தமிழ்த்தேனீ

வேலைக்கு சேர்ந்து சில நாட்கள் சென்ற பின்   ஒரு நண்பரைச் சுற்றிலும் பல நண்பர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்துவிட்டு நானும் அந்தக்  கூட்டத்தில் பங்கெடுக்க அவர்களை சமீபித்தேன்.

வாப்பா தம்பி வா உக்காரு உன் பேரு என்னா என்றார் நடு நாயகமாக உட்கார்ந்திருந்த ஒரு மூத்த  நண்பர்.

சார் என் பேரு கிருஷ்ணமாச்சாரி, நான் வேலைக்கு சேந்து ஆறு மாதம் ஆச்சு என்றேன். அப்போதுதான் கவனித்தேன் அந்த நடு நாயகம் அங்கிருந்த அனைவருக்கும்  உள்ளங்  கையில் உள்ள ரேகைகளைப் பார்த்து  ஜோதிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.   என் கையை நீட்டச் சொன்னார்.  கடந்த காலத்தைப் பற்றி எல்லோரும் சொல்வார்கள், என் வருங்காலத்தைப்   பற்றிச் சொல்ல முடியுமா என்றேன்.    இங்க பார்ரா  நான் கடந்த காலம் , வருங்காலம்  எல்லாம் சொல்வேன்  என்றார், சரி சொல்லுங்கள் என்றேன். நான் சொல்றது இருக்கட்டும்   நீ உன் வருங்காலத்திலே  என்ன ஆகப்  போகிறாய்  என்றார்.

நான் ஒரு நடிகனாவேன், இயக்குனராவேன், எழுத்தாளனாவேன் என்றேன். கொல்லென்று ஒரு சிரிப்பலை எழும்பியது அங்கே!  இதோ பாரு தம்பி என்னோட முன்னோர்கள் ஜோதிடத்திலே வல்லவங்க, அவங்ககிட்டேருந்துதான்  நான் இந்தக் கலையைக் கத்துகிட்டேன்.

ஆமாம் உனக்கு இந்தக் கலையிலே  நம்பிக்கை இருக்கிறதா என்றார் நாயகம்.  எனக்கு இந்தக் கலையிலே நம்பிக்கை இருக்கிறது, ஆனால் ஜோதிடம்   சொல்பவர்கள் மீது  நம்பிக்கை இல்லை என்றேன்

புரியலையே என்றார் நடுநாயகம்.

இந்தக் கலை  மிக நல்ல கலை, அதில் சந்தேகமில்லை, ஆனால் இந்தக் கலையைக் கற்றுக் கொள்பவர்கள் முழுமையாகக் கற்றுக் கொண்டு சொல்கிறார்களா  என்பதுதான் என் சந்தேகம் என்றேன்.

எப்படி உனக்கு இந்த சந்தேகம் வந்தது என்றார் நடுநாயகம் .  ஆண்களுக்கு வலது கை  ரேகையையும் பெண்களுக்கு  இடது கை ரேகையையும் பார்த்துதான் கைரேகை  ஜோதிடம் சொல்வார்கள், ஆனால் நீங்கள் இங்கே  ஆண்களுக்கே  இடது கை  ரேகையைப் பார்த்து  சொல்கிறீர்கள் என்றேன்.

மீண்டும் ஒரு முறை கொல்லென்று சிரிப்பு ஒலி கேட்டது, இதோ பாரு எல்லாம் தெரிஞ்சா மாதிரிப் பேசாதே, இப்போ உன்னோட வலது  கை ரேகையைப் பார்த்து   நான் பலன் சொல்றேன்  என்றார்.

ஐயா இப்போது மாலை  7 மணி, பொதுவாக இரவில் கை ரேகை ஜோதிடம்  பார்க்கமாட்டார்கள், பார்க்கவும் கூடாது என்றேன்.  திகைத்துப் போனார் அவர்

அவரிடம் நான் சொன்னேன்  உங்களை எல்லாம் தெரிந்தவர்  என்று காட்டிக்  கொள்ள ஜோதிடக் கலையைப் பயன்படுத்தாதீர்கள். இங்கே இருப்பவர்கள்  நீங்கள் கூறுபவைகளை உண்மையென்று  நம்பி அதனால் ஏதேனும் அவதிக்குள்ளானால் அந்த அவதிக்குண்டான பலன் உங்களைச் சேரும், வீணாக பாவம் செய்யாதீர்கள் என்றேன்.

நீ இன்னும் என்னைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அரைகுறையாக  எதையோ தெரிந்து கொண்டு கதையளக்கிறாய்.   சரி நாளை நமக்கெல்லாம் விடுமுறை அப்போது உன் கையைப் பார்த்து நான் பலன் சொல்கிறேன் , அப்போது  தெரிந்து கொள்வாய் என் திறமையைப் பற்றி என்றார்.

இன்று அமாவாசை நாளைக்கு ப்ரதமை, ப்ரதமையில் யாரும்  ஜ்யோதிடம் , ஜாதகம் , கைரேகை பார்க்க மாட்டார்கள் என்றேன்.  ஜ்யோதிடம் ,ஜாதகம் கைரேகை போன்றவைகளை  நல்ல நேரத்தில் தான் பார்க்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நல்ல நாளில் வெற்றிலை பாக்கு போன்றவைகளை காணிக்கையாக வைத்து முதலில் ஜ்யோதிடம் பார்ப்பவருக்கு அளித்துவிட்டு அவரையே  நம்பி, மனதில் உறுதியுடன் , நம்பிக்கையுடன் கேட்பவர் கேட்டால்தான் பலிக்கும் என்றேன்.   அது மட்டுமல்ல  கொண்டு வருபவரிடம் வெற்றிலை பாக்கு இவைகளை  வாங்கி  அந்த வெற்றிலைகளை  முதலில் எண்ணுவார்கள். அதன் பிறகு தனித்தனியே பிரித்து  அந்த வெற்றிலைகளை பின் புறமாக அமைந்திருக்கும் நரம்புகளைப் பரிசோதிப்பார்கள் என்றேன்.

8434400e-81bc-4dbe-bd37-4c23ea2f3868

இதோ பார்ரா  கைரேகையைப் பாருடான்னா  வெற்றிலையோட நரம்புகளைப் பாப்பாங்களாம் என்று எக்காளமிட்டு சிரித்தார் நாயகம்.

ஆமாம் அந்த நரம்புகள் அமைப்பில் வித்யாசம் உண்டு. வெற்றிலையின் காம்பின் பகுதியிலிருந்து சீரான நடு நரம்பும் , அந்த நடு நரம்பிலிருந்து பிரியும் பக்கவாட்டு  நரம்புகள் தொடங்கும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் வெற்றிலையின் வால் பக்கம் சேரும் இடம் வரையில் சீராக, அமைந்து முடியுமிடத்தில் இரண்டு நரம்புகளும் ஒரு புள்ளியில் சந்தித்தால்  அது பெண் வெற்றிலை.

அப்படி இல்லாமல் தொடக்கத்திலிருந்து நரம்புகள் சீராக இல்லாமல் வெற்றிலையின் வால் பக்கத்தில்  அந்த  நரம்புகள் மேலும் கீழுமாய் சந்தித்தால்  அவை ஆண் வெற்றிலை என்றும் சொல்வார்கள். என்றேன் நான்

ஆமாம் உனக்கு என்னா வயசு என்றார் நாயகம், நான் சொன்னேன்  18 முடிந்து  ஆறு மாதங்கள் ஆகின்றன என்றேன்.  அதுக்குள்ள  வெற்றிலையிலேயே  ஆண் பெண் விதயாசம்  பாக்க  ஆரம்பிச்சிட்டியா  உருப்பட்டாப் போலத்தான் என்றார் நாயகம்.

ஐய்யா நான்  பார்க்கிறேன் என்று சொல்லவில்லை ஜோதிட விவரமறிந்தவர்கள்  இதையெல்லாம் கூர்ந்து கவனிப்பார்கள்  என்று சொன்னேன்.

ஓஹோ   சரி சரி நானும்தான் கேக்கறேன்  உனக்குத் தெரிந்ததை யெல்லாம்  சொல்லு , நாங்க நம்புவோம்  என்று நக்கலடித்தார் நாயகம்.

நானும் அமைதியாக  அப்படியே ஐயா சொல்கிறேன் நம்புவதும் நம்பாததும்  உங்கள் இஷ்டம்.  இப்படி நாம் கொண்டு செல்லும் வெற்றிலைகளை  நம்மிடம் பேசிக் கொண்டே   நமக்கே தெரியாமல்  அவைகளில் பெண் வெற்றிலை எவ்வளவு, ஆண்  வெற்றிலை எவ்வளவு  என்று எண்ணிக்கையை மனதில் வைத்துக்   கொள்வார்கள். அதில் பெண் வெற்றிலைகள் எவ்வளவு ஆண் வெற்றிலைகள் எவ்வளவு என்று எண்ணி அந்த எண்ணிக்கையை மனதில் கொண்டு பலன்களை சொல்வர் என்றேன்.

வெற்றிலை என்பது வெற்று இலை அல்ல, விஷயமுள்ள இலை என்பது என் அனுபவத்தில் அறிந்திருக்கிறேன்.  கும்பகோணத்து மக்கள் வெற்றிலை போடும் அழகை ரசித்திருக்கிறீர்களா   நல்ல விருந்தை உண்டுவிட்டு, சாவகாசமாக திண்ணையில் காற்றாட வந்து உட்கார்ந்து இடுப்பில் வேட்டி மடிப்பில் இருக்கும் அந்தச் செல்லத்தை ,அந்த வெற்றிலைப் பெட்டியை எடுத்து கனிவோடு ஒரு முறை அதைப் பார்த்துவிட்டு,  கையால் அன்பாக இதமாக அந்தப் பெட்டியைத் தடவிக்கொடுத்துவிட்டு, வலிக்காமல் மெல்லத் திறந்து  அதன் உள்ளே இருக்கும் வெற்றிலையை,  ஒவ்வொன்றாக எடுத்து  உள்ளங்கையால் சுத்தமாக  ,இதமாக  தடவி , வெகு லாவகமாக மனதுக்கு  இதமான சொற்களை, கலைகளை, ஆராய்ந்து கொண்டே, சங்கீத ஞானத்தையும்  விவரித்துக்கொண்டே, கூடவே சில குறும்புக்காரர்கள்.

சங்கீதம் பாடிய  பெண்மணியின் சாரீரத்தையும் , கூடவே  சரீரத்தையும் பற்றி  மிக லாவகமாக நுணுக்கமான சொற்களால் குறும்புடன் ஸ்லாகித்துக்கொண்டே   இதமாக  சுண்ணாம்பை எடுத்து வெற்றிலையில் தடவி, லாவகமாக நடு நரம்பில் மடித்து முன் பக்கமாக நடு நரம்பை மட்டும் கிழித்து, மடித்து  கையில் வைத்துக்கொண்டு, மணக்கும் தூள் பாக்கை வாயில் போட்டுக்கொண்டு, மடித்த வெற்றிலையை வாயில் போட்டு வெற்றிலைக்கு வலிக்காமல் இதமாக மென்று அதன் சாறை வாயில் குதப்பிக்கொண்டே பன்னீர் புகையிலையையும்  வாயில் போட்டு அதோடு சுவைத்து  கடைவாயில் அதை அடக்கிக்கொண்டு  சிவந்த  உமிழ் நீர் வழிய எதிரே இருப்பவர்மீது தெறிக்காமல் பேசும் நளினம் இருக்கிறதே அடடா!

இத்தனை கலைகளும்  அந்த வெற்றிலைப் பெட்டியில்தான்  இருக்கிறது என்று நம்பும் அவர்களுக்கு   இந்த வெற்றிலைப் பெட்டி  செல்லம்தான்.

வெற்றிலைப் பெட்டி செல்லமாக இருக்கலாம், ஆனால் வெற்றிலையே செல்வம் என்று நாம் உணர்வோம். வீட்டில் வெற்றிலைக் கொடி வைத்து அந்தக்  கொடி நன்றாக வளர்ந்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.  தேனி மாவட்டம் பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி, சில்வார்பட்டி, நல்லகருப்பன்பட்டி, பெரியகுளம் கீழவடகரை, தெய்வேந்திரபுரம், தாமரைக்குளம் மற்றும் போடி, சின்னமனூர் பகுதியில் அதிக அளவில் வெற்றிலைக் கொடி பயிரிடப்படுகிறது.

வெற்றிலையில் எத்தனை ரகம் இருக்கிறது என்று பார்த்தால்  கருப்பு வெற்றிலை அல்லது கார வெற்றிலை  என்னும் கும்பகோணத்து கொழுந்து வெற்றிலை ஒரு ரகம்.  கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன.கற்பூர மணத்துடன் சறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றலையாகும்.

வெற்றிலைக்கு நல்ல மணமும் , காரமும் உண்டு. கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. அகத்தி மரங்களை இடையில் வளர்த்து அதில் வெற்றிலைக் கொடிகளைப் படர விடுவார்கள். சில வெற்றிலைகள்  நன்றாகப் படர்ந்து பெரியதாக வளரும், சில வெற்றிலைகள்  சிறு வடிவமாய் இருக்கும் ,பெரிதாக வளராது.

பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும்,  உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.  வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடன் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர நீர்ச்சுருக்கு என்னும் நோய் குணமாகும்.

வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி அதை அடுப்பில் காயவைத்து லேசான சூட்டுடன் குழந்தைகளின் மார்பில் பரப்பினால் நாள்பட்ட சளி கரைந்து குழந்தை சுகமாக மூச்சுவிடும்.

வயிற்றுப் பொறுமல் மந்தம் போன்றவைகளுக்கு இதே முறையில் வெற்றிலையை வாட்டி வயிற்றில் இட்டால் சற்று நேரத்தில் குழந்தை வலி நீங்கிச் சிரிக்கும்   வெற்றிலைச் சாறுக்கு  தொண்டையிலுள்ள குரல் நாளங்களைச் சரிப்படுத்தும் குணம் உண்டு , அதனால் குரல் வளமாகும் . அதனால்தான் இசைக்கலைஞர்கள் வெற்றிலை போடும் பழக்கம் மேற்கொள்ளுகிறார்கள்.

 மன்னருக்கு  வெற்றிலை மடித்துக் கொடுக்க அடைப்பைக் காரர்கள் என்று ஒரு  வேலையாள் உண்டு.  அவர்கள் வெற்றிலையை பின்பக்கமாக மடித்து நடு நரம்பு நீக்கி  அளவாக சுண்ணாம்பு தடவி தேவையான பாக்கை அதிலிட்டு மன்னர்களுக்கு சுவைக்கக் கொடுப்பார்கள்.

தாம்பூலத்தில் பயன்படும் வெற்றிலை இல்லாத வைபவமே கிடையாது. இன்று வரை  வெற்றிலை இல்லாத வைபவங்களோ, பண்டிகைகளோ கிடையாது.  வெற்றிலையில் மைதடவிப் பார்த்து குறி சொல்லுபவர்கள் உண்டு.   திருமண சம்பந்தத்தை உறுதி செய்ய வெற்றிலை பாக்கு வைத்து தட்டு மாற்றிக்கொண்டு  தொடங்குவார்கள் .

வெற்றிலையில் ஒரு ரகசியம் உண்டு

 நல்ல நாட்கள் பார்க்கவோ, திருமண சம்பந்தம் பேசவோ நாம் ஜோசியரிடம் செல்லும்போது நாம் வெற்றிலை  அவரிடம் அளித்தால், அவர்கள்  எத்தனை வெற்றிலை நாம் கொண்டு சென்றோம் என்பதை  எண்ணியே நாம் நினைத்த காரியம் நடக்குமா நடக்காதா  என்று கூறிவிடுவார்கள்.

அது மட்டுமல்ல வெற்றிலையின் அமைப்பில் கிளை நரம்புகள்  வெற்றிலையின் இருபக்கத்திலும் சமமாகப் பரவி நடு நரம்போடு வந்து  இணையும் வடிவத்தை வைத்துக்கொண்டே  அந்த வெற்றிலை ஆண் வெற்றிலையா ,அல்லது பெண் வெற்றிலையா  என்று கண்டறியும் அறிஞர்கள் நம்மிடையே உண்டு

அப்படி கண்டு பிடித்து பெண் வெற்றிலை அதிகமாக இருந்தால் அதை வைத்து  வந்தவரின் காரியம் நடக்க சாத்தியக் கூறுகள் எவ்வளவு சதவிகிதம் என்பதையும் கண்டறிவார்கள்.  பெண் வெற்றிலை அதிகமாயிருந்தால்  அதை சக்தியின் வடிவம் என்பர். காரிய சித்திக்கு  அதிக எண்ணிக்கை கொண்ட பெண் வெற்றிலை சக்தி கொடுக்கும் என்பது நம்பிக்கை.

“அந்ததை அடைக்காய் தின்பதில் ஊறு

முதல் நீர் நஞ்சாம்-அதி பித்தம்

இரண்டாவதூறு நீரே-கடையமிர்தம்

மூன்றாவதூறு நீர் தான்

கனமதுர நான்காவதூறு மந்நீர்

மடையெனவே ஐந்தாறிற் சுரந்துள் ஊறி

வருநீர் களைச் சுகித்து

தடையுருப் பித்தமொடு மந்த நோயும்

தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம்.””

என்று தேரையர் என்னும் சித்தர்  எழுதியிருக்காரு   என்றேன்

அடேங்கப்பா எல்லாம் தெரிஞ்சிருக்கே உனக்கு என்று என்னைச் சமாளிக்கும் விதமாக  தன் தோல்வியை சமாளித்தார் நடுநாயகம்.

அன்புடன்

தமிழ்த்தேனீ

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““ ஜோதிடம் “

  1. வெறும் இலை என்ற நினைத்திருக்கும் வெற்றிலையில் இவ்வளவு விஷயங்களா! தகவலுக்கு மிக்க நன்றி.
    பாதசாரிகள் நடக்கும் இடத்தில் உட்கார்ந்து, ஜோசியம் பார்க்கிறார்கள் கோலாலம்பூரில். நாள், கிழமை, நேரமெல்லாம் யார் கண்டார்கள்? நமக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் பலரும் அவர்களை நாடுகிறார்கள்.

    நிர்மலா ராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *