மார்கழி மணாளன் 29 – ஸ்ரீ வைகுண்டம் – கள்ளபிரான்  

0

 க. பாலசுப்பிரமணியன்

631591bb-352f-47f8-b69b-757f4f92dc99

வேதங்களைக் காத்திடவே வேண்டி நின்றான் நான்முகனும்

வைகுண்டம் விட்டுவந்த மாதவனும் மனமிரங்கிக் காத்தான்

வானில் மட்டுமின்றி  மண்ணிலோர் வைகுண்டம் படைத்தான்

வந்தவர்கள் நலம் காத்து வாழ்க்கைக்குப் பொருள் கொடுத்தான் !

 

கல்லுக்கும்  பால் பொழிந்து கருணைகண்ட பசுவிடம்

குறை கண்ட மன்னவனும் பசுவைப் பழித்தே தொடர

குறைவில்லா கோபாலனை மண்ணுக்குள் கண்டான்

குலம் வாழ நல்லதோர் கோவில் கட்டி மகிழ்ந்தான் !

 

கள்ளனும்  கொண்டான் கண்ணனிடம் காதல் நெஞ்சம்

காத்திட வேண்டியே  நின்றான் கோகுலன் முன்னம்

கண்ணனே கள்வனாய்ச் சென்றான் காவலில் தஞ்சம்

கருணையின் வடிவே என்றும்  கள்ளபிரான் மஞ்சம் !

 

கொஞ்சுபவர்க்குக் குழந்தையாய் வரும் கண்ணன்

கோலாகல வாழ்க்கைக்கு  குழலூதும் அன்பன்

கோடித்துயர் வந்தாலும் கூட நிற்கும் நண்பன்

கோசங்கள் அழிந்ததுமே அணைக்கும் வைகுந்தன் !

 

வேண்டியவர்க்கு வேண்டியதைத் தந்துவிடும் வைகுண்டம்

வேண்டாதவர்க்கும் உடல் வினை முடிய வீடு தரும் !

வீதியில் வாழ்ந்தாலும் வீடு பணம் சேர்த்து உயர்ந்தாலும்

விதி முடிவில் விரும்பிச் செல்லும் வாசல் வைகுண்டம் !

 

மனம்விரும்பி மாதவனைத் தேடும் நேரம்

மாதங்கள் பன்னிரண்டில் மார்கழியைச் சேரும் !

மங்கலங்கள் பொங்கிவர வழிவிடும் மார்கழி

மாதவன்  அருளோடு வருவாய் மீண்டும் வீடுதேடி !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *