–நாகேஸ்வரி அண்ணாமலை.

கியூபாவைப் பற்றி அமெரிக்காவில் தெரிந்துகொண்ட நாள் முதலே கியூபாவிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் என்னுள் தோன்றத் தொடங்கியது. என்னுடைய இந்த ஆசையை ஒரு அமெரிக்க நண்பரிடம் கூறியபோது ‘கியூபாவில் ஒரு கொடுங்கோலன் அல்லவா ஆட்சி செய்கிறார்? அங்கு போய் என்ன பார்க்கப் போகிறீர்கள்?’ என்றார். அமெரிக்க மக்கள் பலர் இப்படித்தான் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்க ஜனநாயகமும் அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதாரமும்தான் உலகிலேயே சிறந்தவை என்று பல அமெரிக்கர்கள் எண்ணுகிறார்கள். இவர்களுக்கு கியூபா பற்றியோ கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் வர்த்தகத் தடைகள் பற்றியோ சரியாகத் தெரியாது. கியூபாவில் ஒரு சர்வாதிகாரி அரசியல் நடத்துகிறார் என்பது மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். அவர் சர்வாதிகாரி என்றே வைத்துக்கொண்டாலும் அவர் எப்படிப்பட்ட சர்வாதிகாரி, அவருடைய அரசியல் பின்னணி என்ன, மற்ற சர்வாதிகாரிகளைப்போல் தனக்காக அவர் சொத்து சேர்த்திருக்கிறாரா என்பது பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. அமெரிக்கர்கள் இப்படியிருந்தாலும் எங்களைப் போன்றவர்களுக்கு கியூபா மீது ஒரு தனி அக்கறை உண்டு.

சென்ற வருடம் வரை அமெரிக்காவிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் சென்று அங்கிருந்துதான் கியூபாவிற்குச் செல்ல வேண்டும். இன்னொரு நாட்டின் வழியாக கியூபா சென்று திரும்பும் அமெரிக்கர்களுக்கு அபராதம் உண்டு. கியூபாவிலிருந்து திரும்பி வந்ததும் ‘அங்கு எதற்குப் போனீர்கள்?’ என்று அமெரிக்கக் குடிபுகல் பகுதியில் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் பதில் கூறாவிட்டால் அபராதம் விதிக்கலாம். அமெரிக்காவிலிருந்து கியூபாவிற்கு சென்ற ஒரு வருடம் வரை நேரடியான விமானப் போக்குவரத்தோ கப்பல் போக்குவரத்தோ இல்லை. கியூபாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியிருக்கும் கியூபா மக்கள் (காஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பிறகு கியூபாவில் இருக்கப் பிடிக்காமல் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர்கள்) கியூபாவில் இருக்கும் தங்கள் உறவினர்களுக்குப் பணம் அனுப்பத் தடை இருந்தது. ஒபாமா இந்தத் தடையை நீக்கினார். ஓராண்டிற்கு முன்னால் குழுக்களாக சுற்றிப் பார்க்கும் பயணத்தை அமெரிக்கர்கள் மேற்கொள்ளலாம் (as tourists by chartered flights) என்ற ஒரு விதியை ஒபாமா அமலாக்கினார். அதுவரை இன்னொரு நாட்டிற்குச் சென்று அங்கிருந்துதான் கியூபாவிற்குப் போக முடியும் என்ற நிலை இருந்தது. புதிய விதி அமலுக்கு வந்த பிறகு சில அமெரிக்கர்கள் கியூபா சென்று வந்தனர். இப்போது வரும் ஜூலை மாதத்திலிருந்து அமெரிக்காவிலிருந்து கியூபாவிற்கு நேரடியான விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள்.

நாங்கள் பல மாதங்களாக கியூபா போகும் திட்டத்தை வைத்திருந்ததால் இதற்கு மேல் காத்திருக்காமல் சார்ட்டர்ட் விமானம் மூலம் கியூபா போகத் திட்டமிட்டோம். மேலும் அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையே உறவு மேம்பட்டு அதிக அமெரிக்கர்கள் அங்கு போக நேரிட்டால் அதிகக் கூட்டம் சேர்ந்துவிடும். அமெரிக்கக் கம்பெனிகள் அங்கு தோன்ற ஆரம்பித்தால் கியூபாவின் தோற்றமே, சமூகமே மாறிவிடலாம் என்பதற்காகவும் கியூபா கியூபாவாக இருக்கும்போதே அந்த நாட்டைப் பார்த்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டோம்.

குழுக்களாக கியூபாவை சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யும் கம்பெனிகள் இருக்கின்றன. அவர்கள் ஒரு பயணிக்கு ஐயாயிரம் டாலர்வரை வசூலிக்கிறார்கள். மேலும் அவர்களோடு சென்றால் அவர்கள் அழைத்துச் செல்லும் இடங்களுக்குத்தான் போக முடியும்; அவர்கள் தங்கவைக்கும் இடங்களில்தான் தங்க முடியும். நாங்களாகச் சென்றால் இந்தக் கெடுபிடி இருக்காது என்பதால் சார்ட்டர்ட் விமானத்தில் சென்றாலும் குழுக்களோடு போகும் பயணத்தில் சேர்ந்து போகவில்லை.

எங்கள் மகள் மெல்லி சார்ட்டர்ட் விமானத்தில் பயணச் சீட்டு வாங்குவதிலிருந்து கியூபாவில் தங்குவதற்கு இடம் பிடிப்பதுவரை எல்லா ஏற்பாடுகளையும் செய்தாள். ஒபாமா கியூபா பற்றிப் பேச ஆரம்பித்ததும் ஒரு சில அமெரிக்கர்களுக்காவது அந்த நாட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. நாங்கள் கியூபா போவதாகக் கூறியதும் பலர் ஆச்சரியப்பட்டனர். நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றனர். திரும்பி வந்ததும் கியூபா பற்றி உரை நிகழ்த்துமாறு சிலர் என் கணவரிடம் கூறினர்.

எங்கள் மகள்கள் குடும்பங்களும் நாங்களும் அவரவர் ஊர்களிலிருந்து ஃப்ளோரிடா மாநில டாம்ப்பாவில் கூடினோம். கியூபாவிற்குச் செல்லும் சார்ட்டர்ட் விமானம் மதியம் 12 மணிக்குத்தான் டாம்ப்பாவை விட்டுக் கிளம்பினாலும் எட்டு மணிக்கே விமானநிலையத்திற்கு வந்துவிடுமாறு கூறியிருந்தனர். அதனால் முந்தின நாளே டாம்ப்பாவிற்குச் செல்ல வேண்டியதாயிற்று. சார்ட்டர்ட் விமானத்தைச் சேர்ந்த ஒரு பெண் எல்லோருடைய பாஸ்போர்ட், விசா (சார்ட்டர்ட் விமான சேவையை நடத்துபவர்களே எல்லாப் பயணிகளுக்கும் விசா பெற்றுத் தந்தனர்.) முதலிய ஆவணங்களைச் சரிபார்த்து விமானத்தில் ஏறுவதற்குத் தயாராக இருக்கும்படி கூறினார். நாங்கள் இன்னும் அமெரிக்காவில்தான் இருந்தோம். எல்லாம் ஒழுங்காக நடந்தது. பயணிகளில் சிலர் கியூபா மக்களின் உறவினர்கள்.

சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு விமானம் கிளம்பியது. பயண நேரம் ஒன்றரை மணி. விமானம் ஹவானாவை நெருங்கும்போது கடைசியாக கியூபாவிற்கு வந்துவிட்டோம் என்று மகிழ்ச்சியாக இருந்தது. விமானம் தரையைத் தொட்டதும் சிலர் சந்தோஷத்தில் கைதட்டி ஆரவாரித்தனர்.

விமானத்திலிருந்து இறங்குவதற்கு விமானத்தை விமான நிலையத்தோடு இணைக்கும் (ஏரோஃப்ளோட்) வசதி இல்லை. எல்லோரும் விமானத்தை விட்டு இறங்கி விமான நிலையத்தை நோக்கி நடந்தோம். விமான நிலையம் மிகவும் சிறியதாகவும் எளிமையானதாகவும் இருந்தது. ஒரு நாட்டின் தலைநகரின் விமான நிலையம் இத்தனை சிறியதாகவும் எளிமையானதாகவும் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் எழாமல் இல்லை. அத்தனை பயணிகள் இந்த விமான நிலையத்திற்கு வந்து போகாததால் குடிபுகல் பகுதியில் அவ்வளவு கூட்டம் இல்லை. கழிப்பிட அறைகள் இருந்தாலும் சுத்தமாக இல்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒவ்வொருவராகத்தான் குடிபுகல் பகுதியில் இருக்கும் அதிகாரியிடம் போக வேண்டும் என்றார்கள். பாஸ்போர்ட்டையும் விசாவையும் சரிபார்த்த அதிகாரி அங்கு வந்ததற்குரிய முத்திரையை பாஸ்போர்ட்டில் குத்தலாமா என்று எங்களிடம் கேட்டுக்கொண்டு நாங்கள் சரி என்றதும் குத்திக் கொடுத்தார். அமெரிக்காவின் தண்டனைக்குத் தப்ப நினைப்பவர்கள் முத்திரையைக் குத்த வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் விமானத்தைப் பார்த்து கியூபா மக்கள் மிகுந்த வியப்புக்குள்ளாவார்கள் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நக்கலாக ஒரு கட்டுரையில் கூறியிருந்தது. ஏனெனில் இவ்வளவு பெரிய விமானத்தை அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். அது ஒன்றும் உண்மைக்குப் புறம்பான வார்த்தை இல்லையோ என்று தோன்றுகிறது. அத்தனை சிறிய விமான நிலையத்தில் அத்தனை பெரிய விமானம் வந்து இறங்குவது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான்.

Scenes_of_Cuba_(K5_02551)_(5978552313)

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததுமே நேரடியாகச் சாலைகளில்தான் வந்து சேர்கிறோம். இடையில் பெரிய இடைவெளி எதுவும் இல்லை. அமெரிக்க விமான நிலையங்களைப் பார்த்திருந்த எங்களுக்கு ஹவானா விமான நிலையம் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. டாக்சி பிடித்து நாங்கள் தங்கப் போகும் இடத்திற்குப் போவதற்கு முன் எங்களிடம் இருந்த டாலர் பணத்தை கியூபா கரன்சியாக மாற்ற வேண்டியிருந்தது. கியூபா நாணயத்திற்குப் பெயர் பிஸோ (peso). இது உள்நாட்டில் புழங்கும் நாணயச் செலாவணி. கியூபாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக இன்னொரு நாணயம் இருக்கிறது. இதற்குப் பெயர் திரும்ப மாற்றக் கூடிய பிஸோ; ஆங்கிலத்தில் குக் (CUC – Cuban convertible currency) என்கிறார்கள். இதனுடைய சின்னம் CUC$. பயணிகள் நூறு டாலர் கொடுத்தால் நூறு குக்குகள்தான் கொடுக்கிறார்கள். நாங்கள் ரூபாயில் கொடுத்ததாக வைத்துக்கொண்டால் நூறு ரூபாய்க்கு ஒன்றரை குக்குகள் கொடுத்திருப்பார்கள். ஏனென்றால், 65 ரூபாய்க்கு ஒரு டாலர்தானே. ஒரு குக் ஒரு டாலருக்குச் சமம். டாலரைக் கொடுத்து குக்குகள் வாங்குவதற்கு நிறைய நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் கரன்சியை மாற்றும் இடத்தில் ஒரே ஒருவர்தான் இருந்தார். அதனால் காத்திருந்த அத்தனை பேருக்கும் அவர் ஒருவர்தான் கரன்சி மாற்றும் வேலையைச் செய்ய வேண்டியதிருந்தது. கியூபாவில் எல்லா இடங்களிலும் இப்படித் தாமதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆட்கள் போதாமைதான். அரசிடம் எல்லா இடங்களிலும் நிறைய ஆட்களை நியமிப்பதற்குப் போதிய பணம் இல்லை.

வெளிநாட்டுப் பயணிகள் கியூபாவில் செய்யும் செலவுகளுக்கு குக்குகளில்தான் பணம் செலுத்த வேண்டும். இப்படிப் பயணிகளிடமிருந்து பெறும் பணத்தை கியூபா மக்கள் அவர்களுடைய வங்கிகளில் கொடுத்து அவர்களுடைய உள்ளூர் கரன்சியான பிஸோவாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு அமெரிக்க டாலருக்கு உலக நாணயமாற்றின் (foreign exchange) கணக்குப்படி 24 பிஸோக்கள். வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து குக்குகள் பெறும் கியூபா மக்களுக்கு ஒரு குக்கிற்கு 24 பிஸோக்கள் கிடைக்கும். இதில் வங்கி சில பிஸோக்களை கமிஷனாக எடுத்துக்கொள்ளும். வங்கி கமிஷன் எடுத்த பிறகும் அவர்களுக்கு ஒரு கணிசமான தொகை கிடைத்துவிடுகிறது. இப்படிப் பணம் அதிகம் கிடைப்பதால் வெளிநாட்டுப் பயணிகள் அதிகமாக வரும் இடங்களில் டாக்சி ஓட்டுநர்கள், ஆட்டோக்காரர்கள், சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் அதிகமாகக் கூடுகிறார்கள். ஆம், கியூபாவில் டாக்சிகளோடு நம் நாட்டில் இருப்பதுபோல் ஆட்டோ ரிக்‌ஷாக்களும் (நம் நாட்டு ஆட்டோ ரிக்‌ஷாக்களிருந்து உருவத்தில் சிறிது மாறுபட்டவை) மனிதர்கள் மிதித்து ஓட்டிச் செல்லும் சைக்கிள் ரிக்‌ஷாக்களும் இருக்கின்றன. போகும் தூரத்தைப் பொறுத்து இவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

எல்லா நாடுகளிலும் வெளிநாட்டுப் பயணிகளிடம் அந்நாட்டு டாக்சி ஓட்டுநர்கள், ஆட்டோக்காரர்கள் அதிகமாகவே வசூலிப்பார்கள். நாங்கள் வெளிநாட்டிற்குச் செல்லும்போது அங்கு வசிக்கும் நண்பர்களிடமோ மற்றவர்களிடமோ டாக்சி ஓட்டுநர்கள் துருவமாக எவ்வளவு கேட்பார்கள் என்று கேட்டுவைத்துக்கொள்வோம். அல்லது பயண வழிகாட்டிப் புத்தகத்திலிருந்து இம்மாதிரி விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். கியூபாவிலும் நாங்கள் தங்கவிருந்த இடத்திற்குப் போவதற்கு 40 குக்குகள் டாக்சி ஓட்டுநர் கேட்டார். இந்தத் தொகை அதிகம் என்று தோன்றினாலும் மொழி தெரியாத காரணத்தால் பேரம் பேச முடியவில்லை. கியூபாவில் ஒரு சிலரைத் தவிர யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. அமெரிக்காவோடு சண்டை என்பதால் அமெரிக்காவில் பேசப்படும் மொழியான ஆங்கிலத்தையும் அவர்கள் புறக்கணிப்பதுபோல் எனக்குத் தோன்றியது. ஆங்கிலம் சர்வதேச மொழி, அதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது கியூபா மக்களுக்குத்தான் நஷ்டம் என்பதை உணர்ந்திருப்பதுபோல் இப்போது பள்ளியில் அதைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். இதுவரை ஆங்கிலமே பள்ளிகளில் கற்பிக்கப்படவில்லை.

தொடரும்…

படம் உதவி: விக்கிபீடியா

https://commons.wikimedia.org/wiki/File:Scenes_of_Cuba_(K5_02551)_(5978552313).jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *