எஸ் வி வேணுகோபாலன்

மிக அண்மையில் செல்ல மகனுடன் மெரீனா கடற்கரைக்குச் சென்றிருந்தேன்… மணலில் கால் வைத்துக் கடலை நோக்கி முதலடி எடுத்து வைக்கையில் நந்தா கேட்டான், “உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை இது தெரியுமா?’ என்று. அப்படியா, ஆசியாவில்….என்று இழுத்தேன். இல்லை, உலகிலேயே இரண்டாவது என்று மீண்டும் அழுத்திச் சொன்னவன், அதை நான் எப்போது ஒப்புக் கொண்டேன் என்பதுதான் முக்கியம் என்று தொடர்ந்தான். சில மாதங்களுக்குமுன் ஒரு தொண்டு நிறுவனத்தின்சார்பில் சென்னை கடற்கரையைத் தூய்மை செய்வோம் என்று நடந்த இயக்கத்தில் தான் பங்கேற்றதை எனக்கு நினைவூட்டிய நந்தா, “நானும் சிபியும் திரும்பத் திரும்ப சுத்தம் செய்து சுத்தம் செய்து திரும்புவோம், மீண்டும் மீண்டும் குப்பையாக வந்து விழுந்திருக்கும்……வருடம் முழுக்க நிற்கிற இடத்திலேயே நின்று சுத்தம் செய்தாலும் இது முடியும் வேலை இல்லை என்று அப்போதுதான் தெரிந்து வெறுத்துப் போனோம்….” என்றான். பிறகு நல்லவேளையாக நாங்கள் குப்பையையும், தூய்மையும் மறந்து பேச்சை மாற்றிக் கொண்டு கடலை ரசித்துவிட்டுத் திரும்பினோம்.

ஆனால், அன்றிரவு என் தூக்கத்திற்குள் மெரீனா கடற்கரை உலகின் முதல் கடற்கரையாக விரிந்தது. மணமக்கள் மேலே அட்சதை தூவுவது போன்ற அக்கறை உணர்வோடு ஒவ்வொரு மனிதராக வந்து குப்பை போட்டுக் கொண்டு செல்வது போன்ற அடுத்த காட்சியால் நான் திடுக்கிட்டுப் போனேன். டிசம்பர் 26, 2004 அன்று திடீர் என்று கடல் பொங்கி சுனாமி என்ற பெயரில் மிகக் கோபமும் கொந்தளிப்புமாகப் புறப்பட்டு வந்து காவு வாங்கிக் கொண்டு சென்றதற்கு இந்தக் குப்பை விஷயம் ஒரு காரணமாக இருக்கக் கூடுமோ என்று தோன்றத் தொடங்கிய நேரத்தில் கனவு வேறொரு சானலுக்கு மாறி இருந்தது. வழக்கம்போல் காலை எல்லாம் மறந்து நாகரீக உலகின் தவப்புதல்வனாக மாறி இருக்க அன்றாடத்திற்குள் வேகமாக நுழைந்திருந்தேன்.

ஆனால், ஏதோ ஒரு முக்கியமான காகிதத்தைத் தேடுகையில், என் அலமாரியில் எது எங்கே என்று தெரியாத அளவுக்கு எல்லா வரிசைகளும் என் அன்பாலும், ஆர்வத்தாலும், ஆசையாலும் சேர்த்திருந்த புத்தகங்களோடு அராஜகத்தாலும், அநியாயத்தாலும், அடாவடியாலும் குவிந்திருந்த குப்பையாலும் ததும்பிக் கொண்டிருந்ததைப் பார்க்க, மெரீனா கடற்கரை அதன் இன்னொரு வடிவில் வீட்டுக்குள் சுருண்டிருந்தது மாதிரி தெரிந்தது. எந்த வரிசையில் எந்தப் பகுதியை இழுத்துத் தேடத் தொடங்கினாலும் குறைந்தது பத்து நாள் விடுப்பு எடுக்காமல் மீண்டும் கதவை அடைக்க முடியாது என்பது துலக்கமாகத் தெரிகையில் கண்கள் கலங்கத் தொடங்கின. இந்த மாதிரி நேரத்தில் கடவுள் நம்பிக்கை அற்றவனாகப் போனோமே என்று வருத்தம் சேர்ப்பது மாதிரி, ‘ஆண்டவன்’ புண்ணியத்தில் தேடப் போன ஆவணம் ஒன்று பளிச்சென்று குறிப்பிட்ட வரிசையில் புத்தக அடுக்கின் வலப்பக்கம் மூலையில் பரிச்சயமான மேலுறையோடு தட்டுப்பட்டது. மெரீனாவை வேறு யாரும் பார்க்குமுன் பத்திரமாக உள்ளடக்கிக் கதவுகளை கவனத்தோடு அடைத்துவிட்டு கம்பீரத்தோடு வெளியே புறப்பட்டுப் போனேன்.

எப்போதிலிருந்து நீங்கள் குப்பை சேர்க்கத் தொடங்கினீர்கள் என்று எந்த நேர்காணலிலும் யாரும் யாரையும் கேட்டமாதிரி நினைவில் இல்லை. “நான் இளமைக் காலத்தில் இருந்தே குப்பைகளோடு கலந்து வாழ்வதில் விருப்பம் கொண்டிருந்தேன், குப்பைகளின் காதலன் என்ற புனைபெயரில் அப்போதே கவிதைகள் எழுதி இருக்கிறேன், என்னால் உணவு இல்லாமல் கூட இருக்க முடியும் …குப்பைகள் இல்லாத ஓர் உலகை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடிந்ததில்லை” என்று பிரபல எழுத்தாளர்கள் யாராவது சொல்லி இருப்பார்கள் என்றுதான் என் மனசாட்சி சொல்கிறது.

இப்போது நாங்கள் இருப்பது, எங்கள் திருமண வாழ்க்கையில் நாங்கள் மாறி இருக்கும் எட்டாவது வீடு. அதற்குமுந்தைய கணக்கைச் சேர்த்தால் (அதாவது இருவரும் அவரவர் குடும்பத்தில் இளமைக் காலத்திலிருந்து மாறி இருக்கும் குடியிருப்புகளைச் சேர்த்தால்), இந்த எண்ணிக்கை இருபத்தைந்தைத் தொடும் என்ற அதிர்ச்சிப் புள்ளி விவரம் இருக்கிறது. புகைப்படங்கள், கடிதங்கள், துண்டுச் சீட்டுகள், பிடித்த காலண்டர் பக்கம், ரசித்த இயற்கைக் காட்சி ஓவியம், பிறகு முழுமைப்படுத்தலாம் என்று வைத்திருந்த கவிதைக் கிறுக்கல் (கிறுக்கல் கவிதை என்று உங்களுக்குப் புரிந்திருந்தால் கம்பெனி ஜவாப்தாரி அல்ல), யாரிடமோ சேர்த்துவிடுவதாக உறுதி அளித்து வாங்கி வைத்திருந்த ஸ்தல வரலாறு, உடனே படிக்க வேண்டும் என்று பத்திரப்படுத்தி இருந்த ஒரு நூற்று நாற்பத்து மூன்று (ஆண்டாள் வாழி திருநாமத்தில் வருவது மாதிரி) சிறு, குறு, பெரிய புத்தகங்கள், இவை அன்றி நாள் கணக்கில் வாரக் கணக்கில், மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் உண்டியலில் பக்திபூர்வமாகப் போட்டு வரும் காசு மாதிரி சேர்த்துக் கொண்டே வந்திருக்கும் …… நீள்வரிசை.

ஒருமுறை வீடு மாற்றுகையில் உடனிருந்த மைத்துனர் கவிஞர் மா குருமூர்த்தி, அவர் பங்குக்குக் கொஞ்சம் கழித்துக் கட்டினார். நான் பதறிப் போய், அந்த மூட்டைகளில் இருப்பது எல்லாம் மிகவும் முக்கியமானவை என்று கத்தினேன். பதறாமல் அவர் சொன்னது:”முக்கியம், மிக முக்கியம், மிகவும் முக்கியம் என்று நீங்கள் பிரித்து வைத்திருந்த எந்த பிளாஸ்டிக் கவர்களையும் இரண்டு ஆண்டுகளில் முந்தைய வீட்டில் இருக்கும்போதே எடுத்துப் பிரித்ததாகத் தெரியவில்லை. எந்தக் காலத்தில் அதை நீங்கள் மீண்டும் எடுத்துப் பார்க்கப் போகிறீர்கள்?”

எனக்கு பகீர் என்றது. அந்த மூட்டைகளில் சேகரித்து வைத்திருந்த காகிதங்களில் யாருக்கோ கொடுத்த வாக்குறுதி, நம்பிக்கை, ஒப்புதல் வாக்குமூலம் உறைந்திருப்பதாகவும், அத்தனை பேரும் ஒரே நாளில் சேர்ந்து என் எதிரே வந்து நின்றால் அத்தனை பேருக்கும் தேநீர் கொடுத்து முடிக்கவே அரை நாள் ஆகும் எனவும் அயர்ச்சி ஏற்பட்டது. அவர்களது கேள்விக்கோ, எதிர்பார்ப்புக்கோ உரிய நடவடிக்கை அல்லது பதில் என்னவாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு கடைசி வாய்ப்பு கொடுக்கவேண்டும், அடுத்த முறை வீடு மாற்றும் வரை இந்தச் சொத்து என்னோடு இருக்கட்டும் என்று அவரிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டேன். அதற்கு அடுத்த முறை மேற்படி கடமையை அவர் எனக்குத் தெரியாமல் என் வாழ்க்கை இணை அறிவுறுத்தியபடி ஆற்றி இருந்ததை அதற்கும் அடுத்த வீடு மாற்றும்போதே நான் கண்டுபிடித்தேன். ஆனால் அந்த இடைக்காலத்தில் சம அளவிலான வேறு மூட்டைகளை நான் ஈட்டி இருந்தேன்.

உறவினர்கள், நண்பர்கள் யார் வீட்டுக்குப் போனாலும் எங்கும் பொருள்கள் இறைந்து கிடைக்காமல், நாளிதழ்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு, தொலைக்காட்சிப் பெட்டி மீது பூங்கொத்து கவிழ்த்து வைக்கப்பட்டு (வர்றதுக்கு முன்னே சொல்லிட்டு வாங்க என்கிறார்களே, இந்தத் தில்லாலங்கடி வேலைக்குத் தானோ), பளீர் என்ற வரவேற்பறை, குழப்பம் அற்ற சமையலறை, அமைதி குடிகொண்டிருக்கும் மற்ற இடங்கள் என்று இருப்பதைப் பார்த்ததும் உள்ளுக்குள் எனது மெரீனா கடற்கரை விரிந்து வாரிச் சுருட்டிக் கொள்ளும். தீர்மானமான முடிவுகள் உள்ளுக்குள் ஓடும். அடுத்த விடுமுறை நாட்கள் வீட்டை சுத்தம் செய்வதற்குத் தான் என்ற குரல்கள் காதுகளில் விழுகையில் விடுமுறைகளை எல்லாம் முதலில் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று எனக்குள் வேறொரு அன்பான முரட்டுக் குரல் கேட்கும்.

பழைய மேடை நாடகம் ஒன்றில் (ஊர் வம்பு என்று நினைவு…அதுவும் மெரீனா எழுதியது!) தனது அலமாரியை யார் சுத்தம் செய்தது என்று கூத்தபிரான் கத்துவார். எனக்கு எல்லாம் கலைத்துப் போட்டிருந்தால்தான் எது எது எங்கே இருக்கிறது என்று தெரியும் என்று சொல்வார். இப்போ என்ன காணாமப் போச்சு என்று பூர்ணம் விஸ்வநாதன் கேட்பார். அனுமார் ஃபோட்டோ ஒன்று ஆசையா வச்சிருந்தேன்…எங்கே போச்சு தெரியல என்பார் கூத்தபிரான். ஏண்டா அபிஷ்டு, அனுமாரை நீ போய்ப் பார்த்து ஃபோட்டோ எடுத்துண்டு வந்தியோ, அனுமார் படம்னு சொல்லுடா பரதேசி என்பார் பூர்ணம். கைத்தட்டல் அமர்க்களமாகக் கேட்கும் அரங்கில்.

கலைத்துப் போட்டு வைத்திருந்தால் சட்டென்று எடுக்க முடியும் என்பது ஒரு கலை மனத்தின் அடையாளம் என்பது இந்த உலகுக்கு என் பிடிபடுவதில்லை என்ற கேள்வி நீண்ட நாளாக இருக்கிறது. வாராது கலைத்துப் போட்ட தலைமுடி, இஸ்திரி போடாத சட்டை, தோய்க்காத ஜோல்னாப் பை எல்லாமாக இணைந்து உருவாக்கப்பட்டது தான் உலகின் அறிவுஜீவித் தோற்றம் என்பதற்கு யாராவது காப்புரிமை பெற்றிருப்பார்கள் என்று கூடத் தோன்றியது. இதெல்லாம் சாதாரண மனிதர்களுக்கு விளங்குவதில்லை என்பது இந்த உலகின் சாபம் என்பதும் வருத்தம் மேலிட வைத்தது.

ஆனால் யாருமற்ற பொழுதுகளில் ஒற்றை ஆளாக வீட்டில் இருந்துகொண்டு குப்பைகளை ஒழித்துக் கட்டி, எல்லோரும் வீடு திரும்புகையில் பார்த்து அசந்து நிற்பதுபோல் ஒரு மாயத்தைச் செய்தாக வேண்டும் என முட்டாள்தனமான சிந்தனைகள் அவ்வப்போது தோன்றத் தான் செய்யும். ஆனால் உன் அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு உன் சுயத்தைப் பலியிட்டு விடாதே என்ற எச்சரிக்கைக் குரல்தான் என்னைப் போல் பலரையும் தடம் மாறாமல் வழி நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை இங்கே பெருமிதம் பொங்கக் குறிப்பிட வேண்டி இருக்கிறது.

பாபு திரைப்படத்தில் ஏழை சிவாஜியின் குடிசைக்குள் இருக்கும் ஒரே நாற்காலி மீது வைத்திருக்கும் ரிக்ஷா விளக்குகளை மேஜர் சுந்தரராஜன் உட்காருவதற்காக எடுக்கும் சிவகுமார் வேறு எங்கும் வைக்க இடம் இல்லாமல் கைகளிலேயே வைத்துக்கொண்டு முழிப்பதை என் அண்ணன் சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருப்பார். பலரது இல்லங்களிலும் இப்படி நாற்காலி, மேசை எல்லாவற்றின் மீதும் ஏதேனும் பொருள்கள் தேவை இன்றியோ, தேவை இல்லாமலோ கொலுவிருப்பதைப் பார்க்க முடியும். வீடு நிறைந்திருந்தது என்று கதைகளில் எழுதும்போது சிலிர்ப்பதில்லையா…அப்படி எடுத்துக் கொண்டு போக வேண்டியது தானே.. எதற்கு ஒழித்துக் கொண்டிருப்பது.

கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி பெய்த மழையும், பெருகிய வெள்ளமும் யார் யாருக்கு எந்தப் பாடங்களைக் கொடுத்ததோ தெரியாது. அவசர அவசரமாக வீட்டை விட்டுப் புறப்பட்டு பாதுகாப்பைத் தேடிச் சென்ற நாங்கள், இரண்டு நாள் கழித்து ஒரு பரிசலில் ஏறி புலியூருக்கு (கோடம்பாக்கத்தின் முந்தைய பெயர்தான் அது) மீண்டபோது, மெரீனா கடல் வீட்டுக்குள் நுழைந்து மீண்டதைப் போன்ற காட்சியை நானும் என் வாழ்க்கை இணையும் கண்டு அதிர்ந்து போனோம். வழுக்கிக் கொண்டிருந்த தரையில் மெழுகுச் சுடரை ஏற்றி வைத்துக் கொண்டு ஒவ்வோர் அறையாகச் சென்று பார்க்கையில் நெஞ்சு வெடிக்கத் தக்க சேதங்கள் தெரிந்தது. ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் வெளியேறினோம் பரிசலில்.

வெள்ளம் வடிந்த எட்டாம் நாள் திரும்ப நாங்கள் இருவர் மட்டும் வீடு திரும்புகையில் அடுத்த இரண்டு மூன்று நாட்கள் இரவும் பகலுமாகச் சுத்தம் செய்யச் செய்ய மெரினா கடற்கரை போல விரிந்து கொண்டே இருந்தது கழிவுகளால் நிரம்பி இருந்த வீடு. ஓய்வின்றி சளைக்காமல் வீட்டைப் பழைய நிலைக்கு அத்தனை விரைவாக மீட்டெடுத்த கூட்டு உழைப்பில் யாருடைய பங்கு மிக மிக அதிகம் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. குற்ற உணர்வுகளால் மட்டுமே ஒரு வீட்டைச் சுத்தம் செய்துவிட முடியாது, அதற்கு மேலதிக உழைப்பு தேவை என்பதைக் கற்றுக் கொடுத்திருந்தது வெள்ளம்.

நானும் நந்தாவும் கடற்கரையிலிருந்து உற்சாகமாக வெளியேறும்போது மேலும் அதிகக் குப்பைகளைக் கடந்து வந்தோம். காடுகளைச் சுற்றிப் பார்க்கச் செல்லும் மனிதக் கூட்டம் பொறுப்பின்றி வீசி எறிந்துவிட்டு வரும் உணவுப் பொருள்கள், காகிதக் குப்பைகள், பாட்டில்கள் விலங்கினங்களுக்கு எத்தனை இடர்பாடுகளை, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது என்பதைப் பேசிக் கொண்டே வந்தோம். குப்பைகளைச் சுத்தம் செய்வதை விட எளிதான விஷயம் அவற்றைச் சேர்க்காமல் இருப்பதுதான் என்பதை கடற்கரை பாடமாக நடத்திக் கொண்டிருந்தது.

பேருந்தில் நெரிசலில் ஏறி இடம் பிடித்து அமர்ந்தபோது நாங்கள் வேறு உலகில் இருந்தோம். கடற்கரை காற்றை மீறிய புழுக்கம் சூழ்ந்திருந்தது அந்த உலகில். ஆனால் பேருந்து புறப்படத் தொடங்கும்போது நம்பிக்கைக் காற்று சன்னல் வழியாக ஊடுருவி வீசத் தொடங்கியது.

*******************

நன்றி  :  தீக்கதிர் இணைப்பு வண்ணக்கதிர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *