இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 4.

0

அவ்வை மகள்

 மனோமயமும் அம்மையப்ப உறவும்

இறையியல் சிந்தனைகள்

நான் யார்? என்பது மிகப்பிரசித்தமான கேள்வி. ஊடகங்கள் பரவின பிறகு இந்த கேள்வி வெகுமிகவே பிரசித்தமாகி விட்டது. எவரைப் பார்த்தாலும், இந்த நான் யார் கேள்வியை தம் பேச்சு வழக்கில் வெகு அதிகமாகவே பயன் படுத்துகிறார்கள். விவாதிக்கிறார்கள் – விளக்கம் தருகிறார்கள். இத்தனை ஊக்கத்திற்கும் ஏதேனும் விளைவு இருக்கிறதா, உண்மையில் நிறைய பேர் “நான் யார்?” என்று தன்னைத்தானே வினவுகிறார்களா என்று நான் சுற்றிலும் பார்த்தால் நாம் காணும் காட்சி வெகுசுவாரசியமான காட்சியாக இருக்கிறது.

ஒருவர் கேட்கிறார்: நான் யார்? நான் ஒரு கணக்குப்பிள்ளை (Accountant ஐ கணக்குப்ப்பிள்ளை என்னலாமே!). நான் அதற்கேற்ற மிடுக்கோடு உடையணிந்து கொள்ளவேண்டும் – அதற்கேற்றாற்போன்ற அந்தஸ்துள்ள வாகனம் வைத்துக்கொள்ள வேண்டும் – அதற்கேற்றாற்போன்ற அந்தஸ்துள்ள ஓட்டலில் சாப்பிடவேண்டும் – என் மனைவி மற்றும் குழந்தைகள் என் அந்தஸ்த்துக்கேற்றார் போன்று கவுரவக்குறைவு தராதபடி தோற்றமளிக்க வேண்டும் – என் குழந்தைகள் என் அந்தஸ்தைப் பிரதிபலிக்கும்படியான ஒசத்தியான பள்ளியில் படிக்க வேண்டும்!”

சாமான்ய மனிதர்களின் ராப்பகல் நினைவும் ஏன் கனவும் கூட இவ்வாறே அமைகிறது. இவ்வாறு இவர்கள் சதாசர்வ காலமும் தன்னைப் பற்றியே சிந்திக்கின்றதான சுய வினாக்கள் நான் யார்? என்பவையே. அதில் சந்தேகம் இல்லை. இங்கு இந்தக் கணக்குப் பிள்ளை எழுப்பியிருக்கிற கேள்விகளிலே எந்தப் பழுதும் இல்லை. வாழ்வின் தரத்தை உயர்த்தவும் வளப்படுத்தவும் ஒரு தனி மனிதன் எழுப்புகிற மிக வலுவான கேள்விகள். அந்தத் தனிமனிதனது வாழ்வை இயக்கும் எஞ்சினைப் போன்ற ஆற்றல் கேள்விகள். இது நான் யாரின் ஒரு பரிமாணம் தான்.

இன்னொருவர் புலம்பித்தீர்க்கிறார்: “என்னைப் பார்த்து அப்படி கேட்டுப் புட்டானே!” என்று. இவரைப் பார்த்து அவ்வாறு சொன்னவன் எவனோ அந்தச் சொன்னவன் கூட மறந்திருப்பான் தான் பேசியதை – ஆனால் கேட்ட இவரோ இறக்கும் வரையிலும் தான் கேட்ட அந்தச் சொல்லை மறக்க மாட்டாதவராய்த் துடிக்கிறார். தான் யார்? தான் எத்தனைப் பெரிய ஆள் – எத்தனை நல்ல ஆள் என்பது இவருக்கு மிக நன்றாகப் புரிந்திருக்கிறது. அப்படிப் பட்ட தன்னைப் பிறர் இவ்வாறு சொல்லுதல் தகுமா என்பதே இவரது துடிப்பு. ஆக, இவர், “நான் யார்?” எனும் கேள்வியைக் கேட்டவரே எனலாம். உலகு – தான் எனும் இரு தளங்களில் தன்னைப் பரிசோதிக்கும் யதார்த்தம் இம்மனிதரிடத்திலே இருக்கிறது. இவர் கரிசனத்தில் பழுதில்லை – இந்தச் சுய கேள்வி இவரை இன்னமும் கொஞ்சம் தன்னைப் பட்டை தீட்ட உதவும். இதுவும் நான் யாரின் ஒரு பரிமாணம் தான்.

இந்த இரண்டு காட்சிகளிலும், நான் யார் எனும் கேள்வி எழுப்பப்பட்டது உண்மையே! இருப்பினும், இவர்கள், “நான்” எனும்போது “என்னை” “எனக்கு”, “என்னுடைய” என்று தான் கேள்வித்தொடுப்பைக் கேட்கிறார்களே தவிர நான் யார் எனும் கேள்வியை முறையாய், வலுவாய், நேரடியாய் எழுப்பியதாகப் புலப்படவில்லை.

இதுபற்றியே அருணகிரி நாதரும், கந்தரநுபூதியில், “யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே!” என்கிறார். அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறை அறிந்தவர்கள் இந்த அனுபவ வாசகத்தின் பொருளை ஆழமாய் உணர்வர். யான் – தான் என்கிற எண்ணங்கள் மிக இயல்பானவையே – முதிர்ச்சியுறா நிலையில் அவையே முந்துறும் என்றே அருணகிரியார் காட்டுவது படுகிறது. எனவே, பொதுவாக, நான் என்பதிலே பிழை இல்லை என்றே படுகிறது. ஆனால் நான் என்பது “என்” என ஆகும்போது திடுக்கென எஜமானத்தனம் வந்துவிடுகிறது. அந்த “என்” எனும் சொல்லோடு “ஐ” எனும் எழுத்தையும் இணைத்து “என்னை” என மூன்றெழுத்துச் சொல்லாக மாற்றும்போது எஜமான எழுச்சி மிகுகிறது. ஆக, “நான்” என தன்னந்தனியே சும்மா கிடந்த ஒன்றைப் பிறவற்றோடு கூட்டு சேரும்போது நிகழும் பிறழ்வுகளை, குணோபேதங்களைப் பார்க்கிறோம்.

ஐ எனும் ஒற்றை எழுத்து தமிழிலாகட்டும் I என்று ஆங்கிலத்திலாகட்டும் மிகுந்த வலிமையுடைய ஒரு சின்னமாகும். பொதுவாக ஐ என்பது வியப்புணர்வு. உளவியல் ரீதியாக I என்பது மனோமயம் எனப்படும் Egoவைக் குறிக்கும். தமிழில் , ஐ எனும் எழுத்து, விந்தைப் பொருள், கணவன், ஆசான், தந்தை, தெய்வம், நுட்பம், அழகு எனப் பல்வகைப் பொருள் படும். ஐ என்பது உடற்கூற்றில் சுவாசத்தையும், மருத்துவத்தில் விஷத்தையும் குறிக்கும். ஐ யின் இத்தனை அர்த்தங்களும் எத்தனை அர்த்தமானவை என்பதை எண்ணிப்பார்த்தால் நமக்குள் பரவசம் பெருகும்.

ஆக, அடிப்படை நிலையாகப் பார்த்தால், ஐ எனும் மனோமயம் மனித வாழ்விற்கு ஜீவாதாரமான மூச்சைப் போன்றது என் அறிகிறோம். மனோமயம் இன்றி எவரும் வாழமுடியாது. அதே நேரத்தில், மனோமயம் விஷத் தன்மை உடையது என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். இவ்வகையில் இன்னொன்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் மருந்துகள் யாவுமே விஷம் தான். அது மருந்தா விஷமா என்பது கொள்ளும் முறையிலும் அளவிலும் உள்ளது. ஆக மனோமயம் மூச்சாகுமா – மூச்சடைப்பாகுமா – மருந்தாகுமா விஷமாகுமா என்பதிலே மனோமயத்தை வகிக்கும் வகையிலே தான் அடங்கிக் கிடக்கிறது.

மனோமயத்தை ஆசானாகக் கொள்கிறோமா, தந்தையாக பாவிக்கிறோமா, கணவனாய் மணந்து கொள்கிறோமா, தெய்வமாய்ப் பேணுகிறோமா, நுட்பத் பொருளாய் அணுகி ஆராய்கிறோமா, புனிதப் பொருளாய், அதன் அழகு கெடாதபடி அதனை ஆராதிக்கிறோமா என்பதிலே மனிதர்கள் வேறுபடுகிறார்கள். அதே நேரத்தில், மனோமயம் என்பது ஒரு நிச்சயமான ஒன்று – அதைவிடுத்து ஒரு வாழ்வு அமையாது எனவும் காண்கிறோம். ஞானிகள் முதல் கடைக்கோடி சாமானியன் வரை, ஆண்-பெண், ஏழை-பணக்காரர், அழகுடையோர்- அழகில்லாதோர் என்கிற பாகுபாடின்றி மனோமயம் எல்லோரிடத்திலும் இருக்கிறது.

இன்னொரு காட்சியைக் காண்போம்: “என் பாப்பா” என்று ஒரு பொம்மையைக் கட்டிப்பிடித்துக் கொள்ளும் குழந்தை அந்த பொம்மையைக் கட்டிப் பிடித்தபடியே தூங்கிவிடுகிறது. தனது உறக்கம் கலைந்தவுடன் தன் அருகில் குப்புறக் கவிழ்ந்து கிடைக்கும் பொம்மையை உலுக்கி எழுப்புகிறது, “ஏய்! இன்னமுமா தூங்குகிறாய்?” என்று. பரபரவென்று பொம்மையை வாரி அள்ளித் தூக்கிக்கொண்டு ஓடுகிறது – உணவு ஊட்டுகிறது – குளிப்பாட்டுகிறது – உடை மாற்றுகிறது – தலை பின்னுகிறது -செல்லமாய் அடிக்கிறது – முத்தம் தருகிறது – முத்தம் தா எனக்கு எனக் கேட்டு பொம்மையைத் தன் கன்னத்தில் முத்தமிடவைக்கிறது.

மொத்தத்தில், பொம்மைப் பாப்பா இந்த பாப்பாவின் கட்டளைகளுக்கெல்லாம் ஆளாகிறது. பாப்பா ஆட்டிவைக்க இந்த பொம்மை பாப்பா அதற்கேற்ப ஆடுகிறது. பாப்பாவிற்கும் பொம்மை பாப்பாவுக்கு இடையில் நடப்பவை யாவும் உண்மை. பொம்மையின் இயக்கங்கள் யாவும் எவ்வகையிலும் பொம்மையினுடையவை அல்ல என்பதும் உண்மை. பொம்மை தூங்கியது முதல் – விழித்தது – உண்டது – முத்தமிட்டது வரை யாவும் உண்மை நிகழ்வேயானாலும் பொய்மையே. ஏனெனில் தன்னிச்சையாய் சுய ஆற்றலோடு – குருதியும், சதையும், எலும்புமாய் பொம்மை எதையும் செய்ய வில்லை இருப்பினும், இந்த எல்லாப் பொய்மைகளையும் மெய்மையாக்கியது பாப்பா பொம்மை மீது கொண்ட உறவும். உரிமையும், உணரவும், இயக்கங்களும். அன்றொருநாள், கடையில், அலமாரித்தட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தபோது இந்த பொம்மைக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை – அந்தஸ்து இல்லை – ஆனால் இன்றோ பாப்பாவின் இந்தப் பெரிய வீட்டுக்குள் அந்த பொம்மை எங்கு வேண்டுமானாலும் போய்வரலாம். பாப்பாவுடன் காரில், ரயிலில், படகில், விமானத்தில் என எதிலும் எங்கும் பயணிக்கும் தகுதியும், அரசு அனுமதியும் கூட அதற்குக் கிடைக்கிறது. ஒன்றுமில்லாத பொம்மைக்கு இத்தனை உயர்வும் தகுதியும் வந்தது எவ்வாறு என்று பார்த்தால், “என் பாப்பாவுக்கு” என்று “பெற்றோரால் அது கடையிலிருந்து வாங்கப்பட்டது – பாப்பாவிற்குக்குக் கொடுக்கப்பட்டது. நெஜப் பாப்பா, பொம்மைப் பாப்பாவை “என் பாப்பா!” என்று அங்கீகரித்தது – மடமடவென்று அதற்கு – அதிகாரம், கவுரவம், அந்தஸ்து, இயக்கங்கள் கிடைக்கின்றன. கைவாட்டாய் எங்கேயோ வைத்துவிட்டதால், கொஞ்ச நேரம் அந்த பொம்மை காணோம் என்றால் வீடு முழுக்க சல்லடை போட்டுத் தேடுவார்கள் – அத்தனை மவுசு அதற்கு.

இக்காட்சியில், “என் பாப்பா” என்கிற அங்கீகாரத்தை இரு தளங்களில் காண்கிறோம். பெற்றோர்-பாப்பா எனும் முதல் நிலை பாப்பா-பொம்மை எனும் இரண்டாம் நிலை. நிலைகள் வேறானாலும் “ownership” என்று ஆங்கிலத்தில் சொல்வதான சொத்துரிமை தான் இங்கு இரு தளங்களிலும் செயல்படுகிறது. குழந்தையைப் பெற்றோர்கள் உரிமைப் பொருளாகக் கொள்வது இந்த இரண்டு தளங்களிலும் தெரிகிறது. இதுதவறா என்றால் “இல்லை”. இது மிகச்ச்சரியான அணுகுமுறை. அது போன்றே குழந்தைகளும் பெற்றோரை உரிமைப் பொருளாகவே கொள்கின்றனர். உரிமைப் பொருள் என்கிற நிலைக்குப் பல பரிமாணங்கள் உண்டு. சட்ட ரீதியாகப் பார்த்தால் பொருள்-சொத்துப் பகிர்வு போன்ற எண்ண அளவீடுகளுக்கு இட்டுச்செல்லும். மனோமய நோக்கில் பார்த்தால், உரிமைப் பொருள் என்பது உறவுப் பாலத்தைக் குறிக்கும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று உறவு கொள்ளும்போது மட்டுமே வாழ்வின் கதவுகள் திறக்கின்றன. உறவு-உரிமை இரண்டு தான் இறைமையின் பண்புகளுமாகும். திருக்குறுந்தொகையில் ஈசனை அடையும் முறையை அப்பர் கூறுவார்:

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே!

மோர் கடைந்து வெண்ணை எடுக்கும் தன்மையது இறைமை என்பதில் குழந்தைகளும் புரிந்து கொள்ளும் எளிய எடுத்துக்காட்டு உள்ளது. உறவும் உணர்வும் எத்தனை முக்கியமமானவை என்பதை விளக்கவும் வேண்டுமோ? மத்து உறவாம் – கயிறு உணர்வாம். அடடா எத்தனை எளிமை. மத்தின் மீது கயிறு உரிமையோடு நகரும் பட்சத்தில் தானே உணர்வு பிறக்கும். கயிறு என் மீது நகரக்கூடாதென்று மத்து மறுத்தால் கடைவதெப்போது? வெண்ணை கிடைப்பதெப்போது? எனவே தான் மனிதர்களு க்குள்ளே உறவு பிறக்கும் போது உரிமையும் பிறக்கின்றது. இது தவிர்க்க இயலாதது.

குழந்தைக்கு மனோமயம் என்பது தாயும் தந்தையுமான அம்மையப்பனோடு அது கொள்ளும் உறவே. கலப்படம் இல்லாத முழு முதல் உறவு இது. ஆனால், சில குழந்தைகளுக்கு நம் நாட்டிலும், பற்பல குழந்தைகளுக்கு அமெரிக்க நாட்டிலும் குழந்தை-அம்மையப்ப உறவுப் பாலம் முறையாய் உருவாவதில்லை அல்லது முளையிலேயே அறுந்து போயிருக்கும் அல்லது அறுக்கப் பட்டிருக்கும். இதற்கு இயற்கைக் காரணங்களும் இருக்கலாம் அல்லது செயற்கைக் காரணங்களும் இருக்கலாம். எவ்வாறிருப்பினும், தன்னைப்பெற்ற அம்மையும் தந்தையும் இன்றி வாழ்வின் முதல் படியில் ஏறுவது என்பது சிரமமான செயல். வாழ்வின் தலையாய பிடிப்பான அம்மையப்ப உறவு கிட்டா மகவுகளின் மனோமயத்தைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். திரைக்குப் பின்னே அம்மையப்ப உறவு கொண்டிருவர் உருவாக்கிய மகவு தன்னை உருவாக்கிய அவரிருவரையும் நேரில் காண இயலாத சூழல் அல்லது அவருடன் வாழ இயலாத சூழல் அக்குழந்தையின் மனோமய அலைகளை எவ்வாறெல்லாம் விசைப் படுத்தும் என்று கொஞ்சம் கற்பனையை ஒட்டிப் பாருங்கள். பிறப்பித்த பெற்றோரின்றி வளருவது என்பது எளிமையான விஷயமல்லவே. அவதாரப் புருஷர்கள் இவ்வித அனுபவத்துக்கு விதிவிலக்கல்லர். ஏனெனில் அவர்களும் சர்வசாதாரணக் குழந்தைகளாகவன்றோ பிறக்கிறார்கள் – வளருகிறார்கள். இவ்வகையில் ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் கடந்து வந்திருக்கிற குழந்தைப் பருவம் ஒப்பிடத் தக்கதாகவும் மிக முக்கியமான ஒற்றுமைகளை வெளிக்கொணருவதாயும் இருக்கின்றது. நான் யார் எனும் இவர்களது விசாரத்திலே இவர்களது குழந்தைப் பருவம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசுவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *