மீ.விசுவநாதன்
ஊரெல்லாம் கண்விழிக்க உயரத்தில் உள்ள
ஒளிகக்கும் ஆதவனோ வானில் மெல்லச்
சீரோடு செங்கதிரைத் தெளித்துக் கொண்டே
சிந்துகிறான் மஞ்சளுடன் நீலம் சேர்த்து !
தேரோடும் வீதியிலே சாண நீரைத்
தெளித்தபின்னே பெருக்கிவிட்டுப் புள்ளிக் கோலம்
போடுகிற பெண்பார்த்துச் சிவந்த கண்ணாய்ப்
பொலிகிறது கிழக்கினிலே ஒளியாம் கோளம் !

விடிந்ததுபார் என்றங்கே பறக்கும் புட்கள் !
வேதியர்கள் நீராட நதிக்கே செல்வர் !
மடிந்ததுபார் இரவென்றே வெள்ளைக் கொக்காய்
மடமடெனக் கதிரவனும் மேலே ஏறிக்
கொடியுயர்த்திச் சாதிமதம் பாரா வண்ணம்
குறைவின்றிக் கொட்டிடுவான் வெளிச்சப் பூவை !
படிப்படியாய்ச் சூடுதனை பறக்க விட்டும்
பசுமைக்குக் காவலனாய் இருக்கின் றானே !

எத்தனையோ கோள்களெல்லாம் இருந்த போதும்
எரிகின்ற சூரியனே உற்ற நண்பன் !
வித்தகர்கள் வீசிவிடும் ராக்கெட் கூட
விண்ணினிலே இவன்பக்கம் செல்வ தில்லை!
நித்திலமாய்த் தோன்றுகிற நிலா வுக்கும்
நீட்டுகிறான் தன்னொளியைக் குளிர்ச்சி யாக !
புத்தியிலே காயத்ரி வேத மாகப்
புகுந்திட்டப் பொன்னொளியைப் போற்று கின்றேன் !

(10.07.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *