க.பாலசுப்ரமணியன் 

 

ஈரம் கசிந்த என் கைகளைப் பிடித்துக்கொண்டு

என் கால்சுவடுகளுக்கு இணையாகக்

கால் பதித்து …..

நாள்தோறும்..

வாரம்தோறும்…

மாதங்கள் தோறும்..

ஆண்டுகள் தோறும்..

கைகோர்த்துச்  செல்லும் நண்பா !

என் காலச் சுவடே!

 

உன் பாதங்கள் ..

இலைச்சருகுகளை மிதிக்கும்போது..

அவைகள் நொறுங்கும் சப்தத்தில் ..

இடிமுழக்கங்கள்… கேட்கும்..

 

நிலத்தில் உயிர்கொண்ட..

நீர்த்துவலைகளில் ..

உன் பாதங்கள் படும்பொழுது..

தீப்பொறிகள்  தெறித்து

பாதைகளுக்குக்

கருவண்ணம் தீட்டும் !

 

உன் பார்வையில் மலர்ந்த பூக்கள் ..

கருணை வெள்ளத்தில் கனிந்து

புதுமணத்தை காற்றில் பூசி

நாசியின் நரம்புகளுக்கு

நம்பிக்கை ஊட்டும் !

 

உன்னிடம் கேட்கக் கேள்விகள் இல்லை !

என்னிடம் சொல்லிட பதில்கள் இல்லை !

 

உன் அமைதியின் ஆழத்தில் ..

நான் முழுகிக் கொண்டிருக்கின்றேன்..

உன் புன்சிரிப்பில் ..

நான் புதிய மொழிகளை ..

கற்றுக்கொண்டிருக்கின்றேன் !

 

உனக்குக் கடவுள் என்ற பெயர் உண்டென்று

யாரோ சொன்னார்கள்…

பஞ்சபூதங்களைப் பெற்றெடுத்த

உனக்குப் பெயர் எதற்கு?

 

கடந்தவன் என்றால் ..

காலனுக்கும் உருக்கொடுத்தாயோ?

புரியாத தத்துவமே!

புரிந்துகொள்ளக் காலமில்லை !

 

என்  கண்களில்..

கடவுள்களுக்குக் கலைகொடுத்த..

காலன் அன்றோ நீ..!

 

இந்த அமைதியான பயணத்தில்..

உன்னோடு நானும்..

என்னோடு நீயும்..

எங்கே செல்கிறோம்..?

யாருக்காக..??

உன்னிடம் பதில்கள் இல்லை !

என்னிடம் கேள்விகளுக்குக் குறைவில்லை..!!

 

கையோடு கைகோர்த்து….

காலம் காலமாய்..

நீயும் நானும்..

ஒரு இனிய பயணம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *