திவாகர்

6517a4a5-5557-49c9-b648-65f578c3fffd
புராணக்கதைதான் இருந்தாலும்
புனிதவதியின் கதையாம் கேளீர்
ஹேமலேகை அவள் பெயர்
வாய்த்தவன் பெயரோ ஹேமரூபன்
பெயர்ப்பொருத்தம் மட்டுமா
பிரேமப்பொருத்தம் கூட
அன்புக்கு உண்டோ அடைக்கும்தாழ்?
அவளன்பிலே கரைந்து போனான்
மானேயென்றான் தேனேயென்றான்
மடியில் புரண்டான் மதுவுண்ட
வண்டுபோல சுற்றிச்சுற்றி வந்தான்
வான்வழிமறந்து கீழே விழுந்த
மங்கையே நானுனடிமை என்றான்
பிரிவில்லை நமக்கென்றான் சற்றே
பிரிந்தாலும் நீரகன்ற மீனாகி
துள்ளித் தவித்து மீண்டான்
நாளாக நாளாக நாட்கள்
கழிந்தாலும் நாயகியோடு இமைப்
பொழுதும் எல்லையில்லா இன்பம்தான்

அவளோ அவனளவு போகத்தை
விரும்பினாளில்லை.. கேட்டான்
ஏனிந்த சோகம் பெண்ணே
ஏனிந்த போகத்தில் மோகமில்லை
இளமையில் இன்பமும் காதலும்
கலவியும் காலத்தின் வரம்
காலம் கரைந்து போனால்
புலம்புவோம் கலங்குவோமே
திரும்பவருமோ இந்தசுகம்
திகட்டிப்போகுமா பேரின்பம்
எனக்கெனப் பிறந்தவளே
எனையாளும் தேவதையே
உன்னழகை என்னால் வர்ணிக்க
என்நாவில் வாத்தையில்லையே
சாத்திரத்தில் சொன்னபடி பிரமன்
பாத்திரத்தில் அமுதெடுத்து முறையாய்
அளவெடுத்து அழகாய் அங்கமெலாம்
பளபளவென பாங்காய்ப் படைத்திட்டான்
எண்ணியெண்ணி ஏங்குகின்றேனென்
எண்ணத்தில் நிறைந்தவளே ஏனிப்படி
சோகத்தை சொந்தம் சேர்க்கிறாய்
சுகத்தைவெறுக்கும் சுந்தரியே
திருவாய் திறந்து பதில்சொல்வாய்
திருவாய் உருவாய் வந்தவளே!

ஹேமை புன்னகைத்தாள் மின்னலே
இம்மண்ணில் வந்ததாய் மயங்கினான்
என்னன்புக்குகந்தவரே..அன்பால்
எனையாளும் பண்பாளரே
ஏனிந்த பெருமோகம் என்மீது
என்னதான் என்னிடத்தில் கண்டீரோ
இதழ்விரிந்த கமலத்தில் இனிப்பான
மதுவை இடைவிடாதருந்தும் தேனீ
நிலைமறந்து உண்டு இரவானதும்
நிலைதெரிந்து கூம்பிய மலருக்குள்
சிக்கி வெளிவராமல் தவிக்குமாம்
இடைவிடா யின்பம் நிலைக்குமா
விடையறிந்தும் அறியா பேதையாய்
நாளும் என்நினைப்பு இவ்வண்ணம்
நாளாகநாளாக வலுக்கின்றதே

மனத்துக்கண் மாசிலா மனையாளே
முன்வினைப் பயன் அதுவும்
நல்வினைப்பயனென்று ஒன்றுண்டு
பல்லாண்டாய் செய்த தவப்பயனும்
சேர்ந்துமாய் நாமிருவரும் ஒருவரானோம்
இனி யோசனையேதுக்கடி கண்ணே
மனக்கிலேசம் வேண்டாமடி பெண்ணே
நல்லவரே வினைப் பயனைச் சொன்னீர்
நல்வினையும் தீவினையும் நானும்
நன்றாகத்தான் அறிவேன் ஆனாலும்
சென்றுபோன சன்மத்தில் நாம்
செய்தது எல்லாமும்நாம் அறியோமே
பாம்பின்கால் பாம்பறியும் என்பதுபோல்
நாம்யார், நம்வினைகள் எவை
என்பதுநாம் அறிவோமோ சொல்வீர்
முன்பிறவி வினையெல்லாம்
முடிந்தவரை அறிந்துகொள்ள
படித்தபுத்தகங்கள் ஏதுமுண்டோ
நல்வினையால் நீர்கிடைத்தீர் நானும்
பொல்லாவினையை ஏதும் முற்பிறவியில்
செய்யாதிருந்தேன் என்பது நிச்சயமோ
நல்வினையால் எனைக்கொண்டீரென்றால்
சொல்வீரென் தீவினைக்கேற்ற பயனை

ஆச்சரியமுற்றான் அவனும்
பேச்சில்லாமல் போனான் கூட
கற்சிலைபோல் இருப்பவள்மனதில்
கற்றவரும் அறியா கேள்விகளா
பேதைபோல இல்லாமல் பெரும்
மேதைபோல கேட்கிறாளே
முற்பிறவியில் செய்த வினைகள்
முற்றும் அறிந்தவர் எவரோ
நன்மைச்செயலையும் நாம்செய்திருந்த
இன்மைச்செயலையும் பொறுப்பாய்
தெரிந்து பொறுமையாய்ச் சொல்வார்
ஊரில் யாரேனுமுண்டோ
இருளும் ஒளியும், சோகமும் சுகமும்
பெருமழையும் கொடும்வெய்யிலும்
பேரும் பகையும் நல்லதுந்தீயதும்
சேர்ந்தே வரும் இரட்டையரன்றோ

நாயகனே..ஏனிந்த மௌனம்
வாய்திறந்து சொல்லச்சொன்னீர்
சொல்லிலேதும் தவறுண்டோ
சொல்லக்கூடாதது சொன்னேனோ
இன்றுவரும் இன்பமே நாளை
கொன்றுபோடும் துன்பமாகாதோ
பிரம்மன் அளவெடுத்த அங்கமெலாம்
வெறும் பார்வைக்கே விருந்தன்றோ
நாளை நரையோடிப் போகும்
வேளைவந்தால் என் தேகமெலாம்
வெறும் காற்றடைத்த மேனியாய்
சிரமதசையில் காலத்தின் கோலமாய்
அலங்கோலமாய் மாறாதோ சொல்வீர்
காலம்வந்து நம்நிலை காண்பிக்குமுன்னே
காட்சிகளை கண்டுகொளும் மன
மாட்சிமை வேண்டாமோ நமக்கு
காதலாய் இருக்கவேண்டிய காலத்தில்
ஏதேதோ பேசிவிட்டேன் மன்னியுங்கள்

கண்ணான கண்மணியே என்னேயுன்
பெண்ணறிவின் வெளிச்சம்.. அடடா..
மறுபடியும் சொல்கின்றேன் எந்தன்
முற்பிறவியின் நல்வினைப்பயனாய்
இப்பிறவியில் என்னவளாய் வாய்த்தநீ
செப்பிய மொழியாவும் கேட்டேனே
அதீதவிருப்பம் அழிவின் எல்லையென
பதமாய் சொல்லிப் புரியவைத்தாய்
புத்தியைக் கூர்செய்து பண்படுத்தி
புதியவனாய் ஆக்கிய புண்ணியவதியே
இருவினையை உணர்ந்தேனில்லை
இருந்தாலும் இன்றென் ஆசானாய்
உன்னிடம் நானுபதேசம் கேட்கின்றேன்
முன்வினை முற்றும்தீர வழிசொல்வாயே

எழில்நாயக என்ன வார்த்தையிது
வழிசொல்ல நானொன்றுமறியேன்
இருந்தும் நம்பெரியோன் ஐயன்
பெருவார்த்தையொன்று உள்ளதே
எல்லாவினையும் நில்லா ஓடுமாம்
பொல்லாவினையைப் பொடியாக்குமாம்
இருவினைதானே இளைத்துப்போகுமாம்
பெருமையாய்ச் சொன்னான் பெரியோன்

எத்தனைபிறவி எத்தனை எடுப்பினும்
எத்தனை வினைகள் எத்தனைசெய்யினும்
நல்லதே நடக்க ஓர்வழியுண்டு
நல்லோர் நினைவில் என்றுமுறையும்
இறைவன் என்பவன் ஒருவனுண்டாம்
இறையை நினைத்து அன்புசெய்தோர்க்கு
என்றும் குறைவில்லை என்றும்நன்றாம்
என்றான் ஐயன் அவன்பேர்சொல்வோமே..

************************************************

இருள்சேர் இருவினையும்சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (திருக்குறள்-5)

இறைவனது மெய்ம்மை பொருந்திய புகழை விரும்பி எப்போதும் அன்பு செலுத்துவோரிடத்தில் நல்வினை தீவினை ஆகிய இருவினைகளும் சேர்வதில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *