செண்பக ஜெகதீசன்

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.   (திருக்குறள் -888: உட்பகை)

புதுக் கவிதையில்…

அரமது அறுக்க அறுக்க,
தேய்ந்து
வலுவிழக்கும் இரும்பு… 

இதுபோல் இன்னலுறும்
உட்பகையால்
வலுவிழந்து குடியும்…!

குறும்பாவில்…

அரமறுக்கத் தேய்ந்திடும் இரும்பாய்,
உட்பகையால் உறவறுந்து இன்னலுறும்
உயர் குடியே…!

மரபுக் கவிதையில்…

அறுத்திடும் அரமதால் தேய்த்தாலே
  -ஆற்றல் மிக்க இரும்பதுவும்
புறமும் அகமும் வலுவிழந்து
   -பயனிலாப் பொருளாய் ஆவதுபோல்,
உறவா யிருக்கும் குடியதிலே
   -உட்பகை விடமது புகுந்திட்டால்,
பறந்திடும் குடும்பப் பெருமையெலாம்
 -பாழாய்ப் போகும் குடியுறவே…!

லிமரைக்கூ…

இரும்புகெடும் அரத்தால் அறுத்தால்,
உயர்குடியும் கெட்டுவிடும்
உட்பகையால் அவரை வெறுத்தால்…!

கிராமிய பாணியில்…

வேண்டாம்வேண்டாம் பகவேண்டாம்,
ஒருநாளும்வேண்டாம் உட்பகவேண்டாம்… 

இரும்ப அறுக்கும் அரத்தால
எப்பவும் அறுத்தா இரும்பயே,
இல்லாமப்போவும் இரும்புந்தான்… 

இதுபோல
ஒறவாயிருக்கக் குடியிலத்தான்
உட்பகவந்து புகுந்தாலே
ஒறவெல்லாஞ் செதஞ்சிபோவுமே
குடியெல்லாங் கெட்டுப்போவுமே… 

வேண்டாம்வேண்டாம் பகவேண்டாம்,
ஒருநாளும்வேண்டாம் உட்பகவேண்டாம்…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *