-மேகலா இராமமூர்த்தி

திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.

 book store

 

 

 

 

 

 

 

 

 

 

குவியல் குவியலாய்க் கொலுவிருக்கும் புத்தகங்கள்! வெறும் புத்தகங்களா அவை? இல்லை…அகத்தைத் தூய்மையாக்கி, அறிவை விரிவாக்கி, உலகை வெல்லச்செய்யும் ஆயுதங்கள்!

நூல்களின் சிறப்பை விளக்கவந்த பாவேந்தர்,

நூலைப்படி – சங்கத்தமிழ்
நூலைப்படி – முறைப்படி
நூலைப்படி!

காலையிற்படி கடும்பகல்படி
மாலை, இரவு பொருள்படும்படி
நூலைப்படி!

கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி?  

என்று மு(எ)ப்போதும் நூல்களைக் கற்கவேண்டியதன் அவசியத்தைச் செப்பிச் செல்கின்றார். 

சரி…புத்தகக் குவியல்கண்ட நம் கவிஞர் பெருமக்கள் எத்தகு கவிதைகளைப் புனைந்திருக்கின்றனர் என அறியப் புகுவோம்!

 ***

’பொலிவாக முன்னர்த் தோற்றங்காட்டிய புத்தகங்கள் பின்னர் மதிப்பிழந்து மலிவாய்ப் போவதுபோன்றதே மானுட வாழ்வின் இயல்பும்!’ என்று புத்தகங்களை மனிதரின் நிலையோடு ஒப்பிடுகின்றார் திரு. மதிபாலன். 

புத்தகங்கள் , ஏடுகளில் புன்னகைக்கும் ரத்தினங்கள்!
பொத்திவைத்த அறிவென்னும் பொக்கிஷத்தின் சுரங்கங்கள்!

உள்ளூரின் இதழ்முதலாய் உலகஇலக் கியம்வரைக்கும்
எல்லாமும் இங்குண்டு,எடுப்பதெல்லாம் குறைந்தவிலை!

கடைகடையாய் அலைந்தபின்னும் காணாத புத்தகமும்
நடைபாதைக் கடையிதிலே நாம்காணக் கிடைப்பதுண்டு!

புதிதாக வந்தபோது பொலிவாக இருந்ததுதான்
எதனாலோ இங்குவந்து இயல்புகெட்டுக் கிடக்கிறது!

பயனுள்ள வரைக்கும்தான் பலர்நம்மைப் புகழ்ந்திடுவார்
பயன்குறைந்து போய்விட்டால் பாதையோரப் புத்தகம்தான்!…

*** 

’நூலகத்தில் துலங்கி வாலறிவை வளர்த்த புத்தகங்கள் வழிமாறிப் போனாலும் மரணிப்பதில்லை; அவற்றைத் தேடித்தேடிப் படித்த மனிதனும் அவ்வாறே!’ என்று சாகாவரம் பெற்ற புத்தகங்களின் புகழ்பாடுகின்றார் திரு. கவிஜி.

நீர் அடித்துப் போன 
புத்தக நினைவுகளின்
கூட்டுக்குள்
திறந்து விடப் பட்டுக்
கொண்டேயிருக்கிறது,
சிறுவயது முதல் சேர்த்து
வைத்த அவரின் நூலகம்… 

அது
வழி மாறிய பதிவுகளை
கரையெங்கும்
விட்டுப் போகிறது

[…]

ஒரு புத்தகம், அதில்
சில பக்கம்
அல்லது ஒரு பக்கம் ஒரே
ஒரு பக்கம்
எவர் கையிலாவது அகப்படலாம்….

மண்ணுக்குள் வேராக விதி செய்யலாம்
வினை செய்யலாம்

காலம் முழுக்க
அடையாளமின்றி
படித்தவர்,
கடல் தாண்டியும் ஏதாவதொரு
தீவுக்குள் விதையலாம்… 

புத்தகங்கள் மரணிப்பதில்லை,
படித்த அவரைப் போலவே

*** 

’அட்டைக்குள் பதுங்கியிருக்கும் அறிவு நீரூற்று புத்தகம்; அதனிடம் தலைகுனிந்தவன் வாழ்வில் தலைநிமிர்வான்’ என்று அழகாக அனுபவமொழி பகர்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

அறிவு நீரூற்று
அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது

அட்டைகளுக்குள்..

எடுத்துக் குடிப்பவரை
ஏமாற்றியதில்லை என்றும்,
ஏற்றித்தான் விடுகிறது
குன்றாய் உயர..

இதனிடம் தலைகுனிந்தால்,
தலைநிமிரலாம் வாழ்வில்..

ஆனால் இன்று அது
அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது
நூலகத்தில்,
எடுத்துப்பார்க்க ஆளின்றி..

கொலுவிருக்கிறது புத்தகக்கடையில்
கூடுதல் விலை மதிப்பில்..

அந்த அறிவு இங்கே
பேரம் பேசப்படுகிறது
பழைய புத்தகக் கடையில்…!

*** 

சொற்பமாய்க் கிடைத்த நேரத்திலும் அற்புதப் புத்தகங்களைக் கற்றுத் தன் சொற்சுவை நிறைந்த உரைகளால் பாராளுமன்றத்தில் பாராட்டைப் பெற்ற நேரு பெருமானைத் தன் கவிதையில் நினைவுகூர்ந்திருக்கின்றார் திரு. க. கமலகண்ணன்.

நேரு பாராளுமன்றத்தில்
புதிய புதிய கருத்துக்களையும்
உதாரண உவமைகளையும் சொல்லுவாராம்
கேட்கின்ற அத்துணைப் பேருக்கும்
ஆச்சரியம் நேருக்கு மட்டும் எப்படி
நேரம் கிடைகிறது ஒருவர் துணிந்து
கேட்டே விட்டாராம் எப்படி என்று
திருடினேன் என்றாராம் நேரு
அரங்கமே அதிர்ந்து போனது
புரியவில்லை என்றாரம் அவர்
என் உதவியாளர் உறங்குவதற்கு
நான்கு மணி நேரம் தருவார்
அதில் ஒரு மணி நேரம் திருடி
புதிய புத்தகங்களை படிப்பேன்
என்று சொல்லி மீண்டும் அரங்கத்தை
அதிர வைத்தாராம் நேரு
புத்தகம் வெறும் காகிதமல்ல
பொக்கிஷம்…

 ***

புத்தகக்கடைகண்டு முத்தான கவிதைகளை வடித்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!

சிறந்த கவிதையைப் படைத்திருக்கும் கவிஞர் யார் எனக் கண்டுவரும் தருணமிது!

 ”தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு” என்பது வான்புகழ் வள்ளுவரின் வாய்மொழி. அறிவை ஆழமாகவும் அகலமாகவும் வளர்த்துக்கொள்ள நாம் அகலாது அணுகவேண்டியவை நூல்கள்! வெறும் அச்சேறிய காகிதங்களாய்ப் பார்க்கப்பட்டுப் ’பயனில’ என்று வீசப்படும் புத்தகங்கள் எத்தனையோ அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் அவனிக்கு அளித்தவை என்பதனை அவற்றின் மதிப்புணர்ந்த யாரே மறுப்பர்? அத்தகைய புத்தகங்களைப் பதுமநிதி எனப் புதுமையாய்ப் போற்றும் கவிதை என் சித்தத்தைக் கொள்ளையிட்டது! 

வேண்டாமென்று வீசுவோர் பலர் அதை
வேண்டுமென்று தேடுவோர் பலர்; அதைத்
தோண்டி எடுக்கட்டுமென்ற தாராள மனதில்
தோராயமாய் விற்கிறார் இங்கு இவர்!
பாதையோரப் புத்தக அகமானாலும் தரம்
போதையெனும் அறிவு பெற வரம்.
கீதையும் பெரும் காதைகளும் மலிவாகி
பாதையாகும் அறிவுச் சுடர் ஏற்ற.

அழகோ அலங்கோலமோ அறிவிற்கேது தரம்!
பழையதோ புதியதோ அறிவு மொழியுரம்.
பழகிய அறிவுச் சாரற் குளிப்பாம்
புத்தக வனத்துக் கருத்துணர்வுப் பொக்கிசம்.
வாசிப்பு அருகிடும் காலத்தில் புதையலாய்
நேசித்து அறிவூற்றில் நீந்திப் பயனடைவார்.
புத்தகப் பக்கத்தில் ஒளிரும் முத்துக்கள்
சத்தை உணராதவன் செத்தவன் ஆகிறான்.

பாம்புப் புற்று போன்ற அடுக்கில்
தோம்பு, தோட்டக்கலை, தொல்காப்பியம் ஈறாக
கூம்பகம், கூட்டுறவு, கூத்துப் பாட்டென
வேம்போ இனிப்போ அத்தனையும் தேடலாம்.
பதுக்கிடு! என்றும் பழசென்று வீசாதே!
பதுமநிதி போன்றது பன்முக நூல்கள்.
மதுரவாக்கு  பழைய நூல்களும் வளர்க்கும்
பொதுவான நல்லறிவு தேடிப் படி!

”தேடிப் படி நல்ல நூல்களை!” என நமைநாடிச் சொல்லும் கவிதையைத் தீட்டியிருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகம் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வு பெறுகின்றார்.

*** 

’வண்ணச்சிந்தனைகளை வாழ்வில் விதைத்த புத்தகங்கள் இன்று கருப்பு வெள்ளையாய் நிறமாறிப் போனாலும், டிஜிட்டல் யுகத்திலே அவை எண்ணிம வடிவில் உருமாறிப் போனாலும், காகித உருவில் நம் நெஞ்சிற்கு இதமளித்த புத்தகங்களுடனான நம் உறவு காலத்தை வென்றது’ என்று கவினுறப் பேசுகின்ற கவிதையொன்று!

வண்ண வண்ண சிந்தனைகளை
வார்த்தெடுத்தப் புத்தகங்கள்
எண்ணக் குவியல்களால்
புரட்சிகளை உருவாக்கியப் புத்தகங்கள்
இன்று
கருப்பும் வெள்ளையுமாய் மாறிப் போனது
காலத்தின் கோலம்!

அன்று
வாய் மொழிச் சொற்களில்
வலம் வந்த சிந்தனைகள்
கல்லுக்குள் இடம் மாறி
ஓலைக்குள் உருமாறி
தொழில் புரட்சி ஈன்றெடுத்த
அச்சு இயந்திரத்தால்
காகிதத்திற்குள் புகுந்து
புத்தகமாய்ப் பரிணமித்தது!

புவியின் நிலை மாற்ற
புத்தகங்கள் ஆற்றிய பணி
போற்றற்குரியது!

இன்று
காகிதத்திலிருந்து
டிஜிட்டலுக்குத் தாவும்
அறிவியல் தருணம்!

வடிவ மாற்றமென்பது
இயற்கையின் இயல்பே

போர்டு ஐகானில் பயணிப்பவர்கள்
மாட்டு வண்டிகள்
மரணித்துவிட்டதே என்று
கவலை கொள்வதில்லை!
என்றாலும்
புத்தகங்களுக்கும்
நமக்குமான உறவை
எந்த டிஜிட்டலினாலும்
டெலிட் செய்ய முடியாது! 

மனிதனைப் பல்துறை வித்தகனாக்கும் புத்தகங்களின் பரிணாமவளர்ச்சியைப் பாங்காய்ச் சொல்லியிருக்கும் திரு. கொ.வை. அரங்கநாதனின் கவிதையைப் பாராட்டுக்குரியது என அறியத்தருகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 52-இன் முடிவுகள்

  1. ஒவ்வொரு முறையும் மிக பிரயாசைப்பட்டு எழுதும் போது 
    ஆவலுடன் எதிர்பார்த்த தேர்வு இது..
    மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரி மேகலா ராமமூர்த்தி.
    இனைவருக்கும் இனிய வாழத்துகள்.

  2. வெற்றிபெற்றவேதா,இலங்காதிலகத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்-சரஸ்வதிராசேந்திரன்

Leave a Reply to sarswathirajendran

Your email address will not be published. Required fields are marked *