ஏப்ரல் 23: உலக புத்தக தினம்

e6824b60-6b07-4866-b5c5-eedf7bdab8df

வாசிப்பின் காதலர் தின வாழ்த்துக்கள் !

எஸ் வி வேணுகோபாலன்

பல மாதங்கள் ஆயிற்று அந்தத் தோழரைப் பார்த்து. சில ஆண்டுகளாக நளினி பெங்களூரில் இருப்பவர். கடந்த வாரம், எதிர்பாராத ஒரு புத்தக வாசிப்பு அவரை சந்திக்க உதவியது. கூரியரில் எழுத்தாளர் திலீப் குமார் அனுப்பிக் கொடுத்த அவரது சிறுகதைத் தொகுதியில் நான் எதிர்பார்த்தபடியே எனக்கு மிகவும் பிடித்த அவரது “ஒரு குமாஸ்தாவின் கதை” இருக்கவே, அலுவலகத்திலிருந்து மாலை புறப்படுகையில் ரயில் பயணத்தில் வாசிக்க எடுத்தேன், இடையே வந்த இரண்டு அலைபேசி அழைப்புகளுக்கு நடுவே நகர்ந்த கதையின் முக்கியமான கடைசி ஒன்றரை பக்கங்கள் இருக்கையில் நான் இறங்கவேண்டிய கோடம்பாக்கம் வந்துவிட்டது. ஆனாலுமென்ன, இறங்கிய இடத்திற்கு நேர் எதிரே இருந்த அருமையான நீளக் கடப்பா கல் திண்ணையில் அமர்ந்து பரிதவிப்போடு வாசித்து முடித்து எழுந்திருக்கும்போது, எதிரே ‘ஹாய்’ என்ற குரல். அடுத்த ரயிலில் வந்திறங்கி இருந்தார் நளினி. அவர் சொன்ன விஷயம்தான் சுவாரசியமானது: “ஜன்னல் வழியே பார்த்தால் உங்களைப் போலவே ஒருவர் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்…நீங்கள்தானோ என்று யோசிக்கையில் எழுந்து நடக்க ஆரம்பித்தீர்கள்…புறப்பட இருந்த ரயிலில் இருந்து சட்டென்று ஓடி வந்து இறங்கினேன்” என்றார். சிறிய உரையாடலுக்குப் பிறகு காஞ்சிபுரத்திற்கான ரயில் வரவும் விடைபெற்றுச் சென்றார்.

வாசிப்புக்கு இடம், காலம், காரணம் எல்லாம் உண்டா என்ன…யாராவது எப்போதாவது வந்து படிப்பார்கள் என்று ஒரு சிற்றூரின் எளிய நூலகத்தில் காத்திருக்கின்றன புத்தகங்கள். தனது நூல் ஒன்று புதுக்கருக்கு கலையாமல் பழைய புத்தகக் கடை ஒன்றில் பத்து ரூபாய் என்று எழுதப்பட்டிருக்கும் சிறிய பலகையின் அருகே கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியுறக் கூடும் எழுத்தாளருக்கும், எங்கிருந்தோ வந்து கடையைக் கடக்கப் போகும் ஓர் உண்மையான வாசகர் மீது நம்பிக்கை இருக்கவே செய்யும். அந்தக் குறிப்பிட்ட தருணத்தில் யார் கூடுதல் கவனம் பெறுகிறார் என்று பார்த்தால் வாசிப்பே வெற்றி பெறுகிறது.

விஜய மல்லையா விவகாரம் பெரிதும் பேசப்படும் இந்தக் காலத்தில், வராக் கடன் போலவே வாசிக்காத கடன் பட்டியலும் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பத் தோன்றுகிறது. அதாவது வாசிப்பைக் கடமையாகக் கொள்ள மறுப்பவர் பட்டியல் அல்ல அது, படிக்கிறேன் என்று வாங்கி வாங்கி அந்தப் புத்தகங்களுக்கு நீதி வழங்காதோர் பட்டியல் ! மிகவும் தற்செயலாக என் மகனுடைய நண்பனின் தந்தை என் வாசிப்பைப் பற்றி மகிழ்ச்சியோடு அறிந்து ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டுத் தருமாறு அனுப்பி வைத்தார். அதை வாசிக்காமலே கடந்து கொண்டிருந்த ஒரு நாளில், ‘படிக்க நேரமில்லாவிட்டால் அந்தப் புத்தகத்தையாவது உருப்படியாகத் திருப்பிக் கொடுத்து விடு, எங்கள் நட்புபாதிப்பதற்கு அது காரணம் ஆகிவிடக் கூடாது’ என்று நந்தா என்னிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டான். வெட்கத்தோடு நூலைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்த குற்றவுணர்ச்சி இன்னும் உறுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி எத்தனை எத்தனை புத்தகங்கள் வாசிக்காமல், அதிலும், அன்பின் நிமித்தம் புதிய நூலின் பிரதியை அனுப்பி வைத்த அன்பர்கள் பலர் தோழமையோடு சகித்துக் கொண்டிருக்க, பழைய கடனை அடைக்காமல் புதிய நூல் ஏதேனும் கிடைத்தால் அதை உடனே படிக்கும்போது அவர்கள் யாரும் அருகே இல்லையே என்று கண்கள் தன்னிச்சையாகப் பார்த்துக் கொள்கின்றன.

ஆறு மாதங்களாக வீட்டருகே உள்ள உதயா முடி திருத்தகத் தோழர்களை ஏய்த்துக் கொண்டிருந்தேன். நானாக ஒரு புத்தகத்தை அவர்களுக்குக் கொண்டுபோய்க் காட்டிச் சில வரிகளைப் படித்துக் காட்டிவிட்டு நான் முடித்தபிறகு கொடுப்பதாகச் சொல்லிவிட்டுவந்தேன். அந்தப் புத்தகத்தை அவர்கள் நான் கடையைக் கடந்து போகும்போது எல்லாம் நினைவூட்டிக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். பண்டுவம் என்றால் மருத்துவம், ஆகவே பண்டிதன் என்று நாவிதர்களுக்குப் பெயர் என்ற குறிப்பில் சிலிர்த்த சதீஷ், ‘சார் புத்தகம் எங்கே கிடைக்கும்னாவது சொல்லுங்க, நாங்க போய்ப் பார்த்துக்கொள்கிறோம்’ என்று சொல்லியும் நான் அவர்களுக்கு நியாயம் செய்யத் தவறிக் கொண்டிருந்தேன்.

அண்மையில், ஒரு புத்தகக் கடையில் நுழைந்து குறிப்பிட்ட புத்தகம் அங்கே கிடைக்குமா என்று உரக்கக் கேட்கையில், ‘இங்கே மட்டுமல்ல, எங்கும் கிடைக்காது, என்னிடம்தான் பிரதிகள் எல்லாம் இருக்கின்றன’ என்று அங்கே புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருந்த வேறோர் அன்பரிடமிருந்து குரல் வந்தது. ஐ டி படித்துவிட்டு உருப்படியான வேலை கிடைக்காத நிலையில், நூல் விற்பனையாளராக இயங்கிக் கொண்டிருக்கும் கதிரேசனிடம் பணத்தையும், முகவரியையும் ஒப்படைத்து விட்டு வந்தேன். மறுநாள் மாலை வீடு திரும்புகையில் புத்தகம் கூரியரில் வந்து காத்திருந்தது. “ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்” என்ற அந்த நூலை முடி உடனே எடுத்துக் கொண்டுபோய், முடி திருத்தகத் தோழனிடம் கொண்டு சேர்க்கையில் கட்டிப் பிடித்து அவர் அடைந்த உற்சாகம் ஒரு வாசிப்புத் திருவிழா ! நூலுக்குப் பணம் வாங்க மறுத்த என்னிடம்,’பணத்தைக் கொடுக்காமல் வாங்கிக் கொள்ளமாட்டேன், அப்போதுதான் வேறு நல்ல புத்தகம் கிடைத்தாலும் நீங்கள் வாங்கிக் கொடுத்து அறிமுகம் செய்வீர்கள்’ என்ற சதீஷின் குரல் எழுத்தாளர்களை ஒட்டுமொத்தமாகச் சிறப்பிக்கும் மழைநீர்த் துளி.

நான் எதிர்பார்த்த புத்தகம் கிடைக்காது போன அந்தக் கடையில் நான் எதிர்பாராமல் கண்டடைந்த ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை நூலை (“என் நூறு கிராமங்களின் பெயர்களை இரவோடு இரவாக மாற்றிவிட்டனர்” – அக்னி சேகர்), மாபாவி ஒரு வாரம் கழித்தே பையில் இருந்து எடுத்தேன். ஜிகாத் தீவிரவாதத்தின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் காஷ்மீர் மக்களது துயரம் குறித்த அந்த பிரதி பல கேள்விகளை எழுப்புவது. இந்தியிலிருந்து தமிழில் அற்புதமாக அந்தக் குரலைக் கொணர்ந்த கோவை இந்தி பேராசிரியர் ரமேஷ் குமாரை அழைத்து என்னை அறிமுகம் செய்து கொள்ளாமலே அந்த நூல் என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பேசத் தொடங்குகையில், “அய்யா உங்கள் பெயரைச் சொல்லக் கூடாதா?” என்று கேட்டார். ‘ ஒரு வாசிப்பு அனுபவத்தில் நிலைகுலைந்து போயிருக்கும் வாசகன் தனது பெயரைச் சற்று நிதானமாகவே மீட்டெடுத்துக் கொள்ள முடியும்’ என்ற எனது பதிலில் அவர் அடைந்த பேரானந்தக் கிளர்ச்சிக்கு எந்த ராயல்டி தொகையும் ஈடாகாது.

அண்மையில் குடும்ப மருத்துவர் பி வி வெங்கட்ராமன் (அவரே ஓர் இலக்கிய விரும்பி; சோவியத் கதைகள் கொண்டாடி) அவர்களைச் சந்திக்கக் காத்திருக்கையில் தற்செயலாக புதிய தலைமுறை கல்வி இதழ் பொறுப்பாசிரியர் பொன் தனசேகரனை அங்கே காண முடிந்தது. தொலைக்காட்சியால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தமது நூல் ஒன்றைக் கொடுத்தபடி அவர் சொன்ன செய்தி உற்சாகம் அளிப்பது. ‘தெருவிளக்கும் மரத்தடியும்’ என்னும் தலைப்பில் பேரா ச மாடசாமி அவர்கள் எழுதி வந்த தொடர் கட்டுரைகளின் தொகுதி வரும் ஜூன் மாதம் சென்னை புத்தகக் கண்காட்சில் வெளிவர இருக்கிறது என்றார். கற்றல், கற்பித்தல் அனுபவங்களின் அற்புதக் கொடையாக அந்த நூல் அமையும். இளம் எழுத்தாளரான – ஏழாம் வகுப்பில் நுழையும் சைதன்யாவின் அடுத்த மொழி பெயர்ப்பு நூல், செப்டம்பரில் வெளியாகிறது என்றார் அவரது தந்தை.

கடந்த வாரம், நான் பணியாற்றும் இடத்தில் வேறு ஒரு துறையில் மூத்த பெண் ஊழியர் ஒருவர் விருப்ப ஓய்வில் விடைபெறும் எளிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது, தொடக்க காலங்களில் துணிச்சலும் குறும்பும் நகைச்சுவை உணர்வும் ததும்பும்படி வேலையில் வந்து சேர்ந்த அவர், பின்னர் வாழ்க்கையின் போக்கில் பல தொடர் நிகழ்வுகள், மிகவும் நேசித்த தாயின் மரணம் போன்றவை ஏற்படுத்திய பாதிப்பினால் சற்று உளவியல் நெருக்கடிக்கு ஆளாகி ஆளே மாறிப் போய்விட்டிருந்ததை அவருடன் ஒன்றாகப் பணியில் சேர்ந்த வேறொரு பெண் தோழர் கண்ணீர் மல்கப் பேசினார். சக ஊழியரான அவர் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் இயல்பாகப் பதில் அளிப்பது, மன ஆறுதல் தரும்படி பேச்சுக் கொடுப்பது என்று ஆண்டுக் கணக்கில் உதவி வந்திருக்கும் இன்னொரு தோழர், ஒரு கட்டத்தில் அவர் விருப்ப ஓய்வில் செல்வதே எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்கும் என குடும்பத்தாரிடம் எடுத்துப் பேசி நல்லவிதம் அதை முடித்தும் கொடுப்பதில் உதவி செய்திருக்கிறார். அன்பும் கரிசனமும் சூழ்ந்திருந்த அந்தத் தருணத்தில் பேசிவிட்டுத் திரும்பியபோது எனக்கு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களது “காஃப்கா எழுதாத கடிதம்” தொகுப்பில் இடம் பெறும் ரேமண்ட் கார்வர் எனும் அமெரிக்க எழுத்தாளரின் அற்புதமான “ஒரு சிறிய எளிய காரியம்”சிறுகதை நினைவுக்கு வந்தது.

da882ee1-78ea-4caa-8817-576669a93e32

அசுவாரசியமாக நடந்து கொள்ளும் பேக்கரி ஆள் ஒருவரிடம் தனது மகன் பிறந்தநாளுக்கான கேக் ஆர்டர் கொடுத்துத் திரும்புகிறாள் 33 வயது தாய் ஆன். பிறந்த நாள் கொண்டாடவேண்டிய திங்கள் கிழமை காலையில் பள்ளிக்குச் செல்லும் ஸ்காட்டியை ஒரு கார் இடித்துவிட்டுச் சென்றுவிட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் கண் விழிக்காதிருக்கிறான் அவன். மருத்துவர் ஆறுதலும், நம்பிக்கையும் அளித்தபடி இருக்கிறார். இரண்டு நாட்களில் மருத்துவமனையில் என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது. சோறு தண்ணீர் செல்லாமல் கணவனும் மனைவியும் மகன் கண் திறக்கக் காத்திருக்கின்றனர். இடையே கணவன் வீடு திரும்பும் ஒரு பொழுதில் ஓயாது அடிக்கும் டெலிபோனில் ‘கேக் எடுத்துக் கொள்ள வரவில்லையே’ என்று கேட்கும் குரல் கணவனுக்குச் சரிவர கேட்பதில்லை. திரும்பத் திரும்ப ஒலிக்கும் அழைப்பில் எரிச்சல் அடைகிறான்.

மருத்துவமனையிலேயே இருக்கும் மனைவியை வீட்டுக்குப் போய் சற்று ஓய்வெடுத்துக் கொண்டு, நாய்க்கும் உணவு கொடுத்துவிட்டு வா, ஆனால் ஃபோன் அடித்தால் எடுக்க வேண்டாம் என்று அனுப்பி வைக்கிறான் கணவன். அவளோ ஃபோன் அடித்து ஓய்ந்ததும் பயந்துகொண்டு மருத்துவ மனையை அழைத்துக் கேட்கிறாள், அங்கே ஒன்றும் நடப்பதில்லை. பிறகு மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்புகையில், எல்லாம் முடிந்திருக்கிறது, ஸ்காட்டி இறந்துவிடுகிறான். மருத்துவர் கையறு நிலையில் வருத்தம் தெரிவிக்கிறார். உடல் கிடைக்க தாமதம் ஆகும் என்ற நிலையில் நொறுங்கிப் போய் வீடு திரும்புகின்றனர் கணவனும் மனைவியும். மீண்டும் ஓயாது அடிக்கும் ஃபோன் மணிச்சத்தம் பேக்கரியில் இருந்து வரும் அழைப்பு என்று தெரிந்து அவரைச் சண்டை பிடிக்க இருவரும் விடிந்தும் விடியாத காலையில் ஓடுகின்றனர். அவரும் சண்டைக்குத் தயாராகிறார். ஆனால் இவர்கள் நிலை உணர்ந்து துயரத்தில் பங்கேற்கிறார். தனக்குக் குழந்தைகள் கிடையாது, 16 மணி நேரத்திற்கும் அதிகமாக ஒற்றை ஆளாக நகரத்து மனிதர்களுக்காக உணவு தயாரிக்க அங்கேயே உழலும் தன்னால் ஸ்காட்டியின் பிரிவைப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார். முதலில் அவர்களுக்குத் தேவை உணவு என்று வற்புறுத்திச் சொல்லி அவர்களது மூன்று நாள் பசியைத் தீர்க்க உணவு ரோல்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஆர்டர் செய்யப்பட்ட கேக் டெலிவரி செய்யப்படாது இருப்பது தனக்கு உறுத்தலான விஷயம் என்பதாலேயே திரும்பத் திரும்ப அழைக்க வேண்டியதாயிற்று என்கிறார். அவர்களும் சமாதானம் ஆகி அவரோடு பேசிக் கொண்டே இருக்கக் கதை முடிகிறது. ஒரு சிறிய நல்ல காரியத்தை இந்த உலகில் யாராவது ஒருவர் வேறு யாரேனும் மனிதர்களுக்காகச் செய்து கொண்டேதான் இருக்கின்றனர். புத்தகங்கள் ஓயாது அந்த வேலையைச் செய்துகொண்டிருப்பதாக எனக்குப் பட்டது.

a378be03-f521-473e-baa2-d248c5285a50

டிசம்பர் மாத பெருமழை வெள்ளத்தில் இழந்த பொருள்களில் புத்தகங்களின் வலியும் வேதனையுமே அதிகம். இனி கிடைக்காது என்கிற மாதிரியான சில நூல்களைக் கண்ணீர் மல்க விடை கொடுத்து வெளியேற்றினோம். அருமையான மனிதர்கள் மற்றும் செல்ல பிராணிகள் இறப்பு ஏற்படுத்தும் துயரத்தை அப்போது நினைத்துப் பார்க்கத் தோன்றியது. உயிர்களின் தோற்றமும் மறைவும் தவிர்க்க இயலாதவை, ஆனால் நினைவுகள் அழியாதவை. சங்கிலித் தொடராக ஒரு விசை அந்த நினைவுகளைத் தலைமுறைகளைக் கடந்து கடத்துகிறது. ஒரு மரணத்தை அடுத்து அதே இல்லத்தில் புதிய உயிரின் பிறப்பில் கேட்கும் அழுகை புன்னகையை, மகிழ்ச்சியை குடும்பத்திற்கு மீட்டுக் கொடுக்கிறது. ஓர் இடைவெளி அற்ற மகிழ்ச்சியை, மன நிம்மதியை, ஆறுதலை, பகிர்வை, உரையாடலை, இசைவை, சமாதானத்தை, மன்னிப்பை, சகிப்புத் தன்மையை, விடுதலையை, தாமே ஆற்றுப் படுத்திக் கொள்ளத் தக்க ஒரு துயரப் பெருக்கை, தாமே ததும்பிக் கொண்டாடும் களிப்பை, காற்றை, வெளிச்சத்தை, நம்பிக்கையை, கனவுகளை, கண்ணீரை, பெருஞ்சிரிப்பை மனிதர்கள் சுதந்திரமாக அனுபவிக்க வாசிப்பு அருள்பாலிக்கிறது.

ஏப்ரல் 23, வாசகரை மிகுந்த பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து சமூகத்தைப் பார்க்க வைக்கிறது. புத்தகங்கள் இலேசாக செருமிக் கொள்கின்றன. நூலகங்கள் தங்களது திருவிழாவின் கொடியேற்றத்தைக் கொண்டாடுகின்றன. புத்தக ஆர்வலர்கள் ஒரு காதலர்களைப்போல் வீதியில் உலவும் காட்சியை உலக புத்தக தினம் படம் பிடிக்கிறது. இதுவரை வாசிப்பில் அத்தனை ஈடுபாடு காட்டதவர்களைப் பார்த்துக் கண் சிமிட்டி அருகே அழைக்கின்றன நூல்கள். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே, வாசிப்பின் மீது!

*****************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *