அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 60

1

பாரதி பிறந்த இல்ல அருங்காட்சியகம், எட்டயபுரம் (2), தமிழ்நாடு

முனைவர்.சுபாஷிணி

பாரதி நினைவு இல்லத்தின் பக்கத்து வீட்டில் தான் நான் இந்தப் பயணத்தின் போது தங்கியிருந்தேன் என்று முதல் பதிவில் குறிப்பிட்டேன். அந்த வீட்டின் சொந்தக்காரர் திருமதி சாவித்ரி. இவரது கணவர் மறைந்த திரு.துரைராஜ் அவர்கள். இவர் எட்டயபுரம் ராஜா பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்தவர். தற்சமயம் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக அவர்களது மகள் தான் பொறுப்பேற்றிருக்கின்றார். திரு.துரைராஜ், அவர் வாழ்ந்த காலத்தில் எட்டயபுரத்தில் இருந்த பாரதி அன்பர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டவர். அம்மையார் சாவித்திரி, தமிழகம் நன்கறிந்த திரு.பாஸ்கர தொண்டைமான் அவர்களின் சகோதரி. இவர்களது சகோதரர் ரகுநாத தொண்டைமான் பாரதி நூலகம் ஒன்றினை ஏற்படுத்தினார். அந்த நூலகம் இந்த இல்லம் இருக்கும் வீடுகளின் வரிசையில் முதலாவதாக இருக்கின்றது. நான் சென்ற சமயத்தில் அந்த நூலகத்தின் பொறுப்பாளராக இருந்தவர் திரு.இளசை மணியன் அவர்கள்.

பாரதி பிறந்த இல்லமாக இருக்கும் இந்த வீடு எவ்வாறு ஒரு அருங்காட்சியகமாக மாறியது என்று சிலர் யோசிக்கலாம்.

ab1
நுழைவாயிலில்

பாரதியின் தாய் மாமன் திரு.சாம்பசிவம் ஐயர், பாரதி இங்கிருந்து சென்ற பிறகும் இந்த இல்லத்தில் இருந்திருக்கின்றார். பிறகு அவருடைய உறவினர்கள் சிலர், அவர்கள் கல்கத்தாவில் இருந்திருக்கின்றனர். அவர்கள் இந்த இல்லத்தைச் சில காலம் வேறொருவருக்கு வாடகைக்கு கொடுத்திருக்கின்றனர். பக்கத்து வீட்டில் குடியிருந்த திரு.துரைராஜ் ஆசிரியர், அதாவது அம்மையார் சாவித்திரியின் கணவர் சாம்பசிவ ஐயரின் உறவினர்களை அணுகி இந்த இல்லத்தை வாங்கியிருக்கின்றார். இந்த வீடு பாரதியின் பெயர் சொல்லும் ஒரு இடமாக அமையவேண்டும் என்பது திரு.துரைராஜ் அவர்களின் கனவாக இருந்திருக்கின்றது. ஆக, வாங்கியவுடன் அந்த இல்லத்தில் ஒரு நூலகத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். 1973ம் ஆண்டு வரை இந்த இல்லம் பலர் வந்து நூல்களை வாசித்து செல்லும் நூலகமாக இருந்துள்ளது. 1973ல் அன்றைய தமிழக முதல்வர்.திரு.கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இந்த இல்லத்தை பாரதி நினைவு இல்லமாக பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது இந்த இல்லத்தை அரசாங்கத்திடம், இக்கட்டிடத்திற்கானப் பணத்தை பெற்றுக் கொண்டு திரு.துரைராஜ் ஆசிரியர் குடும்பத்தினர் ஒப்படைத்து விட்டனர்.

ab2

இன்று இந்த இல்லம் தமிழக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டு தினமும் ஒரு சிலர் வந்து பார்த்துச் செல்லும் வகையில் ஒரு அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்படுகின்றது.

இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே பாரதியின் வரலாற்றுக் குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. பாரதி வெளியிட்ட நாளிதழ்கள், பாரதி சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், சில ஆவணங்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ab3
பாரதியின் கையெழுத்து

பாரதியாரின் இலக்கிய முயற்சிகளை விட தேசப்பற்று சார்ந்த, சமுதாய சீர்திருத்தம் சார்ந்த, விடுதலை வேட்கை நிறைந்த சிந்தனைகள் மக்கள் மனதில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின.

பாரதியார் தான் பிறந்த எட்டயபுரத்தில் தொடக்கப்பள்ளியில் கற்று பின்னர் திருநெல்வேலியில் உள்ள இந்துக் கல்லூரியில் உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை பயின்றார். 1897 ஜூன்மாதம் பாரதிக்கும் செல்லம்மாளுக்கும் கடையம் என்ற ஊரில் திருமணம் நடைபெற்றது. 1898ல் பாரதியின் தந்தை இறந்த போது அவருக்கு வயது 15 தான். அதன் பின்னர் காசிக்குச் சென்று அங்கு சில காலம் இருக்கும் சூழல் அவருக்கு ஏற்பட்டது அங்கே அலாகாபாத் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். டெல்லிக்கு அப்போது ஒரு தர்பாரில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எட்டயபுரம் ஜமீந்தார் பாரதியை மீண்டும் எட்டயபுரத்திற்கே அழைத்து வந்தார். ஆக 1901 முதல் 1904 வரை மீண்டும் எட்டயபுரத்தில் பாரதி வசிக்கும் சூழல் உருவானது. 1904ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதே ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சுதேசமித்திரன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் பணி அவருக்கு அமைந்தது.

ab5
அடுத்த இரண்டாண்டுகளில் பாரதியின் எழுத்துப் பணி மேலும் விரிவடந்தது. 1906 ஆண்டில் இந்தியா வார இதழின் பொறுப்பாசிரியராக இருந்து செயல்படத்தொடங்கினார். 1908 ம் ஆண்டில் இந்தியா பத்திரிக்கைக்கு தடை வழங்கியது அப்போதைய ஆங்கிலேய காலணித்துவ அரசு. அதே ஆண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரியிலிருந்து இந்தியா பத்திரிக்கையை வெளிக்கொணர்ந்தார். 1909ம் ஆண்டில் தொடர்ச்சியாக புதுவையில் இருந்த வாரே விஜயா, கர்மயோகி ஆகிய இதழ்களை வெளியிட்டார். 1910ம் ஆண்டு மார்ச் மாதம் புதுவையிலும் இந்தியா இதழுக்கு தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. இப்படி இவரது பத்திரிக்கைப் பணி என்பது தொடர்ச்சியாக மேடு பள்ளங்களைச் சந்தித்தவாறே நிகழ்ந்தது.

1920ம் ஆண்டில் மீண்டும் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் இவருக்கு தொடர்பு உண்டானது . மீண்டும் அதன் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் அடுத்த ஆண்டு திருவல்லிக்கேணி கோயில் யானை தாக்கியதில் உடல் நிலை தளர்ந்து போக அதே ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவில் 12ம் தேதி அதிகாலையில் மறைந்தார். அப்போது பாரதிக்கு வயது 39 மட்டுமே.

ab4

இவ்வளவு குறுகிய காலங்கள் மட்டுமே வாழ்ந்தாழும் பாரதி விட்டுச் சென்ற தாக்கம் என்பது தமிழ் உலகில் மாறாத இடம் பிடிப்பதாய் அமைந்திருக்கின்றது.

ஏட்டில் பாரதியைப் பற்றி படிக்கும் போது ஏற்படும் உணர்வு என்பது ஒரு வகை. பாரதி பிறந்த இடத்திற்கு வந்து பார்த்து அங்கே சில நிமிடங்களைச் செலவிடும் போது பாரதியுடன் இணைந்து பயணிக்கும் உணர்வு மேலிடுவதைத் தவிர்க்க முடியாது.

இந்த அருங்காட்சியகம் வார நாட்களில் திறந்திருக்கின்றது. எட்டயபுரம் வருபவர்கள் இங்கே வந்து பார்த்து செல்லும் போது அதே வரிசையில் இருக்கும் ரகுநாதன் நூலகம் – பாரதி ஆய்வு மையத்தையும் தவறாமல் பார்த்துச் செல்லுங்கள். இங்கே பாரதி தொடர்பான பல சேகரிப்புக்கள் உள்ளன. இவை ஏனைய பல தொடர் ஆய்வுகலுக்கு நிச்சயம் உதவக் கூடியவை.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 60

  1. திருமதி சுபாஷினி,
    நீங்கள் கொடுத்துவைத்தவர்.

    நீங்கள் கூருவதுபோல், பரதியின் வீட்டில் நுழைந்ததும், கிடைத்த பேரானந்தத்தை வார்த்தைகளால் அளவிடமுடியாது. 2014ல் அந்த புனித மண்ணை மிதிக்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. அந்த வீட்டுக் குள்ளிருந்து வெளிவர மனமில்லை. பக்கத்து வீட்டு வாசலில் மூன்று பெண்கள் அமர்ந்திருந்தனர். ஆனால் அவர்களுடன் பேச்சுக்கொடுக்கத் தைரியமில்லை.என் கைத்தொலைபேசி செய்த சதியால் படம் கூட எடிக்க முடியவில்லை.

    எதிரிலிருந்த வேப்பமரக்காற்று இன்றும் என்னை வருடுகிறது.

    மிகவிளக்கமாக எழுதியிருக்கிறீர்கள்.
    நன்றி
    பார்வதி

Leave a Reply to parvathy

Your email address will not be published. Required fields are marked *