செ. இரா.செல்வக்குமார்

 a2

நோபல்பரிசாளர் பி.வா. ஆண்டர்சன் அவர்களுடன் பேராசிரியர் க.பாசுக்கரன்

இந்தக் கிழமையின் வல்லமையாளர் வியப்பூட்டும் ஓர் அறிவியலாளர்.

மிக எளிய குடும்பத்தில் பிறந்து உலகப்புகழ் எட்டியிருக்கும் இவருடைய வியத்தகு வாழ்க்கை நமக்கெல்லாம்  மிகுந்த உள்ளூக்கம் தரக்கூடியது. .

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம்  என ஓர் ஊர் உள்ளது. அதன் அருகே கரிசற்குளம் (கரிசல்குளம்) என்று ஒரு சிற்றூர். அங்கேதான் வாழ்ந்துவந்தனர் இவருடைய குடும்பத்தினர்.   ஒரு சமயம் பெரிய பஞ்சம் ஒன்று ஏற்பட்டதால் இவருடைய தந்தையார்  திரு. கணபதி அவர்கள் குடும்பத்தோடு மதுரையில் குடியேறினார்.  கணபதி அவர்கள் 2-ஆம் வகுப்புவரைதான்  படித்திருக்கின்றார்.  இந்தவார வல்லமையாளரான  பேராசிரியரும் முனைவருமான  க. பாசுக்கரன்  (க’. பா’ஸ்க’’ரன்) அவர்களுடன்  உடன்பிறந்தவர்கள் 7 பேர்.   மொத்தம் 10 பேர் கொண்ட  இவருடைய குடும்பத்தினர்  வெறும் 2-அறை கொண்ட  சிறிய வீட்டில் வசித்தனர். எளிய பொருளாதார வசதி படைத்த இவர் குடும்பத்தில் 8-ஆவது வரை ஒருவர் படித்தால் உடனே வேலைக்குப்போவதே வழக்கம்.  பாசுக்கரன் அவர்கள் 5-ஆவது வகுப்பு படிக்கும்வரை வீட்டில் மின்விளக்கு கிடையாது. மதுரையில் புனிதமேரி பள்ளியில் படித்த இவர் மண்ணெண்ணெய் விளக்கிலும் தெருவிளக்கிலுமே படித்தார்.  ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்த மதிப்பெண் பெற்று எப்படியோ தேறி வந்தார்.  கணக்குப்போடுவதும்  ஆங்கிலத்திலும் தமிழிலும் பிழையில்லாமல் எழுதுவதும் கடினமாக உணர்ந்தார்.  ஆனாலும் ஆசிரியர்  பாடம் நடத்துவதைக் கூர்ந்து கேட்டு வந்தார்.  பள்ளிப்படிப்பு வரை தமிழ்வழியில் பயின்ற இவர் பி.யூ.சி என்னும் (இன்றைய படிப்பில் பிளசு-2 –வின் இறுதியாண்டு)  படிப்பில்தான் முதன்முதலாக ஆங்கிலவழி படித்தார். முதலில் கடினமாகவே இருந்தது.  பி.யூ.சி-யில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று  மதுரை தியாகராசர் கல்லூரியில் இயற்பியல் படிப்பில் இளநிலையில் (B.Sc) சேர்ந்தார்.  ஒருமுறை இவர் 70% மதிப்பெண் பெற்றதைப் பார்த்து, ‘’நீ இன்னமும் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்’’ என்று இவருடைய துறைத்தலைவர் பேராசிரியர் செயராமன் அவர்கள் இவரிடம் கூறினார். அதைக் கேட்டதுமுதல் இவர் பாடத்தில் உற்றுகவனிக்கத் தொடங்கி மிகுந்த அக்கறை எடுத்தார்.  அதன் பயனாய் பட்டப்படிப்பில் முதல்வகுப்பில் முதல் மாணவனாகத் தேர்ச்சிப் பெற்றார்.

பேராசிரியர் வாட்டர்லூ, கனடாவில்
பேராசிரியர் வாட்டர்லூ, கனடாவில்

அதன்பின் ஏறுமுகம்தான்.  அடுத்து அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியலில் முதுநிலை   பட்டம் பெற்றார்.  பல்கலைக்கழகத்திலேயே முதலிடம் பெற்றார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியற்கழகத்தில் (Indian Institute of Science,) சேர்ந்து திண்மநிலை இயற்பியலில் (Solid State Physics) முனைவர்ப்பட்டம் பெற்றார்.  இவர் குடும்பத்தில் பட்டப்படிப்பே படிக்காதவர் நடுவில் இவர் புகழ்மிகு உயர்கல்விக்கழகத்தில்  முனைவர்ப்பட்டம் பெற்றிருக்கின்றார். நோபல் பரிசு பெற்ற அப்துசு சலாம் (Abdus Salam) அவர்கள் இத்தாலி நாட்டின் வடகிழக்கேயுள்ள திரீசித்தே ( Trieste) என்னும் நகரில் 1964 ஆம் ஆண்டு  நிறுவிய அனைத்துலக கொள்கைய  இயற்பியல் நடுவத்தில்  (International Centre for Theoretical Physics (ICTP)) குளிர்கால பயிற்சிப் பட்டறை ஒன்றில் பங்குகொள்ள இவருக்கு அரிய வாய்ப்பு கிட்டியது.  இந்த நிறுவனம் ஐ.சி.டி.பி (ICTP) எனப்பரவலாக அறியப்படுகின்றது.  பிறகு அங்கேயே (ஐ.சி.டி.பி –யில்) வேலையும் கிடைத்தது. இதுவொரு திருப்புமுனை!! அங்கே வந்தார் அமெரிக்காவில் உள்ள பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் (Princeton University) பேராசிரியராக இருந்த நோபல் பரிசுபெற்ற அறிவியலாளர்   பிலிப்பு வாரன் ஆண்டர்சன் (Philip Warren Anderson) என்பார். இவர் மீகடத்தித்துறை (superconductor) ஆய்வில் மிகுபுகழ் எட்டியவர்.  அவருடன் நடந்த அறிவியல் கருத்துறவாட்டத்தின் பயனாய் அமெரிக்காவில் பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்திலேயே வருகைதரு பேராசிரியராகச் செல்ல வாய்ப்பு கிட்டியது.  இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதாகிய சாந்தி சொரூப்பு பட்டுநாகர் விருதை (Shanti Swarup Bhatnagar Prize) இவர் 1990 இல் வென்றிருக்கின்றார். அதற்கும் முன்பாக  நோபலியர் அப்துசு சலாம் அவர்களின் ஐ.சி.டி.பி நிறுவனத்தின் முதல் விருதாகிய ஐ.சி.டி.பி பரிசை 1983 இல் வென்றார்.  இப்பரிசு 40 வயதுக்கும் குறைவான  வளரும் நாட்டு அறிவியலாளர் ஒருவருக்கு வழங்கப்பெறும் விருது.  இவர் நோபல் பரிசு பெற்ற ஆண்டர்சன் அவர்களுடன் இணைந்து ஆய்விதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.

சிலவகைப் பொருள்களில் எதிர்மின்னிகளைத்  (electron) தனித்து இயங்கும் உருப்படிகளாகக் கருதாமல் அவற்றினிடையே வலுவான ஒத்தியங்கும் நுண்பிணைப்பு கொண்ட  ( developed the resonating valence bond theory)  தன்மை உடையதாகக் கருதப்படும் அமைப்புகள் பற்றிய ஆய்வில் பாசுக்கரன் அவர்கள் உலகளவில் முன்னணி ஆய்வாளர் இத்துறையில் இவர் நோபலியர் பி.வா. ஆண்டர்சன் அவர்களுடன் சேர்ந்து கருத்தியக் கொள்கைகளை உருவாக்கியிருக்கின்றார்.  இக்கருத்துகள் உயர்வெப்ப மீகடத்தித்துறையில் (high temperature superconductor) மிகவும் முக்கியமானவை. இவருடைய படைப்புகளுக்காக இவருக்கு நோபல்பரிசு கிடைத்தாலும் கிடைக்கக்கூடும். இவர் கனடாவில் வாட்டர்லூ நகரில் உள்ள புகழ்மிக்க பெரிமீட்டர் கழகம்  (Perimeter Institute) என்னும் கொள்கைய இயற்பியல் (Theoretical Physics) ஆய்வுக்கழகத்தில் வருகைதரு அறிவியலாளராக வந்துபோய்க்கொண்டு இருக்கின்றார்.  இதுமட்டுமல்லாமல் அமெரிக்கா, சப்பான், பிரேசில், பிரித்தானியா, இடாய்ச்சுலாந்து (செருமனி)  போன்ற பலநாடுகளுக்குச் சென்று அறிவியல் ஆய்வுரைகள் வழங்கிவருகின்றார்.   இந்திய அக்காதெமி ஆஃபு சயன்சு, இந்திய நேசனல் சயன்சு அக்காதெமி  போன்ற அமைப்புகள்  இவரை சிறப்பாளராக (Fellow) அறிவித்துப் பெருமைப்படுத்தியுள்ளன. இவர் சென்னையில் இந்திய அறிவியற்கணிதக் கழகத்தில் (The Institure of Mathematical Science) பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கின்றார். இவர் தமிழ்மொழிக்கும் அரிய தொண்டு ஆற்றிவருகின்றார் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தகக்து. முழுமை அறிவியல் உதயம் என்னும் இதழில்  ஐன்சுட்டீனின் பொதுச்சார்பியல் கொள்கையின்  (Einstein’s General Theory of Relativity) 100-ஆவது ஆண்டுநிறைவை ஒட்டி விரிவான  பெருங்கட்டுரைத் தொடர் ஒன்றைத் தமிழில் அண்மையில் எழுதியுள்ளார்.  இத்தொடரின் கடைசி கட்டுரை எழுதியவுடன்  தற்செயலாய் இதற்கு முத்தாய்ப்பு வைத்தாற்போல் பொருளீர்ப்பு அலைகளை  (Gravitational waves) பிப்பிரவரி 11, 2016 அன்று  LIGO என்னும் ஆய்வுநிறுவனத்தார் செய்முறையில் கண்டுநிறுவினார்கள்.

arivial

தெருவிளக்கில் படித்து  உலக அளவில் அறிவியலாளராக உயர்ந்த, நோபல் பரிசாளருடன் இணைந்து கட்டுரை எழுதிய, பெருமைமிகு விருதுகள்  பலபெற்ற பேராசிரியர் க. பாசுக்கரன் அவர்களை இந்தவார வல்லமையாளாராக அறிவித்து மகிழ்கின்றோம். அவருக்கு நம் பாராட்டுகள்.

நூற்துணையும் குறிப்புகளும்:
[1] புதிய தலைமுறை இதழ் (23, ஆகத்து 2010)

[2] தமிழ்விக்கிப்பீடியா கட்டுரை க. பாசுக்கரன் (https://ta.wikipedia.org/s/2yzm)

[3] ஆங்கில விக்கிப்பீடியா [https://en.wikipedia.org/wiki/Ganapathy_Baskaran

[4] முழுமை அறிவியல் உதயம் இதழ்.

[5] செ.இரா.செல்வக்குமாரிடம் நேரில் தெரிவித்த செய்திகள்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. தெருவிளக்கில் படித்து  உலக அளவில் அறிவியலாளராக உயர்ந்த, நோபல் பரிசாளருடன் இணைந்து கட்டுரை எழுதிய, பெருமைமிகு விருதுகள்  பலபெற்ற பேராசிரியர் க. பாசுக்கரன் அவர்களை இந்தவார வல்லமையாளாராக  தேர்ந்தெடுக்கப்பட்டதை வரவேற்கிறேன்

  2. நண்பர் செல்வக்குமார்,

    பெயர்ச்சொற்கள் படும்பாடு !!!

    மதிப்புக்குரிய பேராசிரியர் பெயரைக் கூப்பிடும்போது, பாஸ்கரன் என்று சொல்வீர்களா, அல்லது பாசுக்கரன் என்றழைத்து அவமதிப்பீர்களா ?

    இதுவரைப் பாசுக்கரன் என்று எப்போதாவாது வாயில் அவரை விளித்துள்ளீர்களா ?

    சொல்வது ஒன்று, செய்வது வேறொன்றாக உள்ளதே !

    பேராசிரியரும் முனைவருமான க. பாசுக்கரன் (க’. பா’ஸ்க’’ரன்), இப்படித் தயங்காமல் எழுதி விட்ட நீங்கள் ஏன் பாஸ்கரன் என்றெழுதக் கூடாது ?

    சப்பான், இடாய்ச்சுலாந்து (செருமனி)
    ஐன்சுட்டீன் போன்ற பெயர்ச்சொற்கள்

    தமிழ் அகராதியில்கிடையா.

    சி. ஜெயபாரதன். ++++++++++++++

    N.Ganesan

    toமின்தமிழ்,வல்லமை

    பேரா. பாஸ்கரனுக்கு வாழ்த்துக்கள். வல்லமை மின்னிதழில் பேரா. பாஸ்கரன் தன் பெயரை பாற்கரன், பாசுகரன், பாசுக்கரன் என எழுதாததால்,

    பாஸ்கரன் என்றே எழுதுதல் நலம். மக்களுக்குப் புரியவேண்டும் வல்லமையாளர்கள் பயன்படுத்தும் பெயர்கள். கிரந்த எழுத்துக்கள்

    2000 ஆண்டுகளாக தமிழில் பயன்படுத்தப் படுகின்றன. மக்களின் பெயர்கள் அவர்கள் பயன்படுத்தும் முறையில் எழுதினால் பத்திரிகைகள்

    படிக்கும்எல்லோருக்கும்விளங்கும்.

    நா. கணேசன்

  3. அன்புள்ள ஐயா,
    உங்களுடன் இதுபற்றி பலமுறை உரையாடியிருக்கின்றேன்.
    மீண்டும் ஓர் உரையாடல் மற்றவர்களுக்கு அலுப்பைத் தரலாம்.

    கணபதி என்பதை நாம் kaNabadhi என்று ஒலிக்கின்றோம். சிலர்
    ‘மூல மொழியில் உள்ள ஒலிப்பைத் தமிழில் எழுதிப்பேசும்பொழுதும்
    GaNapati என ஒலிக்கலாம்.  தமிழில்  ககர முதலெழுத்து
    வல்லினமாகத்தான் ஒலிக்கும். இடையே வரும் ப-வும் தி-யும் மெலிந்தேதான் ஒலிக்கும். ஆங்கிலத்தில் எழுதும்பொழுது 
    Ganapathy என்று எழுதினாலும்கூட ணகரம் சரியாக எழுதிக்காட்டவோ
    ஒலித்துக்காட்டவோ முடியாது. வேறுபல ஒலிப்புச் சிக்கல்களும் உள்ளன. ஆங்கிலத்தில் தகரமே கிடையாது. மெலிந்த தகரமோ வலிந்த தகரமோ கிடையாது. 

    பா என்னும் முதல் எழுத்தும் 4 வகையாக வடக்கே ஒலிக்கலாம். தமிழில்
    முதலெழுத்தாக வந்தால் ஒரே வகையான வல்லினம்தான். இடையே
    வந்தால் 2-3 ஒலிப்புகள் எழுத்துச்சூழலைப் பொருத்து வரும்.
    தமிழின் ஒலிப்புமுறை நுணுக்கம் மிகுந்தது, இடம்சார்ந்தது. சீரானது.

    பாஸ்கரன் Baaஸ்kaரன், பாSகரன் என எழுதமுடிவதால் அப்படியெல்லாம் 
    எழுதுவது பிழையானது. பலரும் M.G. ராமச்சந்திரன் என உரோமன் எழுத்துகளைக் கலந்து எழுதுகின்றார்கள் என்பதைப் பார்த்திருக்கலாம். அதனால் அது சரியானதென்று கொண்டுவிடமுடியாது.

    சரி, பாஸ்கரன்  அல்லது பாSகரன் என்பதில்  வரும் காற்றொலியாகிய ”ஸ்” என்பதை அடுத்து எந்த உயிரொலியும் வராமல் வல்லின ககரத்தில் வரும் -கரன்
    என்பதைச் சொல்லமுடியுமா என அருள்கூர்ந்து வாய்விட்டுச்சொல்லிப்பாருங்கள். சொல்லும்பொழுது
    நுண்ணர்வுடன் உற்றுக்கேளுங்கள். பாஸ்[+ நுண்ணிய உயிரொலி]க்கரன் எனவே
    ஓலிக்கமுடியும். பாசூஊஊக்கரன் என் உகரத்தை நீட்டவேண்டாம். அது 
    இடையே வரும் நுண்ணிய குற்றியலுகரம் போன்றது. சிறிது இயல்பாய் உயிரொலி தருவது.  அவ்வளவே.  எந்தவொருமொழியின் சொற்களையும்
    இன்னொரு மொழியில் சொல்லும்பொழுதும் எழுதும்பொழுதும் திரிபுகள் ஏற்படுவது இயற்கை. அடிப்படை உண்மை. இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். இங்கே நான் இதனை விரித்துப்பேச விழையவில்லை.  தமிழில் எழுதும்பொழுது
    கூடியமட்டிலும் ஒழுக்கத்துடன்  எழுத முயல்கின்றேன். ஆங்கிலேயர்கள்
    Ganapathy என எழுதினால் (அவர்கள் ஒலிப்பு நாம் சொல்லும் க’ணப’தி’ என்பது 
    போல் இராது. கேநபேட்டி என்பதுபோலவோ பிறவாறோ இருக்கலாம்), ணகரம்
    சரியாக இல்லையே,  தகர ஒலி சரியாக இல்லையே உயிரொலிப்புகள் சரியாக இல்லையே  எனக்கவலைப்படமுடியாது (இத்தனைக்கும் அது நெருக்கமான இந்திய-ஐரோப்பிய மொழி). அதிலேயே அப்படியென்றால் முற்றிலும் வேறான மொழிக்குடும்பத்தில் உள்ள தமிழிலும்  சிறிது மாறுபட்டு இருப்பது வியப்பல்லவே.. 

    நான் இதனை விரித்து உரையாட விரும்பவில்லை. இதனைப் பலமுறை
    பலவிடங்களிலே எடுத்துரைத்திருக்கின்றேன். 

    அன்புடன்
    செல்வா

  4. சிறப்பான தேர்வு. அருமையான எழுத்து நடை. வாழ்த்துக்கள் திரு செல்வா.

Leave a Reply to செ.இரா.செல்வக்குமார்

Your email address will not be published. Required fields are marked *