புலவர் இரா, இராமமூர்த்தி
***********************************

12

பகவத்கீ தையின் பதினெட்டுப் பாகமும்
மிகவிரைந் தென்னுள் விளங்க – முகத்தில்
இருகோடு கொண்ட எழிலானை உள்ளம்
உருகித் துதித்தேன் உவந்து! 1.

நீநினைப்ப தெல்லாம் நிகழுமா? நின்னினைப்பில்
வீண்கருத்தே மேவி வெளித்தோன்றி – காணும்
பிரச்சினை உன்னையே பின்னிப் பிணங்கும்
சிரைத்திட்டால் போமோ சிகை! 2.
சரியான நல்லறிவு சாத்திய மானால்
அரிக்கும் கவலை அகலும்! – புரிந்த
பொழுதில் புரியாமை முற்றும் புரியப்
பழுது விலகும் பயன்! 3.

பயன்பல நல்கிப் பழவினை போக்கி
நயமாம் வளர்ச்சியை நல்கும்! – சுயநலம்
இல்லா நிலையை எளிதாய் அடையும்
நல்வாழ்வே மீளும் நலம்! 4.

நடவடிக்கை யாவுமே நாதன் அருளை
உடனளிக்கும் வண்ணம் ஒழுங்கின் – தடத்தில்
நிகழின் பெருவாழ்வு நிச்சயம் நேரும்!
புகழ்வீர் இறைதாள் புணர்ந்து! 5.

நானென்னும் ஆணவம் நையும் படிநடந்தால்
வானத்துச் சொர்க்கமே மண்ணிலே – தானாக
வந்தடைந்த தேபோல் மகிழ்வில் திளைத்திடுவாய்!
அந்தமில் லின்பம் மது! 6.

வானகம் பற்றும் வழிதனைக் கற்றும் ,
ஊனகம் நீக்கிய யோகந்தான் – ஈனும்
முறையை அறிந்தே தியானம் முயல்தல்
இறையை இணைவித் திடும்! 7.

எவ்வெவ் வழியில் இறையுடன் ஒன்றும்
அவ்வவ் வழியில் அலைவோர்க்கே, – செவ்வி
தருபவன் கண்ணன்! இதுவே சரியாக
வரும்மெய் அறிவாம் வழி! 8.

ஆக்கம் அறிவோ டுரமும் அவனையே
நோக்கும் பயிற்சியின் நுட்பமாய்த் – தேக்கி
வெளிவிட் டடக்கும் பிராணாயா மத்தால்
ஒளிவிட் டவனுள் ஒடுங்கு! 9.
பழையோனை நுண்ணிய பண்பனை என்றும்
அழியானைத் தேடும் அறிவால் – – விழைகின்ற
ஆத்ம தரிசனம் கண்டாரே அப்பர
மாத்மா அடிசாரு வார்! 10.

கேட்டல் தெளிந்திடுதல் சிந்தித்தல் சேர்தலிவை
தேட்டம் மிகுத்தாரின் தேவையாம் – நாட்டம்
உடையாரின் செய்கைகள் எல்லாம் எனையே
அடையும்! இதுவே அறிவு! 11.

கடவுள் அருளின் கனபரி மாணத்தை
அடவு பிடித்தறிய லாமோ? – படவரவின்
மேலாடும் பாதச் சிறப்பினைப் பாம்பறிந்தால்
சாலப் பணிவே தரும்! 12

முப்பரி மாணமும் தாண்டிய மூலமே!
எப்படி நின்னை அறிவேன்நான்?- தப்பிலா
வித்தாய் இடையாய் கடையாம்எல் லாமேநான்!
அத்தனைக் குள்ளும் அ(றி)ரி! 13.

முப்பத்து முக்கோடி தேவரும் தானாகி
தப்பில்லா மல்எல்லாம் தானாகி – எப்போதும்
எங்கும் நிறைகாட்சி ஈசனே காட்டினான்;
அங்கே விஜயற் கவன்! 14
நம்பிக்கை யோடே மனத்திருத்தி நாடோறும்
பம்பும் சகுணத்தை நிர்குணத்தைக் – கும்பிட்டே
பரவி தியானம் பழகுவோர் காண்பார்,
கரவில் இறைவன் கழல்! 15.
எல்லாம் இறையருளே என்றறிந்து கொண்டிட்டால்
எல்லாம் நலமாய் இயங்கிவிடும் – வெல்லும்
இறைவனே அங்கும் இருப்பதால் எங்கும்
நிறைவேறும் நந்தம் நினைப்பு! 16.

மானுடக் கடமைகள் தம்மை மிகமதித்தே
தானே தகுந்த கடன்களை – ஆன
வரைசெய்த லாலே வரும்பரி சாக
விரையுமே, நீசெய் வினை! 17.
நற்செயல் செய்யும் உரிமையை நாமே
பெற்றிடின் பேராற்றல் பின்வரும் – முற்றும்
இறைவன் அருளே அதற்கடை யாளம்!
குறைவின்றி நீயதைக் கூடு! 18.
உடன்விரைந் திடுவாய்! உனக்கெது மூலம்?
அடைந்திடல் எப்படி எளிதாம் ? – இடைவிடா
துன்னுள் முயன்றே உயர்பிர மத்தினைத்
துன்னுக! அ.:.தே துணை! 19.
முயற்சி பெரிதெனின் முற்றுவித் தின்பம்
அயற்சியில் லார்க்கே அருளும் – இயற்கைப்
பரம்பொருள் தன்னைப் பதினெட்டுப் பாட்டால்
வரம்பெறச் செய்தேன் மகிழ்ந்து! 20.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *