பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

image

 

திரு. வாசகன் பாலசூரியன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி…(60)

  1. @1 வெளிச்சம் கொடுத்து 
    நிழலை இழக்கும் 
    மெழுகைப் போல் …

    வறுமையை ஒழிக்க 
    அறிவைப் பெருக்கி 
    மரமாய் நிழல் தருவேன் 
    என் பெற்றோர்களுக்கு !

    —————————————–

    2@ கருப்பு வெள்ளை 
    புத்தகத்தில் 
    மெழுகுவர்த்தி வெளிச்சம் 
    எண்ணம் மாறி 
    வண்ணம் களையாத 
    அதே நிறக் கண்கள் 

    மௌனங்கள் மட்டும் 
    கடந்த காலத்தை நோக்கி 
    பயணிக்கிறது 

    அங்கும் 
    வானவில்லுக்கு பதிலாக 
    வறுமைதான் தெரிந்தது 

    திரும்பி வந்தேன் 
    திருப்பு முனையில் முடிந்தது 
    இளமையில் கல் !

    *******************************************
    3@ நான் 
    கரைவதற்குள் 
    கரைத்து குடித்துவிடு 
    புத்தகத்தோடு 
    வாழ்க்கை பாடத்தையும் 
    சேர்த்து !

    – ஹிஷாலி, சென்னை !

  2. ஒளி பெற…

    இருட்டு வயலில் 
    வெளிச்ச விதை விழுந்து
    முளைத்து
    வெளிவருகிறது ஒளியாக..

    அந்தக்
    குறைந்த வெளிச்சத்தில்
    குழந்தை படிக்கிறது,
    வறுமை இருளகல
    கல்வி ஒளிபெருக..

    ஒளி பெறட்டும்,
    வாழ்க்கை
    வளம் பெறட்டும்…!

    -செண்பக ஜெகதீசன்…

  3. 1. வல்லமை வரி 60
    திருநிறைப்பாள் அறிவொளியால்….

    மின்சாரம் இல்லாவிடில் என்ன….
    தன் சாரம் பெருக்குவாள்
    மின்னும் அறிவுச் சரமாவாள்..
    சின்ன ஒளியில் பெருநிலவாக.

    திருநீறு திருக்காப்பாக அறிவின்
    திருக்கண் விழ அவதானமாக
    திருட்டியம் பெருக்கும் செல்வி
    திரு நிறைப்பாள் அறிவொளியால்.

    (திருக்கண் – அறிவுப் பார்வை.  திருட்டியம் – ஞானம், அறிவு)

    வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    22-4-2016
    ——————————————-

    2.  வல்லமை வரி 60
    நல் விழி பெறட்டும்.

    வருங்கால ஐ.ஏ.எஸ்
    செருக்குடை அரசியல்வாதி
    ஒரு வாத்தியார்
    யாரறிவார் இப்:போது!
    பச்சைமண் சிற்றொளியில்!
    இச்சைப்படி மாற்றுமே சூழல்
    எடுப்பார் கைப்பிள்ளையாக!
    ஓளி கொடுக்கட்டும் நல் விழியை!

    வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    22-4-2016

  4. image

    அடர்த்தி 
     
    இயற்கையின்முன் 
    கை கட்ட வேண்டி இருந்தாலும்
    இருளை விசாரிக்கின்றன 
    ஒளியுமிழும் விழிகள்
    ஏற்றுக் கொண்ட சவாலுக்குச் 
    சாட்சியமான மெழுகுவர்த்திச் சுடரைச் 
    சற்றே 
    ஆவேசப்படுத்திக் காட்டுகிறது 
    மாற்றத்திற்குத் தயாராகும் 
    சிறுமியின் 
    வெப்பப் பெருமூச்சு –
    இப்போது அடர்த்தியான 
    இரவைக் கலைக்கின்றன 
    அதனினும் அடர்த்தியான 
    அவளது சிந்தனைகள்……………….

    – எஸ் வி வேணுகோபாலன் 
    சென்னை 24
    sv.venu@gmail.com 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *