பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

12583686_946026822118184_1224948226_n
27182698@N05_rதிருமதி ராமலஷ்மி ராஜன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (9.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி (48)

  1. பிச்சை எடுக்க வைத்த 
    மனிதனின் துரோகத்தில் 
    தவம் கலைந்தது 
    ஒற்றை யானை…. 

    யாகச காட்சிக்கு 
    மறுத்து விட்ட பசி
    வெறும் கோயிலின் 
    சாட்சியானது…

    யோசிக்க யோசிக்க 
    எறும்பானது யானை,
    பெரும் சோகம்
    கண்களானது..

    புகைப்படத்தில் 
    பதிந்திட்ட 
    காடுகளின் பெருந்துயர் 
    அங்குச பொய்மையில் 
    ஆத்திரம் அடக்கியது……

    எட்டிப் பார்த்து விட்டு 
    தலை கவிழ்ந்து கொண்ட 
    கடவுள் எப்போதும் போல..
    அதே கல்லுக்குள்….

    கவிஜி 

  2. யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் சவுக்கியம்

    யாரோ கோவிலுக்கு
    கொடுத்த அன்பளிப்பாம் நான்

    காட்டைவிட்டு( பிறந்தவீடுவிட்டு)

    நாட்டுக்குள் ( புகுந்தவீடுவந்ததும்) பாகனின்
    கட்டுப்பாட்டுக்குள் வந்தாயிற்று
    என் பழக்க வழக்கங்கள் யாவும்
    கரும்பையும் மூங்கிலும்தின்றவனுக்கு
    கடலையும் பொங்கலும் புளியோதரையும்
    சர்க்கரை வியாதியை உண்டாக்க
    மருத்துவரின் பரிந்துரைப்படி காலை
    ஒரு மைல்தூரம் நடைபயிற்சி பாகனுடன்
    போகும் வழியெல்லாம் மக்கள் அணுக
    சாமிக்கு சாமரம் வீசிய கையால்(தும்பிக்கையால்)
    யாசகம் கேட்க வைத்தான் பாகன்
    மக்கள் கொடுக்கும் இலவசம்
    உணவென்றால் எனக்கு
    பணமென்றால் பாகனுக்கு என
    புரிந்துணர்வு ஒப்பந்தம் இருவருக்குள்
    இதில் கோவிலில் விழா என்றால்
    கேட்கவே வேண்டாம் ..கோவில்வாசலில்
    அலங்கார ஆடையுடன் நின்று
    போவோர் வருவோருக்கு ஆசிகூறி
    போனசாக தரும் காசுகளை
    பாகன் மனமகிழ்ந்து பெற்றுக்கொள்வான்
    சில நேரங்களில் மாமூல் வாங்கும்
    பேட்டை ரவுடிபோல் கடைக்கு கடை நிற்கச்
    சொல்வான் பாகன் பயந்துபோய் கடைக்காரன்
    ஐந்தோ பத்தோ கொடுத்து வாழைப்பழமும்
    கொடுப்பான் அதிலும் இருவருக்கும் பங்கு
    இப்படித்தான் நகரத்தில் என் வாழ்க்கை ஓடுகிறது
    வேட்டையாடிய யானையாகி பாகன் கையில்
    வித்தை காட்டும் பொருளாகி வாழ்கிறேன்
    என்னை விட மனிதனுக்கு சக்தி அதிகம்தான்
    தன்னைப்போலவே என்னை மாற்றியுள்ளானே?
    வருடம் ஒரு முறைபிறந்த வீடு அனுப்புவார்கள
    ஆட்சியா:ளரின் அறிவுறைப்படி அதிகாரிகள்
    அது ஒன்றே எனக்கு ஆறுதல்தரும் விஷயம்
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான்
    எல்லா சவுக்கியமும் …….என்பதே நியதி

  3. மடமையில்…

    உருவில் பெரிய யானையதை
         ஊர்வலம் பவனி நாயகரை,
    தெருவில் இரந்திட விட்டுவிட்டார்
         தேவை தமக்குப் பெருக்கிவிட்டார்,
    பெருகிடும் மாந்தர் ஆசைக்கே
         பெருந்துணை யாக்கிக் களித்திட்டார்,
    கருணை உருவாய்க் கண்டமுன்னோர்
         கடவுளாய்ப் படைத்ததை மறந்தாரோ…!

    -செண்பக ஜெகதீசன்…

  4. கோயிலின் வாசலில் நிற்கின்றபோது 
    கும்பிட்டு வணங்கிப் போவோர் கண்டும் 
    பிடிக்காத மதம், யானைக்கு
    கோயிலின் தெய்வத்தை 
    கும்பிட வருவோரிடத்தே 
    குலம் கோத்திரம் கேட்டுக் 
    குடைவதைப் பார்த்ததும் 
    கோபத்தில் பிடித்துவிடுகிறதோ?.

    *மெய்யன் நடராஜ் 

  5. பேருருவ உயிரொன்று
    பிச்சைகேட்க வைத்துவிட்ட
    பீடிழந்தஂநிலைதந்த மனிதன்….தன்
    பேராசைக் கிரையாக்கும் கொடியன்.

    காடிழந்த கவலையோடு
    வாழ்விடத்தைத் தேடவைத்து
    ஊரூராய் ஓடவிட்ட மனிதன்….தன்
    ஒருநலமே நோக்கமெனும் கொடியன்.

    கோவிலுக்கோர் அணியாகக்
    கொடையெனவே எனைத்தந்து
    குறைதீர்த்துக் கொண்டவொரு மனிதன்..என்
    குறைகேட்க மறந்தவொரு கொடியன்.

    ஊர்வலத்தில் அழகுசேர்த்த
    ஒய்யாரக் காட்சியிலே
    ஓடிவந்த குழந்தையெலாம் மகிழும்….அது
    ஒன்றேதான் எனக்குநலம் அருளும்.

    மனமகிழும் சர்கஸிலே
    மந்திரமாய் எனையாட்டி
    மக்களினைக் கவருகின்றான் மனிதன்….என்
    மனக்கவலை புரிந்துகொள்ளாக் கொடியன்.

    மதம்பிடித்த மனிதரெலாம்
    மதம்பிடித்தே ஆடிடுவார்
    மாற்றுமதங் கொண்டவரை மிதிப்பார்…தவறாய்
    மதஙகொண்ட யானையென விதிப்பார்.

    ஓரானை பேரானை
    ஒன்றானை வணங்குதலால்
    ஊரானைக் காப்பதெந்தன் பண்பாம்….நல்ல
    பேரானைக் காப்பதுங்கள் அன்பாம்.

    சிறியதொரு சங்கிலியில்
    சிற்றானை கட்டுண்டு
    பெரியதொரு தும்பிக்கை ஆட்டும்…அது
    பேரன்பில் பிணைந்திருக்கக் காட்டும்.

    கைநீட்டிப் பிச்சைகேட்கும்
    கவலையான நிலையெனக்குக்
    கணப்போதும் தந்திடவும் வேண்டாம்…மனிதா
    கணநாதன் துணைமறக்க வேண்டாம்.
                  கவிஞர் “இளவல்” ஹரிஹரன், மதுரை.

  6. எங்களை அறியவில்லை

    ஆண்டவன் பணிக்கு வந்த உன்னை
    அங்காடித் தெருக்கள் தோறும்
    கையேந்த வைத்த 
    கருணையற்றவர்கள் நாங்கள்

    அன்பிற்கு நீ தந்த இசைவினை
    அடிமை சாசனமென்று எண்ணி
    உன்னை அடக்கி விட்டதாய்
    போலிப் பெருமிதத்தில் புன்னகைக்கிறோம்

    உன் பலம் உனக்குத் தெரியாதென
    நிச்சயமாய் நம்பும் நாங்கள்
    எங்கள் பலவீனங்களை
    என்றுமுணர்ந்ததில்லை
    அதனால்தான்
    இயற்கையை வென்றுவிட்டோமென்ற
    எங்கள் இறுமாப்பு
    கொட்டிய மழையில்
    முற்றிலுமாய் கரைந்தது

    பண்பற்ற எங்கள் செய்கைகளால்
    நீ பதற்றமடையும் பொழுதெல்லாம்
    மதம் பிடித்துவிட்டதாய் அறிவித்து
    மயக்க ஊசிப் போடுகிறோம்
    ஆனால் நாங்களோ
    மத வெறியுடனேத் திரிகிறோம்
    மயக்க ஊசிப்போட மட்டும்
    மருத்துவர் எவருமில்லை!

Leave a Reply to கவிஜி

Your email address will not be published. Required fields are marked *