‘உணர்வுகள்’ கவிதைத்தொகுதி – ஒரு அறிமுகம்

0

– கே.எஸ்.சுதாகர்.

இந்த ‘உணர்வுகள்’ கவிதைத்தொகுதியை வைத்திருப்பவர்கள் பாக்கியவான்கள். ஏனென்றால் இது பல அரிய விடயங்களைப் பொக்கிஷமாகத் தந்து நிற்கின்றது. பாடாத பொருளில்லை எனும்படியாக பொருட்பரப்பு விரிந்து காணப்படுகின்றது. இதன் ஆசிரியர் ஜெயராமசர்மா – பாரதியார், கவிமணி, பட்டுக்கோட்டையார், கவியரசர், மகாகவி போன்றவர்களின் கவிதைகளில் திளைத்து, அவர்களை அடியொட்டி எழுதிச் செல்கின்றார். இவர் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ் சிறப்புப்பட்டதாரி. கல்வியியற்துறை, சமூகவியற்துறை, கற்பித்தல் நுணுக்கங்கள் ஆகியவற்றைக் கற்றுத் தேறியவர். அத்துடன் ஆசிரியர், அதிபர், உதவிக்கல்விப் பணிப்பாளர், விரிவுரையாளர் என்ற பல பதவிகளை வகித்தவர்.

உணர்வுகள்bஇவரின் புத்தகத்திற்கு பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன், கவிப்பேரரசு வைரமுத்து என்பவர்கள் வாழ்த்துரையும் – டாக்டர்.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை ஆசிரியர்), முனைவர் இரா.மோகன் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), முனைவர் அரங்க.பாரி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் முனைவர் சரசுவதி இராமநாதன் என்பவர்கள் அணிந்துரையும் வழங்கிக் கௌரவித்திருக்கின்றார்கள். இதிலிருந்தே இத்தொகுதியின் கனதியைப் புரிந்து கொள்ளலாம்.

இங்குள்ள கவிதைகள் ஏற்கனவே பல சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத்தளங்களில் வெளிவந்தவை.

இவரது தொகுதிக்கு அணிசேர்த்திருக்கும் கவிதைகள் – பக்தி, மொழி, அன்பு, போதனை, சாதனை, இயற்கை, நினைவுகள், கொண்டாட்டம், கற்பனை, காதல் என்ற வகைப்பாடுகளில் அமைந்துள்ளன. இவர் கவிதைகளைத் தொகுக்கும் யுக்தியே ஒரு கவிதைதான்.

கவிதைகள் எல்லோருக்கும் கைவரப் பெறாதது. நான்கு வரிகள் எழுதியவுடன் சிலருக்கு நாக்குத் தொங்கும். இவருக்குக் கவிதைகள் உள்ளத்திலிருந்து ஆற்றொழுக்காக ஒரு ஊற்று போல வருகின்றன. இங்கு வருகின்ற பல பாடல்களில் சந்தம் இருக்கின்றது, சிந்தும் இருக்கின்றது. நாட்டுப்பாடல்களும் இதனூடாக வெளிப்பட்டு நிற்கின்றன. பெரும்பாலான கவிதைகள் மரபுக்கவிதைகளாக உள்ளன.

உணர்வுகளில் தலையாயது பக்தி. இதுவே இப்பொழுது எல்லாருக்கும் முதற்கண் தேவை. அந்தப் பக்தியுடன் ஆரம்பிக்கின்றது இந்த ‘உணர்வுகள்’ என்ற கவிதைத்தொகுதி. பக்தியில் முதல் வருவது ‘மணி ஓசை’. ‘கைவிஷேசமாக’ ஒலிக்கும் இந்தக்கவிதை என் மனதில் எழுப்பும் ஓசை தற்போதைய அரசியல். பக்தியோடு பரிணமிக்கின்றது இந்த அரசியல்.

‘மணி ஓசை கேட்டவுடன்
மனமெல்லாம் மகிழ்கின்றது
துணிவெல்லாம் பிறக்கிறது
தூயநிலை வருகிறது ’

தொடர்ந்து இந்தக்கவிதையில்,

‘சிவனாரின் கோவில்மணி
சீர்திருத்த முயல்கிறது
அவமான செயல் எல்லாம்
அதுபோக்க முயல்கிறது

மாதாவின் கோவில்மணி
மனங்குளிர வைக்கிறது
ஆதாரம் தான் எனவே
அது ஒலித்து நிற்கிறது

விகாரையின் கோவில்மணி
விண்ணென்று ஒலிக்கிறது
வீண்வார்த்தை பேசுவதை
விட்டுவிடு என்கிறது ’

ஆழ்ந்து நோக்குகையில் இந்த ‘வீண்வார்த்தை பேசுவதை விட்டுவிடு’ எனும் சத்தியவார்த்தைகள் மனதில் படிந்துவிடுகின்றது. மத இன ஒற்றுமையை வலியுறுத்தும் கவிதை இதுவெனலாம்.

இந்த பக்தி என்ற பொருளடக்கத்தில் மொத்தம் பதினொரு கவிதைகள் உள்ளன. இதில் என்னைக் கவர்ந்த அடுத்த கவிதை ‘இரக்கமுடன் அருள் புரிவாய்!’. இந்தக்கவிதை இந்தியாவின் தற்காலத்து கல்விநிலை பற்றிச் சொல்கின்றது. கல்விக்குள் காசை வைத்து கற்பவரை முடக்கின்றாரே, கல்வியைக் காசாக்கி கடைத்தெருவில் விற்கின்றாரே என மனம் புழுங்கி,
‘பள்ளித் தலமனைத்தும் கோவில் எனச் சொல்லி
துள்ளி வரும் தமிழாலே சொன்னானே பாரதியும்
கிள்ளி எறிந்து நிற்கும் கீழான குணமுடையோர்
பள்ளிகளை இப்போது பணக்கிடங்காய் மாற்றிவிட்டார்’

என்று தொடர்ந்து செல்கின்றார் ஜெயராமசர்மா.

‘பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்’ என்ற கவிதை எனக்கு நாகூர் E.M. ஹனிபா அவர்கள் பாடிய ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலை நினைவுபடுத்துகின்றது.

மொழி பற்றி வரும் கவிதைகளில் – ‘வந்து நிற்கும் வினையாகும்!’ – என்ற கவிதையில்

‘அருமைமிகு அம்மாவை
மம்மி என அழைத்து
பெருமைமிகு அப்பாவை
டாடி என விளித்து
கருவினிலே உருவான
கன்னித்தமிழ் மறந்து
உருமாறி உரைப்பதிலே
உயர்வென்ன இருக்கிறது ’

என்கின்றார் கவிஞர். மொழி பற்றிய பிரச்சினை புலம்பெயர்ந்தநாடுகளில் இன்று பூதாகரமாக உருவெடுத்துள்ளதை இவரது கவிதைகளில் காணலாம்.

அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ். இந்தக் கவிதை நூலிலும் தாழ் திறந்து கட்டற்றுப் பாய்கின்றது அன்பு. அன்பு என்றவுடன் எம்மனதில் அம்மாவே முன்வந்து நிற்பார். அம்மா பற்றிய கவிதைகள் இதில் ஏராளம். அந்த அன்பு மழையில் நாமும் திளைக்கின்றோம்.

மழலைச் செல்வம் பற்றி ‘நிம்மதி நெஞ்சில் நிற்கும்’ என்ற கவிதை சொல்கின்றது. இந்தக் கவிதையில் ஒரு பந்தி

‘பிரசவத்தில் தாய் அழுவாள்
பிறந்தவுடன் நீ அழுவாய்
பெண்ணாகப் பிறந்துவிட்டால்
பெற்றவரும் அழுதிடுவார்
அழுதழுது பிள்ளை பெற்று
ஆருக்கு என்ன பயன்
அப்படி நினைப்பதனை
அடியோடு மறவுங்கள்’

என்கின்றார். இன்னமும் கீழைத்தேய நாடுகள் சிலவற்றில் பெண்குழந்தைகளின் நிலை கேள்விக்குரியதுதான். அதற்குப் பரிகாரமும் சொல்கின்றார்.

‘ஆண்பிள்ளை பெண்பிள்ளை
அத்தனையும் எம்பிள்ளை
ஆதலால் பிள்ளைதனில்
அன்னியத்தைக் காட்டாதீர்’

‘அரிசியில் நானெழுத
அதைப்பார்த்து நீரசித்து
சிரிசிரி எனச்சிரித்து
சிவப்பாச்சே முகமப்போ’

என்று அம்மாவைப் போற்றுகின்றார். சிவப்பானது அவர் அம்மா முகம் மாத்திரமல்ல, இவரின் முகமும்தான் என்பதை இவரை நேரில் கண்டவர்கள் அறிவார்கள். ‘சிரித்தன செம்மலர்கள்’ என்பதற்கொப்ப இவர் முகம் இருக்கும்.

வீர அபிமன்யு என்ற படத்தில் கண்ணதாசனின் ஒரு பாடல் ‘பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்’ என்று ‘தேன்… தேன்…’ என முடிவையும். அதே பாணியில் இங்கும் ஒரு பாடல் வருகின்றது. ‘தயவான நீயே தாய்’ எல்லா வரிகளுமே ‘தாய்… தாய்…’ என்று முடிகின்றது.

உணர்வுகள் என்றொரு கவிதையும் இப்புத்தகத்தில் இடம்பெறுகின்றது. ஒரு குடும்பத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை, பிள்ளையொன்று சொல்லிச் செல்லும் கவிதை. இதில் ஒரு சிடுமூஞ்சி அப்பா வருகின்றார். ஆள்தான் சிடுமூஞ்சியேதவிர குடும்பத்தை அழகுறக் கட்டிக் காக்கின்றார். மனைவி இறந்தபோது, அன்பிழந்து அவதிப்படும் காட்சியை

‘அடக்கியெமை ஆண்ட அப்பா
அடங்கியே இருந்திட்டார்
அம்மாவின் அணைப்பிழந்து
அவரிப்போ அழுகின்றார்

உணர்வுகள் எப்போதும்
உள்ளுக்குள் இருப்பதில்லை
உயிருள்ள மனிதர்க்கு
உணர்வுகளே உயர்வாகும்’

என்கின்றார். சிலவேளைகளில் ‘அன்பு’ என்ற தலைப்பின்கீழ் வரும் கவிதைகள் இவரது சுயசரிதையோ என்று சொல்லவும் தோன்றுகின்றது.

‘குருவிக்கூடு’ எள்ளல் நடையில் துள்ளி வரும் கவிதை. நல்லதொரு சிந்தனையை விதைத்துச் செல்கின்றது. மரமொன்றில் கூட்டில் வாழும் குருவிக்குஞ்சுகளுக்கு, இந்த வேடிக்கை மனிதர்களைப் பார்த்து, தாயிடத்தில் சில கேள்விகள் கேட்கின்றன. எங்கள் கூட்டையும் மனிதர்கள் உடைத்துவிடுவார்களா என்ற கேள்வி முடிவதற்குள் வினை வருகின்றது. எங்கிருந்தோ வந்த கல் குருவிக்குஞ்சையும் பதம் பார்த்து கூட்டையும் வீழ்த்துகின்றது.

‘விலங்கு பறவை யாவுமே
விலத்தி நின்ற போதிலும்
நலங்குறைந்த மனத்துடன்
நாட்டில் மனிதர் வாழ்வதேன்!’

‘அன்பு மனத்துடன் வாழ்ந்திடுவோம்’ என்ற கவிதை நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ‘ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை’ என்ற மெட்டிலும் – ‘மனமெல்லாம் மாற வேண்டும்!’, ‘மனநிலை தெளிய வேண்டும்’ என்ற இரு கவிதைகளும் பாரதியாரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ பாடலையும் – ‘அடங்கினால் நன்மை அன்றோ!’ வித்துவான் வேந்தனாரின் ‘காலைத் தூக்கி கண்ணில் வைத்து கட்டிக் கொஞ்சும் அம்மா!’ பாடலையும் – ‘மாமருந்துமானார்!’ அப்பர் பெருமானின் ‘முன்னம் அவருடைய நாமம் கேட்டாள்’ தேவாரத்தையும் நினைவூட்டி போதனைக் கவிதைகளாகின்றன.

உணர்வுகள்சாதனையாளர்கள் பட்டியலில் – ராமகிருஷ்ணர், அன்னை தெரசா, மு.வ, தேம்பாவணி தந்த வீரமாமுனிவர் (பெஸ்கி பாதிரியார்), கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, காந்திமகான், நேரு, தனிநாயகம் அடிகளார், பாரதியார், கம்பன், உ.வே.சா, நாவலர், பாலுமகேந்திரா, கண்ணதாசன், வைரமுத்து, வாலி, சிவாஜிகணேசன், பி.சிசீலா, பாலமுரளி கிருஷ்ணா, இளையராஜா, நெல்சன்மண்டேலா, டொமினிக் ஜீவா, கிருபானந்தவாரியார் என்பவர்களைப் பற்றி கவிதைமழை பொழிகின்றது இப்புத்தகம்.

‘எதிர்த்திடுவோம் கலப்படத்தை’, ‘அடியோடு புகை ஒழிப்போம்’, ‘குடியொழிக்க வாரீர்!’ என்பவை தலைப்பிலேயே பொருளை வைத்து, கலப்படத்தை, புகைத்தலை, குடிபோதையைச் சாடி நிற்கின்றன. கவிதை ஒவ்வொன்றினுள்ளும் ஒரு கதை இழையோடிக் கிடக்கின்றது.

புத்தகத்தின் அட்டை ‘நீல நிறம், வானுக்கும் கடலுக்கும் நீல நிறம், காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ?’ என்று கண்ணதாசனின் பாணியில் கேள்வி எழுப்புகின்றது. அந்தக் கேள்விக்குள் குடும்பம் ஒன்று பறவையாய் வானில் பறக்கின்றது. ஒவ்வொரு கவிதையின் பின்புறமும் அழகழகான நிழற்படங்கள் வருகின்றன. தேர்வு மிகப்பொருத்தமாக உள்ளது.

மொத்தத்தில் பண்பாட்டை, கலாச்சாரத்தை, ஒழுக்கத்தை, சமுதாய அக்கறையைப் பேணி நிற்கும் கவிதை உணர்வுகளால் கட்டுண்டு நிற்கின்றேன். புத்தகம் முழுவதுமுள்ள உணர்வுகளைச் சொல்லிவிட எனக்கும் ஆசைதான். உங்கள் சுவைப்புக்காக மிகுதியை விட்டுவைக்கின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *