க. பாலசுப்பிரமணியன்

education

பேசும் திறன் (Speaking Skills)

கற்றலில் ஒரு முக்கிய அம்சம் – நமக்குத் தெரிந்ததை, மற்றவர்களுக்கு நாம் சொல்லவேண்டியவற்றை எவ்வாறு சொல்லவேண்டும்  என்பதே. பல நேரங்களில் நன்றாகப் படித்து பட்டம் வாங்கியவர்கள் கூட தங்களுக்குத் தெரிந்ததை வெளியே சரியாகச் சொல்ல முடியாமல் திணறுவதை நாம் பார்த்திருக்கின்றோம்.

“என்னுடைய நாக்கு நுனியிலே இருக்கு சார். எப்படி சொல்லறதுன்னு தான் தெரியல்லே” என்று விழி பிதுங்கி பரிதாபமாக இருக்கக் கூடியவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். பேசும் திறன் ஒரு அற்புதமான கலை. சிறு வயதிலிருந்தே பேசும் கலையை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தல் மிக்க அவசியம். பல நாடுகளில் சிறுவர்களுக்கு மழலைப் பருவத்திலிருந்தே இந்தக் கலையின் நுணுக்கங்களை சொல்லித் தருகின்றனர்.

“வார்த்தைகளை விட அது எவ்வாறு சொல்லப்படவேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுதல் மிக அவசியமானது”. வார்த்தைகளில் பணிவு, நேர்மை,  தன்னம்பிக்கை,தெளிவு, உண்மை மற்றும் தேவை ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல் அவசியம்.

உண்மையில் சொற்கள்  நுண்ணிய மின்னலைகள். அவைகள் கேட்பவருடைய மனநிலை மற்றும் உணர்வுகளை பாதிக்கின்றன. இதனால் தான் ” சொற்கள் ஒருவனை உருவாக்க முடியும் அல்லது அழிக்க முடியும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். வள்ளுவரோ இதன் சிறப்பை மிக அழகாக எடுத்துரைக்கின்றார்

“தீயினால் சுட்ட புண்ணாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.”

இந்த பேசும் கலையில் பலவித திறன்கள் இருக்கின்றன. இவை தேவைகளுக்கு ஏற்ப இடம், பொருள், நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும். ஆகவே குழந்தைகளுக்கு கல்வி நேரத்தில் இந்த பல நிகழ்வுகளுக்கான பேசும் திறன்களின் நுணுக்கங்களை விவரித்து  அவற்றை வளர்த்தல் மிக அவசியம்.

Communication Skills என்று சொல்லப்படும் இந்தக் கலையில் பல பரிமாணங்கள் உள்ளன.

  1. சாதாரணமாக ஒருவருக்கு ஒரு கருத்தைத் தெரிவித்தல் (informing )
  2. ஒருவரோடு உரையாடுதல் (Conversing )
  3. ஒருவரோடு தர்க்கம் செய்தல் (arguing )
  4. ஒருவர்க்கு ஒரு பொருளை விளக்குதல் (Narrating)
  5. ஒருவரிடம்கருத்துக்கு ஒப்புதல் வாங்குதல் (advocacy)
  6. ஒருவரை சம்மதிக்க வைத்தல் (Convincing )
  7. ஒருவரிடம் எண்ணப் பரிமாற்றம் செய்தல் (negotiating)
  8. ஒரு கூட்டத்தில் கருத்து பரிமாறிக் கொள்ளுதல் (conferencing)
  9. ஒரு கருத்தை அல்லது பொருளை விற்றல் (Marketing)
  10. ஒரு மேடையில் பேசுதல் (Public Speaking )
  11. நேர் காணல் (Interviewing)
  12. மொழி பெயர்த்தல் (Translating )

இத்தனை வகையான பேசும் திறன்களும் நம் அனைவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு அளவுக்குத் தேவைப்படுகின்றது.

அது மட்டுமல்ல, வள்ளுவம் அழகாகச் சொல்வது போல

“சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.”

சொல்லுவதை பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே சொல்லவேண்டும். தற்காலத்தில் பல இடங்களில் இளைஞர்கள் மணிக்கணக்காக தங்கள் அலைபேசியில் உபயோகமற்ற பேச்சுக்களில் ஈடுபடும்போது எவ்வாறு அவர்கள் தங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

பல நாடுகளில் இருவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில் அமர்ந்திருக்கும் மூன்றாமவருக்கு இவர்கள் பேசுவது காதில் விழ வாய்ப்பில்லை. ஆனால் பல நேரங்களில் பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் சில பேர் பேசும்பொழுது அது அந்த வண்டியில் பயணம் செய்யும் அனைவர்க்கும் கேட்க வாய்ப்புள்ளதாக அமைகின்றது. இது அவர்களைத் தூற்றுவதற்காகக் கூறப்படவில்லை. இளைய சமுதாயம் எவ்வாறு உலக அனுபவங்களிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசையினால்தான்.

பேசும் திறனைப் பற்றி மேலும் அறிவோம்

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *