செ. இரா.செல்வக்குமார்

இந்தக் கிழமையின் வல்லமையாளர் 17 வயது நிரம்பிய இளைஞை. அமெரிக்காவில், இல்லினாய் (Illinois) மாநிலத்தில், ஒரு பள்ளி மாணவி. ஐம்பது இலட்சம் உருபாய் ($75,000 அமெரிக்க வெள்ளி) பரிசை வென்றவர்

இந்தவார வல்லமையாளர் செல்வி. மீனா செகதீசன் (Meena Jagadeesan) என்னும் இளம் மாணவி. இவர் இன்ட்டெல் (Intel) நடத்தும் அறிவியல் திறனாளர் தேடல் போட்டியில் (Intel Science Talent Search) அடிப்படை ஆய்வுப் பிரிவில் இரண்டாவது பரிசை வென்றுள்ளார்.

Meena_Jagadeesan_Intel

செல்வி மீனா செகதீசன் 2016 ஆம் ஆண்டு இன்ட்டெல் அறிவியல் திறனாளர் தேடல் போட்டியில்[1]

2016 ஆண்டில் அமெரிக்காவில் 1750 மேனிலை மாணவர்கள் புகழ்பெற்ற இன்ட்டெல் நிறுவனத்தின் அறிவியல் திறனாளர் தேடல் போட்டியின் பங்குபெற்றனர். அவர்களில் 300 பேர் அரையிறுதி நிலையில் தேர்வானார்கள். இறுதியில் வெறும் 40 பேர் மட்டுமே தேர்வானார்கள். இந்த 40 பேரும் ஒரு மில்லியன் அமெரிக்க வெள்ளி மதிப்புடைய பரிசுகளை வெல்ல வாசிங்கடன் தி.சி-யில் போட்டிப்போட்டனர். தங்களின் புதிய ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் காட்சிப்படுத்தினர். அவற்றை மூன்று பிரிவுகளில் தேர்வு செய்தனர். அவையாவன அடிப்படை ஆய்வு (Basic Research), உலக நலம் (Global Good), புதுமையாக்கம் (Innovation). இந்த ஒவ்வொரு பிரிவிலும் முதற்பரிசாகப் பதக்கம் பெறுபவர் $150,000 அமெரிக்க வெள்ளியும், இரண்டாம் பரிசுபெறுபவர் $75,000 அமெரிக்க வெள்ளியும், மூன்றாம் பரிசு பெறுபவர் $35,000 அமெரிக்க வெள்ளியும் பெறுவர். மீதமுள்ள இறுதிநிலையாளர்கள் ஒவ்வொருவரும் $7,500 பெறுவர். இப்போட்டிகள் மிகவும் உயர்தரம் கொண்ட கடுமையான போட்டிகள். 75 ஆண்டுகள் கால வரலாற்றில் இம்முறை முதன்முறையாகப் பெண்கள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்றுள்ளனர் [2].

செல்வி மீனா செகதீசன் அமெரிக்காவில் இல்லினாய் மாநிலத்தில் நேப்பர்வில் என்னும் இடத்தில் வாழ்கின்றார். அங்குள்ள பிலிப்ஃசு எக்சீட்டர் அக்கதெமி (Phillips Exeter Academy) என்னும் கல்வி நிறுவனத்தில் படிக்கின்றார் [3]. இவர் இன்ட்டெல் போட்டியில் தன்னுடைய கணித ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும் ஆழமான கருத்தாகிய சார்பியச் சேர்மங்கள் கோவை பற்றிய ஆய்வில் கணக்கிடுவதில் புதிய தொடர்புகளைக் கண்டுபிடித்துள்ளார். இப்புதிய தொடர்புகள் வரைகோல வகைகளுக்கிடையே உள்ளவை. அவருடைய ஆய்வைச் சுட்டும்பொழுது கீழ்க்காணுமாறு இன்ட்டெல் நிறுவனத்தார் குறிக்கின்றனர்: ”Meena Jagadeesan investigated an object in algebraic combinatorics, or the mathematics of counting, to reveal a novel relationship between classes of graphs.”[2].

கணிதம், அறிவியல், பொறியியல் தொழினுட்பம் போன்ற துறைகளில் பெண்கள் அண்மையில் முன்னேறி வருகின்றார்கள். இன்னும் முன்னேறவேண்டும் என்னும் கருத்துள்ளது. 1901 ஆம் ஆண்டுமுதல் நோபல் பரிசை வென்றவர்களைக் கணக்கிட்டால் 825 ஆண்களும் 47 பெண்களும் வென்றுள்ளார்கள் [4] இவர்களில் இயற்பியல் வேதியியல், மருத்துவத்துக்குப் பரிசுபெற்ற பெண்கள் குறைவே. பொறியியலிலே 1980-களில் 5.8 % பேர்தான் அமெரிக்காவில் பெண்களாக இருந்தார்கள். இப்பொழுது முன்னேறி 18 முதல் 20 % பேர் பெண்களாக இருக்கின்றார்கள் [5]. அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டில் 99,173 பேர் பொறியியலிலே இளங்கலைப் பட்டம் பெற்றனர். இவர்களிலே 19.9 % பேர் பெண்கள். பொறியியல் துறையில் பேராசிரியர்களில் பெண்களாக இருப்பவர்கள் பலநிலைகளில் 10.2 % முதல் 22.8% உள்ளனர் [6]. கணிதத்திலும் பிற அறிவியல் துறைகளிலும் பெண்களின் விகிதம் பற்றிக்கீழ்க்காணும் வலைத்தளம் காட்டுகின்றது [7]. இப்படியான சூழலில் செல்வி மீனா செகதீசன் புகழ்பெற்ற இன்ட்டெல் போட்டியில் கணிதத்தில் ஆய்வு செய்து இரண்டாம் பரிசு பெற்றது மிகவும் போற்றுதலுக்குரியது.

இதுகாறும் முன்னாள் இன்ட்டெல் அறிவியல் திறனாளர் போட்டியில் வென்றவர்களில், 8 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர், இருவர் கணிதத்தின் மிக உயரிய பரிசாகிய பீல்டுசு பதக்கம் (Fields Medal) பெற்றுள்ளனர், ஐந்துபேர் அமெரிக்காவின் மிக உயரிய தேசிய அறிவியற்பதக்கம் (National Medal of Science) பெற்றுள்ளனர், 12 பேர். மெக்கார்தர் சிறப்பாளர் பெருமைகளையும் (MacArthur Fellowships) பெற்றுள்ளனர், 30 பேர் தேசிய அறிவியல் அக்காதெமி உறுப்பினராகவும், ஐவர் தேசிய பொறியியல் அக்காதெமியின் உறுப்பினராகவும் உயர்ந்திருக்கின்றனர் [8].

இவார வல்லமையாளரான செல்வி மீனா செகதீசன் அவர்களும் வருங்காலத்தில் இன்னும் பல பெருமைகளைப் பெறுவார் என நம்ப இடமிருக்கின்றது.

இன்ட்டெல் பரிசு பெற்றவர்கள் அனைவரைப்பற்றியும் வலையிடம் [2] இல் காணலாம். அடிப்படை ஆய்வில் முதல்பரிசு பெற்ற அமொல் பஞ்சாபி (Amol Punjabi), மூன்றாம் பரிசு பெற்ற குனால் சுரோஃபு (Kunal Shroff), உலக நலப்பிரிவில் முதல்பரிசுபெற்ற பெய்கி பிரௌன் (Paige Brown), இரண்டாம் பரிசு பெற்ற மைக்கேல் இழ்சாங்கு (Michael Zhang), மூன்றாம் பரிசுபெற்ற நேத்தன் சார்லசு மார்சல் (Nathan Charles Marshall), புதுமையாக்கம் பிரிவில் முதல்பரிசு பெற்ற மாயா வர்மா (Maya Varma), இரண்டாம் பரிசுபெற்ற மிலிந்து சகோட்டா (Milind Jagota), மூன்றாவது பரிசுபெற்ற காவியா இரவிச்சந்திரன் (Kavya Ravichandran) ஆகியோர் அனைவரும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

செல்வி மீனா செகதீசன் அவர்களை இந்தவார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

அடிக்குறிப்புகள்:
[1] இன்ட்டெல் அறிவியல் திறனாளர் தேடல் போட்டி 2016 இல் வெற்றியாளர்கள் அறிவிப்புத்தளத்தில் உள்ள படம். http://www.intel.com/content/www/us/en/education/competitions/science-talent-search/winners.html
[2] இன்ட்டெல் போட்டித்தளம், http://www.intel.com/content/www/us/en/education/competitions/science-talent-search/winners.html (”Of note, this year for the first time in the event’s 75-year history, female finalists outnumbered male finalists by a small margin (21 girls to 19 guys).”)
[3] https://www.exeter.edu/news_and_events/news_events_18235.aspx
[4] http://www.telegraph.co.uk/news/worldnews/11922707/Nobel-Prize-winners-How-many-women-have-won-awards.html
[5] https://www.asme.org/career-education/articles/undergraduate-students/engineering-still-needs-more-women
[6] http://www.asee.org/papers-and-publications/publications/14_11-47.pdf
[7] https://www.maa.org/external_archive/columns/launchings/launchings_09_09.html
[8] https://en.wikipedia.org/wiki/Intel_Science_Talent_Search

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. நம்பிக்கையூட்டும் இளைய தலைமுறை செல்வி மீனா ஜெகதீசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.  அவரை அறிமுகப்படுத்திய பேராசிரியர் செல்வா அவர்களுக்குப் பாராட்டுகள். மிக்க நன்றி; பல புள்ளிவிவரங்களைத்  தேடித் தொகுப்பதில் பெரும் முயற்சி செய்துள்ளது தெரிகிறது. 

    அன்புடன்
    ….. தேமொழி 

  2. சிறப்பான தெரிவு. கணிதத்தில் தனி முத்திரை பதித்து வரும் வல்லமையாளர் மீனா ஜெகதீசன் அவர்களுக்குப் பாராட்டுகள். மேன்மேலும், உலகை உயர்த்தும் புத்தாக்கங்கள் பிறக்கட்டும்.

Leave a Reply to அண்ணாகண்ணன்

Your email address will not be published. Required fields are marked *