சீதாம்மா

மனச்சிமிழைத் திறந்தவுடன்  நினைவலைகள் சுற்றிச் சுழன்று சுனாமியாக

என்னை மிரட்ட ஆரம்பித்தன. பயம் வரவில்லை . நான் சிரிப்பதைப் பார்த்து அவைகள்தான் மிரண்டு அடங்கின. என் வாழ்க்கைப் பயணமே ஒரு த்ரில்லர்

பயணம். என் மனத்திரையில்  ஒரு காட்சி நிழலாடியது.

கண்ணகிக் கோட்டம் பார்க்கச் சென்றவர்கள் ஒன்பது பேர்கள். வாகனம் ஒரு ஜீப்.   திரும்பும்பொழுது அந்த வண்டி கட்டுப்பாடு இழந்து, மலையில் உருள ஆரம்பித்தது. ஒரு பாறையில் மோதிய வண்டி அப்படியே சாய்ந்து நின்றது. நான்தான் ஓரத்தில் உட்கார்ந்திருந்தவள்.  உடம்பில் அடிபட்டிருந்தும் மன வலிமையினால் கீழே குதித்து எல்லோரையும் வெளிக் கொண்டு வந்தேன்

இரவு முழுவதும் அந்தக் காட்டில் தங்க வேண்டிய நிலை.

தேக்கடி காட்டில் யானைகளின் கூப்பாடு –   புலிகளும் கரடிகளும் இன்னும் பல மிருகங்களும் நடமாட ஆரம்பித்தன . விழுந்தவர்களில் ஒருவருக்கு கால் ஒடிந்துவிட்டது. மற்றவர்களுக்கோ எலும்பில் அடி. அதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். உங்கள் முன் உயிருடன் பேசிக் கொண்டிருக்கின்றேன். இத்தகைய அனுபவங்கள் ஒன்றா, இரண்டா?

விபத்துக்களில் என் உடம்பு பாதிக்கப்பட்டது ஒரு புறம். எத்தனை வரப்புகளில் நடந்திருக்கின்றேன். கால்களில் தேய்மானம்.  காட்டு அனுபவங்கள் கூட பரவாயில்லை. இந்த சமுதாயத்தில் போராடியதுதான் கடுமை. நான் ஒரு அரசு ஊழியர்தான். வெறும் கையெழுத்து போட்டு ஊதியம் பெற்று உற்சாகமாக வாழ்ந்தவள் இல்லை நான். என் அனுபவங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். பொருளுக்கும், புகழுக்கும் என்றும் ஆசைப்பட்டவள் இல்லை.   உங்கள் சிந்தனைக்கு சில செய்திகள்.. ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே பரிசீலனை செய்து கொள்ளட்டும். நாம் வாழ்ந்த முறை என்ன,  நம் எண்ணங்களின் தன்மை என்ன என்று சில நிமிடங்களாவது நினைத்துப் பார்ப்போம். மனித நேயத்தின் மகத்துவம் உணர்வோம். நல்ல எண்ணங்கள் நமக்கே நல்லது. இதுபற்றி நாம் நிறையவே இத்தொடரில் பார்க்கப் போகின்றோம்.

நேற்று கணினியில் வலம் வரும் பொழுது ஒருவரின் படைப்பு கண்ணில் பட்டது . படித்துப் பார்க்கும் பொழுதே மனம் பறக்கத் துடித்தது. அதனைக் கொஞ்சம் அடக்கி முழுவதும் படித்து முடித்தேன். ஆரம்பத்தில் சிரிப்பை வரவழைத்தாலும் . எழுதியவரின் ஆதங்கம் புரியவும் என் மனத்தில் ஓர் தவிப்பு…… நினைவலைகளில் மிதக்க ஆரம்பித்தேன்

அது கடவுளைப் பற்றிய ஓர் கற்பனைப் படைப்பு

ஐம்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதி வெளிவந்த கதைகள் நினைவிற்கு வந்தன.

பரமனும் தேவியும் பூலோக யாத்திரை வருகின்றார்கள்

எந்த சூழ்நிலையிலும் தங்கள் சக்தியைப் பிரயோகிப்பதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் வருகின்றார்கள்.

முதலில் ஓர் கிராமம். அங்கேயே  எத்தனை ஏற்றத் தாழ்வுகள்?! எத்தனை பிரிவுகள்?! தேவி கணவனிடம் பல கேள்விகள் கேட்ட பொழுது அவர் சொன்ன பதில் “ நான் மனிதனைப் படைத்தேன். அவனோ எதை எதையோ படைத்துவிட்டு அந்த வலைக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கின்றான் என்றார்.

எவ்வளவு உண்மை! சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன் மனிதன் தன்னைப்போல் பணியாற்ற ரோபோட்டுகள் கண்டு பிடித்தான் இப்பொழுது அவைகளால் பலருக்கு வேலை போகப் போகின்றது.

மீண்டும் ரயில் பயணம் அதில் சில இளைஞர்கள். கற்பைப் பற்றி வாக்குவாதம்.  சிவன் உடலில் வெப்பம் கூடியது. நல்ல வேளையாக அம்மனின் குளிர்ந்த கை சூட்டைத் தணித்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.

எப்பொழுதும் அவர் திருவிளையாடலுக்கு மதுரைதானா?!. கோயிலுக்குள் சென்றவுடன் தேவி கூட்டத்தைக் கண்டு மெய் சிலிர்க்கின்றாள். ஆனால் அய்யனோ அங்கு வந்தவர்கள் ஒவ்வொருவரையும் அலசிப் பார்க்கின்றார்.

இறைவனுக்காக வந்தவர்கள் எத்தனை பேர்கள்?! ஏமாற்றம்  வேதனை.

இன்னும் கைலாயம் திரும்ப மனம் வரவில்லை. அவர்கள் வெளித்தோற்றமும் தயக்கமும் அங்கு உலாவிக் கொண்டிருந்த போலீஸ் மக்களுக்கு சந்தேகம் வர பல கேள்விகள் கேட்டனர். கடவுள் பொய் சொல்ல முடியுமா? மேலும் தயக்கம்.  பலன் அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச் சென்றனர். இவர்கள் அங்கு சென்ற சில நிமிடங்களில்  கோட்டு, சூட்டுடன் ஒரு வாலிபன் வந்தான். உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர் எழுந்து நின்று வரவேற்றார். ஆடைக்குத்தான் மனிதன் எத்தகைய மதிப்பு கொடுக்கின்றான்.  காணாமல் போன பெற்றவர்களைத் தேடி திருப்பரங்குன்றத்திலிருந்து வந்தவன் சுப்பிரமணியன்.

ஆம் வந்தவன் வடிவேலன்.

பெற்றவர்களைக்  கூட்டிப் புறப்படும் பொழுது இன்ஸ்பெக்டர் வேலனின் காதில் சொன்னது “உங்கப்பாவுக்கு  கொஞ்சம் மைண்ட் சரியில்லே. அம்மாவை உடன் அனுப்பாதீங்க” . இது பரமனுக்குத் தேவையா?

நல்ல வேளை, அவர் நெற்றிக் கண்ணைத் திறக்கவில்லை. அம்மை இவைகளைக் கவனிக்காமல் மகனை ரசித்துக் கொண்டிருந்தாள்.

கோவணாண்டி மகன் கோட்டு சூட்டில் எவ்வளவு அழகாக இருக்கின்றான்!

சுவாமிமலையில் உபதேசம்   இப்பொழுது மதுரையில் உபதேசம்.

ஆறு ஆண்டுகள்வரை  என் கதைகள் பத்திரிகைகளில் வந்தன. விகடனில் முத்திரைக் கதையும் வந்தது. எல்லாம் உளவியல் அடிப்படையில் எழுதப்பட்டவை.  ஏனோ திடீரென்று எழுதுவதை நிறுத்தினேன்.

unnamedஎன் முதல் கதை “கதிரேசன் மலை” பன்னிரண்டுவயதில் எழுதினேன். ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி அதனை ஓர் பிரபலமான கதாசிரியரிடம் நேரில் கொடுத்தேன் அவரை உங்களுக்கும் தெரியும்.  “ கல்கி”

பாரதிக்கு மணிமண்டபம் கட்ட சில ஆய்வுகள் செய்ய திரு ராஜாஜி அவர்களும், திரு கல்கி அவர்களும் எட்டயபுரம் வந்திருந்தார்கள். அவர்களை நமஸ்காரம் செய்தேன். பின்னர் கல்கியைப் பார்த்து  “ நீங்க கதை எழுதுவீங்களாமே ? “என்று கேட்டேன். “ஆமாம், நீ படிச்சிருக்கியா?” என்று கேட்டார் (நான் எட்டயபுரத்துக்காரி }

“இன்னும் படிக்கல்லே, இனிமே படிக்கறேன். நானும் கதை எழுதிக் கொடுக்கறேன். நீங்களும் படிங்க என்றேன்” அப்பொழுது எனக்கு எட்டு வயது.

சொன்ன வாக்கை காப்பாற்ற கதை எழுதி அவரிடம் கொடுக்கும் பொழுது எனக்கு பன்னிரண்டு வயது.

கதைகள் படிக்க ஆரம்பிக்கவும் பத்திரிகைகள் படிக்கும் குணம் வந்தது. இதனால் என்னிடம் தமிழும் வளர்ந்தது.

பத்திரிகைகள் என்றவுடன் விமர்சனங்கள் நினைவிற்கு வருகின்றன.

அர்த்தமுள்ள விமர்சனங்கள் அவசியம் தேவை. ஆனால் காலம் மனிதனை அதிலும் மாற்றி விட்டது. விமர்சனம் செய்தால் பிரபலமாகி விடலாம் என்ற நினைப்பும் வளர ஆரம்பித்தது. அடுத்தவரைக் குறை கூறினால் அவனை அறிவாளி என நினைப்பார்கள் எனற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அளவுக்கு மீறினால் அது நஞ்சாகிவிடும் என்பதை மனிதன் மறந்து விட்டானே. இருந்த மதிப்பையும் இழப்பதை மனிதன் உணரவில்லையே! நம்மில் எத்தனை பேர்கள் இருக்கின்றோம். ஒவ்வொருவரும் தன்னைப்பற்றி சிந்திக்க வேண்டிய ஒன்று.  நம்மை நாமே நமக்குள் விமர்சனம் செய்து பார்ப்போம்.

படித்த கட்டுரை பற்றி அடுத்து பேசுவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நினைவுகளுடன் ஒருத்தி – 2

  1. அருவி கொட்டுவது போல் எத்தனை செய்திகள், அனுபவங்கள், படைப்புகள். சுட்டிப் பெண் சீதா, அமைதிப் புயல். 

  2. வெறும் இரண்டுமூன்று எழுத்துகளைச் சொடுக்கிப்போட்டதுபோல் நொடிப்பொழுதில் ஓவியம் தீட்டுகின்றீர்களே, அது எப்படி?! எத்தனை எத்தனைக் கருத்துகளை அள்ளி வீசியிருக்கின்றீர்கள்!  ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் அடுத்துவரும் பதிவுகளை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *