பன்முக நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள்

0

— முனைவர் மீ.இராசேசுவரன்.

nattupurap paadalgal
முன்னுரை:
ஒரு நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய அம்சம் அந்நாட்டில் வழங்கும் நாட்டுப்பாடல்கள். அவை, லட்சக் கணக்கான கிராமிய மக்களின் இசையாக அமைகின்றன. வியர்வை சிந்தி உழைக்கும் மக்களின் இழப்புகளை, சோகங்களை, காயங்களை, கண்ணீர் சிந்தும் ஓலங்களை, ஒப்பாரிகளை, குருதிச் சிந்தல்களை, அடிமை மக்களின் உரிமைக் குரலாய், உக்கிர முரசாய், உணர்ச்சிக் குவியலாய் அமைவது நாட்டுப் புறப்பாடல்கள் ஆகும். இதன் பரிமாணங்களை எடுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாடலின் வகைகள்:
மனித சமுதாயத்தின் தொடக்க காலந்தொட்டு பாமர மக்களின் உணர்ச்சிப் பெருக்காகக் கொந்தளித்தோடும் நதிப்பிரவாகமே நாட்டுப்புறப்பாடல்கள். இதனை பல்வேறு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன,
1.தாலாட்டுப்பாடல்கள்
2.குழந்தைப் பாடல்கள்
3.காதல் பாடல்கள்
4.தொழில் பாடல்கள்
5.பக்திப் பாடல்கள்
6.ஒப்பாரிப் பாடல்கள்

தாலாட்டு:
தாலாட்டு எனும் சொல்லைத் தால்+ஆட்டு என்று பிரித்து பொருள் கொண்டால் அச்சொல் இருவிதமான பொருள்களைத் தருகிறது. ‘தால்’ என்றால் ‘நாக்கு’ என்றும் ‘தொட்டில்’ என்றும் பொருள்படும். நாக்கு என்று பொருள் கொண்டால் நாக்கினை அசைத்துத் தாய் பாடுகின்ற பாடல் என்று பொருள் கொள்ளலாம். தொட்டில் என்று எடுத்துக் கொண்டால், தொட்டிலை ஆட்டித் தாய் பாடுகின்ற பாடல் என்று பொருள் கொள்ளலாம்.

குழந்தைக்குத் தாய், தந்தை என்ற இரு உறவுகளுமே இன்றியமையாத உறவுகள்தான் என்றாலும், குழந்தைக்காகத் தாய் மட்டுமே தாலாட்டுப்பாடும் மரபைக் காணமுடிகிறது. தந்தை குழந்தைக்காகத் தாலாட்டுப்பாடும் மரபைக் காண்பது அரிது. குழந்தையின் சிறுவயதில் நடக்கின்ற நிகழ்ச்சிகள் அப்படியே மனத்தில் பதியும் என்பதால் குழந்தையின் மன நிலையைச் சமூகத்திற்கேற்ப தன் தாலாட்டுப்பாடலின் மூலம் உருவாக்குகிறாள் தாய். தாய் தாலாட்டும் போது தன் வறுமை நிலையை மறந்து தன் மகனின் எதிர்காலம் சிறப்புடையதாக இருக்க வேண்டும் என எண்ணும் நிலையைக் கீழ்க்கண்டவாறு,

“குறிஞ்சி மலைத்தேனே! கொண்டாடும் சந்தனமே!
சரிஞ்சிப்படுத்திருக்கும் செண்பகமே கண்ணுறங்கு!
கண்ணுறங்கு ராசாவே! கால் மொளச்ச பின்னாலே!
ஒண்ணு ரெண்டு கத்துக்கொள்ள ஓடவேணும் கண்ணுறங்கு”[1 ]

என்று பாடுகிறாள். தாய் வறுமையில் வாழ்ந்தாலும் தன் மகனைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,

“மாடு மேய்க்க எங்கண்ணே ஒன்னே!
நானனுப்ப மாட்டெண்டா!
பாடுபட்டு நானுழைச்சு! பள்ளிக்கூடம் சேர்ப்பேண்டா!
………………
சந்தனத்தில் தொட்டில் செய்து தாலாட்ட முடியாது
வெள்ளியிலே சங்கு செய்து பாலூட்ட முடியாது
ஓலக்குடிசை தாண்டா ஒரு மொழ பாயிதாண்டா
கூழுகஞ்சியடா நீ குடிச்சு வளர்ந்துக்கடா!” [2 ]

என்று பாடுகிறாள். இப்பாடலில் தாய் தன் வறுமையுடன் கூடிய ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது.

தொழிற்பாடல்:
வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டியுள்ளது. செய்யும் தொழில்கள் வேறுபட்டாலும் கூட அவற்றின் நோக்கம் ஒன்றே. தொழிலில் ஈடுபட்டிருக்கும் சூழலில் தொழிலின் கடுமை தெரியாமல் இருக்கும் பொருட்டும் தொழிலுக்குத் துணை புரிய வேண்டியும் பாடல்கள் பாடப்படுவதுண்டு. இவ்வகைப் பாடல்கள் தொழிற்பாடல்கள் எனலாம்.

உழைக்கும் மக்கள், வயலில் வேலை செய்கின்றவர்கள், நாற்று நடுகின்றவர்கள், களை எடுப்பவர்கள், ஏர் உழுகின்றவர்கள், அறுவடை செய்கின்றவர்கள், இப்படிப் பல்வேறு தொழில் செய்கின்றவர்கள், தங்களுடைய களைப்பு தெரியாமல் இருக்க பாடல்களைப் பாடுவது இயல்பு. உழவுத் தொழிலில் உழுதல் முதல் விளைந்தவற்றை வீட்டிற்குக் கொண்டுவருவது வரை எனப் பலதரப்பட்ட தொழிலின் போதும் பாடல்கள் பாடப்படுகின்ற உழைக்கும் மக்களின் அவல நிலையை உணர்த்தும் பாடல் ஒன்று,

“ஏழாறு வருஷமாக என்னாத்த கண்டோம்
ஏறுபுடிச்சி உழுத நாம எதத்தான் கண்டோம்
தோட்டம் துறப்பு வயல்களெல்லாம்
காலம் பூரா உழைச்சாலும்
நம்ம வீடு இடிஞ்சிபோயி கிடக்குது
அத எண்ணி தாங்க எம்மனசு தவிக்குது” [3]

என்ற பாடலும்,

“வேர்வைகளைத் தூவினோமோ முத்து முத்தாக- அது
வெளஞ்சிருக்கு நெல்வயலில் கொத்து கொத்தாக
களஞ்சியத்தில் போய் பதுங்கும் கட்டு கட்டாக நம்
கண்ணிரெண்டும் நீர் வடிக்கும் சொட்டு சொட்டாக” [4]

என்ற பாடலும் நம்மைச் சிந்திக்க தூண்டும் வகையில் உள்ளன.

காதல் பாடல்கள்:
மனித இனம் தோன்றிய காலத்தே காதல் உணர்வும் தோன்றியிருக்க வேண்டும். இன்ப உணர்ச்சிக்குக் காதலையும், அன்பு உணர்ச்சிக்குத் தாலாட்டுக்களையும், துன்ப ஊணர்ச்சிக்கு ஒப்பாரிப் பாடல்களையும் எடுத்துக் கூறுவர்.

காதல் என்பது மனிதனது பருவ காலங்களின் வசந்தப் பாடல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும், வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம். ஆதாம் ஏவாள் தொடங்கி இன்று வரை காதலை உயிராகக் கருதுகின்றனர். உலகில் உயிர்கள் தோன்றிய போதே காதலும் உடன் தோன்றியிருக்க வேண்டும். நாட்டுப்புறப் பாடல்களில் பெண்ணின் வருணனைகள் அதிகம் இடம்பெறுவதுண்டு.

“தேக்கு மரமாட்டம் தெளிவாக இருந்த என்னை
முருக்கு மரமாட்டம் முறிச்சிப்போட்டுப் போனவளே
பாக்கு மரமாட்டம் ஒசந்துதான் நின்ன என்னை
கோரப்புல்லாட்டம் நறுக்கிப் போட்டு போனவளே
என் உசுர பாட்டாக்கி உனக்காகப் பாடுறேன்
உன் பூஞ்சிரிப்ப பாக்க தாண்டி உசுரோடு….
உசுரோடு… உசுரோடு… வாழுறேன்” [5]

என்று காதலிக்கு காதலன் பாடும் பாட்டு வழியாக அறியமுடிகிறது.

திருமணம் செய்துகொள்ள ஆசை கொண்டு ஒருபெண் ஆணைப் பார்த்தோ, ஓர் ஆண் பெண்ணைப் பார்த்தோ பாடுவதாக வருவது ஆசைப் பாடல். இது காதலுக்குப் பிறகு வெளிப்படும். இரண்டு உள்ளங்கள் காதல் கொள்ளும் போது அதனைப் பிறர் பார்த்துக் கேலி செய்து பேசுவதை,

“மண் குடத்தை தூக்கிக்கிட்டு
மலையோரம் போனவளே
உன் மண் குடத்தை வச்சிப்புட்டு
இந்த மாமனையோ பாரடியோ
அடி நீ சிவப்பு நான் கருப்பு ஏலேலோ
இந்த ஊரு பய மக்களுக்கு நம்
நினைப்புதான் ஏலேலோ அதனாலே
ஊரக்கூட்டி பேசிடுவோம்” [6 ]

என்று காதலன் கூறுவதும் தெரிகிறது.

ஒப்பாரி:
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏற்படுகின்ற இன்ப துன்ப உணர்வுகளை வெளிப்படுத்த மனிதனுக்கு ஏதோ தேவைப்படுகிறது. அவ்வுணர்வுகளை வெளிப்படுத்தத் தம் மொழியைத் துணைக்கு அழைத்துக் கொள்கின்றான். அம்மொழியின் வெளிப்பாடே பாடல் வடிவம். ஆண்கள், பெண்கள், கணவனை இழந்த பெண்கள், தாயை இழந்த மகள், மகனை இழந்த தாய், விதவை பாடும் ஒப்பாரிப் பாடல்களைப் பலவகையாகப் பிரிக்கலாம்.

ஒப்பாரிப்பாடலின் கருப்பொருளாக இறந்தவரின் பெருமை, குணம், ஒப்பாரிப் பாடுகின்றவர்கள் இறந்தவர்களை நேசித்த முறை, விதவையின் வேதனை, இறந்தவரால் ஏற்பட்ட இழப்பு போன்றவை அமையும். துன்பத்தை வாய்விட்டுச் சொன்னால் மனத்தளவு, மன அழுத்தம் நீங்கும். அந்த அடிப்படையில் பிறந்ததுதான் ஒப்பாரிப் பாடல்கள். வாழ்க்கை இன்பங்களைக் கணவனோடு பகிர்ந்து வாழாத பெண்கள் கணவன் இறந்தவுடன் வைக்கும் ஒப்பாரி ஏனைய அழுகை ஒலிகளை விட அவலச்சுவை மிகுந்ததாகும்.

“பூ முடிச்சி பொட்டு வச்சி
பொன் நகையும் போட்டு வச்சி
கல்யாணம் முடிச்சி வைச்சே யம்மா
நான் கண்கலங்கி நிக்கிறேனே யம்மா
……….
தன்ன னன்னெ னான னன்னே
………” [7]

சமுதாயப்பாடல்:
மாறும் என்ற வார்த்தையைத் தவிர மற்றவை அனைத்தும் மாறும் என்ற பொன்மொழிக்கு ஏற்ப உழைப்பவர்களுக்குச் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

“மனிதா… மனிதா…
இதை மாற்ற வேண்டாமா? உனை
வாட்டி வதைக்கும் கொடுமைகளைத்
தீர்க்க வேண்டாமா?
உப்புத்தண்ணி இனிக்கும் என்றால்
உனக்கெங்கே மதிப்போச்சி
செத்தபின்பு சொர்க்கம் என்றால்
இப்பிறவி என்னாச்சி?”

என்று கூறுவதும்,

“ஆத்தா உன்சேல – அந்த
ஆகாயத்த போல
தொட்டில் கட்டி தூங்க
தூளி கட்டி ஆட
ஆத்துல மீன்பிடிக்க
அப்பனுக்கு தலதொவட்ட
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்
நான் செத்தாலும் என்ன போத்த வேணும்
இடுப்புல கட்டிக்கிட்டு நீச்சல் பழகினதும்
ஓஞ்சேலதானே வண்ண பூஞ்சோலதானே
ஈரசேல காயும்போது வானவில்லா தெரியும்
இத்துபோன சேலையில் உன் சோகக்கத புரியும்”

என்று தாயின் சேலையின் மதிப்பைக் கூறுவதும்,

“காலேஜ் படிக்க வைக்க கண்ணுல உசுர
வைச்சிக்கிட்டு கறவை மாடு
மேக்கிறண்டா வாய்க்க வரப்புல
கருத்தா படிக்கணும் நிறைய
மார்க் வாங்கணும் கண்டபடி சுத்தாதப்பா
கலெக்டர் ஆக்கி பார்க்கணும்”

என்ற பாடல்கள் சமூகத்தின் விழிப்புணர்வுக்குப் பெரிதும் உதவுவதாக அமைகிறது..

முடிவுரை:
நாட்டுப் புறப் பாடல்கள் பல ஆண்டு காலமாகத் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகின்றன, நாட்டுப்புறப்பாடல்கள் வளர்ச்சி அடைந்து உலகளவில் புகழ் அடைய வேண்டும். நாட்டுப்புறப்பாடல்களை அனைவரும் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் கடமையாகும்.

குறிப்புகள்: 
1.விழிப்புணர்வு
2.மேலது.ப.12
3.மேலது.ப.10
4.மேலது.ப.5
5.மேலது.ப.16
6.மேலது.ப.19
7.மேலது.ப.21

முனைவர் மீ.இராசேசுவரன்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,
நன்னிலம்.
அலை:9942004767
மின்:23575rajeswaran@gmail.com

படம் உதவி: http://www.tamilvu.org/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *