வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 6

2

என்.கணேசன்

 ஒரு பலம் உங்களை உயர்த்தி விடலாம்!

 
ஒரு பலவீனம் ஒருவரை அழித்து விடலாம் என்பதைப் போலவே ஒரு பலம் ஒருவரை மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியும் விடலாம். அப்படி உயர்த்தப்பட்ட மனிதரின் பலத்தை மட்டுமே உலகம் பார்த்து சிலாகிக்கிறதே ஒழிய அவருடைய குறைபாடுகளை உலகம் கண்டு கொள்வதில்லை.
 
விஸ்வநாதன் ஆனந்திற்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா என்றோ நன்றாகப் பாடத் தெரியுமா என்றோ உலகம் கவலைப்பட்டதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி எப்படி சமைப்பார் என்பதோ அவருக்கு வரலாறு எந்த அளவுக்குத் தெரியும் என்பதோ எவருக்கும் தேவையில்லாத விவரங்களாக இருக்கின்றன. ஒரு துறையில் ஒருவர் முத்திரை பதித்த பின் அந்த நபரின் மற்ற பலவீனங்கள் அந்தப் பலத்தையே தகர்த்து விடுவதாக இல்லாத வரையில் அலட்சியப் படுத்தத் தக்கவையாகவே இருந்து விடுகின்றன. 

எனவே ஒருவனுக்குப் பல பலங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பலவீனம் அவனை அழித்து விடலாம் என்பது போலவே, பல பலவீனங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பலம் அவனை சிறப்பாக உயர்த்தியும் விடலாம் என்பதும் உண்மை. ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டுமல்ல ஒரு அரசனுக்கே இது பொருந்தும் உண்மை என்பதை ஒரு வரலாற்று உதாரணம் மூலமாகவே விளக்கலாம்.

சத்ரபதி சிவாஜியின் பேரன் ஷாஹூஜி தன் ஏழாம் வயதிலிருந்து இருபத்தைந்தாம் வயது வரை முகலாயர்களின் பிடியில் இருந்தவர். சிவாஜியின் மூத்த மகன் சாம்பாஜியைக் கொன்ற முகலாயர்கள் அவர் மனைவியையும், மகன் ஷாஹூஜியையும் தங்கள் வசமே சிறைப்படுத்தி வைத்திருந்தனர். கிட்டத்தட்ட தன் விளையாட்டுப் பருவத்தையும், இளமைப் பருவத்தையும் எதிரிகளான முகலாயர்கள் வசத்தில் இருந்து தொலைத்து விட்ட ஷாஹூஜி பின் அவர்களால் விடுவிக்கப்பட்டு மராட்டிய மன்னராக ஆனார். அப்போதும் மராட்டிய மண்ணில் ஒரு பகுதி அவர் சித்தப்பா மனைவி தாராபாய் ஆட்சியில் இருந்தது. ஷாஹூஜியின் தாயையோ முகலாயர்கள் இன்னும் தங்கள் பிடியிலேயே வைத்திருந்தனர். ஷாஹுஜி தங்களுக்கு எதிராக நடந்து கொண்டால் அவருடைய தாயை அழித்து விடுவதாக பயமுறுத்தியும் வைத்திருந்தனர். 

இப்படி பல்வேறு சிக்கல்களில் ஆட்சியில் அமர்ந்த ஷாஹுஜி பெரிய போர்வீரர் அல்ல. முகலாயர் பிடியிலேயே இளமையைக் கழிக்க வேண்டி இருந்ததால் ஒரு இளவரசனாக வளராததால் போர்வீரனாக அவர் பயிற்சிகளால் உருவாக்கப்படவில்லை. ஒரு அரசருக்குத் தேவையான வீரமோ, போர்த்திறமையோ இல்லாத ஷாஹூஜியிற்கு ஒரே ஒரு திறமை இருந்தது. ஒரு மனிதரை எடை போடுவதில் அவர் வல்லவராக இருந்தார். எதிரிகளிடமே வளர்ந்ததால் எவனை எதில் நம்பலாம், எது வரை நம்பலாம், எதில் நம்பக்கூடாது என்கிறதெல்லாம் கணிக்கக் கூடிய திறமையை அவர் இயல்பாகவே பெற்றிருந்தார். அந்த ஒரு திறமை அவருடைய மற்றெல்லா பலவீனங்களையும் ஒரு பொருட்டல்லாதவையாக ஆக்கி விட்டது.
 
நம்பிக்கைக்குப் பாத்திரமான திறமையான மனிதர்களைத் தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பித்த அவர் சிறிது சிறிதாக தன் அரசைப் பலப்படுத்தினார். மராட்டியத்திலேயே தனக்கு எதிராக ஒரு பகுதியை ஆட்சிபுரிந்த தாராபாயை அப்புறப்படுத்தி ஒரே மராட்டிய அரசாக்கித் தானே சக்கரவர்த்தியானார். முகலாயர் பிடியிலிருந்த தாயைத் தன் பக்கம் வரவழைத்துக் கொண்டார். திறமைசாலிகளை சமூகத்தின் எல்லா பாகங்களில் இருந்து கண்டறிந்து அவர்களை ஆட்சிப் பொறுப்பில் முக்கிய இடம் கொடுத்து அதிகாரத்தையும் வழங்கி மாபெரும் மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கினார். அவர் காலத்தில் தான் மராட்டிய சாம்ராஜ்ஜியம் இந்தியாவில் மிகப்பெரிய விஸ்தீரணத்தைக் கண்டது. அவர் காலத்தில் கல்வி, சட்டம், சமூகநிலை போன்ற எல்லாத் துறைகளும் பெரிய சீர்திருத்தம் கண்டன. திறமையானவர்கள் பெரும் பொறுப்பும் அதிகாரமும் பெற்றனர். அதே சமயத்தில் அவர்கள் சக்கரவர்த்திக்கு கடைசி வரை விசுவாசமாக இருந்தனர்.

தன்னை விடப் பெரிய திறமைசாலிகளையும், பலசாலிகளையும் உதவியாக வைத்து அரசாண்டதுமல்லாமல் அவர்கள் தன்னிடம் மாறாத விசுவாசத்துடன் எப்போதும் இருக்கும்படி அவர்களைத் தன் இனிய குணத்தாலும், புத்திசாலித்தனத்தாலும் வைத்துக் கொண்டது தான் சத்ரபதி ஷாஹுவின் ஒரே பலம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். இப்படி ஒரு மிகப்பெரிய பலத்தை வைத்து ஒரு சாம்ராஜ்ஜியத்தையே நடத்த முடியும் போது ஒரு வாழ்க்கையை சிறப்பாக நடத்துவது தானா கஷ்டம்? யோசியுங்கள்.
 
உங்கள் குறைகளும், பலவீனங்களும் உங்கள் வாழ்க்கையையே சீரழிக்கும் அளவுக்குப் பெரிதாக இல்லாதவரை நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சிலவற்றில் நீங்கள் பூஜ்ஜியமாகக் கூட இருக்கலாம். உங்களைச் சுற்றியுள்ள பலரும் அவற்றில் பெரிய திறமையாளர்களாகக் கூட இருக்கலாம். யாராவது அதுபற்றிக் கேட்டால் சொல்ல தர்மசங்கடமாக இருக்கக் கூடும் என்றாலும் உங்கள் வாழ்க்கை அந்த ஒன்றிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுவதில்லை என்பதை உறுதியாக அறிந்திருங்கள். உங்கள் இயல்பிலேயே இல்லாத திறமை, எவ்வளவு முயன்றாலும் புளியங்கொம்பாக இருக்கின்ற திறமை என்றால் அது உங்களுக்கானதல்ல என்பதை உணர்ந்து ஏற்றுக் கொண்டு விடுங்கள். அதற்காக நீண்ட காலம் போராடி வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.
உங்கள் உண்மையான திறமைகளின் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். எது உங்களுக்கு மற்றவர்களை விட சுலபமாகவும் இயல்பாகவும் வருகிறதோ எதைச் செய்யும் போது உற்சாகமாகவும் திருப்தியாகவும் உணர்கிறீர்களோ அது உங்கள் உண்மையான பலம். அது ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது ஒன்றை விட அதிகமாகக் கூட இருக்கலாம். அவற்றில் ஏதோ ஒன்று உங்களை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டலாம்.

 

 
விஸ்வநாதன் ஆனந்தை செஸ் அடையாளம் காட்டியது போல, சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் அடையாளம் காட்டியது போல, ஏ.ஆர்.ரஹ்மானையும், இளையராஜாவையும் இசை அடையாளம் காட்டியது போல, சுஜாதாவை எழுத்து அடையாளம் காட்டியது போல, ராமானுஜத்தை கணிதம் அடையாளம் காட்டியது போல உங்களையும் ஒரு திறமை உலகத்திற்கு அடையாளம் காட்டலாம்.
 
அப்படி உலகத்திற்கு அடையாளம் காட்டா விட்டாலும் கூட ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ அந்த ஒரு திறமை உங்களுக்கு வழி காட்டலாம். கணக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் மிகத் திறமையான ஒரு ஆசிரியர் ப்ளஸ் டூ மாணவ மாணவியருக்கு சில மணி நேர டியூஷன் எடுப்பதன் மூலமாக வெற்றிகரமான ஒரு சாஃப்ட்வேர் இன்ஜீனியரை விட  அதிகமாக சம்பாதிப்பதை நான் பார்த்திருக்கிறேன். வித்தியாசமாகவும், கச்சிதமாகவும் தைக்கத் தெரிந்த ஒரு பெண்மணி பெண்களுக்கு ஜாக்கெட் தைத்துக் கொடுத்தே கைநிறைய சம்பாதிப்பதையும் பார்த்திருக்கிறேன். இதே போல எத்தனையோ தனித் திறமைகளால் வெற்றிகரமாக வாழும் மனிதர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
 
எனவே உங்களுக்கு என்னவெல்லாம் தெரியாது என்று உலகம் கேட்கப் போவதில்லை. அதைப் பற்றி அது கவலைப்படுவதுமில்லை. உங்களுக்கு என்ன தெரியும், எந்த அளவு தெரியும், அதில் கூடுதலான உங்கள் தனித்திறமை என்ன என்று தான் உலகம் பார்க்கிறது. அதை வைத்தே உலகம் உங்களை உபயோகப்படுத்துகிறது. எனவே எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறேன் என்று எல்லாவற்றையும் ஓரளவு தெரிந்து கொள்வதை விட உங்கள் உண்மையான திறமையைக் கண்டு பிடித்து அதை நன்றாக வளர்த்துக் கொள்ளுங்கள். அது தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் பலம். அப்படி ஒரு பலம் உங்களுக்கு உறுதியாகக் கிடைத்து விட்டால் உலகிற்கு நீங்கள் கண்டிப்பாகத் தேவைப்படுவீர்கள். அதற்கான விலையாக உங்களுக்கு வேண்டியதை இந்த உலகம் கண்டிப்பாக கொடுத்தே தீரும்.மேலும் படிப்போம்….

 

படங்களுக்கு நன்றி–
N.Ganeshan
http://enganeshan.blogspot.com/
http://n-ganeshan.blogspot.com/

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 6

  1. வாழ்ந்து படிக்கும் பாடங்கள் – கட்டுரை அருமை. ஒரு முறை
    கண்ணதாசனும் எம் எஸ் விஸ்வநாதனும் மாஸ்கோ
    சென்றுள்ளனர். அச் சமயம் எம் எஸ் வி கண்ணதாசனிடம்
    பல கேள்விகள் கேட்டுள்ளார். அந்தக் கேள்விகளை வைத்துப்
    பார்த்தால் எம் எஸ் வி க்கு பொது அறிவு (general knowledge)
    மிகவும் குறைவு என்று தெரியும். ஆனால் அங்கேயுள்ள ஒரு
    சங்கீத சங்கேத எழுத்துக்களைப் படித்து விட்டு அந்நாட்டு
    பாரம்பரிய சங்கீதத்தை அந்நாட்டு மேடையிலேயே வாசித்து
    பெரும் பாராட்டு பெற்றுள்ளார். அதற்கு கண்ணதாசன் சொன்னது
    “எம் எஸ் வி க்கு சங்கீதம் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும்!
    அதில் அவனுக்கு நிகர் அவனே”
    இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply to அண்ணாகண்ணன்

Your email address will not be published. Required fields are marked *