(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
(மீ.விசுவநாதன்)
அத்யாயம்: 40

உறவுகளின் பலம்

அவனுக்கு அக்கா பாலா என்ற ஸ்ரீபார்வதிக்கு நல்ல வரன் இராஜபாளையத்தில் தனக்குத் தெரிந்த நல்ல குடும்பத்தில் இருக்கிறதென்றும், பையன் எண்ணூர் “தர்மல் மின்நிலையத்தில்” வேலை செய்வதாகவும் அவனுக்குக் குடும்ப நண்பர்களான ஸ்ரீ ஆதிமூலவாத்தியார், மற்றும் அவரது மனைவி அம்மளுக்குட்டி மாமியும் அவனுக்குப் பெற்றோரிடம் தெரிவித்து, அவனுக்கு அக்காவின் ஜாதகத்தைப் பெற்றுச் சென்று, பிள்ளை வீட்டாரிடம் தொடர்பு கொண்டு பெண் பார்க்கும் நாளையும் ஏற்பாடு செய்தனர்.

பெண் பார்பதற்காக இராஜபாளையத்தில் இருந்து பிள்ளையின் பெற்றோர்களும், பிள்ளையின் தாய்மாமா மாமியும் மாப்பிள்ளைப் பையன் ஹரிஹரன் அவர்களுடன் வருவதாகச் சொல்லி இருந்தனர். அவனுக்கு அப்பாவின் ஒன்று விட்ட சகோதரியும், அவனுக்கு அத்தை முறையுமான “சீதை அத்தை”யின் இல்லத்தில் வைத்துப் பெண்பார்க்க முடிவு செய்திருந்தனர். சீதை அத்தையின் வீடு பாளையம்கோட்டையில் இருக்கும் பெருமாள்புரத்தில் இருந்தது. பூச்செடிகளும், ஆரஞ்சு, சப்போட்டா போன்ற பழச்செடிகளும் நிறைந்த மிக அழகான வீடு. அவனுக்குப் பெற்றோர்கள் அவனையும், அவனுக்கு அக்காவையும் அடிக்கடி அந்த இல்லத்திற்கு அழைத்துச் செல்வார்கள். சீதை அத்தையின் கணவர் ஹரிஹர ஐயர் நல்ல கண்டிப்பும், கனிவும் கொண்டவர். அவர் ஒரு சிவில் கான்ட்ரேக்டர். குடும்ப உறவைப் பேணும் குணம் கொண்டவர். அவருக்கு இரு பெண்களும், ஒரு மகனும் உண்டு. மகன் மத்திய அரசாங்கத்தின் விமானப் பாதுகாப்புத் துறையில் வேலையில் இருந்தார். அனைவருக்கும் திருமணம் நடந்திருந்தது. அவரது மருமகள் சித்ரா சுப்பிரமணியம். சென்னையில் மிகப் பிரபலமான “ஸ்ரீனிவாசன் & கம்பெனி” லெதர் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம் அவர்களின் மகள். அவனுக்கு சகோதரி பாலாவைப் பெண் பார்க்க வருகிறார்கள், அதுவும் தங்களது பெருமாள்புரம் வீட்டில் என்று அறிந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக அவனுக்குப் பெற்றோர்களிடம்,” மாமா நீங்க கவலையே படவேண்டாம்…நாங்கள் கூட இருக்கிறோம்” என்று தைரியம் கொடுத்தவர்களில் திருமதி. சித்ரா சுப்பிரமணியமும் ஒருவர் என்றும், பெண் பார்க்கும் தினத்தில் வந்திருந்த பெரியோர்களுக்கு உணவினைத் தன்னுடைய திருமணத்திற்குத் தந்திருந்த வெள்ளிப் பாத்திரங்களில் வைத்துப் பரிமாறி மகிழ்ந்த “சித்ரா சுப்பிரமணியனின்” நல்ல குணத்தை இப்பொழுது கூட அவனுக்கு சகோதரி பாலா நன்றியோடு சொல்லுவாள். அவனுக்கு அக்காவின் திருமணம் 12.05.1974 என்று தேதி குறிக்கப் பட்டது. திருமணச் செலவுக்கு அவனுக்கு அப்பாவின் சேமநல நிதியில் இருந்து கொஞ்சம் பணம் கிடைத்தது. அவனுக்கு அம்மாவழித் தாத்தா கடனாகக் கொஞ்சம் பணஉதவி செய்தார். குடும்ப நண்பர்களான மும்பை R .S . மணி அவர்கள் அவனுக்கு அப்பாவிடம் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். அவர் திருமணத்திற்கு ஒருவாரம் முன்பு அவனுக்கு அப்பாவை சந்தித்து ரூபாய் மூவாயிரம் தந்து,” மீனாக்ஷி சுந்தரம் இந்தக் கவரில் மூவாயிரம் ரூபாய் இருக்கு…கல்யாணச் செலவுக்கு வைத்துக் கொள்ளும்…உமக்கு எப்பொழுது முடியுமோ அப்பொழுது திரும்பத்தந்தால் போதும்..கவலைப் படாமல் கல்யாணத்தை நடத்தும்” என்று சொன்ன பெருந்தகை. (அப்பொழுது ஒரு படி அரிசி இரண்டு ரூபாய்க்கும், தங்கம் ஒரு சவரன் இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கும் விற்ற காலம்.) R. S. மணி அவர்கள் மும்பை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த ஆதிலக்ஷ்மணனின் ஷட்டகர் (சகலை). திருமணச் சமையலை “கிச்சன்” முன்னின்று செய்து கொடுத்தார். கைலாசம் ஐயரின் தம்பிதான் “கிச்சன்”. அற்புதமான சமயற்கலைஞர். அவர்களும் அவனுக்கு அப்பாவின் நெருங்கிய நண்பர்கள்தான். மூன்று நாட்களும் நல்ல சுவையாகச் சமைத்து அனைவரையும் மகிழ்வித்து விட்டார். பிள்ளை வீட்டர்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. திருமணத்தில் ஸ்ரீ லக்ஷ்மண வாத்தியார் குடும்பத்தினரின் பங்கு நன்றியோடு நினைக்க வேண்டிய ஒன்று.

வடக்கு ரதவீதியில் உள்ள அவனுக்கு அப்பாவின் பூர்வீக வீட்டின் வாசல் மற்றும் இரண்டு பக்கத்திலும் உள்ள நான்கு வீடுகளின் வாசல் அடைத்துப் பந்தல் போடப் பட்டிருந்தது. அவனுக்குச் சித்தப்பாக்கள், அத்தைகள், மாமா குடும்பங்கள், எம்.ஆர்.ஆதிவராகன், எம்.ஆர்.ராமநாராயணன் போன்ற நண்பர்களின் பக்க பலத்தோடு அவனுக்கு அக்காவின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

2f590b7a-f77d-462b-80e2-1a56b0b84e17

திருமணம் முடிந்து அவனுக்கு அக்கா, அத்திம்பேர் மற்றும் பிள்ளை வீட்டாரின் குடும்பத்தினரை இராஜபாளயத்திற்கு அனுப்பி வைக்க அம்பாசமுத்திரம் சென்றிருந்தனர். அம்பையில் உள்ள பிரபலமான புகைப்பட நிறுவனம் “சித்ரா ஸ்டுடியோ”வின் வாசலில் பேருந்து வருவதை எதிர்பார்த்து பிள்ளைவீட்டார் நின்று கொண்டிருந்தனர். அது சமயம் அவனுக்கும், அவனுக்கு அக்காவுக்கும் ஆசிரியராக இருந்தவரும், அவனுக்கு அப்பாவின் நல்ல நண்பரும், ஸ்ரீ ஞானானந்த பாரதி சுவாமிகளின் பூர்வாச்ரம சகோதரருமான ப்ரும்மஸ்ரீ ஆர். சங்கர ஐயர் அவனுக்கு அக்காவையும், அத்திம்பேரையும் வாழ்த்துவதற்காகவே வந்து, தான் எழுதிக் கொண்டு வந்திருந்த ஒரு அருமையான கவிதையை அங்கு இருந்த அனைவரின் முன்பாக வாசித்து, அவனுக்கு அக்காவையும், அத்திம்பேரையும்,” நீங்கள் எப்பொழுதும் நிறைந்து வாழ வேண்டும்” என்று தான் கொண்டு வந்திருந்த மங்கள அக்ஷதையைத் தூவி ஆசீர்வாதம் செய்தார். அவரைப் போன்ற நல்ல உள்ளங்களின் ஆசீர்வாத பலத்தால் இன்றும் அவனுக்கு சகோதரியின் குடும்பம் மனத்திலும் நிறைந்து இருக்கிறது.

“மணிமுத்தாறு பூங்காவில் “மன்னவன் வந்தானடி”

14.05.1974 அன்று காலை ஒன்பது மணிக்கு கல்லிடைக்குறிச்சி தேரடித்தெருவில் உள்ள ஒரு சைக்கிள் கடையில் அவனும், அவனுக்கு நண்பன் பிரபுவும் வாடகைக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு மணிமுத்தாறு நோக்கிப் புறப்பட்டனர். அவனுடைய ஊரில் இருந்து மணிமுத்தாறு அணை, அருவிக்கு ஒரு மணிநேரத்திற்குள் சைக்கிளில் சென்று விடலாம். ஒவ்வொரு முறையும் அவன் ஊருக்கு வரும்பொழுது செல்லக் கூடிய ஒரு இடமாகவே மணிமுத்தாறு அருவித்துறை இருக்கிறது. அன்று அவனும், பிரபுவும் சென்று வருவதற்கு ஒரு கூடுதல் காரணமும் இருந்தது. அது சிவாஜி கணேசன் நடித்த “மன்னவன் வந்தானடி” திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு மணிமுத்தாறு அணை, பூங்காவில் நடை பெற்றுக் கொண்டிருந்தது. சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்து விட்டு அவனும், பிரபுவும் படப்பிடிப்பைக் காண பூங்காவுக்குள் சென்றனர். கூட்டம் அதிகம்தான். அவனும், பிரபுவும் ஒரு திண்டின் மீது நின்று கொண்டு பார்த்தனர். சிவாஜி கணேசனும், மஞ்சுளாவும் ராஜ உடையில் இருந்தனர். ஒளிப்பதிவாளர் P. N. சுந்தரம் தனது காமிரா மூலமாக அந்த இடத்தின் ஒளி அமைப்பினைப் பார்த்துக் கொண்டிருக்க, நடன இயக்குனர் சலீம் அந்தப் பாடலுக்கான நடன அசைவுகளைக் கற்றுத் தர, இயக்குனர் P. மாதவன் ஸ்டார்ட் சொல்ல “காதல் ராஜியம் உனது, அந்தக் காவல் ராஜியம் எனது” என்ற வாலியின் பாடல் படமாக்கப் பட்டது. எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் T M. S., P. சுசீலா பாடிய மிக இனிமையான பாடலது.

அந்தப் படப்பிடிப்பைப் பார்த்த பிறகு அவனும், பிரபுவும் மணிமுத்தாறு அருவியைப் பார்க்கச் சென்றனர். அருவியைப் பார்த்துத் திரும்பி வரும் பொழுது தகரக்கொட்டகை என்னும் இடத்தில் உள்ள இறக்கத்தில் அவனுடைய சைக்கிளின் முன்சக்கரம் பிரபுவின் சைக்கிளின் பின்சக்கரத்தில் மெதுவாகத் தட்டியது. அடுத்த கணத்தில் இருவரும் அந்த இறக்கத்தில் உருண்டு விழுந்தோம். இருவரின் கைகளிலும், கால்களிலும் நல்ல சிராய்ப்புகள். இரத்தம் வழிய சைக்கிளை மெதுவாக ஓட்டிக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தோம். “கல்யாணத்திற்கு வந்த இடத்தில் இப்படி ரத்தக் குறியோட வந்து நிக்கறே..அப்படி என்ன சினிமா மோகம்” என்று அவனுக்கு அம்மா அர்ச்சனை செய்தாள். அவன் கூட ஒரு வாரம் ஊரில் தங்கி விட்டு, சென்னைக்குத் திரும்பினான்.

“காதல் ராஜியம் உனது, அந்தக் காவல் ராஜியம் எனது” என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் மானசீகமாக அவன் மணிமுத்தாறு சென்று விடுவான்.

17.12.2015

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அவன், அது , ஆத்மா (40)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *