செண்பக ஜெகதீசன்

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.    (திருக்குறள் -999: பண்புடைமை) 

புதுக் கவிதையில்…

பண்பொடு
பலருடன் பழகி மகிழ்தல்
பயனுடைத்து இவ்வுலகில்…
பண்பிது இல்லார்க்குப்
பாரெலாம் தோன்றும்
பகலிலும் இருளில் இருப்பதாய்…! 

குறும்பாவில்…

பகலிலும் பாரெலாம் இருளிலிருப்பதாய்ப்
பார்வைக்குத் தெரியும்,
பலருடன் கலந்து மகிழாதவனுக்கே…! 

மரபுக் கவிதையில்…

பாரில் பலருடன் பண்புடனே
  பழகி மகிழ்ந்திடல் பெருஞ்சிறப்பே,
நேரில் இதனை நினையாமல்
  நெருங்கிப் பிறருடன் பழகியேதான்
நேரிடும் மகிழ்வைப் பெறாதவர்க்கு,
     நண்பகல் நேர உலகமது
சூரிய ஒளியிலும் இருளெங்கும்
  சூழ்ந்தே யிருப்பதாய்த் தோன்றிடுமே…! 

லிமரைக்கூ…

பகலிலும் இருளாயிருக்கும் பார்க்க,
பண்பிலான் தவறினால்
பழகிமகிழ்ந்து பலரையும் சேர்க்க…! 

கிராமிய பாணியில்…

பழகுபழகு நல்லாப்பழகு
பண்போட பாத்துப்பழகு,
பலரோட சேந்துபழகு
பகயில்லாம சிரிச்சிப்பழகு… 

அப்புடிப் பழகாதவனுக்கு
பகல்வெளிச்சம் மறஞ்சிபோவும்,
பகலக்கூட இருட்டாத்தெரியும்
எல்லாமே இருளாப்போவும்… 

அதால
பழகுபழகு நல்லாப்பழகு
பண்போட பாத்துப்பழகு…! 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *