க. பாலசுப்பிரமணியன்

கதைகளின் புதிய பரிமாணங்கள்

education11

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மேலாண்மை கழகத்தின் (Indian Institute  of Management)  முனைவர் ஒருவர் கொடுத்த தகவல் சிந்தனையைத்  தூண்டுவதாக இருந்தது.

“எனது மாணவர்கள் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்கும் பொழுதில்  அவர்களை விக்ரமாதித்தன் கதைகளைப் படிக்கச் சொல்லுவேன். வேதாளம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முயலும் விக்ரமாதித்தன் நிலை என்ன ஆகின்றது, அவன் எப்படி கேள்விகளுக்கு பதில் காண விழைகிறான் என்று சிந்திக்கச் சொல்லுவேன்.”  என்றார். மேலும் “தொழில் பற்றிய நிகழ்வுகளை முறைப் படுத்தி அவைகளைக் கதைகளாகத் தானே ( Case Studies ​) சொல்லுகின்றோம். ஆகவே சிறு வயதிலிருந்தே கதைகளைக் கேட்பது மட்டுமின்றி, அவற்றின் உட்கருத்துக்களையும் நுட்பங்களையும் புரிந்து கொள்ளுதல் அவசியம்.” என்றார். அவர் கருத்தின் உண்மையைக் கண்டு வியந்தேன் !

இதிகாசம், புராணங்கள் மற்றும் சரித்திர  நிகழ்வுகளைச் சார்ந்த   பல விதமான கதைகள்  இருக்கின்றன. தற்காலத்தில் அத்தகைய கதைகளில் ஈடுபாடு   குறைந்து  உள்ளது. அதற்கு ஒரு முக்கிய காரணம் அவைகளைக் காலக் கட்டத்திற்க்கேற்றவாறு உயிரூட்டம் கொடுத்து சொல்லாமலிருப்பது தான்!  பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதற்கான முயற்சிகள்  மேற்கொள்ளுதல் அவசியம்.

நம்மில் பல பேர்கள் சிறுவர்களாக இருந்த பொழுது  நமக்கு “முயலும் :ஆமையும் ” போட்டி போட்ட கதையை விளக்கிச்  சொல்லுவர்.  அதன் முடிவில் எவ்வாறு முயலின் அளவுக்கு மிஞ்சிய தன்னம்பிக்கையும் ஆணவமும் அதன் தோல்விக்குக் காரணமாக இருந்தன என்று விளக்கி ஒரு வாழ்க்கைத் தத்துவத்தை நம் முன் வைப்பர். அதே கதையை இந்தக் காலக்  கட்டத்தில் கூறும் பொழுது கதை அத்தோடு  நிற்பதில்லை.

தன் தவறையும் முட்டாள்தனத்தையும் அறிந்து கொண்ட முயல், ஆமையை மீண்டும் போட்டிக்கு அழைக்கின்றது. வெற்றி மமதையில் ஆமையும் மீண்டும் வெற்றி என்ற எண்ணத்துடன் பங்கு கொள்ள,… விழித்துக்கொண்ட முயலோ ஆமையை  வென்று  விடுகின்றது. “தவறு  செய்தல் இயல்பு. ஆனால் தவறை திருத்திக் கொள்ளுதல் அவசியம்.” என்று ஒரு ஆழமான கருத்தை இந்த கட்டக் கதை விளக்குகின்றது.

ஆனால் கதை இங்கேயே நிற்பதில்லை

தன் திறனையும்,இயலாமையையும் அறிந்துகொண்ட ஆமை தன் அறிவினைத் தீட்டி மீண்டும் வெல்வதற்கான வழியைத் தேடுகின்றது.

““நாம் இவ்வாறு போட்டியிடுதல் இருவருக்கும் சம நிலையைத் தருவதாக  இல்லை.எனவே போட்டியிடும் தூரத்தில் பாதியை நிலத்திலும் இன்னொரு  பாதியை நீரிலும் வைத்துக் கொள்ளலாம்” என்ற கருத்தினைச் சொல்ல, வெற்றி மமதையில் நின்ற முயலோ, அறிந்து ஆராயாமல் தலியசைக்க.. மீண்டும்  போட்டி……. இப்போது நிலத்தினில் பாதி, நீரினில் பாதி …நிலத்தைக் கடந்த முயலோ நீரின் கரையினில் செய்வதறியாமல் நிற்க, மெதுவாக வந்த ஆமை நிலத்தைத்  தாண்டி  நீரினில் .செல்ல..

“வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல்…”கருத்துக்குப் புதியதோர் விளக்கம் .. கதைகளின் நெளிவு சுழிவுகள் தான் .எத்தனை.!!

கதை மீண்டும் தொடர்கின்றது !

இப்போது தங்கள் திறன்களையும் குறைகளையும் சீர்தூக்கிப் பார்த்த முயலும் ஆமையும் சிந்தித்து, கைகோர்த்து இருவரும் வெற்றி பெறுவதற்கான வழிகளைத் தேடுகின்றன…

முடிவில் நிலத்தில் செல்லும் பொழுது முயலின் மீது ஆமை அமர, நீரில் செல்லும் பொழுது ஆமையின் மீது முயலும் அமர,  இரண்டும் இணைந்தே வெற்றிப் பாதையை நோக்கிச் செல்ல,,, (Win- Win Situation) “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற தத்துவத்தை (Team Spirit ) அழகாக இந்தக் கதையின் வளர்ச்சி நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

இதைப் போன்றே நரியிடம் வடையைக் கொடுத்து ஏமாந்த காக்கை, நரி திராட்சைத் தோட்டத்தில் முயற்சியில் தோற்ற கதை,  சிங்கம்-எலி சேர்ந்த கதை, வேடுவன் புறாக்களுக்கு வலை விரித்த கதை ஆகிய அனைத்திலும் புதிய பரிமாணங்களைச் சேர்த்து நிகழ் காலக் கட்டங்களுக்குத தக்கவாறு எடுத்துச் சொல்ல வாய்ப்புகள்  உள்ளன..

சிறிய வயதிலேயே வாழ்க்கைக்குத் தேவையான நல்கருத்துக்களையும், வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் சந்திக்க தைரியம் விவேகம் அறிவுகூர்மை ஆகிய பல நற்பண்புகளை வளர்ப்பதற்கும் கதைகள் கற்றலுக்கு நல்ல அமைப்புகளாக உள்ளன..

“என் வாழ்க்கையே ஒரு கதை” என நம்மில் பலர் அலுத்துக் கொள்வதில்லையா? ..  இனி அலுக்க வேண்டாம், இந்தக் கதையின் உட் கருத்துக்களை நாம் அறிந்து கொள்ள .முயலுவோம். தினம் நாம் கதைகளுக்காக ஒரு பத்து நிமிடம் ஒதுக்கலாமே?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *