–து.கார்த்திகேயன்

முன்னுரை:

தமிழ் மொழியின் அமைப்பைப் புரிந்துகொள்ள  உதவும் சொல்லிலக்கண நூல்களிலேயே  முதன்மையானது தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியச் சொற்பாகுபாடுகளுள் முதன்மையானவை பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் ஆகும். இவற்றைச் சார்ந்து இயங்குவன இடைச்சொல்லும் உரிச்சொல்லுமாம். தனித்து இயங்கும் ஆற்றல் இல்லை எனப்பெற்றாலும் இசை, பண்பு, குறிப்புப் பொருளுக்கு உரியனவாகவும், பெயர், வினைச் சொற்களுக்கு அடையாகவும் சில வேளைகளில் பெயர், வினைச் சொற்களாகவும் உரிச்சொற்கள் செய்யுள்களில் முதன்மைப் பங்காற்றுகின்றன. அந்த வகையில் தொல்காப்பியர் குறிப்பிடும் உரிச்சொற்களின் மரபுகளைக் காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியம் காட்டும் உரிச்சொல்:

தமிழ் இலக்கண நூல்களுள் தொல்காப்பியம், நன்னூல், இலக்கண விளக்கம், நேமிநாதம், தொன்னூல் விளக்கம் ஆகியன உரிச்சொலுக்கென  தனி இயல் வகுத்துள்ளன. இவை பெரும்பாலும் தொல்காப்பிய உரிச்சொல் மரபுகளையே பின்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் குறிப்பிடும் உரிச்சொல் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவநிலை மற்றும் பொருள்நிலையில் உரிச்சொற்களின் ஆறு நிலைகளை அறியமுடிகிறது. 

வடிவநிலை:

1.எழுத்துப் பிரிந்து இசையாப் பண்பு (தொல்.சொல்.297)

2.பெயரினும் வினையிலும் மெய்தடுமாறல் (தொல்.சொல்.297)

3.நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி

பொருள்நிலை:

1.இடையினும் பண்பினும் குறிப்பினும் தோன்றல் (தொல்.சொல்.297)

2.ஒருசொல் பலபொருள் தோன்றல் (தொல்.சொல்.297)

3.பல்சொல் ஒருபொருள் தோன்றல் (தொல்.சொல்.297)

வடிவநிலை உரிச்சொற்கள்:

தொல்காப்பிய எழுத்ததிகாரத்திலேயே உரிச்சொல்லைப் பற்றித் தொல்கப்பியர் குறிப்பிடுகின்றார். “புள்ளியும் உயிரும் இறுதியாகி நெறிப்பட வாரா குறைச்சொற்கிளவி (தொல்.எழு.421)” என உரிச்சொற்களை குறைச்சொற்கள் என அறிமுகப்படுத்துகிறார் தொல்காப்பியர்.

சால,மழ,குழ போன்ற சொற்கள் முழுச்சொற்கள் அல்ல; குறை வடிவங்களே. இவை நேரடியாகப் பெயரையோ வினையையோ குறிப்பிடவில்லை. மாறாக இலக்கியத்தில் பெயர், வினைகளைச் சார்ந்து வந்தே பொருள் தருகின்றன. இத்தன்மையினாலேயே அவற்றைக் குறைச்சொல் என்றார் தொல்காப்பியர். எடுத்துக்காட்டாக கயமலர் (சிலம்பு:2,10), மழவிடை (சிலம்பு:22,15), வயப்புலி (சிலம்பு:12,27), கவவுக்கை (சிலம்பு:1,61), மதகரி (சிலம்பு:25,49) என்பன போன்ற சொல்லாட்சிகளில் கய,மழ, வய, கவவு, மத ஆகிய குறைச்சொல் வடிவங்கள் பெயரடைகளாக வழங்குகின்றன.

உரிச்சொற்கள் பெயரினும் வினையினும் மெய்தடுமாறி வருகின்றன. மெய்தடுமாறி என்பதற்கு சேனாவரையர் இசை, பண்பு, குறிப்பு என்னும் பொருளாய்ப் பெயர், வினை போன்றும் அவற்றிற்கு முதனிலையாயும் தடுமாறியும் என்று விளக்கமளிக்கிறார். உரிச்சொற்களின் வடிவ நிலையிலான தடுமாற்றத்தை இது உணர்த்துகிறது. அலமரல் என்னும் உரிச்சொல் சிலப்பதிகாரத்தில் அலமந்து (சிலம்பு-21,44) என வினையெச்ச வடிவமாகப் பயின்று வந்துள்ளது. இலம்பாடு என்னும் உரிச்சொல் இலம்பாடு  நாணுத்தரும் (சிலம்பு:9,97) என்ற தொடரில் வறுமைப் பொருளைத் தருகின்றது. எனவே உரிச்சொற்கள் சொல் நிலையில் பெயர்களாகவும், வினை வடிவில் குறைச்சொற்களாகவும் (அடையாக) இயங்க வல்லன என உணரலாம்.

பொருள் நிலையிலான உரிச்சொற்கள்:

உரிச்சொற்கள் இசை, பண்பு குறிப்பு பண்புகளில் தோன்றும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. உரையாசிரியர், சேனாவரையர், ”உரிச்சொற்கு இலக்கணமாவது இசை, பண்பு, குறிப்பென்னும் பொருட்குரியவாய் வருதலேயாம்” என விளக்கம் தருகிறார்.

தமக்கியல்பில்லாத இடைச்சொற்களைப் போன்று அல்லாது இசை, பண்பு குறிப்புப் பொருட்குத் தாமே உரியவாதலின் உரிச்சொல்லாயிற்று எனவும் உரிச்சொல்லின் இயல்பு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள 120 உரிச்சொற்களையும் உரையாசிரியர்கள் இசை, பண்பு, குறிப்பு ஆகிய மூன்று நிலைகளில் அடக்கிக் காட்டியுள்ளனர். சேனாவரையர் உரைப்படி, 9 சொற்கள் இசைப்பொருளையும் 15 சொற்கள் பண்புப்பொருளையும் எஞ்சிய 96 சொற்கள் குறிப்புப்பொருளையும் உணர்த்துவன. இவற்றுள் தொல்காப்பியம் கூறும் பொருள்மரபிலேயே சிலம்பில் பயின்று வருவனவாக இயம்பல், கலி ஆகிய இசைச்சொற்களையும், நளி, துணைவு போன்ற சொற்கள் குறிப்புச் சொற்களையும் எடுத்துக்காட்டாக கலிகெழு கூடல் (சிலம்பு:3.125) என்ற தொடரில் கலி என்பது அரவப்பொருளையே தருகிறது. செழுமை என்னும் பண்பு உரிச்சொல் செழுங்குலை (சிலம்பு:25,46), செழுமுத்தம் (சிலம்பு:29.1) ஆகியவற்றில் முறையே, தொல்காப்பியர் குறிப்பிட்ட வளன், கொழுப்பு ஆகிய பொருளில் கையாண்டுள்ளார் இளங்கோவடிகள்.

நளிமலர் (சிலம்பு:2.56), துணைந்து சென்று(சிலம்பு:8.114) ஆகிய தொடர்களில் செறிவு, வரைவு எனக் குறிப்புப்பொருளில் ஆளப்பட்டுள்ளன. எனவே இவ்வாறு பொருள் நிலையில் உரிச்சொற்களை ஆராயும்இடத்து ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள் என்ற நிலையில் சிலப்பதிகாரத்தில் மிகுதியும் கையாளப்பட்டுள்ளது. 

முடிவுரை:

சிலப்பதிகாரத்தின் சொற்கூறுகளில் உரிச்சொல் நிலைகளை ஆராய்ந்த இக்கட்டுரையின் வாயிலாக உரிச்சொற்களின் இயல்புகள் இலக்கணங்களை அறிய முடிகின்றது. உரிச்சொற்கள் ஒரு சொல் பலபொருள் நிலையிலும், பலசொல் ஒருபொருள் நிலையிலும், குறைச்சொற்களாகிய அடைச்சொற்களாக பெயர், வினைகளுக்கு முன்னேயும், அவற்றைச் சார்ந்தும், பெயர், வினைகளாகவே சில இடங்களிலும் இயங்க வல்லன என அறியலாம்.

***

து.கார்த்திகேயன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
உதவிப்பேராசிரியர்,
தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி,
தருமபுரம்மயிலாடுதுறை
tamilkarthik82@gmail.com

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *