புலவர் இரா. இராமமூர்த்தி.

பொதுவாக நாம் பேசும்போது இடத்திற்குத் தக்கவாறு பேச வேண்டும்! நாம் நம்முடன் நன்கு பழகிய நண்பர்களுடன் எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசுவோம்! ஆனால், கற்றறிந்தோர் இருக்கும் அவையில் சற்று அச்சத்துடன்தான் பேச வேண்டும்! திருவள்ளுவர் சான்றோர் அவை, எளியோர் அவை என்று அவையை இரண்டாகப் பிரித்துக் கூறுகிறார்! அவர் மிகச்சிறந்த நல்ல கருத்துக்களை அவையினர் ஏற்றுக் கொள்ளும்படிப் பேசுவோர், சிற்றறிவினர் உள்ள அவைக்குள் இருக்க நேரிட்டால், அங்கே இருக்கும் மக்களுக்கு ஏற்றவாறு, அறிவுக்குப் பொருந்தாத மலிவான நகைச்சுவைக் கருத்துக்களைப் பேசலாம்! ஆனால் சிறந்த அறிவு படைத்த அறிஞர்கள், எக்காரணத்தைக்கொண்டும் சிற்றறிவினர் இருக்கும் அவைக்குச் சென்றால், மறந்தும் கூட, உயர்ந்த நல்லறிவுக் கருத்துக்களை சொல்லக் கூடாது என்கிறார், அதனை …

”புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்!”(719)

என்று பாடுகிறார்! அவையறிதல் என்ற அதிகாரத்தில், தம்மினும் தாழ்ந்தோர்அவை, தமக்கு இணையானார்அவை, தம்மினும் உயர்ந்தோர் அவை என்ற மூவகை அவையைப் பரிமேலழகர் வகுக்கிறார் விநாயக புராணம்’

தொகைபடு செஞ்சொல் இலக்கணைச் சொல்லே
சூழ்ந்திடும் குறிப்புச்சொல் மூன்றின்
வகையறிந் துயர்ந்தவர் ஒத்தவர் தாழ்ந்தோர்
மருவுமூன்று அவையுமா ராய்ந்து,
தகையற வுணர்ந்தோர் அவையின் முந்துரையார்
சமத்தின் எவ்வாற்றினும் கிளப்பார்,
நகைபடு தாழ்வின் ஒன்றையும் உரையார்
நவைபடாச் சொற்பொருள் ஆய்ந்தோர்!

என்று பாடுகிறது! இதனை ‘அவையறிதல்’ அதிகாரத்தில், சொல்லின் தொகை, சொல்லின் நடை, சொல்லின் வகை என்ற மூன்று தொடர் களால் விளக்குகிறார்.

சொல்லின் தொகை என்பது சொல்லின் குழு ஆகும். அது செஞ்சொல், இலக்கணைச் சொல், குறிப்புச்சொல் ஆகிய சொற்கள் கொண்டது! செஞ்சொல் என்பது வெளிப்படையாகத் தனக்குரிய பொருள் தருவது! இலக்கணை என்பது புதிய பொருளை ஆக்கிக் கொள்ளும் சொல்! அவை ஆகுபெயர் போன்றன! குறிப்புச்சொல் என்பது, வெளிப்படையாக ஒரு பொருளும், குறிப்பாக வேறு பொருளும் தரும் சொல்! அவற்றை ஆராய்ந்து, உரியவாறு பயன்படுத்த வேண்டும்!

சொல்லின் நடை என்பது அந்த அந்தச்சொல் அதற்கு உரிய செம்பொருளையோ , இலக்கணைப் பொருளையோ, குறிப்புப் பொருளையோ, வழங்கிக் கேட்போர் புரிந்து கொள்ளுமாறு, கூறுதல்!

சொல்லின் வகை என்பது கேட்போர் புரிந்து, ஏற்றுக் கொள்ளும்வகையில், அவையினரின் உணர்வின் வகைமைக்கேற்ப அமைதலாகும்! அதாவது கேட்போரின் திறத்துக்கேற்ற சொல்வகைகளை அறிந்து கூறுதலாகும்!

அவ்வாறு சொல்லுதலின் சிறப்பை , ‘செலச்சொல்லுதல்’ என்ற தனித்த தொடரால் குறிக்கிறார்! வள்ளுவர் செலச் சொல்லுதல் என்ற தொடரை மூன்று குறட்பாக்களில் பயன் படுத்தியுள்ளார்! அவை,

”புல்லவையில் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்” (719)

”கற்றாருட் கற்றார் எனப்படுவார் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்” (722)

”கற்றாருள் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்!”(724)

என்பனவாகும்! இவற்றுள் , ”நல்லவையுள் நன்கு செலச்சொல்லுதல்” என்ற தொடர், நல்லஅவை யினர் ஏற்றுப் போற்றும்படி அறிவார்ந்த சொற்களைக் கூறுதல் என்று பொருள் படும்! ”கற்றாருள் கற்ற செலச்சொல்லுதல்” என்ற தொடர், கற்றோரிருந்த அவையின்கண், தம் அறிவார்ந்த கருத்தினை அஞ்சாமல் கூறுதல் என்று பொருள் படும்! பலநூல்களைக் கற்ற அவையினரிடம் தாம் கற்ற நூலின் கருத்தினை அவர் உள்ளம் கொள்ளும் வகையில் சொல்லுதல் என்றும் பொருள் படும்!

இவற்றுள், கற்றார் முன் கற்ற செலச்சொல்லுதல், என்பது பலநூல்களைக் கற்றவர்களிடம் தாம் கற்றவற்றைக் கூறுவதுடன், அக்கற்றார் கூறும் அறிவார்ந்த கருத்துக்களை ஏற்றுப் போற்றித் தம்மை வளர்த்துக் கொள்வதையும் குறித்தது! ஒருவர் தம் அறிவுத்திறனைப் பிறருக்குப் புலப்படுத்தும்போதே, பிறரின் அறிவுத்திறனையும், அவர் வாய்ச்சொற்களின் வழியே புரிந்து கொள்ளுதலாகிய பயனை அடையலாம் என்பதையே இக்குறட்பாவின் புதிய விளக்கமாக நாம் காண்கிறோம்! இதனை மேலும் விளக்கும் வகையில், பிறர்கூறும் சொல்லின் சிறந்த கருத்தைக் கேட்டறிந்து கொள்வோரின் வாயிலிருந்து, பணிவான இனிய சொல்லே புறப்படும்! அவ்வாறு பிறர் கூறும் சொற்களின் சிறந்த பொருளை, நுட்பமாக உணராதவர்கள், பணிவும் இனிமையும் உடைய சொற்களைக் கூறுதல் அரிதாகும்! இதனை,

”நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது!”(419)

என்ற குறட்பா தெளிவாக்குகிறது! ஆகவே ஓர் அவையின்கண் பேசுவார், அந்த அவையினர் பலகற்ற அறிஞராயின், அவர்களிடமிருந்து தாம் அறியாத நல்லவற்றையும் கற்றுக்கொள்ளலாம் என்பது புலனாகின்றது. ஒரு வழக்கறிஞர் நீதி மன்றத்தில் வாதிடும்போது, எதிர் வழக்காடுபவரின் அறிவார்ந்த, அனுபவம் வாய்ந்த வாதங்களின் மூலம் தம் பிழைகளை உணர்ந்து கொள்வார்! மேலும் எவ்வாறு வாதிடுவது என்ற புதிய முறைகளையும் கற்றுக் கொள்வார்! மேலும் தாம் வைத்த வாதங்களின் சிறப்புகள், சிறப்பின்மைகள் ஆகியவற்றையும் மதிப்பிட்டு நீதிபதி வழங்கும் கருத்துக்களின் மூலம் புதிய அறிவை வழக்கறிஞர் அடைவார்! அவ்வாறே சான்றோர் அவையில் ஒருவர் கூறும் கருத்துக்கள், சான்றோர்களின் எதிர்வினைகளால் செழுமைப் படுத்தப் பெறும்!

இந்தக் குறளை அடுத்து வரும் குறளில் சொல்லிலக்கணம் கற்றவர், அளவை நூலையும் கற்றறிந்தால், எந்த அவையிலும் யாருக்கும் விடை கூறலாம் என்று திருவள்ளுவர் கூறுகிறார்! இதனை விளக்கும் பரிமேலழகர், நியாய சாத்திரத்தின் வாதம்,செற்பம்,விதண்டை, சலம், சாதி, முதலானவும், மேற்கோள், வேற்றுப்பொருள், போன்ற தருக்க சாத்திரக் கருத்துக்கள் பலவற்றையும் தொகுத்துக் கூறுகிறார்! ஆகவே நாம் புதிய விளக்கம் காண எடுத்துக் கொண்ட குறட்பாவில் இத்தனைக் கருத்துக்களும் அடங்கியமை யால் இக்குறள் இக்கால வழக்கறிஞர்களின் வாதத் திறமையை மேம்படுத்துகிறது!

‘அவையஞ்சாமை’ அதிகாரத்தில் உள்ள இக்குறட்பாவை மீண்டும் கற்போம்!

”கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல் (724)

இதன் ஆங்கில மொழியாக்கம் : Speak with assurance before the learned that which thou hast mastered; and that which thou knowest not , learn from them that excel therein. v.v.s. aiyar.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *