மார்கழி மணாளன்  13   திருவனந்தபுரம் – பத்மநாபன்  

0

 க. பாலசுப்பிரமணியன்

097265bd-2433-4646-9771-f75a46b7dd7a

ஆனந்தன் அனந்தன் அச்சுதன்  அரங்கன்

ஆதிசேஷன் மேலுறை அனந்த சயனன்

பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்

பாரினைக் காக்க வந்தான்  பத்மநாபன் !

 

மாமுனி தேடிடவே மறைந்தான் மாயவன்

மாயமாய் இலுப்பையில் இணைந்தான் தூயவன்

மங்கலம் மலர்ந்திடும் மாபெரும் உருவம்

மா தவன் தண்டத்தில் மும்முறை அடக்கம் !

 

கருவண்ணம் தலை நாகம்  கருநீலம் உடல்  மின்னும்

அலையாழி  பால்வண்ணம் அரங்கன்  எழில் குன்றம் !

தலைவாசல் ஒருபக்கம்  பொன் திருப்பாதம் மறுபக்கம்

திருமார்போ நேர்நோக்கும்  திருவருளோ நம் பக்கம் !

 

நிலமகள் அலைமகள் பதம் போற்ற

கலைமகள் தலைவனும் நாபியில் சிறக்க

மோனத்தில் யோகத்தில் போகத்தை நிறுத்தி

மோகனன் தியானத்தில் பூமியின் சுழற்சி !

 

அலையாழி துயின்றாலும் சிலையாகச் சமைந்தாலும்

நிலையாத வாழ்க்கையைக் கலையாகப் படைத்தான்

மரியாத உயிருக்கு மரிக்கின்ற உடல் படைத்த மாயன்

மனத்துள்ளே நிறுத்திட்டால் மார்கழியில்  மங்கலமே! ‘

 

ஊழ்வினையால் ஒருடலில் நான் சிறையிருக்க

ஆழ்கடலில் ஆனந்த சயனத்தில் நீயிருக்க

தாளருகில் திருவாய் திருமகளும் அமர்ந்திருக்க

தந்தருள்வாய் தாளிரண்டும் தாசனுக்கே துணையிருக்க  !

 

வஞ்சமுடை நெஞ்சினில ஆணவமே  ஆர்பரிக்க

கொஞ்சிவரும் காற்றோ  நாசியிலே நாள் வரைக்கும் !

மிஞ்சியதாய் ஏதொன்றும் மரித்தவுடன் கிடைப்பதில்லை !

மாதவனே ! உனையன்றி உறவேதும் உண்மையில்லை !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *