உடம்பெனும் தராசில் இது ஒரு அக்கினிப் பரிட்சை

அவ்வை மகள்

“நீங்களே சொல்லுங்கள் இந்தக் காவலர் வேலை, பெண்ணுக்கு எத்தனை நாள் தாங்கும்?” என்று எதிர் கேள்வி கேட்ட அந்தப் பெண் காவல் அதிகாரியைப் பார்த்து, நான் சொன்னேன்: “வேறு மாதிரியல்லவா கேள்விப் பட்டிருக்கிறோம் – “காவல் துறையில் ஆணாதிக்கம் – பாலியல் பலாத்காரம் – பெண்ணுக்கு அங்கீகாரம் இல்லை –” நான் சொல்லி முடிக்கும் முன் குறுக்கிட்டார்.

“இவையெல்லாம் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவை இல்லாத இடம் ஒன்றைச் சொல்லுங்கள் பார்க்கலாம்! நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒவ்வொவொரு பெண்ணும் ஒவ்வொவொரு பணியிடத்திலும் சந்திக்கும் பிரச்சனை அல்லவா அது? சில இடங்களிலே அது அதிகமாய் இருக்கும் – சில இடங்களிலே அது குறைவாய் இருக்கும். பார்க்கப்போனால் சில பணிகள் பெண்ணாதிக்கத்திலேயே இருக்கின்றன. அங்குள்ள ஆண்களும் சில கஷ்ட நஷ்டங்களைச் சந்திக்க நேரிடலாமே! அங்கே பாலியல் பலாத்காரம் இல்லாமல் இருக்கும் – உண்மை. ஆனாலும் ஒரு சில தகவமைப்புச் அசவுகரியங்கள் ஆணுக்கு அங்கே ஏற்படுவது இயல்பேதான் அல்லவா?”

தொடர்கிறார்-

“ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் – இந்நாட்டில் – பாலியல் பலாத்காரம் என்பது மிகப்பபெறிய குற்றம் – அது கடுமையான தண்டனைக்குரியது – அதனைச் செய்ப்பவர் வாழ் நாள் பரியந்தம் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும். அது சரியாக எடுத்துச் சொல்லப்படும்போது கண்டிப்பாக அது மேலே செல்கிறது; இங்கே பணியிடப் பாலியல் பலாத்காரத்துக்காக பல பேர் தன்டைனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அதை மற்றப் பணியிட அசவுகரியங்களோடு இங்கு இணைக்காதீர்கள் – அது தனியான விஷயம்! அதைத் தனியே விரிவாகப் பேசவேண்டும்! எல்லாப் பணிகளிலும் அது நீக்கமற நிறைந்திருக்கிறது வெவ்வேறு வடிவங்களில்!”

“ஆனால் காவல் துறைப்பணியில் முரண்படுவது பெண்ணின் உடம்பும் உள்ளமும் – இப்பணிக்குப் பொருந்தாத இரண்டையும் வைத்துக்கொண்டு அல்லாடுவது அத்தனை சுலபமான செயல் அல்ல. ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்கு இந்தப் பணி பொருந்தலாம். ஆனால் எல்லோரையும் அதில் பொருத்திப் பார்க்க வேண்டும் என்பதும் அதிலே அவர்களை ஆசை காட்டி வலுக்கட்டாயமாக இறங்கச் சொல்வதும் மிகப்பெரிய குற்றம் என்பேன்.” என்றார்.

“பெண்கள் எல்லாத்துறையிலும் இருக்க வேண்டும் என்கிற ஆசை எல்லா நாடுகளிலும் இருக்கிறதே – ஆண்-பெண் சம உரிமை இன்று மிகவும் வலுவான விஷயம் இல்லையா!” என்றேன்.

“சமத்துவம்? தீயணைப்புப் பணியில் – உச்சிமேல் நின்று கட்டிடம் கட்டும் கட்டிடப் பணியில், சுரங்கப் பணியில், கடலில் எண்ணைக்கிணற்றைத் தோண்டுவதில் – எத்தனைப் பெண்கள் இருக்கிறார்கள் என்று போய் முதலில் பார்த்து விட்டு வந்து பேசுங்கள்!” ஆண்-பெண் சமம் என்பது எங்கே இருக்கிறது என்று “ உடலில் சமத்துவம் இல்லாதபோது – இது என்ன பேச்சு?” என்றார்.

கடினமான பணியில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அடுத்த தலைமுறையை ஊக்குவித்து இப்பணிக்கு சிபாரிசு செய்தால் அடுத்த தலைமுறை இப்பணியை சிறப்புற வளர்க்கும் – அதை நீங்கள் செய்யலாமே!” என்றேன்.

பளீரென வாய் விட்டுச் சிரித்தார்!

“ஒரு பெற்றோர் என்ற முறையில் என் மகளை இவ்வேலைக்குச் செல்ல நான் எந்நாளும் அனுமதிக்க மாட்டேன்.” “பெண் என்றால் அவளுக்கு சமாதானமும் இசைவும் முக்கியம். என் மகள் இவ்வேலைக்கு வந்தால் அவள் இவ்விரண்டையும் நிச்சயமாய் இழப்பாள்!” ஏற்கனவே இப்பணியில் இருப்பதால் அவளை நான் சரிவர கவனிப்பது கூட இல்லை!” “அது மட்டுமல்ல பெண்ணென்றால் பதவி உயர்வுக்கு இங்கே காவல் துறையில் படாத பாடு படவேண்டும்! – “is it that worth for a female?” பெண்ணுக்குப் பணியில் அததனைப் போராட்டம் தகுமா?” என்றவர் தொடர்கிறார்.

“அடுத்த தலைமுறை பெண்களுக்குப் போகாத பணியாகக் காவல் பணி மாறிவருகிறது என்றால் இது பெண்களுக்கு ஏற்ற வேலை இல்லை என்று என்னால் ஆணித்தரமாய்க் கூறமுடியும்!”

“என்னைப் பொருத்தவரையில் பெண் எந்த பணியைச் செய்தாலும் அதில் அப்பெண்ணுக்கு உடம்பின் ஒப்புதல் இருக்க வேண்டும். இவ்வேலையை இவளால் செய்யமுடியுமா – இவளுக்கு இந்த வேலையால் பாதிப்பு நிகழுமா என்பதை நாம் முதலில் அனுமானித்தாக வேண்டும். மற்றவை எல்லாம் அப்புறமே!”

“நீங்கள் என்னதான் முயற்சி பண்ணினாலும் ஒரு ஆணைப்போல் இங்கு நீங்கள் பிரகாசிக்க முடியாது – இது அவன் பணி – அவள் பணி அல்ல!” போய்ப் பாருங்கள் பென்னி ஹாரிங்டனின் கதையை!” – “கேட்டுக் கொள்ளுங்கள்! மொத்தத்தில், இந்த 110 ஆண்டுகளில் ஏதோ ஓர் சில பேர் இங்கே வெற்றி பெற்றிருக்க முடியும். அது பெண்ணினமே வெற்றி பெற்று விட்டதாகக் கொள்ளும் பெருமிதம் அல்ல!”

பேசினார் – முடித்தார் – “எனக்கு வேலை இருக்கிறது – நான் செல்ல வேண்டும்” என்று புறப்பட்டார். நான் சற்று நேரம் அசையாது அங்கேயே நின்றேன். அவள் பேசிய ஒவ்வொன்றும் மாணிக்க வார்த்தைகள்! அனுபவத்தின் வாக்குமூலம்! 110 ஆண்டுகள் இந்த நாடு செய்த பரிசோதனையின் முத்தாய்ப்பான கண்டுபிடிப்பு இது. பெண்ணைப் பற்றி பெண்னே பேசின சுய போதனை.

நினைத்துப் பார்த்தேன் பாரதியை – பாரதியை எடுத்துக்காட்டி எடுத்துக் காட்டி – விளாசிப் பேசும் நம்மவர் துறு துறுப்பை.

அமெரிக்கக் காவல் துறையில் பெண்கள் வளர்ந்து வந்த கடுமையான பாதையைத் திரும்பிப்பார்த்தேன். அமெரிக்காவின் முதல் பெண் காவல் துறைத் தலைமையான பென்னி ஹாரிங்டன் அசாதாரணப் பெண். உலகத்தில் காவல் பெண்கள் எனும் வரலாற்றில் பென்னி ஹாரிங்டனுக்கு என்றும் நிலைத்த சிரஞ்சிவியான இடம் உண்டு. ஆனால் தலைமையில் அமர்ந்த இரண்டே ஆண்டுகளில் பதவி விலகினார் – இல்லை! நிர்ப்பந்தத்தின் பேரில் பதவி விலக வைக்கப்பட்டார் என்றே சரித்திரம் காட்டுகிறது.. மீண்டும் அவர் காவல் துறையினில் நுழையவே இல்லை – நுழையவும் முடிய வில்லை. காவல்துறையின் வெளிப்புற உபரிப்பணிகளில் தான் அவரால் வேலை பார்க்க முடிந்தது.

காவல் துறையில் மற்றும் தீயணைப்புத் துறையில் பெண்களுக்குள்ள பிர்ச்சனைகளை, .குறிப்பாக, பாலியல் பிரச்சினைகளை இவர் ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாது அவற்றை அணுகும் – நிவர்த்திக்கும் வழிமுறைகளையும் போதித்தவராகிறார். பெண் காவலர்களைப் பணியமர்த்தவும் அவர்களை காவல் பணியில் தக்க வைக்கவும் அவர் வழிமுறைகளை நிறுவி இருக்கிறார்.

மிகப் பிரசித்தி பெற்ற மூன்று நூல்களை எழுதி இருக்கிறார். பெண்ணியக் குழுமங்களோடு மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்து பெண்களுக்காக மிகப்பெரிய அளவில் கூக்குரல் எழுப்பி இருக்கிறார். காவல் துறைப்பெண்களுக்கான தேசிய வாரியம் நிறுவி இருக்கிறார். இவரது மூசசும் நாடியும் காவல்துறையில் பெண்களின் முன்னேற்றம்” என்கிற ஒன்றையே தான் ஒலித்தவண்ணம் இருந்தன. இரண்டே ஆண்டுகள் தாம் அவர் காவல் தலைமையில் இருந்தாலும், காவல் துறையில் அவர் செய்த மறுமலர்ச்சிகள் முத்தாய்ப்பானவை. எந்த ஒரு ஆண் தலைமையும் சிந்தித்துப் பார்க்கவியலாத புதுமுனைப்பான திருத்தங்களைக் காவல் பணியின் நடைமுறையில் கொண்டு வந்தார். சொந்த கணவனே ஆனாலும் (அதுவும் அவனும் ஒரு காவலரே என்ற போதிலும் ) சட்டத்தின் முன் அவனும் ஒன்றே என பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டவர். அவனைப் பதவியிலிருந்து விலக்கியும் இருக்கிறார்.

கறுப்பினத்தவர் மீதும், ஏழை எளியோர் மீதும். பெண்கள் – குழந்தைகள் மீதும் காவலர்கள் காட்டும் வன்முறையைச் சாடி அதனைத்தடுத்தார். வெள்ளை இனப் பெண்ணுக்கு எத்தனை நெருக்கடிகள் – இன – சமூக அழுத்தங்கள் – அந்தஸ்து இத்யாதிகள் இருக்கும் என்பதை இங்கிருப்பவர்க்ள நேரடியாக உணரமுடியும். ஆனால் வெள்ளை இனமாய் இருந்த போதும், வெள்ளை இனத்துக்கு சார்பு தராத துணிச்சல் பென்னி ஹாரிங்டனிடம் இருந்தது. அநியாயமான முறையில் ஒரு கறுப்பினக் காவல் அதிகாரி வெள்ளையினக் காவலரால் கழுத்து நெரித்து மூச்சடைக்க வைத்து கொல்லப்படுகிறார். அந்த சம்பவத்தில் அந்த வெள்ளை அதிகாரிகளை உடனடியாகப் பணி நீக்கம் செய்கிறார் பென்னி. ஆனால் கொல்லப்பட்ட கறுப்பின அதிகாரியின் அடக்க நாளன்று வெள்ளை காவலர்கள் “அவனை நெரிக்காதே! எரித்து விடு!” என்ற வாசகம் பதித்த “டி ஷர்ட்” அணிந்து கொண்டாடுகிறார்கள். இந்தக் கொடுமையான செயலுக்கு காரணமாயிருந்த அந்த இரு கொலை கார வெள்ளை அதிகாரிகளையும் சுட உத்தரவிடுகிறாள் பென்னி. ஆனால் வெள்ளை வலையின் சூழ்ச்சியும் வலிமையும் அவளது பணிக்கு யமனாக அமைகின்றன. பதவி நீக்கம் செய்யப்பட்ட அவளது கணவனைக் கைக்குள் போட்டுக்கொண்டு வெள்ளை சூழ்ச்சி வலுக்கிறது.

தனது 22 வயதில் (1964ல்) காவல் பணியில் காவலராகப் பணியில் சேர்ந்தவர் பென்னி. 22 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் தலைமைக்கு அமர்த்தப் படுகிறார். எனவே காவல் பணியில் பழுத்த அனுபவம் கொண்ட நிலையில் மட்டுமே காவல் தலைமைக்கு பென்னி வந்தார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

சூழ்ச்சியின் விளைவு நிகழ்ந்தது பணி நீக்கம் மட்டுமல்ல – கணவனையும் கையயோடு விவாகரத்து செய்த்துவிட்டு தான் வெளியேறுகிறார் காவல் துறையை விட்டு. கலிபோர்னியாவின் மாரோ பே நகரில் குடியேறி அங்கு வாசம் செய்து வருகிறார். இன்று அவருக்கு 74 வயது. கடை வைத்து வியாபாரம் பண்ணுகிறார். படிக ஜெபமாலைகள் விற்கிறார் – தியானம் மற்றும் ரெய்கி கற்பிக்கிறார். தெய்வீக – தியான விஷயங்களும் வாடிக்கையாளர்களுடன் சம்பாஷிப்பதுமாக, அவரது வாழ்வின் கடைசி கட்டம் போய்க்கொண்டு இருக்கிறது.

இவரது கடைக்கு வருபவர்கள் கேட்கும் காவல் துறைப் பணி தொடர்பான கேள்விகளுக்கெல்லாம் சலிக்காமல் பதில் சொல்கிறார். காவல் துறையில், காவல் பணியில் தனக்கு ஏற்பட்ட ரணங்களை ஆற்றுமுகமாக ஜெபத்தையும், தியானத்தையும், ரெய்கியையும் தான் அப்போதே மேற்கொண்டிருந்ததாகக் கூறுகிறர். பணியிடப் பிரச்சனைகள் பெண்களை மிகவும் பாதிக்கும் அதுவும் உடம்புக்கும் உள்ளத்துக்கும் ஒத்துவராத பணி பெண்களின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல எனபதை இத்தனைப் போராட்டத்த்திற்குப் பிறகு, தான் மனபூர்வமாய் உணருவதாகக் கூறுகிறார். “பெண்ணென்றால் அமைதி வேண்டும் அவளுக்கு. அவளுடைய உடற் கூறு – அவளுடைய உள்ளக் கூறு இவை இரண்டும் ஆணிலிருந்து வித்தியாசமானவை – அந்தத் தெளிவை நான் பட்டு நொந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்று பெண்களின் உன்னதமும் மென்மையும் எத்தனை அற்புதமானவை என்பதை என்னைப்போல் ரசிக்க எத்தனைப் பேரால் முடியும்?” என்கிறார்.

உடம்பெனும் தராசில் நடக்கும் அக்கினிப் பரிட்சையில் பெண்ணின் உள்ளமும் வேகும் என்று ஹாரிங்டன் சொலவதை எவரே மறுப்பார்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *