பாரதியின் ஜீவன் முக்தியும் ஜயபேரிகையும் சொல்லும் உயர் சிந்தனைகள்

1

— முனைவர்.சீ.இளையராஜா.

பாரதியாரின் வேதாந்தப் பாடல்கள் தொகுதி 1930ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பெற்றதாகும். இத்தொகுதியில் காணப்பெறும் சில பாடல்கள் 1910ஆம் ஆண்டில் வெளிவந்த பாடல் தொகுதியிலும் காணக்கிடைக்கின்றன. பாரதியார் கவிதைகள் என்னும் ஒட்டுமொத்த தொகுதியில் முதலில் விநாயகர் நான்மணிமாலை, இரண்டாவதாகத் தோத்திரப் பாடல்கள், மூன்றாவதாக விளங்குவதுதான் இந்த வேதாந்தப் பாடல்கள் என்னும் தொகுதியாகும். வேதாந்தம் என்னும் சொல்லை இரண்டாகப் பிரித்தால் வேதம், அந்தம் என்ற இரு சொற்கள் கிடைக்கும். வேதம் என்ற சொல்லிற்கு மறை என்ற பொருளையும், அந்தம் என்ற சொல்லிற்கு முடிவு என்ற பொருளையும் உரைக்கின்றது ந.சி.கந்தையாவின் செந்தமிழ் அகராதி. வேதாந்தம் என்ற சொல்லிற்கு மறைகளின் முடிவு என்ற பொருள் கொள்ள வேண்டும். ஜீவன் முக்தியையும் ஜய பேரிகையையும் வேதாந்தத்தின் முடிவுகளில் ஒரு பகுதியாகப் பாரதியார் எண்ணுகின்றார்.

1ஜீவன் முக்தியும் ஜய பேரிகையும்:
ஜீவன் முக்தி என்ற தலைப்பை ஜீவன், முக்தி என்ற இரு சொல்லாகப் பகுக்கலாம். ஜீவன் என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்தினால் சீவன் என வரும். சீவன் என்னும் சொல்லிற்கு உயிர் என்ற பொருள் கிடைக்கிறது. முத்தி என்னும் சொல் திரிந்து இடைப்போலியாக முக்தி என்னும் சொல்லாகியுள்ளது. முத்தி என்னும் சொல்லிற்கு விடுபடுகை என்று பொருள் கிடைக்கிறது. அதாவது, விடுதலை என்ற விளக்கத்தைக் காணமுடிகிறது. ஜீவன் முக்தி என்றால் உயிர்களுக்கான விடுதலை என்பதை இத்தலைப்பு உணர்த்துகிறது.

ஜய பேரிகை என்னும் சொல்லை ஜயம், பேரிகை என்னும் இரண்டு சொல்லாகப் பிரிக்கலாம். இதிலுள்ள ஜயம் என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்தினால் சயம் என்று வரும். இதற்கு வெற்றி என்னும் பொருள் கிடைக்கிறது. இதைப்போல் பேரிகை என்னும் சொல்லிற்கு மேளம் என்ற பொருள் கிட்டுகிறது. மேளத்தை முரசு என்றும் கூறுவர். ஜய பேரிகை என்ற சொல்லிற்கு வெற்றி முரசு என்ற பொருள் உணர்த்தப்படுகிறது. அதாவது, மனித குலம் வெற்றியை முரசு வாசித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் செயலை இத்தலைப்பு சுட்டுகிறது.

ஜீவன் முக்தியின் உயர்சிந்தனைகள்:
ஜீவன் முக்தி என்னும் இப்பாடலைப் பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என்று எழுதியுள்ளார் பாரதியார். பல்லவியும் அனுபல்லவியும் முறையே இரண்டு அடிகளைக் கொண்டு இலங்குகின்றன. சரணங்கள் என்பதில் மூன்று பகுதியும் முறையே நான்கு வரிகள் கொண்ட பாடலாக உள்ளன.

“ஜயமுண்டு பயமில்லை மனமே- இந்த
ஜன்மத்தி லேவிடு தலையுண்டு நிலையுண்டு”

என்ற வரிகளால் தம் ஜீவன்முக்தி என்னும் பாடலின் பல்லவியைத் தொடங்குகின்றார் பாரதியார். இந்த வரிகளில் மனிதனுக்கு வெற்றி உண்டு. பயம் கிடையவே கிடையாது என்று கூறி இந்தப் பிறவியிலேயே விடுதலையானது உண்டு. அது கிட்டியவுடன் மனித குலம் நிலைத்த புகழுடன் இப்புவியில் வாழும் வாழ்க்கையைப் பெற்று விளங்குகின்றது என்று கூறுகின்றார் பாரதியார்.

“பயனுண்டு பக்தியி னாலே- நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை”

என்ற அனுபல்லவி வரிகளில் மனிதகுலத்தைக் காக்கும் தெய்வமாக விளங்கும் சக்தியின் மீது பக்தி கொண்டு சரணடைந்தால் பயன் உண்டு. ஆனால், பகை என்ற ஒன்று இல்லவே இல்லை என்ற கருத்தை எடுத்துரைக்கின்றார் கவிஞர்.

“புயமுண்டு குன்றத்தைப் போலே- சக்தி
பொற்பாத முண்டதன் மேலே
நியமமெல் லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;
நெறியுண்டு; குறியுண்டு; குலசக்தி வெறியுண்டு”

என்னும் சரணங்களின் முதற்பகுதியாக விளங்கும் இப்பாடலில் மனித குலத்திற்கு மலையைப் போன்ற வலிமையுடைய தோள்கள் உண்டு. அந்தத் தோள்களுக்குக் கூடுதல் சக்தி சேர்க்கும் சக்தியின் அருளாகிய பொற்பாத ஆசீர்வாதமும் உண்டு. மனம் முழுவதும் சக்தியின் நினைவைக் கொண்டு நெறியுடன் குறிக்கோள் கொண்டு வாழும் மனித குலம் உண்டு எனக் கருத்துரைக்கின்றார் கவிஞர்.

செல்வங்கள் சேர்க்கும் அறிவுண்டு. தீமைகள் யாவற்றையும் அடியோடு பெயர்த்து வீசும் சக்தி தெய்வத்தின் அருள் வலிமை உண்டு. செய்யும் தொழிலுக்குரிய விளைவைப் பெறும் ஆற்றல் உண்டு. குறை என்ற ஒன்று இல்லவே இல்லை.பொய் என்ற கடலை அழிக்க முருகக் கடவுளின் பாதுகாப்பு உண்டு என்பதை,

“மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்- தெய்வ
வலியுண்டு தீமையைப் பேர்க்கும்
விதியுண்டு; தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை;
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு”

என்று இரண்டாம் பகுதியாக விளங்கும் பாடலில் மனித குலத்தின் இயல்பை முன்மொழிகின்றார் மகாகவி. இதில், சக்தித் தெய்வத்தின் துணையும் முருகக் கடவுளின் துணையும் மனித குலத்திற்குத் துணையாக நிற்பதைச் சுட்டுகின்றார்.

மனிதர்கள் அனைவரும் துன்பம் என்னும் கடலில் சிக்கிக் கொண்டவர்களாக விளங்குகின்றார்கள். இவர்கள் சக்தியின் அருளென்னும் தோணியைப் பற்றிக் கொண்டால் துயரங்கள் யாவற்றிலிருந்தும் கடந்து, வாழ்வில் என்றும் இன்பமுடன் இந்தப் பூமியில் சிறப்புடன் மனிதர்கள் வாழலாம் என்ற சிந்தனையை,

“அலைபட்ட கடலுக்கு மேலே- சக்தி
அருளென்னுந் தோணியி னாலே
தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு”

என்று சரணங்கள் என்னும் நிறைவுப் பகுதியாகிய இப்பாடலில் மனித குலம் வாழ்வில் நிறைவுடன் வாழ ஆன்மீகச் சிந்தனை அவசியம் என்ற கருத்தை நிறைக்கின்றார்.

ஜய பேரிகையின் உயர்சிந்தனைகள்:

“ஜய பேரிகை கொட்டடா- கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா ”

என்னும் இப்பாடலின் பல்லவியை மேற்கண்ட வரிகளால் தொடங்குகின்றார் மகாகவி. இதற்கு வெற்றி முரசைக் கொட்டி மகிழ்ச்சியுடன் வாழ் என்று பொருள் கொள்ளலாம்.

அதன் பின்பு சரணங்களில் காணப்பெறும் முதற்பகுதியாகிய பாடலில் பயத்தை அடித்து அழித்தும், பொய்களை வாழ்வில் இல்லாமல் செய்தும், இந்த உலக வாழ்க்கையை மனிதர்கள் பேரின்பத்தை அளிக்கக்கூடிய அமுதம் என எண்ணி எண்ணி வாழ்ந்து மகிழ்ச்சியை அடையவேண்டும் என்றும், நற்பண்புகள் பலவற்றோடு இவ்வுலகில் மனித குலம் வாழ்ந்து காட்டுதல் ஒரு புதிய வேதம் ஆகும் என்றதொரு புதிய சிந்தனையை,

“பயமெனும் பேய்தனை யடித்தோம்- பொய்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேதவாழ் வினைக்கப் பிடித்தோம்”

என்று கூறுகின்றார் பாரதியார். மேலும், இரண்டாம் பகுதியாக விளங்கும் பாடலில் பகல் பொழுதுகளில் சூரிய வெளிச்சத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் மனித குலத்தை மறைவாக அழித்துவரும் எமனைப் போன்ற வஞ்சனைகளைப் பயமின்றி அழித்தொழிக்கும் விழிப்புணர்வை மனிதர்கள் பெற்று விளங்குகின்றார்கள் என்ற சிந்தனையை,

“இரவியி னொளியிடைக் குளித்தோம்- ஒளி
யின்னமு தினையுண்டு களித்தோம்
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்”

என்னும் பாடல் வரிகளில் மனித குலத்தின் ஆற்றலைச் சுட்டிக்காட்டியுள்ளார் பாரதியார்.

சரணங்களின் நிறைவுப்பகுதியாக விளங்கும் பாடலில் இந்த உலகில் காணப்பெறும் உயர்திணை, அஃறிணைப் பொருள்கள் யாவும் சர்வ சமம் என்றதொரு உயர்சிந்தனையை,

“காக்கை, குருவி யெங்கள் ஜாதி- நீள்
கடலு மலையுமெங்கள் கூட்டம்
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
-நோக்க நோக்கக்களி யாட்டம்”

என்ற வரிகள் மூலம் உலகத்தார்க்கு உணர்த்துகின்றார் பாரதியார்.

இந்த உலகமானது இன்பங்கள் நிறைந்தது. அதை இயற்கையின் மூலம் மனித இனத்திற்கு இறைவன் வழங்கியிருக்கின்றான். மனிதர்கள் இயற்கையை இரசித்து அனைத்தையும் சர்வ சம உயிர்களாக எண்ணி அவற்றையும் வாழச்செய்து, மகிழ்ச்சி கொண்டு வாழ்வில் வெற்றியடைய வேண்டும். இவ்வாறான நல்லதொரு வெற்றியை முரசு கொட்டி கொண்டாடி மகிழ வேண்டும் என்றதொரு பெருஞ்சிந்தனையைப் பாரதியார் பேசுகின்றார்.

ஜீவன் முக்தியில் மனித வாழ்வில் ஏற்படும் பல்வேறு துயரங்களைக் கடக்க மனிதர்கள் இறைவழிபாட்டில் மனத்தினைச் செலுத்திச் செயல்படவேண்டும். இவ்வாறு, செயல்பட்டால் துயரங்களிலிருந்து மீண்டு, பேரின்பம் எய்தலாம் என்ற உயர் சிந்தனையைச் செப்புகின்றார் கவிஞர். இதைப்போல் ஜய பேரிகையில் பயம், பொய், வஞ்சனை போன்றவற்றை வாழ்க்கையில் அழித்து மனிதர்கள் வாழவேண்டும். இதைப்போல் உலகில் உள்ள உயிரினங்கள் யாவையும் சர்வசமம் என்ற எண்ணங்கொண்டு செயல்படவேண்டும். ஏனைய உயிர்களை மகிழ்ச்சியோடு இருக்கச் செய்து, அவற்றைக் கண்டு இரசித்து இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை மேற்கொண்டு பேரின்பத்தை மனித குலம் எய்தவேண்டும். இவைதாம் மனிதர்கள் தம் வாழ்வில் பெறும் பெரும்பேறு என்ற உயர்சிந்தனைக் கருத்துக்களை மனித குலத்திற்கு இவ்விரு கவிதைகள் மூலம் பாரதியார் சுட்டிக்காட்டுகின்றார்.

(குறிப்பு: 11.12.2015 அன்று மகாகவி பாரதியாரின் 134ஆவது பிறந்தநாள். அதை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை.சமர்ப்பணம்: பாரதிக்கு)

முனைவர்.சீ.இளையராஜா,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
அ.வ.அ.கல்லூரி(தன்.),
மன்னன்பந்தல்-609305
மின்னஞ்சல்:ilayaraja20@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாரதியின் ஜீவன் முக்தியும் ஜயபேரிகையும் சொல்லும் உயர் சிந்தனைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *