நாகேஸ்வரி அண்ணாமலை

 genusmap

2016-ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்து வருகிறது.  குடியரசுக் கட்சியில் ஆரம்பத்தில் பத்துப் பேர் களத்தில் இறங்கினர்.  ஆனால் படிப்படியாக ஐந்து பேர் போட்டியிலிருந்து விலகிய பிறகு இப்போது ஐந்து பேர் களத்தில் இருக்கின்றனர்.  இவர்களில் மூன்று பேர்தான் கடைசிக் கட்டம்வரை இருப்பார்கள் போல் தெரிகிறது.  இவர்கள் மூன்று பேரும் கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாதவர்கள்.  எதையெல்லாம் பேசக் கூடாது என்று ஒரு வரையறை இருக்கிறதோ அதையெல்லாம் பேசித் தீர்க்கிறார்கள்.

https://en.wikipedia.org/wiki/United_States_presidential_election,_2016 - நன்றி
https://en.wikipedia.org/wiki/United_States_presidential_election,_2016 

அதிலும் முன்னணியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்.  கூட்டத்தில் நிருபர்கள் இதை எப்படிச் சமாளிப்பீர்கள், அதை எப்படிச் சமாளிப்பீர்கள் என்று எதைக் கேட்டாலும் ‘அந்த நிலை வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்கிறார்.  இவரை முந்துவதற்கு டெட் க்ரூஸ், மார்க்கோ ரூபியோ ஆகிய இருவரும் என்னென்னவோ முயற்சிகள் செய்கிறார்கள்.  ஒன்றும் பலிக்கவில்லை.  இவர்தான் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நியமனம் பெறலாம் என்று சில குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இவரை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  எல்லாம் எதற்காக?  ட்ரம்ப் ஜனாதிபதியானால் இவர்களுக்கும் ஏதாவது பதவி கிடைக்கும் என்ற நப்பாசையால்தான்.

முதலில் போட்டியிட்ட பத்துப் பேர்களில் ஒருவரான இப்போதைய நியு ஜெர்ஸி மாநில ஆளுநரான கிரிஸ் கிறிஸ்டி திடீரென்று ட்ரம்பை ஆதரிப்பதாக அறிக்கை விட்டார்.  இதைக் கேட்டுப் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.  தன்னுடைய ஆதரவாளர்களையும் ட்ரம்பை ஆதரிக்கும்படி கிறிஸ்டி கேட்டுக்கொண்டிருக்கிறார்.  ஆனால் பலருக்கு இது பிடிக்கவில்லை.  அப்படியும் சிலர் கிறிஸ்டி கேட்டுக்கொண்டதற்கிணங்க ட்ரம்பை ஆதரிக்கப் போகிறார்கள்.  ட்ரம்ப்பிற்கு நியு ஜெர்ஸி மாநிலத்தில் சில வணிகத் தொடர்புகள் இருப்பதால் அவருக்கு அம்மாநிலம் பற்றி நன்றாகத் தெரியும் என்றும் கிறிஸ்டி காரணத்தோடுதான் ட்ரம்பை ஆதரிக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

முதலில் பத்துப் பேரில் ஒருவராக ஜனாதிபதி பதவிக்கு கிறிஸ்டி போட்டி போட்டபோது ட்ரம்பை எப்படித் தாக்கிப் பேசினார் என்று பல பத்திரிக்கை நிருபர்கள் பழையதைத் தோண்டி எடுத்து வெளியிடுகிறார்கள்.  முஸ்லீம்கள்தான் அமெரிக்காவில் நடக்கும் பெரும்பாலான துப்பாக்கி வன்முறைகளுக்குக் காரணம் என்றும் அவர்களை இனி அமெரிக்காவிற்குக் குடியேற அனுமதிக்கக் கூடாது என்றும் ட்ரம்ப் பேசிவருகிறார்.  2011-இல் கிறிஸ்டி நியு ஜெர்ஸி மாநில நீதிபதிகளுள் ஒருவராக ஒரு முஸ்லீமை நியமித்தபோது அதை எதிர்த்த சில பழமைவாதிகளை கிறிஸ்டி கடுமையாகச் சாடினார்.  அவர் இப்போது முஸ்லீம்களுக்கு முதல் எதிரியாக விளங்கும் ட்ரம்பை எப்படி ஆதரிக்கிறார் என்று பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை.  இவர் போட்டியில் இருந்தபோது ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு அருகதை அற்றவர் என்றார்.  அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று புலம்புவதைத் தவிர வேறு எதுவும் அவர்களால் செய்ய முடியவில்லை.

ஜனநாயகக் கட்சியில் நான்கு பேர் முதலில் முன்னிலையில் இருந்தனர்.  இப்போது போட்டியாளர்கள் இரண்டு பேர்தான்.  ஒருவர் வெர்மான்ட் செனட்டராக இருக்கும் பெர்னீ சேண்டர்ஸ்; இன்னொருவர் ஹிலரி கிளின்டன்.  சேண்டர்ஸ் இருபது வருடங்களுக்கும் மேலாக செனட்டராக இருக்கிறார்.  இவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது நேரத்திற்குத் தகுந்த மாதிரி தன் கொள்கைகளை மாற்றிப் பேசாமல் இருப்பது.  அவருடைய பொருளாதாரக் கொள்கைகளில் சில நடைமுறைக்கு ஒத்துவராததாக இருந்தாலும் தான் மனதில் நினைப்பதை ஒளிவு மறைவில்லாமல் பேசுகிறார்.  ஒபாமாவிற்குப் பிறகு இவர் ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்கா அடிக்கடி போர்க் கொடியைத் தூக்கிக்கொண்டு தனக்குப் பிடிக்காத நாடுகளோடு சண்டைக்குத் தயாராகாது.

Hillary_Clinton_by_Gage_Skidmore_2ஆனால் ஹிலரி அப்படியல்ல.  ஒரு பத்திரிக்கையாளர் கூறியதுபோல் இவர் ஒரு பச்சோந்தி.  நேரத்திற்குத் தகுந்த மாதிரி பேசுவார்.  ஒபாமாவைப் போல் இவர் சமாதான விரும்பி அல்ல.  இரண்டாவது முறை ஜனாதிபதியாக வர வேண்டும் என்றால் முதல் தடவை ஜனாதிபதியாகச் செயல்படும்போது என்ன வேண்டுமானாலும் செய்வார்.  எத்தனை தடவை எந்த நாட்டோடும் இவர் போர் புரியத் தயங்க மாட்டார்.  இவர் பெரிய சந்தர்ப்பவாதி.  இரண்டு நாட்களுக்கு முன்னால் தென் கரோலினா மாநிலத்தில் கருப்பர்களின் அதிக ஓட்டுக்களைப் பெற்று அந்த மாநிலத்தில் ஜெயித்தார்.  கருப்பர்கள் மேல் தனக்கு அளவில்லாத அக்கறையும் அன்பும் இருப்பதாகக் காட்டிக்கொள்வார்.  தேர்தலுக்கு முன் அந்த மாநிலத்தில் ஒரு கூட்டத்தில் பேசியபோது ஒரு கருப்பின மாணவி 1996-இல் கருப்பர்கள் பற்றி அப்போது ஜனாதிபதியாக இருந்த இவருடைய கணவர் பில் கிளின்டன் எடுத்த முடிவை ஆதரித்ததற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரினார்.  அந்தக் கருப்பின மாணவியின் கோரிக்கையை சற்றும் எதிர்பார்க்காத ஹிலரி ‘நீதான் இந்தக் கோரிக்கையை என்னிடம் முதல் முதல் வைத்திருக்கிறாய்’ என்று கூசாமல் பொய் கூறினார்.  ஆயிரத்துத் தொண்ணூறுகளில் பில் கிளின்டன் ஜனாதிபதியாக இருந்தபோது நிறையக் குற்றங்கள் புரிவதாகக் கருப்பர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டபோது கருப்பர்களுக்கு சிறைத் தண்டனை அதிகரித்தது.  ஹிலரி ‘குற்றவாளிகளில் அதிகம் பேர் ஏன் கருப்பர்களாக இருக்கிறார்கள் என்று ஆராய்வதற்கு முன் அவர்களை முதலில் மண்டியிடவைக்க வேண்டும்’ என்று கூறினார்.  தான் இப்படிச் சொன்னதற்கு ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் அவர் இப்போது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த மாணவி கூறினார்.  அப்போது கருப்பர்களைப் பற்றி அவ்வளவு குறைவாகப் பேசியவர் இப்போது அவர்களுக்காக உருகுகிறாராம்!  இதுதான் ஹிலரி.

அமெரிக்காவில் எல்லா வேட்பாளர்களுக்கும் நிறைய ஆதரவாளர்கள் உண்டு.  ட்ரம்ப்பை ஆதரிப்பவர்களைப் பார்த்தால் அமெரிக்கர்கள் இத்தனை இனதுவேஷிகளா என்று எண்ணத் தோன்றுகிறது.  க்ரூஸ் ஆதரவாளர்களைப் பார்த்தால் வறியவர்கள் மேல் இவர்களுக்கு இத்தனை வெறுப்பா என்று நினைக்கத் தோன்றுகிறது.  ஹிலரியின் ஆதரவாளர்களில் பலர் பெண்கள்.  ஒரு பெண் என்பதற்காகவே இவரை இப்படிக் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்களே என்று எண்ணத் தோன்றுகிறது.  இவர்களை எல்லாம் கூடப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் இந்தியாவில் ஒரு அரசியல் தலைவரின் சிலையைக் காரின் மேல் வைத்துக்கொண்டும் படத்தைத் தன் காரின் மேல் பகுதி முழுவதும் ஒட்டிக்கொண்டும் இருப்பவரையும் அவருக்குக் கோவில் கட்டிக் கும்பிடும் இன்னொருவரையும் புரிந்துகொள்ள முடியவில்லையே.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அமெரிக்கத் தேர்தல் களம்

  1. இன்று காலை தான் அமெரிக்கா நாளிதான The New York நாளிதழை இணையதளம் மூலம் வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த தருணத்தில் தாங்கள் அழகு தமிழில் அமெரிக்காவின் தேர்தல் களத்த்தின் கட்டுரையை அருமையைாக எழுதியுள்ளீர்கள். எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி வணக்கம்

  2. அன்பினிய சகோதரி , அருமையான அற்புதமான பதிவு. அமேரிக்க தேர்தல் நிலவரத்தை அழகாய்ச் சொற்களில் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அம்மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *