நிர்மலா ராகவன்

பத்திரிகையில் பெயர் வந்துவிட்டால், புகழ் வருகிறதோ இல்லையோ, எல்லாருக்கும் பொறாமை வருகிறது. என்னமோ பத்திரிகைக்காரர்கள் கொட்டிக் கொடுத்து, அந்த சன்மானத்தில் நாலு பங்களா வாங்கிப் போட்டுவிட்ட மாதிரிதான்! இந்த மனிதர்களை எண்ணி அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை இந்திராவுக்கு.

இருபத்தைந்து ஆண்டுகளாக புனைப்பெயரிலேயே எழுதி தன்னை மறைத்துக் கொண்டவளின் போதாத காலம் ஏதோ போட்டியில் பரிசு கிடைத்து, புகைப்படம் மூலம் அவள் முகமும், அத்துடன் சொந்தப்பெயரும் எல்லாருக்கும் அறிமுகமாகிவிட்டது.

பரிசு வாங்கியதில் தன்னம்பிக்கை துளிர்த்தது. துணிந்து, சமூகத்தின் குறைகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தபோதுதான் பிடித்தது சனி.

இவள் பெண்களுக்குச் சமத்துவம் கேட்கப்போய், எல்லாப் பெண்களும் விழித்துக்கொண்டு, அப்புறம் நம்மையே குப்புற வீழ்த்தி விடுவார்களோ என்று பயந்தார்கள் ஆண் வாசகர்கள்.

பயம் இருப்பவன்தான் பயங்கரமானவனாக ஆகிறான் என்று எங்கோ படித்தது இந்திராவுக்கு நினைவு வந்தது.

அடங்கிக் கிடப்பதுதான் பெண்ணாகப் பிறந்ததன் பயன் என்றெண்ணிய பெண்களோ, `இவள் என்ன நம்மை மட்டம் தட்டுவது!’ என்று ஆத்திரம் அடைந்தார்கள்.

யாராவது மிகுந்த பலம் அடைவதற்குள் எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று எல்லாருமே கங்கணம் கட்டிக்கொள்கிறார்கள். சிலர், வெளிப்படையாக எதுவும் செய்யத் துணிவின்றி, புகழ்வதுபோல, தந்திரமாகக் குழிபறிக்கிறார்கள்.

எவனுக்கோ இவள் தலையெடுத்தது பிடிக்கவில்லை. இல்லாவிட்டால், நாற்பது வயதான, ஒரு பெண்ணுக்கும் தாயான இவள் பெயருக்குமுன்  `மிஸ்` போட்டு கடிதம் எழுதியிருப்பானா?

`அது எப்படி கண்ட தடியனெல்லாம் என் பெண்டாட்டிக்கு கடுதாசி எழுதப்போச்சு!’ என்ற கோபத்தைவிட, எழுதின முட்டாள் `மிஸ். இந்திரா’ என்று விலாசத்தில் எழுதியிருந்ததுதான் கதிரேசனது ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது.

“உன்னையெல்லாம் காலை ஒடைச்சு, வீட்டிலேயே  வைக்கணும். பெரிய மனசு பண்ணி, வேலைக்குப் போக விட்டிருக்கேன்ல? சம்பாதிக்கிற திமிரு! அதான் கொழுத்துப் போச்சு!” என்று ஆரம்பித்தவன், என்னமோ இவள் தானாகப்போய் எவனுடனோ கள்ள உறவு வைத்துக்கொண்டதுபோல பேயாட்டம் ஆடினான்.

அடுத்து என்ன நடக்கும் என்று புரிந்து போயிருந்தாலும், கணவனுக்கு எதிர்பேச்சு பேசாது, அடங்கிப்போவதுதான் ஒரு நல்ல மனைவியின் தர்மம் என்று வளர்க்கப்பட்டு இருந்ததால், பலியாடுபோல் எதற்கும் தயாராக நின்றாள்.

தாயின் வீங்கிய முகத்திலும் உடலிலும் ஒத்தடம் கொடுத்தபடி வசந்தா பேசினாள்: “இன்னும் எத்தனை நாளைக்கும்மா இப்படி அடிபட்டு சாகப்போறீங்க? நீங்கதான் சுயமா சம்பாதிக்கிறீங்களே! எங்கேயாவது தனியா போயிடறது!”

உலகம் புரியாத மகளைக் கனிவுடன் பார்த்தாள் இந்திரா. கல்யாணத்திற்கு நிற்பவள்!

ஒரு பெண் கணவனிடம் படும் அவதியைப் பற்றி யாருக்கு என்ன  அக்கறை! `பொண்ணுக்கு அம்மா சரியில்லையாமே!’ என்றுதான் மற்ற எல்லாப் பெண்களும் வம்பு பேசுவார்கள்.

பிறர் கிடக்கட்டும், தனக்கேகூட பயமாகத்தான் இருக்கிறது. ஒரு பெண் இந்த உலகத்தில் தனியாக இருக்க முடியுமோ? `ஆண் என்னும் கொழுகொம்பில் படருபவள்தான் பெண் என்னும் மெல்லியலாள்’ என்று சினிமா, கதைப்புத்தகங்கள் மூலம் நம்ப வைத்து விட்டார்களே!

சரி, கொடுமைக்காரரான இவரை விட்டுவிட்டு, வேறு ஓர் ஆணைத் தேடிக்கொள்ளலாம்தான். அவன் மட்டும் நல்லவனாக இருப்பான் என்பது என்ன நிச்சயம்?

தீர்மானிக்க முடியாததோர் எதிர்காலத்தைவிட கசப்பான நிகழ்காலத்தையே பொறுத்துப் போகலாம் என்றுதான் விரக்தியுடன் எவ்வளவோ இம்சையைத் தாங்கி வந்திருக்கிறாள். எல்லாம் இந்தப் பெண்ணுக்காகத்தானே! அது புரிகிறதா இவளுக்கு!

“அப்பா முந்தியெல்லாம் இப்படியா இருந்தாரு! நம்ம போதாத காலம், குடிச்சுட்டு காடியை எவன்மேலேயோ ஏத்தி, லைசன்சு போயிடுச்சு. என்னடா, தனக்கு வேலை போயிடுச்சே, பொண்டாட்டி சம்பாதிச்சுக் கொண்டு வர்ற காசில சோறு திங்க வேண்டியிருக்கேன்னு அவமானம், பாவம்! அவரோட கோபத்தையும், வருத்தத்தையும் வேற யார்மேல காட்ட முடியும், வசந்தா?”

ஆனால், தன் சமாதானத்தை மகளால் ஏற்க முடியவில்லை என்பது புரிந்தது. மகள் தந்தையைத் தவிர்ப்பதையும்,`நான் கல்யாணமே செய்துக்கப் போறதில்லே! அதான் ஃபேக்டரி வேலைக்குப் போறேனே!’ என்று திமிராகப் பேசுவதையும் பார்த்து இந்திராவுக்குப் பயம் வந்தது.

`இந்த காலத்துப் பெண்கள் நம்மைப்போல கையாலாகாத அசடுகள் இல்லை!’ நினைக்கும்போதே பெருமிதம் ஏற்பட்டது.

`பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்,’ என்று அடிக்கடி எழுதிய தன்னுடைய தைரியம் எல்லாம் எழுத்தோடு சரி.`கணவன் செய்யும் எல்லா கொடுமையையும் பொறுத்துப் போகிறவள்தான் நல்ல பெண்!’ என்பதுபோல் அல்லவா நடந்துகொள்கிறோம்!

இனியாவது ஊருக்கு உபதேசம் செய்து கொள்வதோடு நிற்காமல், தான் சொல்லி வருவதைத் தானே கடைப்பிடிக்க வேண்டும். இப்படித் தீர்மானம் செய்து கொண்டாலும், சிறிது பயமும் எழுந்தது இந்திராவுக்குள்.

அன்று சம்பள நாள்.

மனைவிக்காக வீட்டு வாசலிலேயே காத்திருந்தான் கதிரேசன்.

“கொண்டா!” அவனது நீட்டிய கையை லட்சியம் செய்யாது, உள்ளே நடந்தாள் இந்திரா.

நாராசமாகக் கத்தியபடி அவன் அவளைப் பின்தொடர்ந்தபோது, சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தாள் வசந்தா. அவள் கண்கள் பயத்தில் விரிந்தன.

அவ்வளவுதான். இந்திராவுக்கு எங்கிருந்தோ ஆவேசம் வந்தது. கைப்பையை இறுக அணைத்துக் கொண்டாள். “நான் ராப்பகலா வேலை பாக்கிறதில கிடைக்கற காசு இது! ஒங்களுக்கு எதுக்குக் குடுக்கிறது!”

வழக்கத்துக்கு விரோதமான அந்த எதிர்ப்பில் கதிரேசன் சற்றே அயர்ந்து போனான். பிறகு, வெறியுடன் அவள்மேல் பாய, அதை எதிர்பார்த்தவளாக, சட்டென விலகினாள். தாவிய வேகத்தில் சுவற்றில் தலை மோதி, கீழே விழுந்தான்.

சமாளித்தபடி எழுந்திருக்கப்போனவனை இந்திராவின் குரல் தாக்கியது. “சும்மா அப்படியே ஒக்காருங்க. நீங்க பாட்டில எல்லா காசையும் தண்ணியில விட்டுட்டா, வசந்தாவுக்கு ஒரு கல்யாணம், காட்சின்னு எப்படி செய்யறது?”

“என்னமோ, வசந்தா வசந்தாங்கறியே! நானில்லாட்டி ஒம்பொண்ணு எப்படி வந்திருக்கும்!”

இந்திராவின் உதடுகள் அலட்சியத்தில் விரிந்தன. `பிள்ளை பெத்துக்க எந்த ஆம்பளையா இருந்தா என்ன! கற்பழிப்புகூடத்தான் கருவில வந்து முடியுது!’ என்று அவள் நினைப்பு ஓடியது. வெளியில் சொல்வது அசிங்கம் என்று அடக்கிக்கொண்டாள்.

“இதோ பாருங்க! வேலைவெட்டி எதுவும் இல்லாத ஒங்களை வெச்சு சோறு போடறேன் — நீங்க தாலி கட்டின தோஷத்துக்கு. அதுக்கு மீறி, என்மேல ஒங்க கை பட்டுச்சோ, போலீசுக்குப் போயிடுவேன். பொண்டாட்டியை அடிக்கிறது `குடும்ப விவகாரம்’ னு இப்ப யாரும் ஒதுங்கிப் போறதில்ல. நம்ப மலேசிய நாட்டில இது சட்ட விரோதம். தெரியுமில்ல?”

வசந்தாவின் முகத்தில் ஓர் ஆச்சரியக் குறி. கண்ணில் மின்னல் கீற்று தோன்றி மறைந்தது நன்றாகவே புலப்பட்டது. தனக்குக்கூட தைரியம் வந்துவிட்ட பெருமையில், தலை நிமிர்ந்து உள்ளே நடந்தாள் இந்திரா.

கதிரேசன் நிலைகுத்திப்போய் உட்கார்ந்திருந்தான்.

`என்ன பொண்ணு நீ! புருஷனுக்கு மரியாதை குடுத்து நடக்கத் தெரியாது?’ ஏதோ தலைமுறையைச் சேர்ந்த எவளோ கூறியது அசரீரியாகக் கேட்டது.

இந்திரா உதட்டைச் சுழித்தாள். “மரியாதை எல்லாம் குடுத்து வாங்கற சமாசாரம்!” உரக்கவே சொன்னாள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “குட்டக் குட்டக் குனியும்போது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *