செ. இரா.செல்வக்குமார்

இந்தக் கிழமையின் வல்லமையாளர், இரண்டு கைகளும் இரண்டு கால்களும் செயற்படாமல் இருந்தும் அருஞ்செயல் புரிந்து பல்லோருக்கும் பேருதவி ஆற்றிவரும் இளம் பெண் பிரீத்தி சீனிவாசன் .

செல்வி பிரீத்தி சீனிவாசன் துடிப்புமிக்க அறிவான ஒரே மகள் தன் பெற்றோருக்கு. இவருடைய தந்தை ந. சீனிவாசன் கிண்டி பொறியியற் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்று சீமென்சு (Siemens) நிறுவனத்தில் பல்லாண்டுகள் பணியாற்றியவர். சென்னையிலும், இடாய்ச்சுலாந்திலும் (செருமனி), அமெரிக்காவிலும் பணிபுரிந்துள்ளார். தாய் விச’யா அவர்கள் ஓவியக்கலையிலும் சமையற்கலையிலும், இனிதே இல்லறம் நடத்தும் கலையிலும் வல்லவர். செல்வி பிரீத்தியும் செல்லமாக வளர்ந்துவந்தார். படிப்பில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் கவிதை எழுதுவதும், ஓவியம் வரைவதும், நீச்சலடிப்பதும், கிரிக்கெட்டு விளையாடுவதும் என்று பல்துறையில் நற்திறன் பெற்றிருந்தார். நீச்சலில் இந்திய நாட்டளவிலான நீச்சல் வீரரராக உயர்ந்தார், தமிழநாட்டு மாநில அணியின் இளைஞர் அணியின் கிரிக்கெட்டு தலைவராகவும் (கேப்டன்) இருந்தார். ஆனால் ஒருநொடியில் தன் இனிய இன்பவாழ்க்கை தலைகீழாக மாறியது.

சக்கர இருக்கையில் இருக்கும் பிரீத்தியுடன் அவருடைய தாயார் விச’யா சீனிவாசன்.

ஒருநாள் புதுச்சேரியில் காலில் கடல்நீர் வந்து பாயுமாறு கடற்கரையில் நண்பர்களுடன் நின்றிருந்தார். நீர் பின்வாங்கிப்போகும்பொழுது காலுக்கடியில் இருந்த மணல் அரித்துக்கொண்டுபோக கால்தடுக்கிக் கீழே விழுந்தார். கல்லோ, பாறையோ எதிலும் அடிபடவும் இல்லை. ஒருதுளி இரத்தமும் வெளிப்படவில்லை. ஆனாலும் வியப்பூட்டும் விதமாக கழுத்தருகே எப்படியோ தண்டுவடத்தில் தாக்கம் ஏற்பட்டு கழுத்துக்குக்கீழே உடலியக்கத்தின் செயலிழந்துபோனார். கீழே விழுந்தவரால் எழமுடியவில்லை. இதனை அவர்கூற்றாகவே கூறுவதை இந்த நிகழ்படத்தில் கேட்கலாம். அருகில் இருந்த நண்பர்கள், பிரீத்தியை வெளிக்கொணர்ந்தனர். அப்பொழுது அவருக்கு அகவை 18!! எந்த ஒருவருக்கும் அவர்தம் பெற்றோருக்கும் நம்பவே முடியாத பேரிடியாய் இருந்திருக்கும். பிரீத்தியும், பிரீத்தியின் பெற்றோர்களும், அடுத்தடுத்து என்னென்ன செய்யவேண்டும் என கூர்ந்து சிந்தித்து விடாது முயன்றனர். பிரீத்தியின் அருமைமிகு தந்தை திரு. சீனிவாசனுக்கும் இதயநோய் ஏற்பட்டது. மிகவும் எதிர்பாராமால் ஒருநாள் அவரும் இயற்கை எய்திவிட்டார். வெளியுலகில் அனைத்தையும் செய்து வந்தவர் இவருடைய தந்தையாரே. திடீரென்று அவரும் மறைந்தது பேரதிர்ச்சி.

பிரீத்தியின் தண்டுவடம் சிதைவுற்றாலும், மிகுந்த உள உறுதியுடனும், சீரிய சிந்தனையின்வழியும் அவர் ஆற்றும் செயல்களே நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. தன்னைப்போன்ற உடல்நிலையுள்ள பல ஏழைமக்களுக்குப் பெரிய அளவிலே உதவிவருகின்றார். நம்பிக்கை இழந்து தவிக்கும் பலருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை ஊட்டிவருகின்றார். சோல்ஃபிரீ (Soulfree) என்னும் தொண்டுநிறுவனம் ஒன்றைத் தொடங்கி தண்டுவடம் அடிபடுவதால் ஏற்படும் உடற்குறையால் தவிக்கும் பலருக்குச் சக்கர இருக்கைகள் நல்குவது போன்ற உதவிகள் செய்துவருகின்றார் [2]. தண்டுவடம் அடிபடாமல் காப்பது பற்றியும், அடிபடும் தீவாய்ப்புகள் பற்றியும், உள்ளத்தில் உறுதியுடன் இருக்கவேண்டுவது பற்றியும் கல்விநிறுவனங்கள் முதல் பல நிறுவனங்களுக்குச் சென்று ஊக்கவுரை ஆற்றுகின்றார். சக்கர இருக்கையில் இருந்தாலும், கல்விகற்கவும் பல இடங்களுக்குப் போய்வர இருக்கும் இடையூறுகளைக் களைவது பற்றியும் விழிப்புணர்வு ஊட்டிவருகின்றார். சிதைந்த தண்டுவடம் சிதையாத நம்பிக்கை என்னும் தலைப்பில் இவரைப்பற்றி டாக்டர் விகடனில் ஒரு கட்டுரை பிப்பிரவரி 16, 2015 இல் வெளிவந்தது.

பிரீத்தியைப் பற்றி டாக்டர் விகடனில் வெளிவந்த கட்டுரை

பிரீத்தி ஊக்கவுரை நிகழ்த்துதல்

பீரீத்தி சீனிவாசன் அவர்கள், தன்னுடைய இன்னொரு நேர்காணலில் அவருடைய அருமையான, பெருநம்பிக்கைதரும் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலை இங்கே காணலாம்.

பிரீத்தியின் தொண்டுக்காகப் பல நிறுவனங்கள் அவருக்குப் பரிசுகள் வழங்கி ஊக்குவித்திருக்கின்றன. ஃபெமினா பெண்சக்தி விருதுகள் (Femina Penn Shakti awards), இந்திய இரத்தச் சிலுவைச் சங்கம் (Indian Red Cross) போன்ற பல நிறுவனங்கள் பரிசளித்து ஊக்கமளித்துள்ளன. இவர் ஊக்கவுரை நிகழ்த்தச்சென்ற இடங்களில் மாணவர்களும் இளைஞர்களும் மிக ஆழமாக உள்ளுணர்ந்து நெகிழ்ந்திருக்கின்றார்கள். பேச்சாலும் செயலாலும் அரியவிதத்தில் பலருடைய வாழ்வில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றார். கைகால்கள் இயங்காவிடினும், குரல் இருப்பதால், குரலால் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தமுடியும், பெரிய நம்பிக்கையை அளிக்கமுடியும் என உணர்ந்து குரல் வல்லமை (Throat Fort) என்னும் அமைப்பின் வழி விழிப்புணர்வு ஊட்டிவருகின்றார் [3].

தண்டுவடத்தில் ஏற்படும் பழுதால், உலகெங்கும் பலர் மிகவும் துன்புறுகின்றார்கள். அமெரிக்காவில்மட்டும் 250,000 பேர் முதல் 400,000 பேர்வரை இவ்வுடல் குறைபாட்டுக்கு ஆளாகியுள்ளனர்[4]. ஆண்டுதோறும் 7,800 முதல் 12,500 பேர் வரை இக்கொடுமைக்கு ஆளாகின்றனர். இக்குறைபாட்டுக்கு ஆளாவோருக்கு துணையாக இருக்க அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆகும் செலவும் ஓராளுக்கு ஏறத்தாழ $1.35 மில்லியல் அமெரிக்கவெள்ளி (இந்திய உருபாய் 8-9 கோடிக்கு மேல்) ஆகும் [4]. இந்தியாவில் இக்குறைபாடுகள் உள்ளவர்களை மதித்து அவர்களிடம் இருக்கும் திறமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு நல்வாழ்வு அமைத்துத்தரவும் வாழ்க்கையை நடத்தவும் வாய்ப்புகளும் வசதிகளும் செய்துதருவது ஒரு குமுகத்தின் நற்பொறுப்பு. இதனை உணர்ந்து உதவிகள் செய்ய செல்வி பிரீத்தி முனைந்து வருவது மிகவும் பாராட்டத்தகக்து. அவர்களின் முயற்சி பெருவெற்றி அடைய வாழ்த்துகின்றோம்.

செல்வி பிரீத்தி தன் தாய் தந்தையருடன்.

வாழ்வில் அரியதொரு எதிர்நீச்சல் போட்டுவரும் செல்வி பிரீத்தியை வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.

அடிக்குறிப்புகள்

[1] https://www.youtube.com/watch?v=x4Q1jTkeekg
[2] http://soulfree.org/
[3] https://www.facebook.com/ThroatFort
[4] http://www.makoa.org/nscia/fact02.html , http://www.sci-info-pages.com/facts.html

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. கல்லும் கரையும். அருமையான தேர்வு செய்ததற்கு செல்வாவுக்கு நன்றி. நிழற்படத்தைப் பார்த்தோம். கூட இருந்த ஊழியப்பெண் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து பல கேள்விகள் கேட்டார். தனது அருகாமையில் உள்ள மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, இதை காண்பித்து ஊக்கம் கொடுக்கப்போவதாகச் சொன்னார். வல்ல்மையாளர் செய்திகள் வாய்மொழியாகவும் பரவுகின்றன.
    நன்றி, வணக்கம்,
    இன்னம்பூரான்

  2. உள்ளம் உருக்கிய பதிவு. எந்த நொடியும் ஆபத்தை சந்திக்கும் உலகில்தான் வாழ்கிறோம் அனைவரும்.. எதற்கும் தயாராக இருக்க முடியாவிட்டாலும், எதிர்பாராத சூழலை எதிர்கொள்ளும் மன வலிமையை வளர்த்துக்கொள்ளும் வழிகாட்டி பிரீத்தியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. ஒரு இள மங்கையின் கனவுகள், கற்பனைகள், ஆசாபாசங்கள் அத்தனையும் மீறிய அவருடைய தன்னம்பிக்கை உளம் நெகிழச் செய்கிறது.. பிரீத்தி வாழ்க வளமுடன்!

  3. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
    இடும்பை படாஅ தவர் என்ற குறளே நினைவுக்கு வந்தது. வல்லமையாளர் செல்வி பிரீத்தி சீனிவாசன் வாழ்வாங்கு வாழ்க. மருத்துவத்தில் இதற்கு உரிய சிகிச்சை முறைகளைக் கண்டறிய முயல்வோம். முயற்சி திருவினையாக்கும். 

Leave a Reply to பவள சங்கரி

Your email address will not be published. Required fields are marked *