III:2 இன்னம்பூரான் பக்கம்: III:2 இந்திய தணிக்கைத்துறையும், நானும்

0

கடையில் இருக்கும் நெய்யே…!

இன்னம்பூரான்
மார்ச் 9, 2016

8cf1ed83-5f46-411c-a667-39ea8d11e06b

ஒருவர் சொத்தை மற்றொருவர் அபகரிப்பது தொன்று தொட்டு நடந்து வரும் பகற்கொள்ளை. சில சமயம் தீவட்டிக்கொள்ளை. சில சமயங்களில் கன்னம் வைப்பது. சில சமயம் ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டு, பொய் கணக்கு எழுதுவது.

சாணக்கியர் உரைத்தப்படி, திருடர்கள் இருப்பதை இல்லை என்பார்கள். இல்லாததை இருக்கிறது நம் தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள். [அந்த இழை தனியே ஓடும்.] இதையெல்லாம் சாங்கோபாங்கமாக குடைந்தெடுத்து, தணிக்கைத்துறை பொதுமன்றத்தில் வைத்தாலும், கொள்ளையர் சண்டியர் மாதிரி வீதிவலம் வருகிறார்களே என்று மெத்தப்படித்தவர்கள் கூட அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். குடியரசு ஆட்சியில், அரசியல் சாஸனத்தின் ஆணைக்கு உட்பட்டு, ஆடிட் ரிப்போர்ட்கள் சட்டசபையில் வைக்கப்படுகின்றன. அந்த நிமிடமே பொதுமன்றத்தில் அவை பிரசன்னம். இனி, மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தான் செயல்படவேண்டும்.

இன்று எங்களுடைய மின் தமிழ் தளத்தில் முனைவர் சுபாஷிணி எழுதியது,

‘…அரசியல் என்று வரும் போது அரசியல்வாதி-பொதுமக்கள் என்ற இரு பகுதி இருக்கின்றது. அரசியல்வாதி தவறாகாச் செயல்படும் போது அதனை மாற்றி அமைக்க வேண்டிய கடமை பொதுமக்களுக்கு உண்டு. அதிலும் அதிகமாக ஊடகங்களுக்கு உண்டு…’

கனப்பொருத்தமாக அமைகிறது.

Do not bark at the wrong tree, please.

தணிக்கைத்துறையின் வரலாற்றுத் துளிகளும், சேகரத்துக்குகந்த பழைய நிகழ்வுகளும், என் அனுபவங்களும், தணிக்கை செய்முறை நுட்பங்களும், தற்காலிக சமாச்சாரங்களும், இழையில் ஊடாடி [seamlessly woven) வருபவையாகும். வாசகர்கள் ஊன்றி படித்தாலொழிய, ஆடிட் ஆவணங்களை புரிந்து கொள்ள முடியாது. இத்தனைக்கும், அந்த துறை பொதுமக்கள் பார்வைக்காக, ஐம்பது வருடங்களாக எளிய நடை தமிழில் அவற்றின் சாராம்சத்தை பதிவு செய்கிறார்கள். விழிப்புணர்ச்சிக்கு அது தேவை. காலம் கெட்டுக்கிடக்கிறது. மத்திய அரசின் ஒற்றர் இலாகா கூட இன்று ஆர்வலர்-ஒற்றர் நாடி விளம்பரம் செய்து இருக்கிறது ! சிட்டிஸன் -ஆடிட்டரைத்தான் காணமுடியவில்லை!

மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் 1909 தான் முதல் முதலாக ஆடிட் பற்றி தெளிவான திட்டம் வகுத்தது. ஆடிட்டர்களுக்கு நிம்மதி வேண்டும்; சிந்திக்க அவகாசம் தேவை; அவர்களை மாஸ்டர்கள் தொணத்தக்கூடாது; அவர்கள் தன்னிச்சையாக செயல்பட வசதி அளிக்கவேண்டும்; இத்யாதி. அன்னியநாட்டை அடக்கி ஆளும் கலோனிய அரசு இத்தகைய சுவாதீனத்தைத் தணிக்கைத்துறைக்குக் கொடுத்தது போற்றத்தக்கது; வியப்பை அளிக்கிறது. இது ஒரு முகாந்திரம். ஒரு நிகழ்வு. அந்த துறையின் மூத்த இந்திய அதிகாரி ஒருவர் வைஸ்ராய் செய்த செலவுகளை கண்டித்தார். அது துரைத்தனத்தாருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், அடுத்தபடி ஆடிட்டர் ஜெனெரலாக அப்போதைக்கு ஒருவரை நியமனம் செய்ய வேண்டி இருந்தது. அதே துரைத்தனத்தார், தன்னிச்சையாக செயல்படுபவர் என்று இவரையே அந்த பதவியில் அமர்த்தினர்.

நான் தணிக்கைத்துறையில் கால் வைத்தது 1954ல், குமாஸ்தாவாக. வேலை கனஜோர். மேலதிகாரிகளை இம்பெரஸ் பண்ணுவதற்காக, வந்த ஆவணங்களை மறைத்து வைத்து விட்டு, ‘ஏன் அனுப்பவில்லை?’ என்று கடுமையாக விசாரணை செய்வது போல் பாவ்லா காட்டிவிட்டு, அடுத்தமாதம் ஆவணங்களை வெளி கொணர்ந்து செட்டில் செய்து, மார் தட்டிக்கொள்வதும் உண்டு! வபையாக மாட்டிக்கொண்டவனை திண்டாட வைத்ததும் உண்டு. இதை சொல்வதின் காரணம்: [1] ஆடிட்காரனும் பாமர மனிதனே; சில்லரை விஷமம் அங்கேயும் உண்டு. [2] அடுத்த வருடமே பெரிய பதவி ஏற்ற நான் பாவ்லா செய்பவர்களை பிடிக்க முடிந்தது என்பதே.

இன்றைய சங்கதிக்குக் கோடி காட்டி விட்டு போகிறேன். ஏற்கனவே, நீண்டு விட்டது.

அவுட்! 12,400 கோடி ரூபாய் அபேஸ்! ஆடிட்டர் ஜெனரல் துல்லியமாக தனியார் துறை கணக்குப்புத்தகங்களை அலசி, வடிகட்டி எடுத்த குற்றச்சாட்டு. நமது நண்பர்கள் முதலாளித்துவத்தை போன்ற உயரிய பொருளியல் தத்துவம் கிடையாது; போட்டி இருப்பதால் சந்தை விலையை குறைக்கும் என்பார்கள். சந்தையெல்லாம் மொந்தைக்கள் தான். மற்றும் சிலர் அயல் நாட்டுச்சரக்கை வரவேற்க வேண்டும் என்று ரத்னகம்பளம் விரிப்பார்கள்.

நடந்தது என்ன?

ரிலையன்ஸ், டாட்டா, ஏர்டெல்,வோடோஃபோன், ஐடியாஸ். ஏர்செல் ஆகிய தனியார் துறை மகானுபாவர்கள் 2006 -2010 காலகட்டத்தில் பொய்க்கணக்கு காட்டி, அரசை ஏமாற்றிய செல்வம்: 12,400 கோடி ரூபாய். ஆதாரம், அவர்கள் காட்ட மறுத்து பல கோர்ட்டுகளை அணுகி, கெஞ்சி,வாய்தா கேட்டு, கேட்டு, எல்லாவிதமான தகடுத்தத்தங்கள் ஃபெயில் ஆனபின், 2014ல் தான் உச்ச நீதி மன்ற தீர்வுக்கு பிறகு, அரைமனதுடன் காண்பித்த கணக்குப்புத்தகங்கள் அளித்த வாக்குமூலம், இது.

சாமான்யமாக ஆடிட் செய்ய முடியவில்லை. ‘கல்லைக்கண்டா நாயை காணோம்; நாயை கண்டா கல்லைக்கானோம்.’ என்ற அலங்கோலம் தான். ஆனாலும், இந்த தணிக்கைத்துறைக்கு பொறுமை ஜாஸ்தி. வணங்கா முடி வேறே.

கொசுறு: இந்த ஊடகக்காரர்கள் [மீடியா] அந்த தனியார் நிறுவனங்களை அணுகி, ‘என்னப்பா சமாச்சாரம்? ஆடிட்காரன் அடி அடியா அடிக்கிறானே. நிசமா? ‘ என்று கேட்டார்கள். ஒரே மூச்சாக எல்லாரும் பதிலளிக்க மறுத்து விட்டார்கள்.

ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா: மார்ச் 9ம் 2016,
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.starlightinvestigations.co.uk/wp-content/uploads/2015/01/Investigation-1038×576.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *