நிர்மலா ராகவன்

முதுமையில் இளமை

உனையறிந்தால்
கேள்வி: என் சொற்ப சம்பாத்தியத்தில் நான் நல்ல புடவை வாங்கிக்கொண்டால், பட்டப்படிப்பு படித்த என் மகள், `45 வயதில் உனக்கு இதெல்லாம் தேவையா?’ என்று பழிக்கிறாள். மகனும், `என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் உன்னை என் அக்காளா என்று கேட்கிறார்கள். மானம் போகிறது!’ என்று கடிந்துகொள்கிறான். என்ன செய்வது?

விளக்கம்: நீங்கள் செய்வதுதான் சரி. மூப்பு வரும்போது வரட்டுமே! நாமாக அதைத் தேடிப் போவானேன்!
`உங்களுக்கு முதுமையே வேண்டாமா?’ என்று யாராவது கேட்டால், `அது வருகிறபோது வரட்டும். நாமாக வரவழைத்துக் கொள்வானேன்! என்ன அவசரம்!’ என்று சொல்லிவிட்டுப் போங்களேன்!

உங்கள் மகனும், மகளும் பெருமைப்பட வேண்டிய விஷயம் உங்கள் இளமைத் தோற்றம். மாறாக, பொறாமையும், அவமானமும் அடைகிறார்கள்!

என் மகள் தமிழ்நாட்டில் ஒரு புடவைக்கடைக்குப் போய், `எங்கம்மாவுக்கு ஒரு புடவை காட்டுங்க,’ என்று கேட்க, அறுபது வயதுக்குமேல் ஆனவர்கள் என்று உத்தேசித்து, பழுப்பு நிறமாகக் காட்டினாராம் கடைச் சிப்பந்தி. இவள் அயர்ந்துபோனாள்.
ஏன், வயதானவர்கள் வண்ண வண்ணமாக உடுத்தக்கூடாதா?

இளமையில், பிறரைக் கவரத்தான் அழகாக உடுத்தினோமா, என்ன! எல்லார்போலவும் இருக்கவேண்டும் என நம் சொந்த விருப்புவெறுப்புகளை அலட்சியம் செய்வது கொடுமை.

ஐம்பது வயதில் திடீரென குண்டாகிவிட்ட நெருங்கிய சொந்தக்காரியிடம், `உடம்பைப் பாத்துக்கோ. ஏதாவது உடற்பயிற்சி செய்யக்கூடாதா!’ என்று ஆதங்கத்துடன் கேட்டேன்.

`ம்? B.P, ஷுகர் எல்லாம் வரவேண்டாமா?’ என்றாள் பதிலுக்கு. கிண்டலாகப் பேசுவதாக நினைப்பு.

சில வருடங்களிலேயே, அவளுக்கு மூட்டு வலி. இன்னும் மிக வயதானவர்களைத் தாக்கும் ஏதேதோ உபாதைகள். மன அழுத்தம் என்று மருந்துகள் வேறு. எப்போது வயதாகும், வியாதிகள் வரும் என்று எதிர்பார்த்து, `அது இயற்கை!’ என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தால், வேறு எப்படி நடக்கும்?

இந்தியாவில், சில உறவினர் பெண்கள் என்னைக் கேட்டார்கள், `நீங்கள் என்னென்ன மருந்து சாப்பிடுகிறீர்கள்?’

வயதாகிவிட்டால், மருந்துகள் உட்கொண்டுதான் ஆகவேண்டும் என்று தீர்மானித்துவிட்டவர்களைப் பார்த்து எனக்கு வியப்பும், பரிதாபமும்தான் எழுந்தன. ஆரோக்கியமாக இருக்க வழிகளா இல்லை?

எனக்குத் தெரிந்த ஒரு 65 வயது சீனப் பெண்மணி, அவ்வப்போது முடிவெட்டிக்கொள்ள சலூனுக்குப் போவார். போய்வந்ததும், `இளமையாகக் காட்சி அளிக்கிறோமே!’ என்ற உற்சாகம் பெருக, ‘எங்காவது வெளியே போகலாமா?’ என்று சிறுபெண்போலத் துள்ளுவார்.

இளமைக்காலத்தில் வசதி குறைவாக இருந்ததால் எதையும் அனுபவிக்க முடியாது போய்விடுகிறது சிலருக்கு. நாற்பது வயதானபிறகு, வசதி வருகிறதென்று வைத்துக்கொள்வோம். ஆசைப்பட்டதை அப்போது அனுபவிக்க என்ன தடை? அதற்கென இன்னொரு பிறவி எடுத்தா வரமுடியும்? விருப்பப்படி கௌரவமான உடை அணியலாம். அது ஒரு பொருட்டேயில்லை. நமக்கு நம் மகிழ்ச்சி முக்கியம்தானே?

சுய நிம்மதியைவிட, `பிறர் என்ன சொல்லிவிடுவார்களோ!’ என்றே தமது ஒவ்வொரு சொல்லையும், செயலையும் அளப்பவர்கள், `சமூகம் விதித்தபடிதான் நாம் வாழ வேண்டும்!’ என்று வாதிடலாம். இப்படிப்பட்டவர்கள் சொல்வதை — நாம் பெற்ற குழந்தைகளே ஆனாலும் — பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

சமூகம் என்பது என்ன?
நானும், நீங்களும்!
நாம் மாறினால், தானே சமூகமும் மாறிவிட்டுப்போகிறது!

`எனக்கு வயதாகிவிட்டது! இனி என்ன இருக்கிறது. என் வாழ்க்கை அவ்வளவுதான்!’ என்று விரக்தியுடன் பேசி நடந்துகொள்பவர்கள் வாழ்வில் ஒரு பிடிப்புமின்றி, இயந்திரத்தனமாக காலத்தை ஓட்ட வேண்டியிருக்கும். அவர்களுக்கும் மகிழ்ச்சி கிடையாது, அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களால் நிம்மதி கிடையாது.

இவர்களுக்கு மாற்றத்தை நாடும் துணிச்சல் இல்லை. மாறாக, தம் வித்தியாசத்தாலேயே வெற்றியைப் பிடித்திருக்கும் பிறரைப் பழிப்பதில் நிறைவு அடையும் கோழைகள். போதாத குறைக்கு, கூட இருப்பவர்களைச் சதா தொணதொணத்துக் கொண்டிருப்பதிலும், மட்டம் தட்டுவதிலும் அற்ப திருப்தி அடைவார்கள். (அதனால்தான், கிழப்பாட்டிமாதிரி தொணதொணக்காதே!’ என்று இளையவர்களைத் திட்டுகிறோம்).

இன்னதென்று புரியாத சூனியத்தை மறக்க இன்னொரு வழி அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல். இப்பழக்கத்தால் ஆரோக்கியம் மேலும் கெடும் என்பதை எவரும் நினைத்துப் பார்க்க விரும்புவதில்லை. சாப்பிடும் நேரத்தில் மட்டும் மகிழ்ச்சியாக உணர்வார்கள்.

தம்மை மாற்றிக்கொள்ள விரும்பாது, வெற்றியும், மகிழ்ச்சியுமாகக் காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து, `என்னால் மட்டும் ஏனோ எதிலுமே பெயர் போட முடியவில்லையே!’ என்று ஏக்கப் பெருமூச்சு விடுவதால் என்ன பயன்!
நாம் ஒவ்வொருவரும் இறுதி மூச்சு விடும்வரை நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு நல்ல வழியில் வாழ்ந்தால்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இல்லாவிட்டால் சுமைதான் –நமக்கும், பிறருக்கும்.

`நாற்பது வயதுக்குமேல் அழகாக அலங்கரித்துக்கொள்வதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறர்கள்?’ என்று 65 வயது ஜெர்மனி நாட்டுப் பெண்மணி ஒருவரைக் கேட்டேன், முன்பு ஒரு முறை. உலகளாவிய நிலையில், மிகப் பெரிய உத்தியோகம் வகித்து வந்தவர் அவர்.

யோசிக்காமல் பதிலளித்தார்: `காலையில் என்னையே கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது, ஒரு அழகான, இளமையான முகத்தைப் பார்க்கத்தான் விரும்புகிறேன்!’

சிலரின் வெற்றியின் ரகசியம் இதுதான் — தன்னம்பிக்கை, சுயமரியாதை மற்றும் பிறரது ஏச்சுப்பேச்சை அலட்சியம் செய்தல்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *