மீனாட்சி பாலகணேஷ்

நீ தகப்பனுக்குச் சுவாமி என்பதுலகறியும்!

56126e17-4f9e-41e7-bf91-f4a1edd787b0

சிறுமிகள் ஐந்தாறுபேர் சேர்ந்து ஒரு அழகான மண்வீட்டைக் கட்டுகிறார்கள். இதற்குச் சிற்றிலிழைப்பது எனப்பெயர். ஒரு வீட்டைக்கட்டி, இலைதழைகள் கொண்டு கூரையையும் அமைத்துப் பின் அதில் குடித்தனம் நடத்துவதாகப் பாசாங்கு செய்து விளையாடுகின்றனர். இங்கு ஒருபெண் சின்னச்செப்புகளை- அவை மரத்தாலோ, உலோகத்தாலோ அல்லது மண்ணாலோ செய்யப்பட்டிருக்கும்- அடுப்பில் ஏற்றிச் சோறு சமைப்பாள். அவரவர் வசதிக்கேற்ப மணலையோ, செல்வந்தர் வீட்டுக் குழந்தைகளாயின், முத்துக்களையோ நவரத்தினங்களையோ அதில் அரிசியெனப் பெய்து சமையல் நடக்கும். சாப்பிடுவதாகப் பாசாங்கு செய்யமாட்டார்கள். ஏனெனில் அதற்குள் யாராவது ஒரு சிறுவனோ சிறுமியோ தங்கள் வீட்டிலிருந்து ஏதாவது தின்பண்டத்தைக் கொண்டு வருவார்கள். அதனை உண்டு மகிழ்வர் இச்சிறுமியர்.

ஆற்றங்கரைமணலில் அழகான சிற்றிலையிழைத்து விட்டார்கள் இச்சிறுமியர். தேன்மொழிதான் வயதில் சற்றே பெரியவளானதால், அவள் சிவந்தநிற மலர்களை அடுப்பிலிட்டு நெருப்பாக்கி, சோற்றுப்பானையை இட்டு, சோறும் பொங்கிவிட்டாள். மஞ்சரி தன்வீட்டிலிருந்து தாய் செய்திருந்த சில பணியாரங்களையும், பொரி, அவல், வெல்லம், தேங்காய்ச்சில்லுகள் என வகைவகையாக எல்லாம் கொண்டு வந்துவிட்டாள். இலைபோட்டுப் பரிமாற வேண்டியதுதான்- அப்போது ஓடோடி வருகிறான் அச்சிறுவன்- யாரவன்? பெயர் சாமிநாதன்! இவர்களுடைய தோழன்தான்! ஒரு அன்னையின் தோரணையில் இடையில் கைகளை ஊன்றியவண்ணம், “சரி! சரி! அவனுக்கும் ஒரு இலை போட்டுவிடடி,”என்கிறாள் தேன்மொழி.

அதற்கெல்லாம் நேரமே இல்லாமல், வந்தவன் இவர்களின் சிற்றிலைக் காலால் எற்றி அழிக்க முற்படுகிறான். அவனுக்கு இவர்கள்மீது வெறுப்போ பகையோ ஒன்றும் இல்லை. இவர்கள் இழைத்த சிற்றிலை அழிப்பது அவன் வயதொத்த சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டு. அழித்தபின் அவர்கள் அழுவதனைக் கண்டு கைகொட்டி நகைப்பான். சரியான சமயத்தில் தேன்மொழி பாய்ந்து அவனைப் பிடித்து இழுத்து ஒருபுறம் நிறுத்திவிடுகிறாள். அவர்கள் சிற்றில் அழிவிலிருந்து பிழைத்தது! விக்கித்துநின்ற மற்ற சிறுமியர் இப்போது சாமியை (சாமிநாதனை அவர்கள் அப்படிதான் அழைப்பார்கள்!) ‘பிலுபிலு’வெனப் பிடித்துக் கொள்கின்றனர்; கேள்விக்கணைகளும் கூச்சலுமாக ஒரே ஆரவாரம்:

வாருங்கள், நாமும் அருகே சென்றுதான் பார்க்கலாமே!

தேன்மொழி பன்னிரண்டு பிராயம் நிரம்பியவள். சிறுபிள்ளை விளையாட்டுகளுடன், தெய்வ பக்தி நிரம்பிய தாய்தந்தையர் கூறும் கதைகளையும் தத்துவங்களையும் கேட்டு வளர்ந்தவள்; வளருபவள். அவள் ஆத்திரம் கொள்ளாமல் அமைதியாக, ஆனால் கண்டிப்பாகக் கேட்கிறாள்: “என் பாட்டனார் கூறிய தத்துவம் ஒன்றுண்டு; எம் அன்னை (ஆய்) இவ்வாறுதான் சிற்றில் இழைப்பாளாம்; அவற்றை எமது தந்தையாகிய அத்தன் சிவபிரான் அழித்துக் கூத்தாடுவானாம். எம் அன்னைக்குக் கோபமே வராதாம். பேசாமல் அவன் ஆட்டத்தை நின்று ஆனந்தமாகக் கண்டவண்ணம் கையால் தாளமுமிடுவாளாம்1. பெண்களுக்கே உரியதான பொறுமையாலும், பேரன்பினாலும், இந்த இளம்பெண்களாகிய இவர்களும் ( நாங்களும்- இம்மடவார்) நான் என்ன செய்தாலும் அவ்வாறு பொறுத்துக்கொள்ளும் தகைமைவாய்ந்தவர்களென்று நீ தவறாக எண்ணிக்கொண்டாய் போலும், சாமிநாதா! உனக்குத் தகுந்த தண்டனை கொடுக்க எம் தாய்மார்களை நாங்கள் கூவியழைப்போம் தெரியுமா?” என வாதிடுகிறாள்.

மஞ்சரி, “நீ எல்லாரிடமும் சென்று சும்மாயிருக்கும்படிக் கூறுவாய்; உன்னிடம் அதனைக் கூறுவார்- அதாவது, ‘நீ சும்மாயிரு சாமிநாதா,’ எனக்கூறுவார் ஒருவருமில்லை எனத் தெரிகிறது. அதுதான் எங்களிடம் இவ்வாறு வந்து வம்புசெய்கிறாய்,” எனக் கூற, கோதை எனும் சிறுமி, “அடியே! அதுதான் இவன், இந்தச் சாமிநாதன் தகப்பன் சாமியாயிற்றே2! உலகமே அறிந்த கதையல்லவோ அது,” எனப்பழித்து முகத்தைச் சுளிக்கிறாள்.

“அம்மாடி! நீ குறும்புசெய்யும் சிறுவர்களின் கூட்டத்துக்கு அரசனல்லவோ ?” எனக் கேட்டுச் சிறுமியர், “எங்கள் சிற்றிலை தயவுசெய்து அழிக்காதே சாமி! அழகான இந்தத் திருவேரகம் எனும் ஊரில் வாழ்கின்ற குருமணியே, எங்கள் சிற்றிலை அழிக்கவேண்டா,” எனக் கையெடுத்துக் கும்பிட்டு வேண்டுகின்றனர்.

அந்தச் சாமிநாதன் எனும் கள்ளச்சிறுவன், திருவேரகம்வாழ் குமரன், தகப்பன்சாமியான சுவாமிநாதன் குறுமுறுவல் கொள்கிறான்.

1.அன்னை சிற்றிலிழைப்பதென்பது உலகங்களைப்படைக்கும் செயல்; அத்தன் உன்மத்த நடனமாடி அதனை அழிப்பதென்பது ஊழிக்காலத்தே உலகினை இறைவன் அழிப்பதென்பதாகும். இந்தப் பிரபஞ்சப் பெருநடனத்தைக் காலந்தோறும் ஓய்வொழிவின்றி அன்னையும் அத்தனும் நிகழ்த்துகின்றனர்; இதனையே இங்கு புலவர் சிறுவர் விளையாட்டாகக் கூறுகிறார். குமரகுருபரனாரும் இதே கருத்தினை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அழகுற எடுத்தாண்டுள்ளார்:

எற்றுபுன லில்கழுவு புவனப்பழங்கலம்
எடுத்துஅடுக் கிப்புதுக்கூழ்
இன்னமுதமும் சமைத்து அன்னைநீபன்முறை
இழைத்திட அழித்தழித்தோர்
முற்றவெளி யில்திரியும் மத்தப்பெரும்பித்தன்
முன்னின்று தொந்தமிடவும்…………

(செங்கீரைப்பருவம்- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்)

2. தகப்பன் சுவாமி- படைப்புக் கடவுள் பிரமன் பிரணவ மந்திரத்தின் பொருள் அறிந்திலன்; அதனால் அவனைச் சிறையிலிட்ட குமரனிடம் தந்தை சிவபிரான் அதன் பொருளைக் கேட்க, அவருக்கு, தந்தைக்கு உபதேசம் செய்கிறான் முருகன்; இது திருவேரகத்தில் நிகழ்ந்தது, அதனால் முருகன் தகப்பன் சுவாமி எனக் கொண்டாடப்படுகிறான்.

3. குறும்பர் குலத்தரசன்- குறும்பு செய்யும் சிறுவர்களுக்கெல்லாம் தலைவன்; குறும்பர் எனப்படும் மலைவாழ் குறவர்களின் அரசன் என இருபொருள்படும்)

எம்மா யிழைக்கும் சிற்றிலெலா மெந்தை யழித்துக் கூத்தாட
எள்ளத் தனையும் சினவாம லினிது தாள மிடுகின்றாள்
தம்மா தரவா லிம்மடவார் தாமு மெமக்கத் தகையரெனத்
தவறா யெண்ணிக் கொண்டனையாம் தண்ட மிடத்தா
யரையழைப்போம்
சும்மா இருக்கும் படிஎவர்க்கும் சொல்ல வல்லாய் உனக்கதனைச்
சொல்வா ரிலைநீ தகப்பனுக்குச் சுவாமி யென்ப துலகறியும்
அம்மா குறும்பர் குலத்தரசே அடியேம் சிற்றி லழியேலே
அணியே ரகம்வாழ் குருமணியே அடியேம் சிற்றி லழியேலே

(திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்- நடேச கவுண்டர்)

கவியரசு நடேச கவுண்டர் இயற்றியுள்ள திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழில் உள்ள சிற்றில் பருவத்துப்பாடல் இது. அம்மையப்பன் இயற்றும் படைத்தல்-காத்தல்-அழித்தல் எனும் பெரும் தத்துவத்தைச் சிறார்களின் சிற்றில் விளையாட்டாக்கியும், “உன்னிடம் நாங்கள் எதனை எப்படிக்கூறுவது? நீதான் தகப்பன் சுவாமியாயிற்றே,” என்று திருவேரகத்தலத்தின் புராணத்தை இதனுட்படுத்தியும், ‘குறும்பர் குலத்தரசே’ என முருகனைப்பற்றி இருபொருள்படும்படியும் கவியரசு நடேச கவுண்டர் அவர்கள் பாடியுள்ள நயம் இரசிக்கத்தக்கதாம்.

*****

94b8d03b-5ba1-46a9-b8e6-f4d75ab74eb9
சிறுமியர் சிற்றிலிழைத்துப்பின்பு தமது பாவைகளுக்கு ஒரு திருமணவிழாவினையும் நடத்த முனைந்துள்ளனர். சிறுமி சுந்தரியின் அழகான மரப்பாவை திருமணப்பெண்; மஞ்சள் நிறப்பட்டாடை அணிவிக்கப்பட்டுப் பொலிகிறாள்! அடுத்தவள் மேகலையின் மரப்பாவைதான் மணமகன். ஒருகை சிறிது ஒடிந்திருந்தாலும், முறுக்குமீசையும் தலைப்பாகையுமாக கனகம்பீரமாக நிற்கிறான் அவன்! மேலும் சில மணமக்கள்- மற்றச் சிறுமியர்களுடையவை. அவரவர்கள் தங்கள் அன்னையிடமிருந்து வாங்கிய பட்டுத்துண்டுகளாலும் மலர்மாலைகளாலும் இவற்றினை அலங்கரித்து தமது கழுத்து அணிகளையும் பூட்டி இப்பாவைகளுக்குத் தத்தம் இல்லங்களில் முன்பொருதினம் நிகழக்கண்ட மணவினைப்படி, மணமுடிக்கக் கருதியுள்ளனர். அதற்காகத்தான் பெருவிருந்தொன்றினையும்(!) ஏற்பாடு செய்துள்ளனர். இந்தச் சுவாமிநாதனோவெனில் இவர்கள் சிற்றிலை அழிப்பதிலேயே முனைப்பாக உள்ளான்; என்னவொரு அரக்கத்தனமான விளையாட்டிது?

சினம்பொங்க மேகலை கூறுகிறாள்: “ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு திருமணத்தை முடிக்கவேண்டும் சாமிநாதா. பண்டொருநாள் உன் தந்தை புத்தூர் எனும் ஊரில் ஒரு பெண்ணின் திருமணத்தினை என்னவோ கதைகூறி4 நிறுத்திவிட்டார். அதனால் வந்த பாவத்தினால் தன்னுடைய இருகால்களும் வருந்தும்படிக்கு இருள்படர்ந்த இரவுநேரத்தில் கல்லும் முள்ளும் நிறைந்த திருவாரூர் வீதியில் தம் அடியவருக்காகத் தூதுசென்று நடந்தலைந்தார் என்பதனை நீ அறிந்திருக்கவில்லை போலுள்ளது சாமிநாதா!”

“ஆமாம்! நீ எங்கள் சிற்றிலையும் அழித்து இந்தப் பாவைகளுக்கு நாம் புரியவிருக்கும் திருமணத்தையும் நிறுத்தி விட்டாயானால் எத்தனை பெண்களிடம் தூதாகக் கால் சிவந்துவருந்த நடக்கவேண்டி வருமோ எனத்தெரியவில்லையே, பாவம்!” எனப்போலியாக வருந்துகிறாள் மஞ்சரி.

“எல்லாவற்றையும் நன்கு சிந்தித்துக்கொள்; நாங்கள் சிறுமிகள்; ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறோம். எங்கள்மீது இரக்கம் இல்லாமல் எங்களுடைய சிற்றிலைச் சிதைக்காதே அப்பா! திருவேரகம்வாழ் முருகா, எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என முறையீடு செய்கின்றனர் சிறுமிகள்.

தகப்பன்சுவாமியான முருகன் இவ்வேண்டுதலுக்குச் செவிசாய்க்காதிருப்பானோ? கட்டாயமாக இல்லை. அருட்கடலல்லவா அவன்?

4. சிவபிரான் முதியவர் வடிவில் வந்து புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் மகளுக்கும் சுந்தரருக்கும் நடக்கவிருந்த திருமணத்தை, ‘சுந்தரன் என் அடிமை’ என எழுதிய ஓலையைக்காட்டி ஆட்கொண்டு, திருமணத்தை நிறுத்திவிட்டார். அதனையே சிறுமியர் கூற்றாகப் புலவர் இவ்வாறு கூறுகிறார்.

5. அதனால் வந்த பாவம் தொலையுமாறு (இது புலவர் இந்தப் பாடலின் சுவைக்காகக் கற்பனை செய்த கருத்து) அதே சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் திருவாரூர் வீதியில் திரும்பத்திரும்ப அலைந்து தூது சென்றார் சிவபிரான்.)

உந்தை புத்தூர் வருபாவை ஒருத்தி மணத்தை ஒருகால்முன்
ஒழித்த பவத்தால் இருகாலும் உறுத்த ஆரூர் வீதியெலாம்
முந்தை யிருளினில் நடந்தலைந்த முறைமை யறியாய்ப் பலகாலும்
முயன்று பாவை பலர்க்குமணம் முடிக்கக் கருதும் வேளையிடை
வந்து சிதைத்தி யிப்பாவம் மலர்க்கால் சிவக்க எத்தனைகால்
மகளிர் பால்நீ தூதாக வருந்தி நடக்கப் புரிந்திடுமோ
சிந்தை நினைந்து சிறியேம்செய் சிற்றில் சிதையேல் சிதையேலே
திருவே ரகம்வாழ் முருகோனே சிற்றில் சிதையேல் சிதையேலே

(திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்- நடேச கவுண்டர்)

தகப்பன் சுவாமி என்றது ‘நீ தகப்பனுக்கும் ஒருபடி மேல். அவன் ஒரு பெண்ணின் திருமணத்தை நிறுத்தியதற்கே இவ்வளவு அலைய நேரிட்டது. நீ பல பாவைகளின் (பெண்கள்/ விளையாட்டு பொம்மைகள்) திருமணங்களை நிறுத்தினால் எப்படியெல்லாம் அலைய நேரிடும்?’ எனப் பேதைச் சிறுமிகள் கேட்பதாகக் கற்பனை செய்து பாடியது மிக அருமை.

இதுபோலும் அருமையான பாடல்களை மேலும் அடுத்தடுத்துக் காண்போம்.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

********************************

_

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-13

Leave a Reply to ஒரு அரிசோனன்

Your email address will not be published. Required fields are marked *