உறுதி செய்யப்படும் சனநாயகம்!

0

பவள சங்கரி

தலையங்கம்

TN_election_2016

1462492915

அமோக ஆதரவைப் பெற்று 29 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாகத் தொடரும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியும், ஆறாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்க உள்ள முதல்வர் செயலலிதா அவர்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகத்தின் அனைத்துத் தொகுதி மக்களும் உங்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது இந்த 2016 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் தெளிவாக்கியிருக்கின்றன . அ.தி.மு.க.விற்கு எப்பொழுதும் கோட்டையாக விளங்கும் ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு, மாபெரும் வெற்றிபெற்றுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அரசு பெரும் முயற்சி மேற்கொண்டு இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு மாறும் வகையில் தொழில் துறையில் தக்க நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாக உள்ளது. தென் மாவட்டங்கள், குறிப்பாக மதுரைக்குத் தெற்கே உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சிக்குப் பாடுபடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. அம்மாவட்டங்களைச் சார்ந்த மலேசியாவாழ் இந்திய வம்சாவழியினர் அம்மாவட்டங்களில் முதலீடு செய்ய ஆவலோடு உள்ளதாகவும் அறிய முடிகிறது. தமிழ்நாடு அரசு கருவூலங்களின் பற்றாக்குறையைச் செப்பனிட்டு பொருளாதாரத்தில் தமிழ் மாநிலம் முதன்மை மாநிலமாக மாறும் வகையில் செயல்படுவீர்கள் என்ற எதிர்பார்ப்பையும் நிறைவுசெய்வீர்கள் என்று நம்புகிறோம். இலவசங்களால் மக்களுடைய வாழ்வாதாரங்கள் மலராது. ஒவ்வொரு குடும்பமும் பொருளாதாரத்தில் சுய சார்புடையதாக இருக்கும்வண்ணம் தங்களுடைய தொழில் கொள்கையை வகுப்பீர்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். இந்த மேன்மை நிலையை அடையும்வண்ணம் தங்கள் நல்லாட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பிலேயே மக்கள் மீண்டும் தங்களை ஆட்சிப் பீடத்தில் அமரச் செய்திருக்கிறார்கள். இதையுணர்ந்து தங்கள் கட்சிப் பிரதிநிதிகளும் செயல்பாடுவார்கள் என்று நம்புகிறோம்.

எதிர்க்கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்பதற்குக்கூட இயலாமல் இருந்த நிலை மாறி இன்று பெரும் வெற்றி பெற்று எதிர்க்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கப்போகும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அரசின் ஆக்கப்பூர்வமானத் திட்டங்களுக்கு ஆதரவும், தவறு செய்யும்பொழுது சுட்டிக்காட்டும் துணிச்சலுடனும் செயல்படுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். சனநாயகத்தின் ஆளும் கட்சி எவ்வளவு முக்கியமோ அதுபோல் எதிர்க்கட்சியும் அத்தியாவசியமானதே. அந்த வகையில் உங்களுடைய இந்த வெற்றி சனநாயகத்தின் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானது என்பது திண்ணம். ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவோம் என்ற உறுதியேற்பீர்கள் என்று நம்புகிறோம்.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை மக்கள் அனைத்து அணியினரையும் ஒதுக்கிவிட்டு தமிழகத்தில் இருகட்சி ஆட்சி முறையை ஏற்பதுபோல் வாக்களித்துள்ளனர். இன்று ஆளும் கட்சியாக இருப்பவர்கள் நாளை எதிர் கட்சியில் அமரலாம். இன்று எதிர் கட்சியாக இருப்பவர்கள் நாளை அரசாளலாம். மக்கள் மனதில் இடம்பெறும் வகையில் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி ஆகிய இரு கட்சிகளும் தங்களுடைய பொறுப்புணர்ந்து தங்கள் பணியை செம்மையாகத் தொடரவும், சனநாயகத்தைப் போற்றும்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து சட்டசபை உறுப்பினர்களுடைய செயல்பாடுகளும் அமைவதற்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

முதல் முறையாக தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்ட பாரத சனதா கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் குறிப்பிட்ட அளவிற்கு வாக்குகள் பெற்றுள்ளது. தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றுவதற்கு முழு முயற்சி எடுப்பார்களேயானால் குறுகிய காலகட்டத்தில் மேலும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்டு தங்களுடைய செயல்காளாலேயே கேலிக்கூத்து ஆக்கிவிட்டதும் வருந்தத்தக்கது.

இந்த முறை நோட்டா வாக்களிப்பு (தேர்தலில் வேட்பாளர்கள் எவரையும் பிடிக்கவில்லை என்பவர்கள்) ஐந்து இலட்சத்தையும் தாண்டியும், சென்ற முறையைவிட இந்த முறை பலமடங்கு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது கவலைப்படவேண்டிய ஒரு செய்தி. அனைத்துக் கட்சியினரும் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தி நோட்டா என்ற வாக்குப் பதிவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு செயல்பாடுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

imagesமேற்கு வங்கத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மூன்றில் இரண்டு பங்கு சட்டசபை உறுப்பினர்களை வெற்றி பெறச்செய்த சகோதரி மம்தா பானர்சி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கும் இவ்வேளையில், அவர்தம் எளிமையும், அர்ப்பணிப்பு உணர்வும் போற்றுதலுக்குரியது. மேற்கு வங்கத்தை தொழில்வளம் மிக்க மாநிலமாக உயர்த்தும் வகையில் செயல்படுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். கட்சித் தலைவர்கள் சிலருடைய பணப்பரிமாற்றங்களில் தக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேற்கு வங்கம் வளமான மாநிலமாக மாறும் வகையில் சகோதரி மம்தா பானர்சி அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்துள்ள வாக்காளப் பெருமக்களையும் பாராட்டுவோம்.

கேரளா மாநில சட்டசபைத் தேர்தலுக்கு இடதுசாரி முன்னணிக்கு பெருவாரியாக வாக்களித்து, ஊழலுக்கு எதிரான கோபத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மக்கள் எதிர்பார்த்தவண்ணம் செயல்பட இருக்கும் இடதுசாரி முன்னணியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம்.

யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரியில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசு கூட்டணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

கிழக்கு பிராந்தியத்திலுள்ள அசாமில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள பாரதிய சனதா கூட்டணியினருக்கு உளமார்ந்த வாழ்த்து தெரிவிக்கும் அதே வேளையில், மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயரும் மக்களை நெறிப்படுத்தி வளமான ஆட்சியை அசாமிய மக்களுக்கு வழங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *