வாக்குரிமைக்காகப் போராடிய இளவரசி

4

— தேமொழி.

“நாட்டின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்கும் செல்வாக்கு எனக்கு இல்லாததால் முழுமனதுடன் வரி செலுத்த என்னால் இயலவில்லை. நான் அளிக்கும் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் எனக்கு வாய்ப்பில்லை. இது சற்றும் முறையன்று. இங்கிலாந்து என்று மகளிருக்கு வாக்குரிமை அளித்து, என்று எனது குடியுரிமைக்கு மதிப்பு கொடுக்கிறதோ அன்று நிச்சயமாக முழு விருப்பத்துடன் நான் நாட்டின் பராமரிப்பிற்காக வரி அளிப்பேன். நாட்டின் நலத்தில் எனக்கு சார்பாண்மை தகுதி இல்லாதபொழுது, நாட்டிற்கு வரி செலுத்தும் தகுதியை மட்டும் நான் பெற்றுள்ளதாக ஏன் கருதப்படவேண்டும்?”

நூறாண்டுகளுக்கு முன்னர் …  இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இங்கிலாந்தில் பெண்கள் வாக்குரிமை கேட்டு உரிமைக்குரல் எழுப்பிப் போராடிய காலகட்டத்தில், அரசுக்கு வரி கொடுக்க மறுத்ததற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியவர் இளவரசி சோஃபியா துலிப் சிங் (Princess Sophia Duleep Singh).

சர்பாண்மையற்ற வரிவிதித்தல் கொடுங்கோன்மை (taxation without representation is tyranny) என்று உரிமைக்குக் குரல் கொடுத்த இந்தப் பெண்ணியவாதி இளவரசி சோஃபியா துலிப் சிங்கின் பின்னணி இந்தியாவுடன் தொடர்புகொண்டது என்பது மேலும் வியப்பு தருவது. ஆம், இவர் சீக்கியப் பேரரசை உருவாக்கியவரும், பஞ்சாப் சிங்கம் என்ற சிறப்பு பெற்றவருமான மன்னர் ரஞ்சித் சிங்கின் (Maharaja Ranjit Singh, the Lion of Punjab)வம்சாவளி. சோஃபியா மன்னரின் மகன்வழிப் பேத்தி.

ஆகஸ்ட் 8, 1876 இல் இளவரசி சோஃபியா துலிப் சிங் (Princess Sophia Alexdrowna Duleep Singh), அரசர் துலிப் சிங் மற்றும் அரசி பம்பா (Maharaja Duleep Singh and Maharani Bamba Muller) ஆகியோரின் ஆறு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். தாய்வழிப் பாட்டியின் நினைவாக சோஃபியா என்று பெயர் சூட்டப்பட்டார். அப்பொழுது இங்கிலாந்து பேரரசி விக்டோரியா இவரது காட் மதர் (godmother) ஆகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சோஃபியாவும், அவரது சகோதரர்களான இளவரசர்கள் விக்டர், ஃபிரெடெரிக், ஆல்பெர்ட் எட்வர்ட் ஆகியோரும், சகோதரிகளான இளவரசிகள் பம்பா, கேதரின் ஆகியோரும், இங்கிலாந்தின் நார்ஃபோல்க் பகுதியில் எல்வெடன் (Elveden in Norfolk) மாளிகையில் அரசகுடும்பம் பெறும் அனைத்து மரியாதைகளுடனும், வசதிகளுடனும் இங்கிலாந்தின் பிரபுக்கள் போன்ற தகுதியில் கவலையற்ற வாழ்க்கையையே வாழ்ந்தனர். இளவரசி சோஃபியா துலிப் சிங்கும், அவரது தந்தை துலிப் சிங்கும் பேரரசி விக்டோரியாவின் அன்பிற்குரியவர்கள், அத்துடன் இளவரசி சோஃபியா துலிப் சிங் இங்கிலாந்துப் பேரரசியின் ‘காட் டாட்டர்’ (goddaughter)என்ற சிறப்பும் பெற்றவர் என்பது அவர்களது மேல்குடித்தகுதிகளை விளக்கும் அடையாளங்கள்.

அரசர் துலிப் சிங் இந்திய சீக்கியப் பேரரசின் இறுதி மன்னர்

சோஃபியாவின் தந்தை அரசர் துலிப் சிங் இந்தியாவின் சீக்கியப் பேரரசின் இறுதி மன்னர். சீக்கியப் பேரரசை உருவாக்கிய, “பஞ்சாப் சிங்கம்” என்று புகழப்பட்ட பேரரசர் ரஞ்சித் சிங்கின் எஞ்சிய கடைசி மரபு வழித் தோன்றல் அரசர் துலிப் சிங். பஞ்சாபின் சீக்கிய சிற்றரசுகளை ஒருங்கிணைத்து, ஆப்கானில் இருந்து படையெடுத்து வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த ஆப்கானியர்களை விரட்டியடிக்கும் வகையில் அதனை ஒரு பேரரசாக விரிவுபடுத்திச் சிறப்புற ஆட்சி செய்தவர் பேரரசர் ரஞ்சித் சிங். பேரரசர் ரஞ்சித் சிங் சீக்கிய குல மரபுகள் எனப் போற்றப்படும் நீதிக்கும் நேர்மைக்காகவும் போராடுவது, வலுவற்றவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பது போன்ற பண்புகளின் இருப்பிடமாக இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் மிகவும் சிறப்புற்று விளங்கியது.

மன்னர் இறந்த பிறகு இங்கிலாந்தின் கிழக்கிந்திய நிறுவனம் முன்னெடுத்த இரண்டு ஆங்கிலோ- சீக்கியப் போர்களின் முடிவில் சீக்கியப் பேரரசு ஆங்கில அரசின் பகுதியாக இணைத்துக் கொள்ளப்பட்டது. அந்த ஆவணத்தில் கையெழுத்திட்ட மன்னர் துலிப் சிங்கிற்கு அப்பொழுது வயது பதினொன்று. துலிப் சிங்கிற்கு ஆதரவாகப் புரட்சிகள் தோன்றி, சீக்கியப் பேரரசு மீண்டும் துலிப் சிங்கினால் தழைத்து விடாது இருக்கத் திட்டமிட்ட ஆங்கில அரசு அவரை இங்கிலாந்திற்கு நாடுகடத்தியது. அவரது தோற்றத்தால் கவரப்பட்ட இங்கிலாந்து பேரரசியின் அன்பைப் பெற்ற துலிப் சிங்கிற்கு அரசு மானியமும் அரச விருந்தினர் தகுதியில் தக்க மரியாதைகளும் கிடைத்தன.

காலப்போக்கில் இங்கிலாந்து அரசினால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த துலிப் சிங், தனது உரிமையை நிலைநாட்ட மற்ற ஐரோப்பிய அரசுகளிடம் உதவியை எதிர்பார்த்தார். அவரது முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்தியாவிற்குத் திரும்ப அவர் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் இங்கிலாந்து அரசால் வழியில் தடை செய்யப்பட்டு, அவர் இங்கிலாந்திற்கே மீண்டும் திருப்பி அனுப்பப் பட்டார். இத்தோல்வியை ஏற்றுக் கொள்ள இயலாத அவர் தனது மாளிகை, குடும்பம், இங்கிலாந்து வாழ்க்கை என அனைத்தையுமே புறக்கணித்துவிட்டு ஃபிரான்ஸ் நாட்டில் தங்கிவிட்டார்.

அவரால் கைவிடப்பட்ட மனைவி இங்கிலாந்திற்குத் திரும்பிய பிறகு துயரம் தாளாமல் மதுவுக்கு அடிமையாகி தனது உடல் நலத்தை அழித்துக் கொள்ளத் துவங்கினார். சோஃபியாவிற்கு அவரது 11 ஆவது வயதில் டைஃபாய்ட் (typhoid) காய்ச்சல் வந்த பொழுது இளவரசியின் படுக்கை அருகே இரவும் முழுவதும் பணிவிடை செய்த அரசியாருக்கும் நோய் தொற்றி கோமாவில் விழுந்து இறந்தார். அரசகுல வாரிசுகளை துலிப் சிங்கின் ஊழியரும் அவரது மனைவியாரும் வளர்ப்புப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டனர்.

sophia (1)
இளவரசி சோஃபியா துலிப் சிங்

மனைவி இறந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மற்றொரு பெண்ணை மணம் முடித்து அவர் மூலம் மேலும் இரு பெண்களுக்குத் தந்தையான துலிப் சிங் பாரீசிலேயே வசித்தார். ஆனால், சோஃபியாவின் தாய் இறந்த சில ஆண்டுகளில், சோஃபியாவிற்கு 17 வயதாகும்பொழுது அரசர் துலிப் சிங் தனது 55 ஆவது வயதில், பாரிஸ் விடுதி ஒன்றில் உடல்நலக் குறைவால், துயரத்துடன், தனியே துணையின்றி இறந்தார். பெற்றோரை இழந்த பிறகு அவர்கள் வாழ்ந்த மாளிகையை விற்று கடனில் இருந்து மீண்ட சகோதர சகோதரிகள் மிச்சமிருந்த சொத்தை தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். பெற்றோரை இழந்த மூன்று சகோதரிகளையும் பேரரசி விக்டோரியா தனது பொறுப்பில் ஏற்று அவர்கள் வாழ லண்டனில் அரசகுடும்பத்தின் மாளிகைகளில் ஒன்றை வாடகையின்றி வழங்கி, தனது காட் டாட்டர் சோஃபியா வசதியுடன் வாழ அரச உதவித் தொகையும் அளித்தார்.

சகோதரிகளுடன் லண்டன் வாழ்க்கையில் இளவரசி சோஃபியா (கையில் விசிறியுடன் அமர்ந்திருப்பவர்)

பரபரப்பான லண்டன் நகர வாழ்வை மேற்கொண்டு, செல்வச் சிறப்புடன், அரசகுடும்ப மரியாதையுடன், இளமையும் அழகும் நிரம்பி, நாகரிக மங்கையாக இருந்த சோஃபியா புகழ் பெற்றவராகவும் இருந்தார். விதம் விதமாக உடையணிந்து, கேளிக்கை விழாக்களில் பொழுதைக் கழித்து, பத்திரிக்கைகளில் புகைப்படங்களுடன் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். மிதி வண்டி ஓட்டுவது, செல்ல வளர்ப்பு நாய்கள் வளர்த்து போட்டிகளில் பங்குபெறச் செய்து வெற்றி பெறுவது என்று வாழ்ந்த அவரது நடவடிக்கைகளில் பொதுமக்களும் ஆர்வம் காட்டினர், பத்திரிக்கைகளும் அவர்களது ஆர்வத்திற்குத் தீனி போடும் வண்ணம் சோஃபியா பற்றிய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன. இவ்வாறு உல்லாசமாக வாழ்ந்த இளவரசியின் வாழ்வும் அவ்வாறே தொடர்ந்திருக்கக் கூடும். ஆனால், அவர் தனது வாழ்வின் நோக்கம் வேறு என்று முடிவு செய்து, தனது வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளக் காரணம் அவர் இந்தியாவிற்குத் தனது சகோதரி பம்பாவுடன் மேற்கொண்ட பயணம். இப்பயணம் தந்த மாறுதல்களைத் தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார் சோஃபியா, அது இங்கிலாந்து நூலகத்தில் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது.

சோஃபியா
இளவரசி சோஃபியா துலிப் சிங்கின் நாட்குறிப்பு

தனது சகோதரி பம்பாவின் விருப்பத்திற்காக 1907 ஆண்டு முதன்முறையாகத் தனது முப்பதாவது வயதில் இந்தியாவிற்குப் பயணமானார் சோஃபியா. லாகூர், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களுக்கும், பஞ்சாபின் பல பகுதிகளிலும் பயணம் செய்த சகோதரிகளை மக்கள் ஆர்வமுடன் எதிர்கொண்டனர். தங்களது முன்னாள் பேரரசர் ரஞ்சித் சிங்கின் பேத்திகள் என்று அன்பு செலுத்தினர். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் அரசியல் குரு என்று போற்றப்படுபவருமான கோபாலகிருஷ்ண கோகலேவையும், மற்றொரு புரட்சி வீரர் லாலா லஜபதி ராயையும் சந்தித்தனர். தனது பாட்டனாரின் அருமையையும், தனது பாரம்பரியத்தின் பெருமையையும் உணரத் துவங்கினார் இளவரசி சோஃபியா. நன்முறையில் ஆண்ட ஒரு மன்னரின் மறைவிற்குப் பின்னர் ஆங்கில அரசின் தன்னலப்போக்கினால், பஞ்சாப் பகுதியில் விவசாயம் நலிவடைந்து மக்கள் ஏழ்மையில் இருப்பதையும், இங்கிலாந்து நகர வாழ்க்கையுடன் ஒப்பிட்ட பொழுது இங்கிலாந்தில் வசதியுடன் வாழ்வோருக்கும், இந்தியாவின் சுதந்திர வாழ்விற்காகப் போராடி இன்னலுறுவோருக்கும் உள்ள வேறுபாடு இளவரசியின் வாழ்வில் ஒரு மாறுதலை ஏற்படுத்தியது.

லாலா லஜபதிராய்
லாலா லஜபதிராய்

சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்த லாலா லஜபதிராயின் கூட்டத்தில் கலந்து கொண்ட சகோதரியரை கூட்டத்தினருக்கு ‘பஞ்சாப் சிங்கத்தின் பேத்திகளைப் பாருங்கள்’ என்று இளவரசிகளை அறிமுகப்படுத்தி, அவர்கள் ஆங்கிலேயரை எதிர்க்கவேண்டியத் தேவையை வலியுறுத்திய பொழுது கூட்டத்தினர் அவரது உரையால் ஈர்க்கப்பட்டது போல இளவரசியும் அவரது உரையால் ஈர்க்கப்பட்டார். மக்களின் நல்வாழ்விற்காகப் போராடிய தனது பரம்பரையின் சிறப்பை உணர்ந்தார். மக்களிடம் இளவரசிகள் பெற்ற வரவேற்பு ஆங்கில அரசை கலங்கச் செய்தது. எதற்காக துலிப் சிங்கை இளவயதிலேயே இந்தியத் தொடர்புகளைத் துண்டித்து, தாயையும் சந்திக்க அனுமதிக்காது, இங்கிலாந்திற்கு நாடுகடத்தி புரட்சி ஏற்படுவதைத் தவிர்த்தார்களோ, அது இப்பொழுது மன்னர் ரஞ்சித் சிங்கின் வாரிசுகளால் உருவாகிவிடும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்து அவர்கள் இளவரசிகள் இந்தியாவை விட்டு வெளியேறுவதை விரும்பினார்கள்.

இங்கிலாந்திற்குத் திரும்பினார் இளவரசி சோஃபியா. ஆனால், முன்னர் இருந்த உல்லாச வாழ்க்கையை வாழவிரும்பிய லண்டன் நகர நாகரிக மங்கையாக அல்ல, மாறாக, தனது வாழ்க்கைக்குப் பொருள் தேடிய ஒருவராக, ஒரு போராளியாக. தனது முப்பதாவது அகவையில், மூதாதையரின் போர்க்குணப் பெருமை உணர்ந்து, அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வலிமையற்றவர்களுக்கும் குரல் கொடுத்த பண்பினை உணர்ந்த இளவரசி சோஃபியா, இங்கிலாந்து திரும்பிய பொழுது அநீதியைத் தட்டிக் கேட்கும் ஒரு புரட்சிச் செல்வியாக உருமாறியிருந்தார்.

[ … தொடரும்]

படம் உதவி: விக்கிப்பீடியாவும், பி பி சியும்
____________________________________________________

“I am unable conscientiously to pay money to the state, as I am not allowed to exercise any control over its expenditure; neither am I allowed any voice in the choosing of Members of Parliament, whose salaries I have to help to pay. This is very unjust. When the women of England are enfranchised and the state acknowledges me as a citizen I shall, of course, pay my share willingly towards its upkeep. If I am not a fit person for the purpose of representation, why should I be a fit person for taxation?”

Ref:
Asian Suffragettes, British Protest at Home and Abroad
http://britishprotest.com/tag/feminist-history/
____________________________________________________

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “வாக்குரிமைக்காகப் போராடிய இளவரசி

  1. இது அமோகமான கட்டுரை. சேகரத்தில் வைக்க வேண்டியது. தேடிப்பிடித்து, அரிய செய்திகளை வழங்கிய தேமொழியை எத்தனை போற்றினாலும் போதாது. திலீப் சிங்க் கலோனிய அரசால் ஏமாற்றப்பட்டார். கோஹீனுரை இழந்தார்.

     தனது பாட்டனாரின் அருமையையும், தனது பாரம்பரியத்தின் பெருமையையும் உணரத் துவங்கினார் இளவரசி சோஃபியா.
    இது தான் நான் அறிந்த பஞ்சாப்.
    வாழ்த்துக்கள் தேமொழி.

  2. பாராட்டிற்கு மிக்க நன்றி இன்னம்பூரான் ஐயா.  இக்கட்டுரையின் தொடர்ச்சியும் இன்று வெளிவந்துள்ளது.

    https://www.vallamai.com/?p=67186

    அன்புடன்

    ….. தேமொழி 

  3. தேமொழி,

    ‘வல்லமை மிக்க பெண்ணிய வனிதையர்’ என்னும் உங்கள் எதிர்கால நூலில் சோஃபியா வரலாறு முதலிடம் பெற வேண்டும்.  

    வரலாறு மறந்து போன இத்தகைய வல்லமை மாதரைப் பற்றி எழுதியதற்குப் பாராட்டுகள்.

    சி. ஜெயபாரதன்  

  4. பாராட்டிற்கு மிக்க நன்றி ஜெயபாரதன் ஐயா.  நூல் வடிவம் பெறும்பொழுது உங்கள் அறிவுரையை கவனத்தில் கொள்கிறேன்.

    அன்புடன்
    ….. தேமொழி 

Leave a Reply to தேமொழி

Your email address will not be published. Required fields are marked *