சத்தியமணி

 

நமக்கு நாமே எதிரிகள்

நாம்தான் தேச துரோகிகள்

உண்மையில் குற்றவாளிகள்

உணர்ந்தால் இலை பிரதிவாதிகள்

 

நிறங்களை இனங்களை கலக்க‌விடாது

பிரித்து கலவரம் காட்டினோம்

திறங்களை பார்த்து வாய்ப்பளிக்காது

பள்ளியை சுடுகாட்டாக்கினோம்

வகுப்பு என்பதன் பொருளதை மாற்றி

வீதியில் வெறியுடன் ஆடினோம்

சிறப்பு சொல்லிடும் பல்கலைகழகம்

சிதைத்து சிறைகளாய் மாற்றினோம்

 

 

பணமும் பகட்டும் வசதியும்காண‌

விட்டு அயலகம் ஏகினோம்

புழுங்கும் மனதை திருந்தவிடாது

அங்கே குடிமகனாகினோம்

கலங்கும் தாயகம் வதங்கிட கண்டும்

காணா திருகுரு டாகினோம்

கற்க கசடற கற்ற பின்னாலே

விற்ற கலைபொருளாகினோம்

 

 

அழுகிய காய்களை கறிகளில் சேர்த்து

அமுதாய் உண்பவர்  ஆகினோம்

அழுக்கினில் கிடைத்த அவலங்களோடு

அணிவகுப்புகளை பாராட்டினோம்

குலப்பட மெடுத்து கலப்படம் மாட்டி

கும்பிடும் பக்தரும் ஆக்கினோம்

செவிப்பட கதறிட செப்புகிறாள் தாய்

மண்ணுக்கு ஏதுரை செய்யுவீர்

 

 

லஞ்ச ஒழிப்போம் இன்றெனச் சொல்லி

அஞ்சலுடன் கை அலம்பினோம்

வஞ்சகம் அறுப்போம் என்றெனச் சொல்லி

வயதினர் விடுதிகள்  காட்டினோம்

தஞ்சம் என்றென வரும் அரவுகளை

நஞ்சுடன் வாழக் காப்பாற்றினோம்

மிஞ்சும்படி இனி மிச்சம் வைக்காது

எல்லாம் கெட கொண்டாடினோம்

 

தாயைப் பழித்து வாழ்ந்தாரென்ற‌

சரித்திர முண்டோ சொல்லுவீர்

தாய்மண் அழிக்க சிறந்தாரென்ற‌

தகவலும் முண்டோ சொல்லுவீர்

அடிமை அழித்து குடியரசாகியும்

அவலப்பெண்ணா ? பாரதம்

உரிமை கோரி உலையில் போட்டீர்

பெருந்தகை யாளரே! வாழியே

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நமக்கு நாமே எதிரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *