மீ.விசுவநாதன்

A_Traditional_Tamil_Snack_Murukku
முறுக்கு தின்னும் ஆசையிலே – தெரு
மூலைக் கடைக்குச் சென்றேன்நான் !
குறுக்கு நெடுக்கு மாட்களெலாம் – அங்கு
கூடி யிருந்து சுற்றுகிறார் !

புழுங்க லரிசி முறுக்குதனில் – உள்ள
சுவைக்கு என்று மடிமைநான் !
விழுங்க எனக்கு மனமின்றி – வாய்
வெளியில் மென்று ருசித்திடுவேன்!

வேகா முறுக்கின் தனிருசிக்கு – நா
வெளியில் தொங்க நின்றிடுவேன் !
ஆகா ஆகா வெனச்சொல்லி – அந்த
அரைவேக் காட்டை அரைத்திடுவேன் !

அரைவேக் காடு முறுக்கல்ல – என்
அடங்கா ஆசை மனமென்று
உரைத்த புத்தி கேட்காமல் – வெளி
உலகில் மயங்கித் திரிகின்றேன் !

இளமை முறுக்கும் முதிர்ந்துவிடும் – ஒரு
இரவில் முதுமை விரைந்துவரும் !
வளரும் மோகம் உதிர்ந்தால்தான் – என்
மனிதப் பிறப்பும் அர்த்தம்பெரும் !

(01.05.2016)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “முறுக்கு

  1. ஆழமான கருத்தை மிக அசாதாரணமாகச் சொல்லிவிட்டீர்கள் .. பாராட்டுக்கள் 

    க.பாலசுப்ரமணியன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *