க. பாலசுப்பிரமணியன்

கேட்டது  எப்படி நினைவில் நிற்கும் ?
education11-1-1

 “இப்போது தான் உனக்கு சொல்லிக் கொடுத்தேன். அதற்குள்ளே நீ மறந்துட்டியா ?” என்று மாணவனைக் கேட்காத ஆசிரியர் இருக்க முடியாது.  ஆசான் சொல்லியதை கவனமாகக் கேட்டாலும் ஏன் மனதில் நிற்பதில்லை? அது ஏன் காற்றோடு கலந்துவிடுகிறது? இந்தக்காதிலே வாங்கி அந்தக் காது வழியாக ஏன் சொற்கள் பறந்து செல்கின்றன?

ஒருவர் பேசும்போது கவனமாகக் கேட்பதுபோல் நாம் பாவனை செய்தாலும் மனது முழுதாக அதில் ஈடுபாடு கொள்ளாதவரை அந்தச் சொற்களோ அதன் கருத்துகளோ மனதில் பதிவதில்லை. இதை “நிலையில்லாத நினைவு” (Volatile Memory ) என்று சொல்லுவார்கள். ஈடுபாடு, தேவை, பலன் ஆகியவை இல்லாதவரை இந்த நிலை இருக்க வாய்ப்பிருக்கின்றது. எப்போது சொல்லப்படுகின்ற சொற்களும் கருத்துகளும் ஆர்வத்தையோ, தேவையையோ அல்லது ஒரு உன்னதமான பலனையோ அளிக்கின்றதோ அப்போது இதே சொற்களும் கருத்துகளும் ஒரு “தற்காலிகமான நினைவாக ”  (Temporary Memory ) மாறுகின்றது. இதுவே உணர்வுப்பூர்வமாக அறியப்படும்பொழுது அல்லது செயல் மூலமாக அறியப்படும்பொழுதோ  நிரந்தர நினைவாக (permanent memory)  மாறுகின்றது.

அறிதல், புரிதல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபாடுள்ள வல்லுனர்களின் கருத்தின்படி  – ஒரு கருத்தோ அல்லது பாடமோ திரும்பத்திரும்ப படிக்கும்பொழுதும்   (Repetition) , மேலும் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பயிற்சி செய்யும்பொழுதும் (Spaced Repetition) அது நிரந்தரமான நினைவாக மாற வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னே பள்ளிகளில் ஆசிரியர்கள் கணக்கு வாய்ப்பாடுகளை மாணவர்களைக் கொண்டு தினசரி அனைவரும் சேர்ந்து கூட்டாக சொல்லும்படி ஆணையிடுவர். சில நாட்களில் அந்த வாய்ப்பாடுகள் மனதில் நிலைத்து நிரந்தர நினைவாக மாறிவிடும்,. அதேபோல் பாடல் பயிற்சிகளிலும் நாட்டியப் பயிற்சிகளிலும் ஈடுபடுபவர்கள் தினம் காலையிலோ அல்லது மாலையிலோ பயிற்சிகளை திரும்பத்திரும்ப செய்வார்கள். சில நாட்களில் அது நிரந்தர நினைவில் அமைந்து அந்தத் துறையில் வல்லமையை அளிக்கும். ஆகவே பள்ளிகளில் ஆசிரியர்களும் படிக்கும் நேரத்தில் மாணவர்களும் கற்றல் என்ற செயலில் ஈடுபடும்பொழுது ஒரு கருத்தை சில முறைகளாவது திரும்பிப் பார்த்தல் அவசியம். ஒரு முறை படித்ததும் அது நினைவில் வந்துவிடும் என்ற கருத்து பெரும்பாலும் தவறான பலன்களைத் தருகின்றது.

பல நேரங்களில் பள்ளிகளில் ஆசிரியர்கள் தாங்கள் சொல்லிக்கொடுக்கும்பொழுது மாணவர்கள் கேள்விகள் கேட்கக்கூடாது என்றும், தங்கள் ஒரு முனை கற்பித்தலை (uni -directional approach) தடங்கல் செய்யலாகாது என்றும் கருதுகின்றனர். இது மிகத்தவறான எண்ணம். கருத்துகளை காதில் வாங்கியவுடன் அந்த ஒலியலைகள் மூளையின் நரம்புகளை பல விதங்களில் தாக்குகின்றன. அறிதல் என்ற இந்தச் செயலை அலசிப் பார்க்கின்ற மூளை கருத்தை நிலை நிறுத்தும் செயலில் எழும் சந்தேகங்களுக்கு விடை தேடுகின்றது. ஆகவே மாணவர்களிடமிருந்து வரும் கேள்விகளை  வெறும் விளையாட்டான செயலாகக் கருதாமல் உண்மையிலேயே அறிதல், புரிதலுக்கான அடிப்படையாகக் கருதி அதற்கான பதில்களை அளித்தால் கற்றல் சிறப்பாக அமையும். பல நேரங்களில் இந்த கருத்துப் பரிமாற்றங்கள் சிந்தனையைத் தூண்டவும் திறன்களை வளர்க்கவும் ஆராய்ச்சிகளை வளப்படுத்தவும் மாணவர்களின் வளர்ச்சிக்கான படிகளாகவும் அமையும்.

(தொடரும்….)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *