியால் அவர் குத்த, அது போலீஸ் வரை போய் விட்டது.

இதையெல்லம் பார்த்த போது இவர்கள் போதிப்பது என்ன? நடந்து கொள்ளும் விதம் என்ன? படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயிலா? இவர்களும் நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள் தான் எனத் தோன்றியது.

இறைவன் இருக்கிறான் எல்லாவற்றினுள்ளும். “அவனைக் காண / அடைய உன்னை நீயே கேட்டுப் பார் ‘நான் யார்?’ என்று. அந்தக் கேள்விக்கு விடை கண்டால் உன்னுள் உறையும் ஈசனை நீ காணலாம்” என்ற பகவான் ரமணரின் கூற்று எனக்கு சரியெனத் தோன்றியது.

எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டு. உன்னால் முடிந்த உதவியைப் பிறருக்கு நீ செய். நேர்மையாகவும் உண்மையாகவும் இரு. இவையே நீ நற்கதி அடைய வழி செய்யும் த்யானம். படித்தால் மட்டும் போதாது வேத, புராண, இதிகாசங்களை. அவற்றில் நீ காணும் நல்லவற்றை உன் வாழ்க்கையில் நடை முறைக்குக் கொண்டு வா. அது தான் நீ செய்ய வேண்டிய பூஜை. இவ்வாறான முடிவிற்கு நான் தள்ளப் பட்டேன்.

(தொடரும்….)

நடராஜன் கல்பட்டு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *