காயத்ரி பூபதி

13318513_1022161434504722_554123272_n

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் இராமலெஷ்மி. இதனைப் போட்டிக்குத் தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.

மலர்கள் என்றுமே கவிஞர்களின் எண்ண ஊற்றுகளின் பிறப்பிடமாகும். இலக்கியத்தில் மலர்கள் நிலத்தை, காலத்தைக் குறிக்கும் குறியீடாகவும், கருத்துச் செறிவான செய்திகளைச் சுட்டும் உவமையாகவும் சூழலைக் குறிக்கும் பின்னணியாகவும் இடம் பெற்றுள்ளன.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

என்று விருந்து பற்றிய கருத்துச் செறிவான செய்தியைச் சுட்ட(,) அனிச்ச மலர் உவமையாக வந்துள்ளது.

பூக்களிலே நானும் ஓர்
பூவாய்(த்)தான் பிறப்பெடுத்தேன்
பொன் விரல்கள் தீண்டலையே
நான் பூமாலை ஆகலையே

என்ற புதுக் கவிதை வரிகளில் முதிர் கன்னிக்கு(ப்) பின்னணியாகிறது பூமாலை. இங்கு படக் கவிதைப் போட்டிக்கானப் படத்தில் இருக்கும் பெண்மணி, பூ விற்கும் தொழிலாளி. இவள்,

கொளுத்தும் வெயிலில் வாடும் பூவை
வறுமை வாட்ட விற்க வந்தாள்
வாடா மலரை, வாடும் முன்னே!

இப்பூவைத் தொடுத்த பூமாலைக்குக் கவிஞர்கள் தொடுத்த பாமாலைகளைப் பார்ப்போம்.

படக் கவிதைப் போட்டிக்கு வெளிவந்திருக்கும் கவிதைகள் பொதுவாக(,) பொறுப்பில்லாத குடும்பத் தலைவனையும், குடும்பப் பொறுப்புகளைச் சுமந்து கொண்டு போராடும் குடும்பத் தலைவியையும் எடுத்துக் காட்டும் விதமாக அமைந்துள்ளன.

பூவைத் தொடுப்பவள் தலையினிலே
பாரமாய் வறுமை வதைக்கையிலே,
சாவைத் தேடிடக் கணவன்தான்
சாரா யத்தைத் நாடுகிறான்,
தேவைக் கான பொருள்சேர்க்கத்
தேடிப் பிள்ளைகள் வெளிநாட்டில்,
பூவைத் தலையில் தக்கவைக்க
பூவை தொடுக்கிறாள் பூக்களையே… (செண்பக ஜெகதீசன்)

மதுவுக்கு அடிமையான கணவனால் வறுமையில் வாடும் குடும்பத்தையும், அதைச் சீர்தூக்கப் போராடும் மனைவியையும் எடுத்துக் காட்டியுள்ளார். மதுவினால் பெண்கள் அடையும் துயர நிலையை சுட்டிக் காட்டியுள்ள கவிஞருக்குப் பாராட்டுகள்.

இயற்கை அளித்த பூவை
இடையில் வந்த கணவன்
இறப்பில் பறிகொடுக்கும் நிலை…..
பூத்தொடுக்கும் நேர்த்தியில்
உள்ள அழகைக் கூட
இறைவன உனக்களித்த
படைப்பில் மறந்தானோ….
விதவை விற்றாலே.
வீணெனப் பூவை
வாங்க,மறுக்கும்
வாழ்க்கை உலகமிது.
பூவிழந்ததை மறைத்துப்
பூவைத்துக் கொண்டு
பூவையர்க்குப்
பூவை விற்கப்
பொய்வேடம் புனைகதையை
என் சொல்ல..என் சொல்ல… (இளவல் ஹரிஹரன்)

பூவைச் சூடா பூவையின் நிலைக் குறித்த தன் வருத்தத்தை வெளியிட்டிருக்கிறார் கவிஞர். பூவைத் தொடுத்த மல்லிகைப் பூமாலையின் வாசனையைவிட அவளிடமிருந்து வரும் உழைப்பின் வாசனையைப் பார்க்கின்றது வல்லமை. தொழிலைப் போற்றுவோம், தொழிலாளிகளைப் போற்றுவோம்.

உழைப்பால் வந்த ஊதியத்தை
கவர்ந்து கொண்டு
உல்லாசமாய் வாழும்
கணவன்மார்கள்
இருக்கும் வரை
ஜான் ஏறனால்
முழம் சறுக்கும்
என்பதை உணர்த்தியது
இந்த பூவின் வாசம் ! (ஹிஷாலி)

என்னதான் உழைத்தாலும் உழைப்புக்கேற்ற பலனை அடைய முடியாமல் தவிக்கும் பூக்காரியின் நிலையைக் காட்டுகின்றன, ஹிஷாலியின் கவிதை வரிகள்.

நாளை மறுநாள் திருநாள்.
மூத்தவளின் பிள்ளை
பெரிசாகி நாளாச்சு
முந்தானை நீளமாய் தாவணி.
நடுவிலி பெத்தது
முளைக்கு முன்னர் தனக்குமாம்.
இளையவளின் கடைக்குட்டி
கேளான் எதுவும்
நீளக்கை சேட் கட்டைக் களிசான்
புத்தகம் சுமக்க முதுகுப்பை.
கட்டம் போட்ட நீலக்கைத்தறி
அம்மாவுக்கு
மாமிக்கொரு நல்ல வொயில்
இயலாமல் படுக்கும் கண்ணாளனுக்கு
கதர் வேட்டியும் கம்பளியும்.
நாதன் கடைக்கணக்கு
சந்திக்கடை பாக்கி
கிழமைச் சீட்டுக்காசு
கோயில் உண்டியல்
இருமல் மருந்தும் தடவும் தயிலமும்.
கொய்த மல்லிகையை
குந்தியிருந்து கோர்க்கும் நாருடன்
வியர்த்த முகத்தில்
இளையோடும் எண்ணங்கள்
சரப் பின்னலில்
நாளைய நம்பிக்கையாய்
முடிச்சுக்களுடன். (களப்பூரான் தங்கா)

குடும்பச் சுமையையும் குடும்பத்திலுள்ளோரின் தேவைகளையும் வரவுக்கு அதிகமான செலவுகளையும் நாளைய கனவுகள் குறித்த எண்ணங்களையும் முடிச்சுகளாக்கி, முடிச்சுகளை அவிழ்க்கும் நாளை எண்ணி(க்) காத்திருக்கும் பூக்காரியைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது களப்பூரான் தங்கா அவர்களின் கவிதை.

வறுமை பெண்களிற்குத் தன்னம்பிக்கை
திறமை தருகிறதென்பது உண்மை.
பொறுமையான சுய சம்பாத்தியம்.
பொறுப்பான குடும்பக் கவனிப்பு.
நிறம் மாறி வாடுவதாய்
நிலை மாறாத பூக்காரியிவள்.
தான் சூடி விரயமாக்காது
தாரளமாய் கூவிக்கூவி விற்பவள்.
மன்மதக் கணையாம் பூமாலை.
புன்னகைத் திரையில் வேதனை.
மாலைக்குள் விற்றுத் தீராவிடில்
பாலையாய் வயிறு காயும்.
மருக்கொழுந்தாள் முல்லைச் சிரிப்பழகி
தாமரை இதழ் செண்பகமே
மல்லிகையே சம்பங்கிப் பூவையே (பூக்காரியே)
தமிழ் பூவின் கதம்பமே! (வேதா. இலங்காதிலகம்)

வெயிலில் நிறம் மாறி வாடினாலும் நிலைப் பிறழாது உழைக்கும் பூக்காரியின் தன்னம்பிக்கையும் உழைப்பையும் வெகுவாகப் பாராட்டுகின்றது வேதா. இலங்கா திலகம் அவர்களின் கவிதை. கவிஞருக்குப் பாராட்டுகள்.

குடிகார கணவன்
ஒரு புறம்
படிக்கும் பிள்ளைகள்
ஒரு புறம்
வீட்டு வருமானம்
போதாத குறை
ஒருபுறம்
வறுமையை ஓட்ட
வகையாய்தேர்ந்தெடுத்த
வளமான தொழில் இந்த
தொழிலுக்கு
மூலதனம் தேவையில்லை
வேண்டியது உழைப்பே
லட்சியங்கள் எல்லாம்
உயிர்பெறுவது
நடுத்தர வர்க்கத்து
மக்களால்தான்
வீடெல்லாம் பூவாசம்
வறுமைபோக்க
வீட்டு வேலை முடிந்து
பூக்கட்டும் வேலை
தினமும் நூறு ரூபாய்
தினக்கூலி தீர்ந்திடும்
தினப்படி கவலை
ஆனால் பூகட்டும்
பொன்னமாவின் கவலையெல்லாம்
பெண்கள் இன்று
அவிழ்த்த கூந்தலை
முடித்தால்தானே பூவைக்கமுடியும்
பூவைப்பது அநாகரீகமாய்
கருதும் காலமாகிவிட்டது
பூகட்டி வறுமைதீர்த்தகாலமும்
போய் விடும் போலிருக்கிறது
ரிலையன்ஸ் நிறுவனமும்
பூக்களுக்கு வேர்ஹவுஸ்
அமைச்சுட்டால் எங்க பிழைப்பிலே
மண்தான் போங்க (சரஸ்வதிராசேந்திரன்)

பூத் தொழில் புரிவோரின் குடும்பச் சூழலையும் பூத்தொழில் முறையையும் எடுத்துக் காட்டியுள்ளார். பெண்கள் அவிழ்த்த கூந்தலை முடிந்தால் தானே பூ வைக்க முடியும் என்று, இன்று பெண்களிடம் குறைந்து வரும் பூச் சூடும் பழக்கத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள்(,) கூந்தலில் முல்லை மலர்ச் சரத்திற்கு நடுவில் கனகாம்பரத்தை வைத்துக்கொண்டு சென்றது ஒரு காலம். இன்று கனகாம்பரம் என்ற மலரைப் பெண்கள் கூந்தலில் பார்ப்பது அரிதாகிவிட்டது. பூத் தொழிலின் இன்றைய நிலை(,) எதிர்கால நிலைக் குறித்த சிந்தனையையும் எழுப்பி நம் எண்ண அலைகளைக் கீறிவிட்டிருக்கும் சரஸ்வதி ராசேந்திரனின் கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கிறோம். கவிஞருக்குப் பாராட்டுகள்.

பி.கு. மேகலா இராமமூர்த்தி விடுமுறையில் இருப்பதால் சில வாரங்களுக்கு காயத்ரி பூபதி போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கவுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் அனைத்து கவிஞர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகள். புதிய கவிஞர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம். நன்றி நண்பர்களே.

அன்புடன்

பவள சங்கரி

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 66 – இன் முடிவுகள்!

  1. இந்த வாரத்தின் சிறந்த கவிதையாக என் கவிதையை தேர்ந்தெடுத்த காயத்ரிபூபதிக்கும்
    வல்லமை குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  2. கவிதை படைத்த அனைவருக்கும், வல்லமை குழுவினருக்கும் நன்றி. வெற்றி பெற்ற திருமதி. சரஸ்வதி இராசேந்திரனுக்கு வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *