சீதாம்மா

 

  “Kindly be brave and fight the battle of daily life.

 Be strong in mind.  Be joyful and calm at all times. 

 Have faith in the Lord  at anycost.

He gives you some more experiances to give more strength and will to face the life more bravely.

Be sure of His Divine Living presence at all times with you.

He will guide you “

சுவாமி சிவானந்தா எனக்கு எழுதிய கடைசி கடிதத்தில் சில வரிகள்

ஆம், நான்கு ஆண்டுகளுக்கும்  மேலாக எங்களுக்குள் கடிதங்கள் பரிமாற்றம் இருந்தது. என்னை உருவாக்கியவர்களில்  ஒருவர்.   இந்தத் தொடரில் பின்னர் விளக்கமாக எழுதுகின்றேன். ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன். கல்லூரி மாணவியாக இருக்கும் பொழுது எனக்கு கிடைத்த வழிகாட்டிகளில் ஒருவர்.

இவரால்தான் திசைமாறிப் போகாமல் காப்பாற்றப்பட்டேன். சுவாமிஜி எழுதியதுபோல் என் வாழ்வில் இன்றளவும் போராட்டம் தொடர்கின்றது.. படிப்பினைகளும் பெற்று வருகின்றேன். . என்னுடன் என் இறைவனும் தொடர்ந்து வருவது உணர்கின்றேன். தைரியமாக எதிர்கொள்ள வேண்டிய அனுபவங்களை நான் சந்தித்தாக வேண்டுமென்பது அன்றே நிர்ணயப்படுத்தப்பட்டுவிட்ட ஒன்றாகும்.

கட்டுரையாளரின் ஆதங்கத்தை இப்பொழுது பார்க்கலாம்.

கடவுளின் தவிப்பு.        

கடவுளானாலும் அவருக்கும் அமைதி வேண்டுமே!

அவர் படைப்புகளில் மனிதன் அவரை அமைதியாக இருக்க விடவில்லை.

எப்பொழுதும் துரத்திக் கொண்டே இருக்கின்றான். அவன் ஆசைகள் நிறைவேற வேண்டும்.   வேண்டியன  உடனே கிடைக்க வேண்டும்.   ஆசை வளர்ந்து பேராசை, அதன் குட்டிகளான பொறாமை, வன்மம், , பகைமை, ஒன்றா இரண்டா, ஒவ்வொரு துர்க்குணமாக வளர்ந்து அத்தனைக்கும் ஆண்டவன் உதவ வியாபாரமே பேச ஆரம்பித்துவிடுகின்றான். ஒரு கோயில் , பிறகு இன்னொருகோயில் இப்படி அவரை எங்கும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. இப்படி ஒரு கூட்டம் !

இன்னொன்றைப் பார்த்தால் நினைத்தது கிடைக்கவில்லையென்றால், திட்டித் தீர்க்க விரட்டல்.

இன்னொரு கூட்டமும் உண்டு. ஆற்றாமையில் அலறல்.” எப்பொழுதும் கெட்டவனுக்கு நினைப்பது நடக்கின்றது, நல்லவன் தான் கஷ்டப்படுகின்றான் “

( இப்படி  பல மனித குணங்களைக் கட்டுரையாளர் எழுதியுள்ளார் )

கடவுளின் நிலை பரிதாபமாகி விடுகின்றது. யாரும் அன்புடன், அவரை அவருக்காக அணுகவில்லை. எங்குதான் ஓடி ஒளிய முடியும். ?! மனிதன் எட்டிப் பார்க்காத ஓர் இடத்தில் ஒதுங்க நினைக்கின்றார்.

மனம்

மனிதன் எட்டிப்பார்க்காத இடமாம் !

மனத்தில் கடவுளை அமர்த்திவிட்டு நின்று விடுகின்றார் கட்டுரையாளர்.

என் மனமோ இறைக்கைகள் விரித்துப் பறக்க ஆரம்பித்தது.

:நான் யார் ? “என்று எத்தனை பேர்கள் நினைத்துப் பார்க்கின்றனர். !

தன்னிடம் இருக்கும் குறைகளை சிறிதளவேணும் புரிந்து கொண்டால் அவனுடைய பல பிரச்சனைகளுக்கு அவனே வழி கண்டுபிடிக்க இயலுமே!

அதிகம் பேசுவோம்  — பக்கம் பக்கமாக எழுதுவோம்

நம்மை நாம் அறிவோமா?

எனக்கும் பல முகங்கள் உண்டு. பல குறைகளும் உண்டு. அனுபவங்கள் பல படிப்பினைகள் கற்றுக் கொடுத்தும் நான் பூரணமாக திருந்த முடியவில்லை.

கட்டுரையாளர் என்னை சுவாமி சிவானந்தரின் கடைசி மடலை எடுத்துப் பார்க்க வைத்துவிட்டார்    ஆமாம் ஓர் புதுப் படிப்பினை பெற்றேன் . அதைப்பற்றி எழுதும்  முன்னர் ஒன்றைக் குறிக்க விரும்புகின்றேன்.

மனம்  என்பதற்குப் பதிலாக ஆழ்மனம் என்று குறிப்பிட்டிருக்கலாம்.

மனித மனம் குரங்கைவிட மோசமானது. குரங்கு ஒரு கிளையிலிருந்து இன்னொன்றுக்குத் தாவும்பொழுது சில விநாடிகள்தான் இரண்டையும் பிடித்து தொங்கும்.  உறுதி தெரிந்தவுடன் ஒன்றை மட்டும் பற்றிக் கொள்ளும். மனிதனோ இரண்டையும் பிடித்துக் கொண்டு தொங்குவான்.

தரமற்ற எண்ணங்களால் மனத்தைக் குப்பைத் தொட்டியாக வைத்திருக்கின்றோம்.

ஆழ் மனத்தில் தான் பிரபஞ்ச சக்தி அமைத்திருக்கின்றது.

அதனை உணர்வது அவ்வளவு எளிதல்ல.

 உன் வீட்டில் தங்கக் கட்டிகள் நிறைந்த ஒரு பெட்டி இருக்கின்றது என்று   யாராவது கூறினால் எப்படி தேடுவோம் ? களைப்பு என்று உட்கார்ந்து விடுவோமா?

முயன்றால் முடியாதது இல்லை.

நினைவொன்று மனத்தில் நிழலாடியது .அதிலும் சிந்தனைக் குளத்தில் தள்ளிய ஓர் சம்பவம்.

download

எழுத்தாளர் ஜெயகாந்தன் இறந்த செய்தி கேள்விப்படவும் துன்பத்தில் துடித்துவிட்டேன். என்வரையில் அவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல. . பிரச்சனைகளால் துரத்தப்படும் பொழுதெல்லாம் என் மனக் குமுறல்களைத் தாங்கும் ஓர் சுமைதாங்கி.   ஓர் நல்ல நண்பர்.. அவர் உடல் நிலை மோசமாகி வருவது தெரியும். விரைவில் அவர் மரணிப்பார் என்பதும் உணர்வேன். ஆனால் உண்மை தெரிந்தவுடன். மனத்தில் விழுந்த அடி மிகவும் வலித்தது.. அவர்கள் குடும்பத்தாருடன் பேச நினைத்தேன். ஆனால் வீட்டு தொலைபேசி எண் இல்லை.. விசாரித்து அவர்களுடன் பேச ஒரு வாரம் ஆயிற்று.

முதலில் எடுத்தது கவுசல்யாதான். . அவர் குரல் கேட்டவுடன் தேம்பித் தேம்பி அழுதேன். அவர்கள் என்னை  சமாதானம் செய்தார்கள். . . பின்னர் அவருடைய முதல் மனைவியிடம் பேசினேன்.. அவர்களும் என்னைச் சமாதானம் செய்தார்கள்

சமாதானம் சொல்ல வேண்டியவள் நான். ஆனால் அங்கே என்னைச் சமாதானம் செய்தனர். அவர்கள் கொடுத்த விளக்கங்கள் எனக்குக் கிடைத்த படிப்பினை. அனைவரும் அறிந்து கொள்வது மட்டுமல்ல சரியாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஓர் நிகழ்வு.

நாமும் அலசிப் பார்ப்போமே!

(என் உடல் நிலை காரணமாகத் தாமதம் ஏற்பட்டுவிட்டது. —   பொறுத்தருள்க.)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நினைவுகளுடன் ஒருத்தி – 3

  1. நினைவுகளுடன் ஊடாடும்போது இப்படித்தான் எழுதுவாய், சீதா. அதை மாற்றம் செய்ய தேவையில்லை.

    எனக்கும் வழி காட்டிய சுவாமி சிவானந்தா சொன்னது என்ன?  Be strong in mind.  Be joyful and calm at all times. 

    அன்புடன், இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *