நாகேஸ்வரி அண்ணாமலை

அண்மையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கக் கார்டினல் தன் பால் ஈர்ப்பு உடையவர்களை ஈடுபடுபவர்களை இதுவரை கத்தோலிக்க மதம் ஒதுக்கி வைத்து உரிமைகளை மறுத்ததற்கு அவர்களிடம் மதம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினார். எப்போதுமே இம்மாதிரி சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டவர்கள், எளியவர்கள், வறியவர்கள் ஆகியோர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறிவரும் பிரான்ஸிஸ் போப் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு மேலே குறிப்பிட்டவர்களிடம் மட்டுமல்ல பெண்கள், இள வயதிலேயே நாம் வேலைவாங்கிய சிறார்கள் ஆகியோரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இந்தச் செய்தியைப் படித்ததும் எனக்கு நம் நாட்டில் நாம் தலித்துகளை எவ்வளவு சிறுமைப்படுத்தியிருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தது. அவர்களிடம் நாம் எவ்வளவு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது உறைத்தது. நான் சிறுமியாக வளர்ந்துவந்தபோது மனிதக் கழிவுகளை வீட்டிற்கு வெளியே எடுத்துச் சென்று கழிப்பறையை சுத்தம் செய்த பெண்ணின் ஞாபகம் வருகிறது. ஒரு மாதம் முழுவதும் கழிவுகளைச் சுமந்து சென்ற பெண்ணிற்கு சம்பளம் ஐந்து ரூபாய். லட்ச ரூபாய் சம்பளமாகக் கொடுத்திருந்தாலும் இந்த வேலையை நான் செய்திருப்பேனா என்ற எண்ணம் எழுந்தது. அப்படி இருக்கும்போது கீழ் ஜாதியில் பிறந்த ஒரே காரணத்திற்காக அந்தப் பென் அந்த வேலையை ஏன் செய்தாள். ஏன் தன்னால் அந்த வேலையைச் செய்ய முடியாது என்று அவள் மறுக்கவில்லை. அவளுடைய வாழ்வாதாரத்திற்கு அவளுக்கு அந்த ஒரு வழிதான் இருந்தது. இப்போது எண்ணிப் பார்த்தால் மனது குமுறுகிறது.

இந்த ஐந்து ரூபாய் சம்பளத்திற்கு மேல் சில வீடுகளில் உணவு கொடுப்பதுண்டு. அதுவும் எல்லோர் வீடுகளிலும் கொடுப்பதில்லை. உணவு கொடுக்கும் வீடுகளிலும் வாழை இலை விரித்து பாயசத்தோடு விருந்தா பரிமாறினார்கள்? பழைய சாதம், அதற்குத் தொட்டுக்கொள்ள ஏதாவது வற்றல் அல்லது மிஞ்சிப்போன குழம்பு. எங்கள் வீட்டில் வேலைசெய்த பெண்ணிற்கு தினமும் பழைய சாதம் கிடைக்கும். சில சமயங்களில் அடுப்பில் வெந்துகொண்டிருக்கும் கறிக்குழம்பில் கொஞ்சம் நான் கொடுப்பேன். எண்ணெயில் பொரித்த மோர் மிளகாய் என்றால் அவளுக்குக் கொள்ளை ஆசை. நாங்கள் கொடுக்கும் மோர் மிளகாயில் பாதியைப் பழைய சாதத்தோடு சாப்பிட்டுவிட்டு மீதியை வீட்டிற்கு எடுத்துச் செல்வாள். இந்த மோர் மிளகாயை அவள் ஏன் வீட்டிலேயே செய்துகொள்ளவில்லை என்று நான் அடிக்கடி இப்போது நினைக்கிறேன். மிளகாயை மோரில் ஊறவைத்து வெயிலில் காயவைப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. ஆனால் வீட்டில் இருந்து அதைச் செய்துகொள்வதற்கு அவளுக்கு நேரம் இருந்ததா என்று தெரியவில்லை. அதற்குப் பிறகு அதை எண்ணெயில் வறுத்து எடுக்க வேண்டுமே. அவள் எண்ணெய்க்கு எங்கே போவாள்? அவளுடைய தினசரி உணவெல்லாம் காலையில் முந்தின தினம் இரவு சமைத்த அரிசிச் சோற்றில் மிஞ்சியதைத் தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சாதம்தான். அதிலும் வீட்டில் உள்ள மற்ற அங்கத்தினர்களுக்குப் போக மிச்சம் இருந்தால்தான். மதியமும் அதே பழைய சாதம்தான். இரவு மட்டும் சூடாக ஆக்கிய சோறு.

அவளுக்கு நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளி வேலை. ஊர் முழுக்க நகராட்சிக்குச் சொந்தமான கழிப்பறைகளிலுள்ள மனிதக் கழிவுகளை சேகரித்துச் செல்வதுதான் அந்த வேலை. அந்த வேலையை ஆரம்பிக்கும் முன் 50 மில்லி டீயை கடையிலிருந்து வாங்கிக் குடித்துக்கொள்வாள். மதியமும் இதே மாதிரி ஏதாவது குடித்துக்கொள்வாள். இரவு வீட்டிற்குச் சென்றவுடன் சுடச் சுட சோறு ஆக்கி கருவாட்டுக் குழம்பு வைப்பாள். எங்கள் ஊரில் கருவாடு மிகவும் பிரபலம். அசைவம் சாப்பிடும் பலர் வீடுகளிலும் அடிக்கடி கருவாட்டுக் குழம்பு சமைப்பார்கள். எங்கள் துப்புரவுத் தொழிலாளி வாங்கும் கருவாடு விலையில் மலிவானது. குழம்பு நிரக்க வேண்டும் என்பதற்காகக் கருவாட்டோடு கத்திரிக்காயைச் சேர்த்துக்கொள்வாள். இரவு ஆக்கிய சோற்றில் மிஞ்சியதைத் தண்ணீர் ஊற்றி மறு நாளைக்கு காலை உணவு, மதிய உணவிற்கு வைத்துக்கொள்வாள். சில சமயங்களில் விருந்தினர் வந்துவிட்டால் இரவு சமைத்த சாதம் மிஞ்சாது. ‘நேற்று விருந்தாடி வந்துவிட்டது. சோறு மிஞ்சவில்லை’ என்பாள்.

இவளுக்குத் தேவையான ஊட்டச் சத்து எங்கிருந்து கிடைத்தது? அமெரிக்க நண்பர் ஒருவரிடம் இந்தியர்களாகிய நாங்கள் சாதத்தோடு உருளைக்கிழங்கு பொரியலும் வைத்துக்கொள்வோம் என்றேன். உருளைக் கிழங்கும் கார்போஹைட்ரேட், சாதமும் கார்போஹைட்ரேட் அது எப்படி போதும், புரோட்டீனுக்கு என்ன செய்வீர்கள் என்றார். அமெரிக்கர்கள் தினமும் இவ்வளவு கார்போஹைட்ரேட், இவ்வளவு புரோட்டீன் என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவார்கள். அமெரிக்க ஊட்டச்சத்து நிபுணர் ஒருவரிடம் எங்கள் துப்புரவுத் தொழிலாளிக்கு எப்படி அவள் சாப்பிடும் எளிய உணவில் எல்லா ஊட்டச் சத்துக்களும் கிடைத்தன என்று கேட்க வேண்டும் என்று ஆசை. இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஊட்டச்சத்து சரியாகக் கிடைக்கவில்லை என்றால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்பார்கள். அவள் பள்ளிக்குச் செல்லாததால் நம்மைப்போல் விபரமாகப் பேசத் தெரியாது. ஆனால் அதை விடுத்து உடல்நலத்திலோ மனநலத்திலோ ஆரோக்கியமாகவே இருந்தாள்.

அடுத்ததாக, எங்கள் அழுக்குத் துணிகளை வீட்டிற்கு வந்து எடுத்துக்கொண்டுபோய்த் துவைத்துக்கொண்டு வரும் சலவைத் தொழிலாளி. நம் அழுக்குத் துணிகளைத் தொடுவதற்கு நாமே தயக்கம் காட்டும்போது அவள் எப்படி எங்கள் அழுக்குத் துணிகளைத் தொட்டு மூட்டை கட்டி வீட்டிற்கு எடுத்துச் சென்று துவைத்துக் கொண்டுவந்தாள்? துவைத்து இஸ்திரி போட்டுக் கொண்டுவந்த வேலைக்குக் கூலி மிகவும் குறைவு.

இந்த வேலைகளை எல்லாம் ஏன் அவர்கள் செய்தார்கள் என்று நினைத்தால் ஆயாசமாக இருக்கிறது. அதற்குப் பெரிய பரிகாரம் தேட வேண்டும் என்று மனம் துடிக்கிறது. நம் நாட்டில் இவர்களுக்குச் சமூகம் செய்த அநியாயத்திற்குப் பரிகாரம் தேடுவதற்கு அரசு, அரசு அலுவலகங்களிலும் கல்வி நிலையங்களிலும் இடஒதுக்கீடு செய்திருக்கிறது. இது போதுமா? இந்த சலுகைகளையும் அங்கு மேல்மட்டத்தில் இருப்பவர்கள் அபகரித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்குச் செய்த அநியாயத்திற்குப் பரிகாரம் தேடுவதற்கு மேல் இன்னும் ஏதாவது செய்ய வேண்டாமா?

போப் பிரான்ஸிஸ் சொல்வதுபோல் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நாட்டின் பிரதிநிதியான பிரதம மந்திரியும் மாநில பிரதிநிதியான முதல் மந்திரியும் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். தனிப்பட்ட மனிதர்களும் எல்லோரிடமும் ஜாதித் துவேஷமின்றி நடந்துகொள்ள வேண்டும். எந்த உறவிலும் திருமண உறவானாலும் சமமாக நடத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுக்கும் வேட்பாளர்கள் இவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மன்னிப்பு

  1. வேறு வழியில்லாமல் தானே இவர்கள் இத்தகைய தொழில்களை இவ்வளவு குறைவான ஊதியத்திற்குச் செய்கிறார்கள். இத்தகைய ஏராளமான தொழில்களை முறைப்படுத்தி, இவ்வளவு வேலை நேரம், இவ்வளவு ஊதியம், வாராந்திர விடுமுறை என அறிவிக்க வேண்டும். அரசோ அல்லது இவர்கள் ஒரு கூட்டமைப்பாகவோ இணைந்து இதனைச் செய்யலாம். இப்போது, முடி திருத்துபவர்கள் சங்கம் வைத்த காரணத்தால், எல்லாக் கடைகளிலும் குறைந்தபட்ச கட்டணத்தை ஒரே மாதிரி வசூலிக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்களும் கூட. இதே போன்று வீட்டு வேலை செய்பவர்கள், தினக் கூலிகள் என எல்லோரும் தங்களுக்கு என்று மாநிலம் தழுவிய, நாடு தழுவிய கூட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அப்போது தீர்வு கிடைக்கும்.

Leave a Reply to அண்ணாகண்ணன்

Your email address will not be published. Required fields are marked *