அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்      

தவ்வையைக் காட்டி விடும்.

     -திருக்குறள் -167(அழுக்காறாமை)

 

புதுக் கவிதையில்…

 

பொறாமை

பிறர்மீது கொண்டவனிடம்

சேர்ந்திருக்கமாட்டாள்

செல்வமெனும் சீதேவியும்..

 

ஓடிடுவாள் அவள்,

வறுமையெனும் மூதேவியை

விட்டுவிட்டு அவனிடம்…!

 

குறும்பாவில்…

 

செல்வமாம் சீதேவி போய்விடுவாள்,   

பொறாமை கொண்டவனிடம்

வறுமையாம் மூதேவியை விட்டுவிட்டு…!

 

மரபுக் கவிதையில்...

 

செல்வ மென்னும் சீதேவி

     சேர்ந்தே யென்று மிருப்பதில்லை,

பொல்லாப் பொறாமை கொண்டவனைப்

   பிரிந்தே ஓடிச் சென்றிடுவாள்,

அல்லல் தந்திடும் வறுமையெனும்

  அக்கா மூதேவி காட்டிவிட்டே,

கொல்லும் பொறாமை கைவிட்டே

  கூடி வாழ்வீர் மானிடரே…!

 

லிமரைக்கூ…

 

செல்வாள் சீதேவி ஓடியே,

பொல்லாப் பொறாமையுடையானை விட்டு,   

மூதேவி வறுமைவரும் தேடியே…!

 

கிராமிய பாணியில்…

 

வேண்டாம்வேண்டாம் பொறாமவேண்டாம்

மனுசனுக்குமனுசன் பொறாமவேண்டாம்..

 

பொறாமவுள்ள மனுசங்கிட்ட

சேருற செல்வமெல்லாம் போயிருமே

அதத்தரும் சீதேவியும்

அவனவுட்டே போயிருவாளே,

அக்கா மூதேவி வறுமயத்தான்

அவங்கிட்ட அனுப்பிருவாளே..

 

அதால,

வேண்டாம்வேண்டாம் பொறாமவேண்டாம்

மனுசனுக்குமனுசன் பொறாமவேண்டாம்…!

 

செண்பக ஜெகதீசன்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *